கடந்த மாதம் நம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் தலைமையில் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் கீழக்கரையில் பிளாஸ்டிக் பை,கப் போன்றவை விற்பதற்கு தடை விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து இக்கூட்டத்தில் கீழக்கரை வியாபாரிகளின் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 2-2-2012 முதல் பாலிதீன் விற்பனைக்கான தடை விதிப்பு அமலுக்கு வருமென்று ஒருமனதாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள் |
பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள் கூட்டம் |
இது குறித்து கிழக்கு தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது அமான் அவர்கள் கூறுகையில், "நம் நகராட்சியில் எடுக்கபட்டிருக்கும் இந்த நல்ல தீர்மானம் வரவேற்கத்தக்கது. முதலில் இந்த பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு ஒழிந்தாலே, நம் கீழக்கரை குப்பை பிரச்னை ஓரளவு குறைந்து விடும். நம் நகரில் தேங்கும் குப்பைகளில் 40 % க்கும் மேல் இந்த பிளாஸ்டிக் பைகள் தான் இருக்கிறது. பாலிதீன் ஒழிப்பு தினமான அந்த நல்ல நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம். பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நகராட்சி சார்பாக, பாலிதீன் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்சிகளை முன்னதாக ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.
யாருமே மதிக்காத 'குப்பைகள் கொட்டாதீர்கள்' அறிவிப்பு பலகை |
நம் கீழக்கரை வியாபார பெருமக்களும், பொது மக்களும் இப்பொழுதே அதற்கான ஒத்திகையில் ஈடுபட வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, எளிதில் மண்ணில் மக்கும் பேப்பர் போன்ற பொருள்களின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் குப்பைகள் இல்லாத கீழக்கரையை உருவாக்கும் பெரு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மாபெரும் வெற்றி கிட்டும் என்பதில் ஐயமில்லை.