தமிழகத்தின் அனைத்து நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக வெள்ளரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வருகிறது. ஆனால் நம் பகுதி சக்கரை கோட்டை வெள்ளரிக்காயின் சுவை போன்று வேறெங்கும் ருசிக்க முடியாது. வெள்ளரிக்காயில் பல்வேறு ரகங்கள் இருக்கிறது. அதில் நம் இராமநாதபுரத்தில் உள்ள சக்கரகோட்டை வெள்ளரிக்காய் மிகவும் சுவை மிகுந்தது. இந்த பகுதியில் கிடைக்கும் பிஞ்சு வெள்ளரிக் காய்க்கு, என்றும் மவுசு அதிகமாகவே இருக்கிறது. நம்மில் சில நண்பர்கள் இந்த வெள்ளரிக்காயை வெளிநாடுகளுக்கும் கொண்டு போவதுண்டு.
தற்போது இராமநாதபுரம் சக்கர கோட்டை கண்மாயில் நீர் முழுவதும் வற்றி காணப்படுவதால், இந்த பகுதி விவசாயிகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ளனர். சக்கர கோட்டை செக் போஸ்ட் பகுதியிலிருந்து, இராமநாதபுரம் இரயில்வே கேட் வரையிலும், சாலையோரங்களில் வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் போன்றவற்றின் வியாபாரம் களை கட்டி இருக்கிறது.
இது குறித்து இந்த பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் திருமதி. மங்களேஸ்வரி அவர்கள் கூறும் போது "இந்த வருடம் இறைவன் அருளால் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சாலையின் இரு மருங்கிலும் விற்பனையாகும் வெள்ளரிக் காய்களை ருசி பார்த்த வண்ணம் செல்கின்றனர். வீடுகளுக்கும் மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனர். ஏழு முதல் பத்து வரை உள்ள சிறிய வெள்ளரி பிஞ்சுகளின் கூறுகள் ரூ. 10 க்கு விற்பனையாகிறது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment