தேயிலை, காபி போன்ற பானங்களை அருந்துவது நம் நாட்டின் பழக்கமல்ல. அவையெல்லாம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. நம் நாட்டின் பெரும் பகுதிகள் வெப்பமிகுந்த பகுதியாக இருப்பதால், இங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானமும், மாலையில் சுக்கு, மல்லி, மிளகு கலந்த மூலிகை குடிநீர் பானமும், இரவு வேளைகளில் கடுக்காய் கசாயமும் அருந்தி முதுமையிலும் இளமையாக வாழ்ந்து வந்தனர்.
இப்போது மாறிப் போன பாரம்பரியங்களின் மத்தியில், பல இடங்களில் சுக்கு மல்லி காபியெல்லாம் மறைந்தே போய் விட்டது. இதனை இன்றும் ஞாபகப் படுத்தும் விதத்தில் கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில், மின்வாரிய அலுவலகம் அருகாமையில் கமகமக்கும் வாசனையுடன், சூடான 'சுக்கு மல்லி காபி' விற்பனை எந்நேரமும் களை கட்டி வருகிறது. இதனை சண்முகவேலு, இராசம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதி நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து 70 வயதை தொட்டாலும் எந்நேரமும் சுறுசுறுப்போடு வேலை செய்து கொண்டிருக்கும் திரு. சண்முகவேலு தாத்தா அவர்கள் கூறும் போது "45 ஆண்டு காலமாக கீழக்கரை செக்கடி பகுதியில் உள்ள 'செட்டியார் காபித்தூள்' கடையில் விற்பனையாளராக வேலை செய்தேன். 1988 ஆம் ஆண்டு முதல் தனியாக இந்த இடத்தில் கடை திறந்து பருத்திப் பால் விற்பனையை துவக்கினேன். பிறகு 1998 ஆம் ஆண்டு முதல் சுக்கு மல்லி காபி வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு துணையாக, காபி தயாரிக்கும் எல்லா வேலைகளிலும் என் மனைவி இராசம்மாள் அவர்களும் உதவியாக இருக்கிறார்கள்.ஆரம்பத்தில் மிக சொற்பமானவர்களே எங்கள் சுக்கு காபியை அருந்தி சென்றனர். பின்னர் மெல்ல மெல்ல, இதன் சுவையில் சொக்கி போன வாடிக்கையாளர்கள் தினமும், வந்து அருந்தி மகிழ்வுடன் செல்கின்றனர்.
நாங்கள் விற்பனை செய்யும் இந்த சுக்கு மல்லி காபியின் அலாதியான சுவைக்கு இயற்கையான முறையிலும், சுத்தமான வகையிலும் தயாரிக்கும் விதம் தான் காரணம். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் இதனை அருந்தலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல்கள் இதில் இல்லை.குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல்,சளி,ஆஸ்துமா,சர்க்கரை,சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும். அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும். அனைத்து காலங்களுக்கும், எல்லா வயதினருக்கும் ஏற்றது. வந்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இது குறித்து 'சுக்கு மல்லி காபி' பிரியர், தம்பி நெய்னா பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜமாலுதீன் அவர்கள் கூறும் போது "நான் எப்போது இராமநாதபுரம் செல்ல பயணித்தாலும், தாத்தா கடையில் சுக்கு மல்லி காபி குடிக்காமல் செல்வதே கிடையாது. கீழக்கரை ஸ்பெசல் லிஸ்டில் தொதல், பணியம், மாசி ஊறுகாய் வரிசையில் இந்த சுக்கு காப்பியும் சேர்ந்துள்ளது. கீழ்க்கரைக்கு புதிதாக வரும் என் நண்பர்களை இங்கு அழைத்து செல்லாமல் இருப்பது இல்லை. இங்கு சுக்கு காபியை தொடர்ந்து அருந்துவதால், நாள் முழுதும் சோம்பல் இல்லாமல், புத்துணர்வோடு இருக்கிறது.மேலும் அதிகபடியான் பித்தம் குறைவதோடு ஜீரணத்தைத் தூண்டி, பசியை அதிகரிக்கிறது" என்று சுக்கு காபியை சுவைத்தவாறு புத்துணர்வோடு தெரிவித்தார்.
