தேடல் தொடங்கியதே..

Friday, 15 November 2013

கீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை !

கீழக்கரை கடற்பகுதி முத்துக் குளித்தலில் உலகளாவிய புகழ் பெற்று இருந்தது. கீழக்கரையில் ஆதி காலம் முதற் கொண்டு சிறப்பாக நடந்து வந்த முத்து, சங்கு குளித்தல் பற்றி கி.பி. 80 ஆம் வருடத்தில் வாழ்ந்த பெரிப் புளூஸ்,  கி.பி.130 ஆம் வருடத்தில் வாழ்ந்த தாலமி போன்ற வரலாற்று அறிஞர்களும்,  கி.பி.6 ஆம் நூற்றாண்டில்; வாழ்ந்த எகிப்து நாட்டு பயணி காஸ்மாஸ் இனிகோ பிளஸ்டாஸ் உள்ளிட்டோரும் தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்.தமிழ்நாட்டில் முதல் முதலாகக் காலனிய ஆட்சியை நிறுவியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 16ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி, கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் காலூன்றி அப்பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள். கி.பி.1658இல் டச்சுக்காரர்கள் நிகழ்த்திய படை யெடுப்பிற்குப் பின்னரே இவர்களின் ஆதிக்கம் மறைந்தது.

அச்சமயம் கீழக்கரை கடல் பகுதிகளில் முத்துக் குளிக்கும் போது கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி முத்துக்களைக் கொள்ளையடிப்பது நிகழ்ந்து வந்தது. இதனால் காயல், கீழக்கரை போன்ற ஊர்களின் தலைவர்கள் போர்ச்சுக்கீசியப் படைத் தளபதியின் உதவியை நாடினர். முத்துக் குளிப்பின் போது போர்ச்சுக்கீசியப்படை, பாதுகாப்பளித்தது. இப்படையினர்க்கு ஊதியமும் உணவுப் பொருட்களும் ஊர் மக்களால் வழங்கப்பட்டன.

அந்த காலக் கட்டத்தில், கீழக்கரை இஸ்லாமியர்களின் தலைவர் 'நெயினார்' என்றழைக்கப்பட்டார். 1523 இல் கீழக்கரை நெயினார், கடற்கொள்ளைக் கூட்டத்திடமிருந்து, பாதுகாப்புக் கொடுக்க, போர்ச்சுக்கல் படைத்தளபதியை வேண்டினார். அப்பாதுகாப்பிற்காகப் பணம் வழங்கிய வரலாறுகளும் காணப்படுகிறது. இன்றும் பழைய குத்பா பள்ளிவாசாலில் 'கப்பல் நெய்னா மறைக்கா' என்பார் குறித்த கல்வெட்டி னய் காண முடியும்.

கீழக்கரை மரைக்காயர்கள், ஸ்ரீலங்காவுக்கு அரிசியும் ஆடைகளும் கொண்டு சென்று பண்டமாற்று வாணிபம் செய்து வந்தனர். வாணிபப் போட்டியின் காரணமாக, ஏற்கெனவே வாணிபத்தில் நிலைபெற்றிருந்த மரைக்காயர்களுக்கும் போர்ச்சுக்கீசியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இலங்கையுடனான வாணிபத்திலும், கீழக்கரையில் முத்து வாணிபத்திலும் ஈடுபட விரும்பிய போர்ச்சுக்கீசியர்கள் இதற்கு உதவும் வகையில் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேடினர். இவ்வகையில் கீழக்கரைக்குச் சில கிலோ மீட்டர் வடக்கில் இருந்த வேதாளை என்ற ஊர் பொருத்தமான இடமாக அவர்களுக்குப்பட்டது.

