கீழக்கரை வடக்குத் தெரு சேகு அப்பா சாலையில், முன்னாள் கீழக்கரை தி.மு.க சேர்மன் பஷீர் அவர்கள் வீட்டின் அருகாமையில் (வார்டு கவுன்சிலர் 'இடி மின்னல்' ஹாஜா அவர்களின் மளிகை கடை சமீபம்) ஒரு பெரிய பாதாள பள்ளம் காணப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் கீழக்கரை நகராட்சியால் குடிநீர் குழாய் சீர் செய்வதற்காக தோண்டப்பட்ட, இந்த பள்ளம் மூடப்படாமல், வேலையும் நடக்காமல், அப்படியே கை விடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்களும், நடந்து செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பலர் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விடுகின்றனர்.
இது குறித்து இந்த பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் சகோதரர்.ஜகுபர் அவர்கள் கூறும் போது " கடந்த ஆறு மாதத்தில் மட்டும் மூன்று முறை, இந்த இடத்தில் குடி நீர் குழாயை சீரமைக்கிறோம் என்கிற பெயரில் பள்ளம் தோண்டி இருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை கூட வேலையை சரியாக செய்யாமல், பள்ளத்தையும் மூடாமல் வேண்டுமென்றே இப்பகுதி மக்களை பழி வாங்குகின்றனர். பலமுறை தோண்டி மூடுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதில் ஏகப்பட்ட கமிஷன் வேட்டை வேறு. போதும் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இதனால் நாங்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லை. முதலில் பள்ளத்தை மூடுங்கள்" என்று நகராட்சி நிர்வாகத்திற்கு வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தார்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம், இந்த பள்ளத்தை மூடும் வரை, இப்பகுதியில் வாகனம் ஓட்டி செல்வோரும், நடந்து செல்லும் பொதுமக்களும், மிகுந்த கவனத்துடன் பள்ளத்தை 'பார்த்து' செல்லுமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment