தேடல் தொடங்கியதே..

Sunday, 10 November 2013

மதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் !

புனித ஹஜ் பயணத்தை முடித்து  தாயகம் திரும்பும் முன்னதாக ஹஜ் பயணிகள் சிலர், மதினா நகரில் பிரசித்தி  பெற்ற ஒரு சில இடங்களை சுற்றி பார்த்து வருவது  வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து  சன் ஷைன் ஹஜ் சர்வீஸ் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு, ஊர் திரும்பும் முன்னதாக சிலர் மதினா நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாதி பேதா ஜபல் ஜின் என்கிற பெயரில் உள்ள ஒரு காந்த மலையை பார்க்க, மூன்று பெண்கள் உள்ளிட்ட 7 பேர்கள் நேற்று (09.11.2013) காலை சவூதி அரேபிய நேரம் 8 மணியளவில்  சென்ற போது விபத்து  நேர்ந்துள்ளது.  



அந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவரும், பரமக்குடி அருகே கீளையூரை சேர்ந்த கபீர் அவர்களின் மகனார் சென்னை புதுக்காலூரி முன்னாள் மாணவர் காதர் கனி ( வயது 24)  ஆகியோர் வபாத்தாகி விட்டனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கீழக்கரை நடுத் தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இப்போது அவர் இறைவன் அருளால் நலமுடன் இருப்பதாக மதினாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







பட விளக்கம் : எமனை சர்புதீன் அவர்கள் நேற்று முகப் புத்தகத்தில் பகிர்ந்திருந்த புகைப்பட செய்தி 

இந்த பகுதியை சுற்றிப் பார்க்க செல்வதற்கு முக்கிய காரணம், சாலையின் இருபக்கங்களிலும் எங்கு பார்த்தாலும் கருநிறமலை பிரம்மாண்டமாக காணக் கிடைக்கும். சாலையின் மீது உள்ள காந்த சக்தியால் கியர் இல்லாமல், ஆக்சிலேட்டர் போடாமல் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது ஆச்சரியப்படும் ஒரு விசயமாக கருதப்படுகிறது. 

இப்படி சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் இந்த பகுதியில் செல்கிறதாம். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் வடிவ தண்ணீர் கேனில் முழுதும் நீரை நிரப்பி சாலையின் மையத்தில் வைத்தால் உருளை வடிவ தண்ணீர் கேன் சாலையில் குடு குடுவென்று ஓடும் அதிசயமும் இங்கு நிகழ்வதாக கூறப்படுகிறது.

இது போல் செய்து பார்க்கும் போது தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது. ஆகவே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்கள்,  தாங்கள் பயணிக்கும் ஹஜ் சர்வீஸ்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே எந்த பகுதிக்கும் செல்ல முனைய  வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட விதத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. இறைவன்  அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன் 

தகவல் : ரியாத்தில் இருந்து 'கீழை இனியவர்' மன்சூர் 

Saturday, 9 November 2013

கீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து !

கீழக்கரை லெப்பை தெருவில், பெண்கள் தொழுகைப் பள்ளி (மதரஸா) அருகாமையில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று இருந்தது. அதன் மீது சட்ட விரோதமாக நகராட்சியின் முறையான அனுமதி இன்றி அவசர கதியில், வெறும் பத்தே நாளில் கட்டி முடிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் மட்டுமே பூர்த்தி அடைந்திருந்த 'சாதனை' வீட்டின் பால்கனி திடீரென இன்று (09.11.2013) மாலை 6.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அந்த நேரம் மதரஸாவில் இருந்து பிள்ளைகள் வந்து கொண்டிருந்தனர். இறைவன் அருளால்.. இந்த பெரிய விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை.



இது குறித்து லெப்பை தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர். பைரோஸ் கான் அவர்கள் கூறும் போது "குறுகிய தெருக்களை கொண்ட நமது நகருக்குள் இது போன்று சட்ட விரோதமாகவும், தரமில்லாமலும், அவசர கோலத்தில் கட்டப்படும் வீடுகளின் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்கள் மீதும் காவல் துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த வீட்டின் ஏனைய பகுதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உடனடியாக இடிக்க ஆவன செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.



கீழக்கரையில் இது வரை  பழைய கட்டிடங்களின் சிலாப்புகள்  மட்டும் தான் திடீர் திடீரென இடிந்து விழுந்து விபத்து நேர்ந்தது. ஆனால் தற்போது அனுமதியின்றியும், பிளேன் அப்ரூவல் இன்றியும் அவசர கோலத்தில் கட்டி முடிக்கப்படும் வீடுகளும் இடிந்து விழும் நிலை  ஏற்பட்டுள்ளது.  இவை இடிந்து விழும் முன்னரே நகராட்சியினர் வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வீட்டை இடிக்க முன் வர வேண்டும். இல்லாத போது  வீட்டில் குடியிருப்பவர்களே விரைவில் விபத்தை சந்திக்கும் அபாயம்  ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.



கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் திடீரென சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு !


கீழை இளையவன் வாசக நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ! 

(UPDATED 11.11.2013 11 am)

கடந்த சில தினங்களுக்கு முன்பு லெப்பை தெருவில், நகராட்சி கிணற்றை ஆக்கிரமித்து அவசர கோலத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விழுந்தது குறித்து, பொதுமக்கள் நலன் கருதி ஒரு செய்தியினை பகிர்ந்திருந்தோம். அதில் நாம் குறிப்பிட்டிருந்த வாசகங்கள் அத்தனையும் உண்மை தான் என்பதை விளங்கி கொள்ளாமல் நண்பர்கள் சிலர் கருத்து பதிவிட்டிருந்தனர். 

பொது சொத்துக்களை சமூகத்திற்கு பயனளிக்கும் விதமாக, பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தால் அதில் யாரும் குறை கூறவோ, அதை மீட்டெடுக்கவோ முனைந்திட மாட்டார்கள். மாறாக தனி நபரின் ஆக்கிரமிப்பிற்கு, சம்பந்தப்பட்ட பொது சொத்து சிக்கும் போது, அதற்கு எதிராக குரல் கொடுப்பது அவசியமாகிறது. அது ஒரு சதுரடி நிலமாக இருந்தாலும் சரியே.

அன்பு நண்பர்களே.. கீழை இளையவன் வலை தளத்தின் வாசகராக, இதற்கு முன்னர் பகிரப்பட்ட முந்தைய பதிவுகளையும் வாசித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். எந்த பதிவாக இருந்தாலும் அதில் ஆதாரங்களுடன் உண்மைகள் மட்டுமே பேசப்பட்டு இருக்கும். இதிலும் அவ்வாறே பதியப்பட்டுள்ளது. பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, சொந்த  பந்தங்களுக்காகவோ, அரசியல் இலாபத்திற்காகவோ செயல்படுபவன் நான் அல்ல. அவ்வாறு செயல்பட்டு வரும் தளமும் இதுவல்ல. 

மேற்குறிப்பிட்டுள்ள பொது சொத்து குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பதில் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரியும், சர்வேயரும் முறைப்படி ஆய்வு செய்து, நகராட்சிக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் கீழக்கரை நகராட்சியும் முறைப்படி கடந்த 11.10.2013 அன்று இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றிடுமாறு, சம்பந்தப்பட்ட வீட்டாருக்கு அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அதனை அகற்றிடவில்லை. அவ்வாறு உரிய நேரத்தில் வீட்டை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு  பகுதிகளையும், ஆபத்தான பகுதிகளையும் அகற்றி இருந்தால் இது போன்ற விபத்தை தடுத்து இருக்கலாம்.



கீழக்கரை நகர் மிக குறுகிய தெருக்களை கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களும், மதரசா சிறுவர்களும் செல்லும் பாதை இது. இனி இது போல் யாரும் அவசர கதியில் கட்டிடங்களை கட்டி, மகத்துமிக்க மனித உயிர்களுடன் விளையாடி விடக் கூடாது என்பதும், பொது சொத்துக்களை யாரும் எள்ளளவும் அபகரித்து விடக் கூடாது என்கிற நல்ல நோக்கம் கொண்ட பதிவு இது. இது சம்பந்தமாக வீட்டின் உரிமையாளர், முகநூல் வாயிலாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கும் உரிய பதிலை அளித்து  இருக்கிறேன். இதற்கு மேல் தேவையற்ற விவாதங்கள் தொடர்ந்திட வழி  வகை செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். எனினும் இதனை சட்டத்தின் துணை கொண்டு எதிர் கொள்கிறேன்.

கீழக்கரை சாலை தெருவில் 'இப்போதே' பல்லை காட்டும் பைப்புகள் - தரமற்ற பணிகளால் பொது மக்கள் எரிச்சல் !

கீழக்கரை சாலை தெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிக்கப்பட்ட கழிவு நீர் பைப்புகள், நகராட்சி செய்து முடித்ததாக சொல்லப்படும் பணிகளின் தரம் இப்போதே பல்லை காட்ட ஆரம்பித்து விட்டது.  முறையாக ஆழப்படுத்தி தோண்டப்பட்டு குழாய்கள் பதிப்பட்டாத காரணத்தால் குழாய்கள் வெளியே துருத்திக் கொண்டு தெரிகிறது. சிறுவர்கள் இதன் மேல் நடந்து சென்றால் கூட உடைந்து விடும் அளவுக்கு இருக்கிறது. இன்னும் சில இடங்களில் தரமற்ற குழாய்கள், அதற்குள் உடைபட்டு கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். 


இது குறித்து இந்த பகுதியின் (12வது வார்டு) முன்னாள் கவுன்சிலர் அமீது கான் அவர்கள் நம்மிடையே பேசும் போது "முன் அனுமதி என்கிற பெயரில், ரூ.280000 திட்ட மதிப்பீட்டில், அவசர கோலத்தில் போடப்பட்டு இருக்கும் இந்த குழாய்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது தான், மக்களுக்கு உண்மை விளங்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால் இப்போதே அதன் தரம் பல்லை இளிக்க ஆரம்பித்து விட்டது. முறையாக ஆழப்படுத்தி தோண்டாமல் ஜே சி பி இயந்திரத்தை வைத்து அதிரடி வேலை செய்து முடித்துள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் அவ்வாறு இல்லை. அதே போல் இடையிடையே கட்டப்பட்ட  கழிவு நீர் சுத்தம் செய்யும் தொட்டிகள் செங்கலால்  கட்டப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் தரமில்லாத லோக்கல் உறைகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

கழிவு நீர் ஓடுவதற்கு முறையான வாட்டமும்  வைக்கப்படவில்லை. இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செய்வதால் வருங்காலத்தில் பொதுமக்கள் எந்த அளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த வார்டு கவுன்சிலரும், நகராட்சி நிர்வாகமும் புரிந்து செயல்பட வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Friday, 8 November 2013

கீழக்கரை 18 வது வார்டு பகுதியில் ஆபத்தான மரக் கிளைகள் அதிரடியாக அகற்றம் - துரித நடவடிக்கை எடுத்த கவுன்சிலருக்கு நன்றி !

கீழக்கரை சின்னகடை தெரு பகுதியில்  (முத்தலிபு மாமா அரிசிக் கடை அருகாமையில்) நிற்கும் மரத்தின் கிளை, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் உரசி செல்வதால், மின் கம்பத்தில் (மின் கம்ப எண் : 18/29) நகராட்சியால் பொருத்தப்பட்டு இருக்கும் தெருவிளக்கு அடிக்கடி பழுதாகி வந்தது. மேலும் சில வேளைகளில் டிரான்ஸ்பார்மரில், மின் தடையும் (FUSE) ஏற்பட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாகியது. இது சம்பந்தமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி  வெளியிடப்பட்டது.





                      நேற்று வரை.....                                                            இன்று....

இது குறித்து நாம் நேற்று வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


இந்நிலையில் இன்று 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்களின் முயற்சியில் மரக் கிளைகள் வெட்டி அகற்றபட்டதோடு, தெருவிளக்கும் பழுது இல்லாமல் இரவில் ஒளி உமிழ்வதற்கு  வழிவகை செய்யப்பட்டது. 



முழுமையாக அகற்றப்பட்ட மரக் கிளைகள் 

இது குறித்து இந்த மின் கம்பத்தின் அருகாமையில் உள்ள இல்லத்தில் வசிக்கும் சகோதரர். முஹம்மது ஹுசைன் அவர்கள் கூறும் போது 

"இந்த பகுதியில் ஆபத்தான நிலையில் மரக்கிளைகள், மின்சார வயரில் உரசி அடிக்கடி பிரச்சனை எழுந்து வந்தது. கடந்து சில தினங்களுக்கு முன்னர் கீழை இளையவன் வலைதளத்தில், புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு இன்று மரக்கிளைகள் அகற்றப்பட்டு விட்டது. 

இது உணமையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும் முகமாக விழிப்புணர்வு செய்தி வெளியிட்ட கீழை இளையவன் வலை தளத்திற்கும், உடனடியாக மரக் கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுத்த 18 வது வார்டு உறுப்பினர் முகைதீன் இபுறாஹீம் அவர்களுக்கும், எங்கள் தெரு மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்கள் கூறும் போது 

"இங்கு பல்லாண்டு காலமாக மின்சார உயர் அழுத்த வயர்களின் மீது மரக் கிளைகள் உரசிக் கொண்டிருந்தது. இதனால் விரைந்து சரி செய்யக் கோரி இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இது சம்பந்தாக, கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி வெளியிட்டமைக்கு நன்றி. இது போன்ற செய்திகளால் துரிதமாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற முடிகிறது. இன்று மரக் கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. தெருவிளக்கும் முறையாக சரி செய்யப்பட்டு விட்டது.

இதே போல் சின்னக்கடைத் தெருவில் (கருவாட்டுக் கடை சமீபம் ) நிற்கும் பட்டுப் போன மரத்தையும் விரைவில் அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியத்தினரின் ஒத்துழைப்போடு முயற்சி மேற்கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.