வேதாளையில் கோட்டையன்றைக் கட்டிக் கொள்ள, அப்பகுதியை ஆண்ட பரமக்குடி தும்பிச்சி நாயக்கரிடம் அனுமதி வேண்டினர். செங்கற்களைப் பயன்படுத்தாமல் மண்ணால் கட்டப்பட்டு, ஓலைக் கூரையுடன் கூடியதாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பரமக்குடி சிற்றரசன் அனுமதி வழங்கினான். தமிழகத்தின் கடற்கரையில் போர்ச்சுக்கீசியர் கட்டிய முதல் கோட்டையாக வேதாளைக் கோட்டை அமைந்தது. கோட்டையினுள், பண்டக சாலைகளும், போர்ச்சுக்கீசிய வணிகர்களும் அதிகாரிகளும் வசிக்க வீடுகளும் கட்டப்பட்டன.

வேதாளையில் இருந்தவாறே, கீழக்கரை இஸ்லாமிய மரைக்காயர்களைக் கட்டுப்படுத்தலாயினர். இதனால் இருதரப்புக்கும் இடையே முரண்பாடு உருவானது. காலப்போக்கில் மரைக்காயர்கள் தம் வளத்தை இழக்கலாயினர். இதைத் தவிர்க்கும் வழிமுறையாகப் போர்ச்சுக்கீசியரின் எதிரியாக இருந்த கள்ளிக்கோட்டை சாமரின் மன்னனின் துணையை நாடினர். அவர் அனுப்பிய படை இருமுறை (கி.பி 1537, கி.பி 1538 ஆண்டுகளில்) போர்ச்சுக்கீசியர்களுடன் மோதித் தோல்வியடைந்தது.

கீழக்கரைப் பகுதியில் போர்ச்சுக்கல் ஆதிக்கம் நிலை பெற்ற பின், இப்பகுதியின் உரிமையாளராய் விளங்கிய விஜயநகரப் பேரரசின் வருவாய் தடைப்பட்டது. இதைப் பொறுக்க முடியாத விஜயநகரப் பேரரசு, தன்படையை 1549-இல் அனுப்பியது. அதனுடன் போரிட முடியாது போர்ச்சுக்கீசியப் படை தோற்று ஓடிப் போனது. 1553-இல் கீழக்கரை முஸ்லீம்கள் வேதாளைக் கோட்டையைத் தாக்கி, முத்துக்குளித்தலில் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினர்.இடம் : அஞ்சு வாசல் கிட்டங்கி, பழைய குத்பா பள்ளி தெரு

கீழக்கரை நகரின் ஆதி தொழிலாம் கடல் சார்ந்த தொழில்களில், சங்கு முத்து வணிகம் இன்றும் கூட பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் அஞ்சு வாசல் கிட்டங்கியிலும் முஸ்லீம் பஜாரில் ஜமாலியா சங்கு கொள் முதல் விற்பனையகத்திலும், புதுக் கிழக்குத் தெருவில் சில இடங்களிலும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இங்கு சங்குகளை சுத்தம் செய்து, அளவு வாரியாக  தரம் பிரித்து கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், அங்கிருந்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இடம் : ஜமாலியா சங்கு கம்பெனி, முஸ்லீம் பஜார்

கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற 'கீழக்கரை நகர் நல இயக்கம்' கோரிக்கை !

கீழக்கரையில் உள்ள லைட் ஹவுஸ் (கலங்கரை விளக்கம்) மேல் பகுதி வரை கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் பெற்று அனுமதித்து வந்தனர்.  முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை சம்பவத்திற்கு பின் கீழக்கரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து லைட்ஹவுஸ்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பார்வையாளர்களுக்கு இன்று வரை அனுமதி இல்லை. பின்னர், சில இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு கருதியது. 


