கீழக்கரையின் அமானுஷ்ய பக்கமாய் தற்போது காட்சி தரும் இந்த அஞ்சு வாசல் கிட்டங்கி வளாகத்திற்குள், கடந்த 1967 ஆம் ஆண்டு காலக் கட்டம் வரை, முன்னாள் தமிழக முதலமைச்சர் முதல், அப்போது இருந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் வரை, இங்கு ஆஜராகாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு இந்த கிட்டங்கி, கீழக்கரை நகரின் முக்கிய வணிக தளமாக விளங்கி வந்துள்ளது. ஊர் போற்றும் பெரிய மனிதர்கள் எல்லாம் வலம் வந்த இடமாக இருந்துள்ளது.
அதற்கு ஒரு உதாரணமாக கடந்த 1950 ஆம் வருட கால கட்டத்தில், இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியின் பிரதான தலை வாசல் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், நம் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இன்றும் சாட்சியாக இருக்கிறது.
(இடமிருந்து வலமாக) SVM.செய்யது காசீம், SVM.முஹம்மது ஜமாலுதீன், இராமநாதபுரம் கலெக்டர் அம்பா சங்கர், ஆனா சீனா சேகு மதார் அம்பலம், முன்னாள் தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் (இங்கு வரும் போது தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார்), AMS.அஹமது இபுறாஹீம் (பின்னால் கருப்பு தொப்பி அணிந்திருப்பவர், இராமநாதபுரம் இராஜா சண்முகநாத சேதுபதி, கானா. ஆனா. மூனா. மௌலா முஹைதீன், கடைசியாக நிற்கும் மூன்று பேர்களின் விபரம் தெரியவில்லை. இவர்கள் கலெக்டர் அம்பா சங்கருடன் வந்திருந்த உயர் அதிகாரிகளாக இருக்கலாம்
பின் வரிசை நடுப்பாகத்தில் (இடமிருந்து வலமாக) முதல் நபர் குறித்த விபரம் இல்லை, அஞ்சு வாசல் பண்டக சாலை மேனேஜர், முஹம்மது அப்துல் ரஹ்மான் சாஹிபு (நடுவே உயரமாக வெள்ளை தொப்பி அணிந்திருப்பவர் - அலி பாட்சா மாமா அவர்களின் தந்தையார்), SVM கணக்குப் பிள்ளை
பின் வரிசையில் (இடமிருந்து வலமாக) ஜகுபர், ஹபீப் முஹம்மது (சேர்மன் சேகு அப்துல் காதர் மைத்துனர்), உலகு ஆசாரி ஆகியோர் நிற்கின்றனர். அப்போதும், இப்போதும் இந்த கிட்டங்கி SVM வகையறாக்களின் பூர்வீக சொத்தாக இருந்து வருகிறது.
இந்த புகைபடத்தில், பல முக்கியஸ்தர்களுடன் கீழக்கரையில் கலை நுணுக்கமான தேக்குமர வேலைப்பாடுகளை செய்த உலகு ஆசாரி அவர்களும் இடம் பெற்றிருப்பதை பார்க்கும் போது, சமூகத்தில் அவர்களுக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
குறிப்பு : இந்த அரிய புகைப்படம், கீழக்கரை தச்சர் தெருவில் இருக்கும் மூத்த சமூக ஆர்வலர். அலி பாட்சா மாமா அவர்கள்
(அம்பலார் வீடு) இல்லத்தில் இருக்கிறது.
குறிப்பு : தற்போது சிதிலமடைந்து கிடக்கும் இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியின் தலை வாசலில் தான், அரை நூற்றாண்டுக்கு முந்தையை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அஞ்சு வாசல் கிட்டங்கி வளாகத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டில் இங்கு நடை பெற்ற ஒரு கொலை சம்பவம், அந்த காலக் கட்டத்தில் கீழக்கரையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அஞ்சு வாசல் கிட்டங்கியில் வேலை பார்த்த ஒரு நடுத்தர வயது நபர், 10 வயது சிறுவனை கொலை செய்து, அந்த பிரேதத்தை, இந்த கிட்டங்கியில் உள்ள ஒரு பகுதியில் மறைத்து வைத்திருந்தார்.
அஞ்சு வாசல் கிட்டங்கியின் முதல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பாதை
நாள் முழுவதும் சிறுவன் வீடு திரும்பாததால், துடித்துப் போன பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் போலீசாரின் தேடுதல் வேட்டையில் அஞ்சு வாசல் கிட்டங்கியில் இருந்து பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கொலையாளி குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
போலீசார் குற்றவாளியை விரைந்து பிடிக்க வியூகம் வகுத்தனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் பல்வேறு நபர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மும்முரமாக நடந்தது. யுவராஜ் என்கிற பெயரில் ஒரு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த கொலை செய்தி காட்டுத்தீ போல ஊரெங்கும் பரவியிருந்ததால் பொதுமக்கள் அதிகமானோர் இந்த பகுதியில் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர்.
பழைய தூசு படிந்த சங்குகளுடன் காட்சி தரும் அஞ்சு வாசல் கிட்டங்கியின் ஒரு அலமாரி
அப்போது அந்த மோப்ப நாய் அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதியில் பிரேதம் இருந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு அங்கும் இங்கும் ஆக்ரோசமாக ஓடியது. திடீரெனெ அஞ்சு வாசல் கிட்டங்கியில் வேலை பார்த்த ஒரு நபரை கவ்விப் பிடித்தது.
பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, கொலை எப்படி நடை பெற்றது என்பதை நடித்துக் காட்டினார்.பின்னர் போலீஸ் விசாரணையில் குற்றம் முற்றிலும் நிரூபிக்கப்பட்டு, வழக்கு நடை பெற்று சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவாக உருவெடுத்த பின்னர், கீழக்கரையை பொருத்தமட்டில் ஒரு கொலைக்கு சிறை தண்டனை பெற்றவர் இவரே முதலாமவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை சம்பவம் மற்றும் அது சார்ந்து பரப்பப்பட்ட ஆவி வதந்திகள் தான் இன்னும் இந்த பகுதியை சுற்றி சுற்றி வருகிறது. ஆனால் இன்னும் இங்கு காலை நேரங்களில் சங்கு தொழில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விசயமாகும். அது சம்பந்தமாக அடுத்த பதிவில் காண்போம்.
அஞ்சு வாசல் கிட்டங்கியின் முதல் பகுதியை வாசிக்க :
சரித்திர சேகரிப்பில் உதவி : வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா சுல்தான் அவர்கள்
பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..! (தொடரும் >>>>)
FACE BOOK COMMENTS :