இது குறித்து மற்றுமொரு 'சுக்கு மல்லி காபி' பிரியர், தட்டார் தெருவைச் சேர்ந்த செல்வக் குமார் அவர்கள் கூறும் போது "நான் இராமநாதபுரம் இந்தியன் வங்கியில் தங்க நகை மதிப்பீட்டளராக வேலை செய்கிறேன். தினமும் இந்த சாலை வழியாகத் தான் பைக்கில் வேலைக்கு செல்கிறேன்.கடந்த பல ஆண்டுகளாக வேலைக்கு செல்லும் போதும், வேலை முடிந்து ஊருக்கு திரும்பும் போதும் தாத்தா கடையில் சுக்கு மல்லி காபி அருந்தி விட்டு செல்வது தான் வழக்கம். இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. இதன் தனிச் சுவை என்னை கட்டிப் போட்டு விட்டது. தாத்தாவிடம் காபி செய் முறையை கேட்டுத் தெரிந்து கொண்டு வீட்டிலும் செய்து பார்த்தேன். ஆனால் இங்கு குடிக்கும் போது கிடைக்கும் சுவையை வீட்டில் தயாரிக்கும் போது பெற முடிய வில்லை."என்று புகழாரம் சூட்டினார்.
கடல் கடந்து வெளி நாடுகளில் வசிக்கும், கீழக்கரை வாசிகளுக்காக, 'சண்முகவேலு தாத்தா' அவர்கள் தரும் சுக்கு காபி செய்முறை விளக்கம்.
சுக்கு,மல்லி காபி (தேவையானவை)
- சுக்கு - சிறு துண்டு
- மல்லி - 2ஸ்பூன்
- மிளகு - சிறிதளவு
- வெல்லம் / பனைவெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
- தண்ணிர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சுக்கையும், மிளகையும் வெயிலில் நன்கு காயப் போட்டு, பொடித்துக் கொள்ள வேண்டும்,
- மல்லியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வருத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் நீர் உற்றி சுடானதும் அதில் பொடித்த சுக்கு,வறுத்த மல்லி ஆகியவற்றை போட வேண்டும்.
- 10 -15 நிமிடம் நன்றாக வாசனை வரும் வரை
- கொதிக்கவைத்து தேவையான வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான சுக்கு,மல்லி காபி தயார்...
- இதில் பால் சேர்த்தும் அருந்தலாம்
(குறிப்பு : என்ன தான் சுக்கு காபியை வீடுகளில் தயார் செய்து அருந்த நினைத்தாலும், தாத்தா கடையில் மட்டுமே அதன் தனிச் சுவையை ருசிக்க முடியும் என்பது உண்மை )
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.
மழைக் காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுவோர் உண்டு. நெஞ்சில் கபம் சேரச் சேர பிரச்சனை தீவிரமாகிறது. அலோபதி மாத்திரைகளால் தாற்காலிக நிவாரணம் கிடைக்கலாம்; ஆனால், இந்த மாத்திரைகள் சளியை உடலிலிருந்து வெளியேற்றாமல் இருப்பதால் பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதைக் குணப்படுத்த சிறந்த இயற்கை மருத்துவம் இந்த சுக்கு மல்லி காப்பியே... காபி, டீ, கொக்கோ போன்ற பானங்கள் இரைப்பையை பாதித்து சளிச்சவ்வை சீர்குலைத்து சீரணத்தைத் தடுக்கிறது. பல சமயங்களில் இதயத்தைக் கூட ஒழுங்கு தவறி துடிக்கச் செய்கின்றன. இப்பானங்ளில் உள்ள சர்க்கரை உடலுக்கு சூட்டை அளிக்குமே தவிர, சத்துக்களைத் தருவதில்லை. ஆகவே இது போன்ற இயற்கை மூலிகை பானங்களை வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது அருந்துவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும்.
நல்ல முயற்சி. நீண்ட பயணம். நூறுக்கு ஒன்று குறைவான நபர்கள். மலைப்பு தருகிறது. ஏக நாயன் அவனின் சகல பாதுபாப்பையும் அவர்களின் மீது நல்குவானாக. ஆமீன். ஆமீன். யாரப்பில் ஆலமீன்.
சுட்டி காட்டுவதற்கு மிகவும் வருந்துகிறோம்..பயணம் திட்டமிட்டதில் சிறு குறை ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்.. அதுவும் நம்மை போன்று டிராபிக்கல் ஏரியாவில் வாழும் சிறுவர்களுக்கு டார்ஷிலிங், கேங்டாங்க் செல்ல ஏற்ற நேரமில்லை.. நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். அதுவும் இமயமலையின் அடிவாரம்.. பிரதேசம் முழு வெள்ளியை உருக்கி ஊற்றிய்து போல பனி படர்ந்திருக்கும். சிறுவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்..அதிகாலையில் அவசரத்திற்கு நீர் கிடைக்காது. பனிக் கட்டிகள் தான் இருக்கும்.. பன் முறை அந்த பகுதியில் பயனித்தவன் என்ற முறையில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்..
நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்க இரு கரம் ஏந்தி படைத்து காகும் ரப்பில் ஆலமீனிடம் துவாச் செய்வோமாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆகமீன்..