கீழக்கரையில் இறைவனின் அருள் மணம் பரப்பும் மஸ்ஜிதுகளும், கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்படும் பள்ளிவாயில்களும் நிறைவாக காணப்படுகிறது. அதே நேரம் அந்த பள்ளிகளுக்கு உயிர் நாடியாகத் திகழும் ஆலிம்களின் எண்ணிக்கை, அவற்றை நிரப்புகின்ற அளவுக்கு போதுமானதாக இல்லாமல் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. அதுவும் ரமலான் மாதம் நெருங்கி வரும் இந்த வேளையில், பள்ளிகளில் இரவுத் தொழுகைகளை நடத்துவதற்கு தகுந்த ஆலீம் பெருமக்கள் கிடைக்காமல், அண்டை மாநிலமான கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து, ஆலிம்களை அழைத்து வரும் நிலையே உள்ளது.
இந்நிலை நீடித்தால் கீழக்கரை நகரின் இஸ்லாமிய சமூகம், மார்க்க அறிவுப் பஞ்சத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க முடியாததாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. மார்க்கக் கல்வியை கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே செல்வது தான் இதற்கு முக்கியமான காரணமாக ஆகும். இதனை களைய, கீழக்கரை பகுதியிலிருந்து,'ஒரு தெருவுக்கு ஒருவரையாவது' ஆலீம்களாக்க மார்க்க அறிஞர்கள், பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கீழக்கரை நடுத்தெருவைச் சேர்ந்த A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி (கீழக்கரை டவுன் காஜி) அவர்களின் மகனார் A.M.K.செய்யது அஹமது நெய்னா அவர்கள் கடந்த 22.06.2013 அன்று சென்னை பெரம்பூரில் உள்ள தாருல் உலூம் ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் 'ஆலிம் ஜமாலி' பட்டம் பெற்று, கீழக்கரை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவர் முன்னதாக சென்னை பல்கலை கழகத்தில் இருந்து 'அப்ழலுல் உலமா' பட்டமும் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மிக இளம் வயதிலேயே (13 வயதில்) சென்னை மண்ணடி மாமூர் மஸ்ஜிதில் குர்ஆன் மனனம் செய்யும் ஹாபீஸ் படிப்பில் (3 வருடம்) சேர்ந்து பட்டம் பெற்றார். பின்னர் மார்க்க கல்வியை தொடர்ச்சியாக கற்று மவ்லவி பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை தாருல் உலூம் ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் மார்க்க கல்வி பயின்று 'ஆலிம் ஜமாலி' பட்டத்தை பெற்றுள்ளார்.
தற்போது சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை படிப்பு M.A., அராபிக் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். இவர் 13 வயது முதலே, ரமலான் மாதத்தில், கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில், இரவுத் தொழுகையின் ஒரு பகுதியை, இமாமாக இருந்து தொழுகை நடத்தி வந்துள்ளார் என்பதும் இவர் 9 வருடங்கள் தொடர்ந்து மார்க்க கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மவ்லவி. அப்ழலுல் உலமா. ஹாபிஸ். செய்யது அஹமது நெய்னா சித்தீகி ஆலிம் ஜமாலி அவர்களின் மார்க்க கல்வி மென் மேலும் சிறப்புறவும், இவர்களை மார்க்க கல்வியில் சேர்த்து ஊக்கப்படுத்திய இவரின் பெற்றோர்கள், குடும்பத்தார்கள், ஆசிரியர்கள், மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
FACE BOOK COMMENTS :
FACE BOOK COMMENTS :
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை'அல்ஹம்துலில்லாஹ்..
மனதிற்கு மகிழ்வளிக்கும் செய்தி. கீழக்கரை வாழும் இஸ்லாமிய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை இது போன்று வீட்டுக்கு ஒருவரை ஆலிமாக்க, இந்த நாளில் உறுதி மொழி எடுக்க வேண்டும்.
இதற்கு தற்கால முன்னோடியாக விளங்கும், நடுத்தெருவைச் சேர்ந்த சகோதரர் குத்புதீன் ராஜா மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஆகியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மார்க்க கல்வி வழங்கி, ஆலீம்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். வல்ல நாயன் இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தார்களுக்கும் அதற்கான உயர்ந்த கூலியை நல்குவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
உலகக் கல்வியை பயின்று வாழ்வில் பணம் சம்பாதிப்பது ஒன்றே முதல் நோக்கமாக கொள்ளும் இந்த காலத்தில், இது போன்று மார்க்க கல்வி பயில, பெற்றோர்கள் ஊக்கமளித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. - Keelakarai Jamath மவ்லவி. அப்ழலுல் உலமா. ஹாபிஸ். செய்யது அஹமது நெய்னா சித்தீகி ஆலிம் அவர்களை கீழை இளையவனுடன் சேர்ந்து நெஞ்சார வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.
அவர்களின் முத்து வாப்பா (முன்னாள் டவுன் காஜி)மற்றும் வாப்பா (இன்னாள் டவுன் காஜி) வழியில் நின்று பேரும் புகழும் அடைய வல்ல ரஹ்மான் நல் அருள் புரிய இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம். ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆல்மீன்.