Thursday 15 August 2013

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் 'மூன்றாம் ஆண்டு துவக்க விழா' மற்றும் 'சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா' - அனைவரும் பங்கேற்க அழைப்பு !

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, கீழக்கரை நகரில் சிறப்பான முறையில், மாணாக்கர்களுக்கு கல்வி வழங்கி வரும் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் மூன்றாமாண்டு துவக்க விழா எதிர் வரும் (18.08.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஹுசைனியா திருமண மண்டபத்தில் நடை பெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அ.இ.அ.தி.மு.க  மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு வாரியத் தலைவர்.திரு. G . முனியசாமி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் திரு.G. கண்ணன் ஆகியோர்களும் கலந்து கொள்கின்றனர்.


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். ஜனாப். பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "கீழக்கரையின் சுத்தம், சுகாதாரம், மக்கள் நலனை மேம்படுத்த பாடுபடும் நோக்கோடு துவங்கப்பட்ட எங்கள் இயக்கம், இறைவன் அருளால், தற்போது மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கீழக்கரை நகர் நல இயக்க அங்கத்தினர்களின் காலம் நேரம் பாராத சேவையால், கடந்த இரண்டாண்டுகளில் நம் கீழக்கரை நகருக்கு தேவையான அத்தியாவசிய காரணிகளை, ஊடகங்கள் மூலமாகவும், மனுக்கள் மூலமாகவும், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, வெற்றி கண்டிருக்கிறோம்.

குறிப்பாக சொல்வதானால் கீழக்கரையின் குப்பைகள் பிரச்சனையை ஜீ தமிழ் தொலைக் காட்சி வரை கொண்டு சென்று, 50 சதவீத தீர்வை எட்டியிருக்கிறோம். மேலும் கீழக்கரை நகரை முன் மாதிரி ஊராக மாற்ற தொடர்ந்து  போராடி வருகிறோம். இது தவிர இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் போன்றவற்றை இடை விடாது நடத்தி வருகிறோம்.

இந்த விழாவில் கீழக்கரை நகரிலேயே சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கான விருதுகளையும், சிறந்த சேவையாற்றிய அமைப்புகளுக்கான விருதுகளையும், சிறந்த சாதனையாளருக்கான விருதினையும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாயிலாக வழங்கி கவுரவிக்க இருக்கிறோம். அனைவரும் தவறாது இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக வேண்டுகிறேன்" இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment