தேடல் தொடங்கியதே..

Tuesday, 26 June 2012

கீழ‌க்க‌ரை க‌ட‌ல் பால‌த்தில் அமைச்ச‌ர்க‌ள் ஆய்வு - KMSS சங்கத்தினர் கோரிக்கை மனு !

நம் கீழக்கரை புதிய கடல் பாலம் பகுதிக்கு இன்று (24.06.2012) காலை 9 மணியளவில் மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ ஜெயபால் மற்றும் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மற்றும் மீன் வளத் துறை சம்பந்தமான அரசு அலுவலர்கள், அதிமுக‌ மாவ‌ட்ட‌ செயலாள‌ர் ஆனிமுத்து, கீழக்கரை ந‌க‌ராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன், உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் வருகை தந்தனர்.



புதிய கடல் பாலத்தின் கடைசி முனை வரை சென்று ஆய்வு செய்த அமைச்சர்கள், பாலத்தின் அடியில் தேங்கி இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றி, மீண்டும் மணல் குவியாத வண்ணம், நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 15 நிமிடங்கள் முழுமையாக பார்வையிட்ட அமைச்சர்கள், சில அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கை அந்த இடத்திலேயே கண்டித்தனர்.





இந்த வருகையின் போது,  கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் (KMSS) செயலாளர் இஸ்மாயில் தலைமையில் தலைவர் ஜமால் அஸ்ரப் முன்னிலையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன் மொழியப்பட்டிருந்தது.

1. கீழக்கரை நகரில், மிகப் பிரதானமான பொழுது போக்கும் இடமாக இந்த கடற்கரை பகுதி இருப்பதால் புதிய கடல் பாலம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிறுவர் பூங்கா மற்றும் பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் அமைத்து தர ஆவன செய்ய வேண்டும்.

2. கீழக்கரை நகரை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில், துர் நாற்றம் வீசும் குப்பைகளையும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளையும், கோழிக் கழிவுகளையும் சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் கடல் நீர் மாசுபடுத்துவதொடு, மீன் வளமும் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதியை ஆய்வு செய்து உடனடியாக குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை ஓரங்களில் குப்பைகளை வீசி செல்லும் இந்த விசமிகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க, நகராட்சி கமிசனருக்கு உத்தரவிட வேண்டும்.

3. தமிழக அரசால் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ2000த்தை உயர்த்தி அதிகமாக்கி தர மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு  மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.




பாலத்தின் அடியில் குவிந்துள்ள மணல் திட்டுக்களை அகற்றும் பணிகளில் துரித நடவடிக்கை எடுத்து, விரைவில் புதிய கடல் பாலத்தின் திறப்பு விழா நடத்த முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதும், KMSS சங்கத்தினரின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதும், இங்கு திரண்டிருந்த பொது மக்கள் அனைவரின் ஆசையாக இருக்கிறது.

2 comments: