கீழக்கரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரை நகர் பகுதிகளில் 9 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் தமிழக அரசால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி, பயனடைந்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களாக இங்குள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பச்சரிசி முறையாக விநியோகம் செய்யப்பட வில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ரேசன் கடை நிர்வாகிகளிடம் கேட்ட போது "பச்சரிசி கடந்த 5 மாத காலமாக அரசாங்க குடவுன்களில் இருப்பு இல்லாததால், ரேஷன் கடைகளுக்கு போதிய அளவு சப்ளை செய்யப்படவில்லை. பச்சரிசி கேட்டு வரும் குடும்ப அட்டைதாரர்களை வேறு வழியின்றி திருப்பி அனுப்ப வேண்டிய நிலை உள்ளது." என்று தெரிவிக்கின்றனர்.
கீழக்கரை நகரை பொருத்தமட்டில், காலை மற்றும் இரவு வேளைகளில் இடியாப்பம், ஆப்பம், வெள்ளடை போன்றவைகள் முக்கிய உணவாக இருப்பதால், அதற்கு தேவையான பச்சரிசி கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் வெளியே கள்ள மார்கெட்டில் பச்சரிசி விற்பனை அமோகமாக நடை பெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். (படம் : கீழக்கரை டைம்ஸ்)
இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் M.U.V.முஹைதீன் இபுறாகீம் அவர்கள், தங்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் சென்று கடந்த 13.05.2013 அன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளன்று நேரில் மனு செய்தனர். அந்த மனுவில் கீழக்கரை நகர் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நியாய விலைக் கடைகளில் பச்சரிசி வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.