கீழக்கரை நகரில் இன்று (27.10.2012) சிறப்பான முறையில் தியாகத் திருநாளாக போற்றப்படும்
ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கீழக்கரை மற்றும் அதன்
சுற்றுவட்டாரங்களில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென துவங்கிய கன மழை
தொடர்ந்து 2 மணி நேரம் நீடித்தது. காலை 6 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டம்
இன்றி தெளிவானது. இருப்பினும் அதிகாலையில் பஜ்ரு தொழுகையை நிறைவேற்றிய
இஸ்லாமிய பெருமக்கள், காலையில் குளித்து புத்தாடை அணிந்து, பல்வேறு
இஸ்லாமிய அமைப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த திறந்த வெளி திடல்கள் அல்லது
பள்ளிவாசல்களுக்கு சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து
குத்பாவும் ஓதப்பட்டது. தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி
வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
கீழக்கரையில் பெருநாள் தொழுகை நடுத்தெரு பள்ளி, கிழக்குதெரு குளங்கரை பள்ளி, சேகு அப்பா பள்ளி, பழைய குத்பா பள்ளி, மின் ஹாஜியார் பள்ளி, மேலத்தெரு பள்ளி, ஓடக்கரை பள்ளி, ஓடக்கரை பள்ளி, வடக்குதெரு பள்ளி ஆகியவைகளில் நடைபெற்றது. நபி வழி திறந்த வெளி திடல் தொழுகைகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கிழக்குத் தெருவிலும், 500 பிளாட்டிலும், KECT சார்பில் புதுக் கிழக்குத் தெரு மைதானத்திலும், கிழக்குதெரு ஜமாத் சார்பில் திடல் தொழுகை கைராத்து ஜலாலியா மேல்நிலை பள்ளியிலும், தெற்குதெரு ஜமாத் சார்பில் புதுத் தெரு மைதானத்திலும், கடற்கரை பள்ளியிலும் வெகு சிறப்பாக பெருநாள் தொழுகை நடை பெற்றது. கீழக்கரையை பொருத்தமட்டில் தற்போது பள்ளிவாசல்களை விட திடல் தொழுகையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கீழக்கரையில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் அக மகிழ்வுடன்
தொழுகையை முடித்தவுடன், வீட்டுக்கு வந்து பெருநாள் சாப்பாடு சாப்பிட்டு,
இறை கடமையை நிறைவேற்றும் முகமாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை குர்பானி
கொடுத்து, அதன் இறைச்சிகளை குடும்பத்தார்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை
எளியவர்களுக்கும், கொடுத்து வருகின்றனர். பள்ளிவாசல் எங்கும் தக்பீர்
முழக்கம் ஒலித்த வண்ணம் உள்ளது.
பெரியவர்களும், பெண்மணிகளும் உறவினர்
வீடுகளுக்கு சென்று பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு
சிறுவர்களுக்கு பெருநாள் காசுகளை அளிப்பதால், சிறுவர்களின் முகத்தில்
புன்னகை தவழுகிறது. இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்(அலை),
மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவுகூறும் வகையில்
தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. இந்த
தியாகத் திருநாளில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.