தேடல் தொடங்கியதே..

Friday, 30 March 2012

கீழக்கரையில் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் 'பத்திரப் பதிவு அலுவலகம்' !

தமிழக அரசின் நடப்பாண்டுக்கான புதிய நிதி நிலை அறிக்கை (பட்ஜெட் 2012-2013) தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, சொத்துக்கள் மீதான வழிகாட்டுதல் மதிப்பு உயர்வானது, ஏப்ரல் 1 ஆம் தேதி (01.04.2012) முதல் அமலுக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.




சார்பதிவாளர் அலுவலகம், கீழக்கரை


கூட்ட நெரிசலில் பத்திரப் பதிவு அலுவலகம்

நம் கீழக்கரை நகரிலும், பத்திரப் பதிவு அலுவலகம், வேலை நேரம் முழுதும், சொத்துக்களை பதிவு செய்ய காத்திருக்கும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. அவசர கோலத்தில் சொத்துக்களை பதிவு செய்ய முண்டியடிக்கும் பொதுமக்களை கட்டுப்படுத்த, முறையாக அனைவருக்கும் 'டோக்கன்' வழங்கப்பட்டு  சார்பதிவாளர் அறைக்குள் அனுமதிக்கப் படுகின்றனர்.


டோக்கனோடு காத்திருப்போரின் ஒரு பகுதி

பத்திரப் பதிவுக்கு காத்திருக்கும் பெண்கள்  


இது குறித்து சாலைதேருவைச் சேர்ந்த சீனி முஹம்மது ஆலிம் அவர்கள் கூறும் போது "தமிழக அரசின் பட்ஜெட்டில், வழிகாட்டுதல் மதிப்பு, இப்போது இருக்கும் தொகையை விட ஏறக்குறைய 250% உயர்த்தப்பட்டு இருப்பதால், பத்திரப் பதிவு செய்ய தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


சீனி முஹம்மது ஆலிம் அவர்கள்
ஒரே நேரத்தில் அதிகமானோர் இங்கு குவிவதால், பத்திரப் பதிவு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். புதிய மதிப்பினை செயல்படுத்த இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் தான், இந்த அளவுக்கு கூட்டம் காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.


கடும் பிஸியில் பத்திர எழுத்தர்கள் !
 


பொதுமக்களின் மேலான கவனத்திற்கு 

பழைய வழிகாட்டுதல் மதிப்பின்படி, பத்திரம் பதிய வேண்டுமென்ற அவசரத்தில், பத்திரத்தில் அச்சிடப்பட்டிருக்கும்  பெயர், முகவரி, சர்வே எண், பட்டா எண், நான்கு மால்கள், தாய் பத்திரத்தின் பதிவு எண்கள் மற்றும் வருடம், உட்பிரிவு புல எண்கள்  போன்ற சரத்துக்களை சொத்துக்களை வாங்குவோரும், விற்போரும் தெளிவாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திட வேண்டாம். அவ்வாறு தவறுகள் ஏற்படும் போது, பின்னாளில் தேவையற்ற பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்.

வேகத்துடன்.. விவேகமும் இருப்பது நல்லது...  கவனம் தேவை !

Tuesday, 27 March 2012

கீழக்கரையில் வபாத்து அறிவிப்பு

கீழக்கரை தம்பி நைனா பிள்ளை  தெருவைச் சேர்ந்த மர்ஹூம். 'வாட்டி' செய்யது அபுதாகிர், மர்ஹூமா. செய்யது அலி பாத்திமா  ஆகியோர்களின் மூத்த மகளும், நெய்னா முஹம்மது, மர்ஹூம். சீனி மதார் சாஹிபு (சின்னத்தம்பி), ஐனுன் பரிதா ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம். சுல்தான் அமீர்தீன் (செல்லாப்பா), ரமீஸ் நெய்னா ஆகியோரின் மாமியாரும், முஹம்மது நவாஸ்தீன், செய்யது சிராஜுதீன், செய்யது இபுராஹீம், செய்யது ஹமீது தாஹிர், செய்யது ஹாஜா நஜிமுதீன், நஜிமு நிசா பேகம், சித்தி ஜரினா பேகம் ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. செய்யது அஹமத்  நாச்சியா   அவர்கள் நேற்று (26.03.2012) இரவு  வபாத்தாகி விட்டார்கள். 


(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்). அவர்களின் ஜனாஸா   நல்லடக்கம் இன்று (27.03.2012) மதியம் 3.30 மணிக்கு கடற்கரைப் பள்ளி மைய வாடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு 

சிராஜுதீன் -  00971504246598 

ஹாஜா நஜிமுதீன் - 00918056884272

Monday, 26 March 2012

கீழக்கரையில் மீண்டும் கிணறுகளில் விடப்படும் 'கம்பூசியா மீன்கள்' - மலேரியா ஒழிப்பு நடவடிக்கையால் பொது மக்கள் ஆறுதல் !

கீழக்கரையில் மலேரியா மற்றும் விஷ காய்ச்சலால் தற்போது பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பெய்த சிறு மழையின் காரணமாகவும் கொசுக்களின் உற்பத்தி பெருகி விட்டது. கடந்தாண்டு வீடுகள் தோறும் கிணறுகளில் மலேரியா கொசு ஒழிப்புக்கான "கம்பூசியா' என்ற மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் பெரும்பாலான வீடுகளில் செத்து விட்டன. மீண்டும் இந்தப் பணி செயல்படுத்தப்படுவதால் பொது மக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.


கம்பூசியா மீன்கள் உள்ள வாளியுடன் ஊழியர்கள் 


இது குறித்து நெய்னா முகம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஹாமீது இபுறாகீம் அவர்கள் கூறும் போது  "இந்த வகை மீன்கள் வீடுகளின் கிணறுகளில் விடப்பட்டிருந்த காலக் கட்டத்தில் மலேரியா காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.


மலேரியா கொசுப்புளுக்களின் எதிரி - 'கம்பூசியா மீன்கள்'

இந்த நல்ல திட்டத்தை திரும்பவும் செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று திரும்பவும் செயல் படுத்தப்படும் இந்த திட்டம் பொது மக்கள் அனைவருக்கும் ஆறுதலளிக்கிறது. ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் மீன்களை விடுவதோடு நிறுத்தி விடாமல் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளின் கிணறுகளிலும் விட வேண்டும்" என்று தெரிவித்தார்.


கம்பூசியா மீன்கள் விடும் பணியில் ஊழியர்கள்


மலேரியா நோயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்ற போதிலும், நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

*  மழை நீர் மற்றும் குடிநீரில் உற்பத்தியாகி பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

*  வீட்டில் உள்ள மழை நீர் தேங்ககூடிய பயன்படுத்தாத உரல், தேங்காய் மூடி, டயர், பெயின்ட் டப்பாக்கள், பூந்தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

* வீட்டில் குடிநீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

*தண்ணீரில் உள்ள புழுக்கள் சிறிது நாட்களில் கொசுவாக மாறிவிடும். எனவே, தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகளில் சிறிய புழுக்கள் இருந்தால், நீரை துணியால் வடிகட்ட வேண்டும்
.
*  பயன்படுத்தாத கிணறுகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் கம்பூசியா வகை மீன்களை வளர்ப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். இதற்கு மாநகராட்சி மலேரியா பிரிவை அணுகவும்.

*  செப்டிங் டேங்க் காற்று போக்கியில் கொசுவலையை கட்டி வைக்கவும். செப்டிங் டேங்கை ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

* குளிர் காய்ச்சல் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும்.


வீடுகளின் கிணற்ற்றுக்குகுள் மீன்கள் விடப்படும் காட்சி


மலேரியா கொசுப்புழுக்களை அடியோடு அழிக்கும் கம்பூசியா மீன்களை கிணறுகளில் விடும் திட்டம் ஒரு பக்கம் நடைபெற்றாலும் வெளியே உலவும் மலேரியா கொசுக்களை ஒழிக்க புகை அடிப்பதையும் அனைத்து பகுதிகளிலும் நகராட்சியினர் துரிதப்படுத்த வேண்டும்.

Saturday, 24 March 2012

கீழக்கரையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை - காவல் துறை ஆய்வாளர் முயற்சி !

சாலை விபத்து முக்கியமான உயிர்க்கொல்லி நோயாக உலகளவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. நம் கீழக்கரை நகரிலும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத்துக்களும் அதிகமாக நடந்த கொண்டிருக்கிறது.  

"விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள்; காரில் செல்லும் போது 'சீட் பெல்ட்' அணியுங்கள். பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்" என காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் நம் கீழக்கரையில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு, மூன்று விபத்துக்களாவது நடந்து விடுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.




தற்போது தமிழகத்தில் பல இடங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஹெல்மெட் விற்பனையும் நம் பகுதிகளில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. ஆனால் விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக, தரமற்ற ஹெல்மெட்களை, வாகன ஓட்டிகள் வாங்கி செல்கின்றனர். 


சில காலங்கள் மட்டும் சூடு பிடிக்கும் ஹெல்மெட் விற்பனை

இது குறித்து கீழக்கரை காவல் ஆய்வாளர் இளங்கோவன் அவர்கள் கூறும் போது, "நமது கீழக்கரை நகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதிலும் சில பேர்கள் ஹெல்மெட்டை வண்டியில் மாட்டி விட்டுட்டு தான் ஓட்டுறாங்க.  இந்த இரு சக்கர வாகனங்கள் ஓட்டி ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலும் தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது.  


இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அவர்கள்
தலைக்காயத்தை முழுமையாக தடுக்கவே  இந்த ஹெல்மெட். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாது ஹெல்மெட் அணிய வேண்டும். நம் கீழக்கரை நகரில், வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கீழக்கரை காவல் துறையும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகமும் இணைந்து, ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தும் நோக்கோடு முயற்சிகள் மேற்கொள்ள இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.


ஹெல்மெட் அணிந்த வாகன ஒட்டி (இடம் : புதுக் கிழக்குத் தெரு, கீழக்கரை)

இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக இணைச் செயலாளர் செய்து சாகுல் ஹமீது அவர்கள் கூறும் போது "தினந்தோறும் நாளிதழ்களில் இரு சக்கர வாகன விபத்துக்களில் பலியாகிறவர்கள் பற்றி செய்திகள் வரும் போது  'ஹெல்மெட் அணியவில்லை' என்று அடைப்புக் குறியிட்டு செய்தி வெளியிட்டிருப்பார்கள். அதற்கான காரணம் இது போன்ற விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி இறந்து விட்டார்கள் என்றால் இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க.





அதற்கு அத்தாட்சியாகத் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தா மட்டும் தலையில அடிபடாமலா இருக்கப் போகுது? என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அதேல்லாம் கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.



ஹெல்மெட் அணிந்த வாகன ஒட்டி (இடம் : பாலாக்கா கறிக் கடை அருகில்)

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. நம் உடல் உறுப்புகளை செயல்படுத்தும் ஒட்டு மொத்த கன்ட்ரோல் நம் தலையில் இருக்கக்கூடிய மூளையாகும். இதன் மொத்த எடை 1.5 கிலோ ஆகும். 100 கிலோவிற்கு மேல் உள்ள மனிதனுக்கும் இதே அளவுதான். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கும் திறன், அனுமானித்தல், கேட்டறிதல், செயல்படுத்துதல், கட்டளையிடுதல், செக்ஸ் உணர்வுகள் போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்வது இந்த மூளைதான்.

அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் காலம் வருமா?

இந்த மூளையை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் தலையாய கடமையாகும். இந்த மூளை அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்தில் தான். 50 சதவீத சாலை விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவு , மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தான் முக்கிய காரணங்களாகும்.


முஸ்லீம் பஜாரில் NASA அமைப்பினரால் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு

பல ஆயிரங்கள் கொடுத்து, தனக்கு பிடித்த மாடல் பைக்குகளுக்காக  மட்டும் பல மாதங்கள் காத்திருந்து வாங்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒரு ஆயிரம் செலவழித்து ஹெல்மெட் வாங்க முயற்சிப்பதில்லை. ஹெல்மெட் அணிவதை கேவலமாகவும், கவுரவ குறைச்சலாகவும் பார்ப்பது வருத்தத்திற்குரியது.  ஆகவே 'வரு முன் காப்பது' சாலை விபத்தினால் ஏற்படும் மூளைக்காயத்திற்கு சாலச்சிறந்தது.