இதன் விளைவாக மகாபலிபுரம், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அது போல பல்லாண்டு காலமாக இப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலங்கரை விளக்கத்தைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

கலங்கரை விளக்கத்தின் உச்சியின் மேல் இருந்து பார்க்கும் போது, சில்லென்று வீசும் வேகக் காற்றுடன், கீழக்கரையின் எழில் கொஞ்சும் இயற்கை அழகையும், பல்லாயிரம் மக்கள் வசிக்கும் நகரில், மிக நெருக்கமாக அமையப் பெற்றிருக்கும் பல வண்ண வீடுகளையும், அதற்கிடையே கம்பீரகாக காட்சி தரும் பள்ளி வாசல்களின் கோபுரங்களையும்   பரந்து விரிந்த நீலக்கடளுக்குள் அமைந்திருக்கும் அப்பாத்தீவு உள்பட ஏராளமான குட்டி தீவுகளையும், தென்னந் தோப்புகளுக்கிடையே வளைந்து நெளிந்து செல்லும் கடலோரப் பாதைகளின் இரம்மியமான அழகையும் கண்டு இரசிக்க முடியும்.
கலங்கரை விளக்கங்கள் குறித்த சுவாராஸ்யமான தகவல்கள் :

இந்தியாவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், கலங்கரை விளக்கங்கள் உருவாக்கப்பட்டன. `வெளிச்ச வீடு' என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கங்கள், ஆரம்ப காலத்தில் எரியும் விளக்குகள் மூலமாக ஒளிட்டப்பட்டன. பின்னர், பெரிய மெழுகுவர்த்தி மூலம் ஒளிட்டப்பட்டன. அதன் பின்னர், 1781- ஆம் ஆண்டு ஆர்கண்ட் விளக்குகள் மூலம் கலங்கரை விளக்கங்கள் இயங்கின. 1850-ஆம் ஆண்டில் திமிங்கல எண்ணெயும், தாவர எண்ணெய்யும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன.

20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டன. இந்த விளக்குகளில் இருந்து வெளியாகும் வெளிச்சத்தை குவியச் செய்து, வெளியே அனுப்புவதால் மிகவும் பிரகாசமான ஒளி நீண்ட தூரம் தெரியும். அதாவது, 20 கடல் மைல் தொலைவில் இருந்தே கலங்கரை விளக்கத்தின் ஒளியை காண முடியும்.

தற்போது, கலங்கரை விளக்கத்தில், அதிநவீன மெட்டல் ஹலைடு விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வானிலை மோசமான காலத்திலும், ஒளியை தெளிவாக பார்க்கலாம். மேலும், ரேடியோ அலைகள் மூலம் எச்சரிக்கை தகவல்களும் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு கலங்கரை விளக்கத்தில் இருந்து பாய்ச்சப்படும் ஒளியை, கப்பலில் இருந்தபடியே மாலுமிகளால் காணமுடியும். ஒளியை வைத்தே, கரை எவ்வளவு தூரத்தில் உள்ளது?, கடற்கரைக்கு அருகில் பாறைகள் எதுவும் உள்ளதா? என்பதை மாலுமிகள் கண்டறிந்து விடுவார்கள்.

இந்தக் கலங்கரை விளக்கத்தால் நிலப்பரப்பில் வாழும் மனிதர்களுக்கு பயனில்லை என்றாலும், கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் பெரும் பயனாக விளங்கி வருகிறது. இரவு நேரங்களில் துறைமுகங்களை நோக்கி வரும் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் சரியான வழி காட்டியாக விளங்குகிறது.

கீழக்கரை கலங்கரை விளக்கம் குறித்த சுவாராஸ்யமான தகவல்கள் :

நம் நாட்டில் 7 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடற்கரைகளில் 180 கலங்கரைவிளக்கங்கள் உள்ளன. கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின் கட்டுப்பாட்டில், சென்னை, முட்டம், கன்னியாகுமரி, மணப்பாடு, கீழக்கரை, பாம்பன், ராமேஸ்வரம், பாசிப்பட்டினம், அம்மாபட்டினம், மாலிப்பட்டினம், கோடியக்கரை, நாகப்பட்டினம், பூம்புகார், மகாபலிபுரம், புலிக்காடு உள்பட 21 (லைட்ஹவுஸ்) கலங்கரை விளக்கங்களில் ஒன்றான கீழக்கரை கலங்கரை விளக்கம் 1979 முதல் செயல்படுகிறது.35 மீட்டர் உயரமும் 15 நொடிக்கு ஒருமுறை வெளிச்சத்தை உமிழும் சக்திவாய்ந்த விளக்கை கொண்டது. இதன் சுழல் விளக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு ஒளி தரக் கூடிய ஆற்றல் பெற்றது. இங்கு ரேடார் கருவியுடன் பகல் மற்றும் இரவு நேரத்தில் கடல் பகுதியை தெளிவாக கண்காணிக்க கேமரா உள்பட நவீன கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்பு படையினர் இவற்றின் மூலம் கடல் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

மும்பையில் கடந்த ஆண்டு நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து இந்திய கடலோரங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும், கடலில் செல்லும் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில்  மத்திய அரசு கலங்கரை விளக்கங்களில் ராடார் கருவிகளை பொருத்தியுள்ளது. கீழக்கரை கலங்கரை விளக்கத்திலும் அது போன்ற ராடார் பொருத்தப்பட்டுள்ளது.

 கீழக்கரை கலங்கரை விளக்கத்தின் உச்சிப் பகுதி வரை ஏழு சுற்றுககளில் மொத்தம் 138 படிக்கட்டுகள் உள்ளன.

04.11.1977 ஆம் நாளன்று துவங்கப்பட்ட, கீழக்கரை கலங்கரை விளக்கத்தின் கட்டுமானப் பணிகள் 28.02.1979 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனை கட்டி முடிப்பதற்கு ஆகிய மொத்த செலவு, சிவில் இஞ்சினியரிங் வேலைகளுக்கு 9,42,500 ம், அதில் மின் சாதன கருவிகள் நிறுவிய வகையில் ரூ. 2,38,900 மும், ஆக மொத்தம் 11,81,400 (பதினோரு இலட்சத்து என்பத்து ஓராயிரத்து நானூறு மட்டும்)

இந்த கலங்கரை விளக்கத்தை காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாளன்று 1979 ஆம் வருடம் சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின்  அப்போதைய தலைவர் திரு. கார்னிக் அவர்கள் திறந்து வைத்தார்.

கீழக்கரையில் அழகு மிளிரும் கலை நயத்துடன் காட்சி தரும் 'ஓடக்கரை' பள்ளி !

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட கீழக்கரை ஒடக்கரை பள்ளியை முதலில் இடித்து விட்டு கட்டுமானம் செய்யத் தான் எத்தனித்து இருந்தார்கள். பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி, தொல்லியல் ஆய்வாளர் ராஜா முஹம்மது (சென்னை மீயூசியத்தின் முன்னாள் துணை தலைவர்) அவர்களின் வழிக்காட்டுதலின் பேரில் ஒரு மனதாக பழமையோடு புனரமைப்பு செய்ய தீர்மானித்தனர். இது நடந்தது 2006 ஆம் ஆண்டு. பின்னர் முழு வீச்சில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு முழுமை பெற்று அழகு மிளிரும் கம்பீரத்துடன் காட்சி தந்து கொண்டு இருக்கிறது.
ஒளிப்பதிவாளரும் வரலாற்று ஆர்வலருமான கோம்பை கிராமத்தை சேர்ந்த எஸ். அன்வர் தயாரித்து, இயக்கிய “யாதும்" ஆவணப் படம் நேற்று முன் தினம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ் இஸ்லாமியர்களின் வேர்களை தேடும் இந்த ஆவணப் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாராகி இருக்கிறது. தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை சார்ந்த தொழுகை, பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கட்டடக்கலை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிபூர்வமான காட்சிப்படுத்தல்கள், வரலாற்று நிபுணர்கள் தரும் தகவல்கள், செப்பேடுகள் போன்ற ஆதாரங்கள் வழங்கும் செய்திகள் ஆகியன அதில் இடம் பெற்றுள்ளன.ஐம்பது நிமிடங்கள் ஓடும் யாதும், தமிழ் மண்ணில் இஸ்லாம் வேர் விட்ட வரலாற்றையும், இஸ்லாமியார்களின் வணிகம், கல்வி, இலக்கியம் என எல்லா கூறுகளையும் ஆவணப்படுத்தி உள்ளது. இதில் கீழக்கரை ஓடக்கரை பள்ளிவாசாலின் அழகிய கட்டிடக் கலையும் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள தூண்களின் முனையில் காணப்படும் வாழைப்பூ வடிவம் இஸ்லாமிய திராவிடக் கட்டிடக் கலையின் சிறப்பை பாறை சாற்றி நிற்கின்றன. இங்கு தமிழ் மாதங்கள் பொறிக்கப்பட்டு, தமிழிலேயே தொழுகைகான நேரத்தை குறிக்கும் எண்கள் பொறிக்கப்பட்ட கால் தூண்கள் காணப்படுகிறது. அதே போன்று நடுத் தெரு ஜும்மா பள்ளியிலும் இதனை காணலாம்.

