தேடல் தொடங்கியதே..

Saturday, 5 October 2013

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்த 'அபாய மின் கம்பம்' அகற்றப்பட்டது !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில், சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் அருகாமையில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று இருந்து வந்தது. பள்ளி சிறுவர்களும், பொது மக்களும் அதிகம் நடமாடும் இந்த சாலை விழும் நிலையில் இருந்த, இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றக் கோரி பல்வேறு பொது நல அமைப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், மின் துறையினருக்கு புகார் மனு அளித்து வந்தனர். 


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ வரும் லிங்கை சொடுக்கவும் 

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் - உயிரிழப்புகள் ஏற்படும் முன் சீர் செய்யப்பட 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கோரிக்கை கடிதம் !


இந்நிலையில் நேற்று முன் தினம்  'ஒரு லாரி', இந்த மின் கம்பத்தில் மோதியதில் மேலும் முறித்து விழும் நிலையில் இருந்தது. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் இந்த கம்பத்தை, இனியும் தாமதிக்காமல் மாற்ற மேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.அதன அடிப்படையில் பல வருடங்களாக சமூக ஆர்வலர்களால் இந்த இடத்தில் 'புதிய மின் கம்பம்' வேண்டி நடை பெற்ற போராட்டத்தை 'ஒரு லாரி' நிறைவேற்றி தந்துள்ளது.


இதனையடுத்து சேதம் ஏற்படுத்திய லாரி உரிமையாளர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்த மின்சார வாரியம், இன்று (05.10.2013) இந்த அபாய மின் கம்பத்தை மாற்றி, அந்த இடத்தில்  புதிய மின் கம்பம் பொருத்தி வருகிறது. இதனால் தற்போது கீழக்கரை பகுதியில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

இது குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக நிர்வாகி. சமூக ஆர்வலர். செய்யது இபுறாகீம் அவர்கள் கூறும் போது " இந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி பலமுறை மின்சார வாரியத்தினரிடம் புகார் செய்துள்ளோம். 

தற்போது இதற்கு ஒரு விடிவு காலம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புகார் மனுக்களால் முடியாததை, லாரி முடித்து வைத்து விட்டது. நல்ல வேலையாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பழுதடைந்த மின் கம்பங்கள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்களிடம், கடந்த 2010 ஆம் ஆண்டு,  முறையீடு செய்தோம்.

அதற்கு கீழக்கரை நகரில் 585 மின் அளவிகள் பழுதான நிலையில் உள்ளதாகவும், இவை விரைந்து மாற்றப்படும் என்றும் மின்சார வாரியம் பதில் தந்து மூன்றாண்டுகள் முடிவடையப் போகிறது. இன்னும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கீழக்கரை நகருக்குள் இது போன்ற இன்னும் பல அபாயகரமான மின் கம்பங்கள் காணப்படுகிறது. அவை அனைத்தையும், ஒரு லாரி வந்து இடித்த பிறகு மாற்றுவதற்கு முனையாமல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்ற மின்சார வாரியம் முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்.


Friday, 4 October 2013

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களை கண்காணிக்க 'கண்காணிப்பு கேமரா' !

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். வகுப்பறையில் மாணவர்களின் நடத்தை, பாடங்கள் கற்பிக்கும் போது அவர்களின் நிலை குறித்து அறியும் வகையில் பள்ளியில் 19 இடங்களில் கேமரா (ஆண்கள் பிரிவில் எட்டு கேமரா, மெயின் பிளாக்கில் 11 கேமராக்கள்) பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.



இதனை பள்ளியின் தாளாளர் டி.எஸ்.ஏ. ஹமீது அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் சகர்பானு முன்னிலை வகித்தார். புதுப்பள்ளி இமாம் மன்சூர் அலி அவர்கள் துஆ ஓதினார்.

இது போன்ற கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதால் மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் முடியும் என்று ஹமீதியா மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகள் கண்காணிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் என்றும் இதனை தொடர்ந்து பெற்றோர்களுக்கு, பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை குறித்து எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 3 October 2013

கீழக்கரையில் அவசர ஆம்புலன்ஸ் தேவையா ? அழையுங்கள் - கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை அறிவிப்பு !

கீழக்கரை நகரில் அவசர ஆம்புலன்ஸ் தேவைப் படுவோர்களுக்கு உதவுவதற்காக, கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையினரால் ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகரின் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் இந்த சேவை செய்யப்படுகிறது.


ஆம்புலன்ஸ் தேவைப்படுபவர்கள் அழைக்க வேண்டிய அலைப் பேசி எண்கள் :

7418445575 / 9003435377

இஸ்மாயில் - செயலாளர், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை 


இது குறித்து நாம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

'கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை' புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் - பொது மக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகராட்சியில் ஊழலுக்கு துணை போகும் வெட்கக்கேட்டை கவுன்சிலர்கள் கை விட வேண்டும் - துணை சேர்மன் வேண்டுகோள் !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவரும், கீழக்கரை நகராட்சி துணை தலைவருமான ஜனாப். ஹாஜா முஹைதீன் அவர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 5 பக்கங்கள் கொண்ட தெளிவுரை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதில் மத்திய மாநில அரசுகள் வழங்கிய நிதிகள் அனைத்தும் வீனடிக்கப்படுவதாகவும், நகர் மன்ற தலைவரின் கணவர் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், 


நியமனக் குழு, ஒப்பந்த குழு, வரி விதிப்பு குழு போன்ற நகராட்சி சட்ட விதிமுறை குழுக்கள் திட்டமிட்டு  நிராகரிக்கப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் '40 தொகுதிகளும் நமக்கே' என்று முழங்கி வரும் அ.தி.மு.க கட்சியினர், கீழக்கரை மக்களிடம் சென்று ஒட்டு கேட்க முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆகவே கீழக்கரை நகராட்சியில் ஊழலுக்கு துணை போகும் வெட்கக்கேட்டை கவுன்சிலர்கள் அனைவரும் கை விட்டு மக்கள் நலப் பணியாற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார். 







 'மாதிரி' கொள்ளை இரசீது