துபாயில் பரோடா வங்கியின் நூறாவது 'வெளிநாட்டு கிளை' திறப்பு விழாவில் கலந்து கொள்ள
வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,
அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், துபாய் விமான
நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் இக்குழுவினர்
தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான 'மதுரை – துபாய்' நேரடி விமான
சேவையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு
வரும் இந்த கோரிக்கை, நீண்ட காலமாக நிறைவேற்ற படாமல் இருப்பது குறித்தும்
எடுத்து கூறினர். இந்த கோரிக்கையை செவியுற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,
இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரிடம்
பேசி தேவையானவற்றை செய்வதற்கு தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினார்.
இது குறித்து குழுவின் சார்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு
நன்றி கூறிய நெல்லை S.S.மீரான், இந்தத் தடத்தில் ஏர் இந்திய சேவை மேலும்
தாமதமாகும் பட்சத்தில், ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் விமானங்களை இயக்க
மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சந்திப்பில், நெல்லை S.S.மீரான், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர்
அமுதரசன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணைச்செயலாளர் கீழைராஸா, காயிதே
மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான், விழாக் குழு செயலாளர் பரக்கத் அலி,
ஈமான் அமைப்பின் விழா செயலர் ஹமீது யாசீன், மற்றும் அம்பை ஸ்பர்ஜன்
சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி : (தகவல்) ஹமீது ரஹ்மான்