தமிழ்நாட்டின் கிழக்குக் கடலோரம் முழுக்க பயணிக்கும் அன்வர் அவர்களின் கேமரா, அதன் மூலமாக இந்தத் தமிழ் மண்ணோடு இரண்டறக் கலந்துவிட்ட முஸ்லிம் சமூகத்தின் தொன்மத்தை சொல்லிச் செல்கிறது. நறுமணப் பயிர்கள், காலம் காலமாக உலக நாடுகள் தென் இந்திய மக்களுடன் வணிக உறவுகளைக் கொண்டிருக்க காரணமாக இருந்தன. நறுமணப் பயிர்களின் பாதை கடல் வழியிலானதாக இருந்தது. அந்த வணிக உறவுகள் புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு சேர்த்தன.கேரள கடலோரத்திற்கு கி.பி ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய ஏகத்துவ இறையியல் தத்துவம் கடல் வணிகர்கள் மூலம் வந்து சேர்ந்த வரலாறுகளை காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையிலும் பண்பாட்டிலும் இருக்கும் தனித்துவம், ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளயும் பண்பாடுகளையும் மதிப்பதற்கு எப்போதுமே தடையாக இருக்கவில்லை என்பதை காணொளி சாட்சிகளுடன் காணக் கிடைக்கிறது.

Thursday, 14 November 2013

கீழக்கரை நகரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பங்கள் - விரைந்து நடவடிக்கை எடுக்க ரோட்டரி சங்கம் வேண்டுகோள் !

கீழக்கரை நகரில் பல இடங்களில் அபாயத்தை எதிர் நோக்கி இருக்கும் மின் கம்பங்கள் பல காணப்படுகிறது. பார்க்கும் போதே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் தோற்றம் காட்சி அளிக்கிறது. நகரின் மிக பிரதான சாலையாக இருக்கும் வள்ளல் சீதக்காதி சாலையில் கரீம் ஸ்டோர் எதிரே உள்ள ஒரு மின் கம்பமும் (மின் கம்பம் எண் இன்னும் எழுதப்படாமல் விடப்பட்டுள்ளது), ஆடறுத்தான் தெருவில் இருக்கும் ஒரு மின்கம்பமும் (மின் கம்பம் எண்: 7/8) மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. 


 இடம் : ஆடறுத்தான் தெரு
  இடம் : வள்ளல் சீதக்காதி சாலை

இது போன்ற ஆபத்தை எதிர் நோக்கி இருக்கும் மின் கம்பங்களை உடனடியாக அகற்றி புதிய மின் கம்பங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மின்சார வாரியத்தினறுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கீழ்க்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கீழ்க்கரை ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி அல் நூர் ஆப்திக்ல்ஸ் ரோட்டரியன் ஹசன் அவர்கள் கூறும் போது "பொது மக்கள் அச்சப்படும் வகையில் நகரின் பல பகுதிகளில் இது போன்ற மின் கம்பங்கள் பல காணப்படுகிறது. இதனை சம்பந்தப்ட்ட மின் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, ஆபத்துகள் ஏற்படும் முன்  அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுததுள்ளோம். அது வரை இறைவன் தான் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.