கீழக்கரை நகரின் எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகளில், மீண்டும் குப்பைகளையும், கோழிக் கழிவுகளையும், மனித மலங்களின் எச்சங்களையும் கொட்டி வருவதால், குப்பை பிரச்சனை மறுபடியும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த நகராட்சி நிர்வாகத்தின் மோசமான நிர்வாகத்தால் உருக்குலைந்து குப்பைகரையாகிப் போயிருந்த கீழக்கரை நகரத்தை மீட்டெடுக்க சமூக அமைப்பினர்களும், பொதுநல சிந்தனையாளர்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
நன்றி : (படம் ) A.S.TRADERS, கீழக்கரை |
இந்நிலையில் கடந்த ஆண்டு கீழக்கரை கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதிக்கு திடீர் நேரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார் அவர்கள் கடற்கரை பெட்ரோல் பங்க் பகுதியிலிருந்து கால் நடையாகவே துர் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல், குப்பைகள் குவிந்த கிடக்கும் பகுதியின் கடைசி எல்லை வரை சென்று ஆய்வுப் பணியினை மேற்கொண்டார்.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி பார்க்க (கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்)
(கீழக்கரை கடற்கரை பகுதிகளில் சுகாதாரக் கேடு எதிரொலி - கலெக்டர் திடீர் ஆய்வு !)
இறுதியில் ஒரு வழியாக கீழக்கரை நகரின் கடற்கரை பகுதிகள் குப்பைகளின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்றது. இப்போது மீண்டும் பழைய நிலைக்கே மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இதனால் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் சார்பாக கடந்த 09.05.2013 அன்று கீழக்கரை நகராட்சி ஆணையர் அவர்களை நேரடியாக சந்தித்து, கடற்கரை குப்பை பிரச்னையை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் செய்யது இபுறாகீம், நகர் பொருளாளர் ஹாஜா அனீஸ், நகர் செயலாளர் பசீர் அஹமது, உறுப்பினர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்டோர் நகரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விசயங்களை முறையிட்டனர்.
இதன் எதிரொலியாக கீழக்கரை கடற்கரை பகுதியில் குப்பைகளை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் இந்த பகுதியில் கட்டிட இடுபாடுகளின் மிச்சங்கள், சாக்கடை மண் மூடைகள், செங்கல், ஜல்லி போன்றவற்றை கொட்ட வரும் வாகனங்களை கண்காணித்து, பறிமுதல் செய்யப்படும் என்பதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கீழக்கரை பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment