தேடல் தொடங்கியதே..

Thursday 17 October 2013

கீழக்கரை நடுத் தெருவில் நாறிக் கிடக்கும் சாக்கடை குவியல்களால் நிலவும் சுகாதாரக் கேடு - மீண்டும் மலேரியா, டெங்கு பீதியில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் !

கீழக்கரை நடுத் தெரு பகுதியில், புரதான ஜும்மா பள்ளிக்கு செல்லும் பாதையில், வாருகால்களில் சாக்கடை நீர் தேங்கி வழிந்தோடுவதால் பெரும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. வாருகால்களில் சேரும் சாக்கடை கழிவுகளை துப்புரவுப் பணியாளர்கள் பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலைகளில் அள்ளி வைத்து விட்டு, முறையாக சுத்தம் செய்யாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். 


இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.  மேலும் இந்த பகுதியில் நடந்து செல்லும் மக்கள், பெருநாளைக்கு உடுத்திய புதுத் துணிகளில் சாக்கடை தெறித்து விடாமல் வீடு போய் சேருவது சாதனையாக கருதப்படுகிறது. தொழுகைக்கு செல்பவர்களுக்கும், இப்பகுதியை கடக்கும் பாதசாரிகளையும் மூக்கைப் பிடித்து கொண்டு வேக நடை போடும் நிலையே உள்ளது. 


இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது கீழக்கரையில் மீண்டும் மலேரியா, டெங்கு போன்ற வியாதிகள் பரவ  துவங்கியுள்ளதால், உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களின், இது போன்ற மெத்தனப் போக்கால், இந்த பகுதி மக்கள் மிகுந்த வருத்தமடைந்து உள்ளனர். நடுத் தெரு பகுதியில் உள்ள வாருகால்கள் பல ஆண்டு காலமாக சரி செய்யப்படாமலும், மூடிகள் போடப்படாமலும் இருக்கிறது. ஆகவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண முன் வர வேண்டும்.

இது குறித்து நாம் கடந்த வருடம் வெளியிட்டிருந்த செய்தியை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


குறிப்பு : நாம் செய்தி வெளியிட்ட பிறகு, கீழக்கரை நடுத் தெருவில் உள்ள சில பகுதிகளில் மட்டும் குறிப்பாக, 'கீழக்கரை டைம்ஸ்' யாசீன் அவர்கள் வீட்டின் முன் புறம், வாருகால் உயர்த்தி கட்டப்பட்டு மூடி போடப்பட்டுள்ளது. அதற்காக இந்த தருணத்தில் கீழக்கரை நகராட்சிக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment