தேடல் தொடங்கியதே..

Tuesday, 22 October 2013

கீழக்கரையில் பால்கனி சிலாப் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம்!

கீழக்கரை பேட்டை தெருவில் பாபு அப்துல்லா ஆட்டோ ஸ்டாண்ட் அருகே (பல் மருத்துவர் ரமீஸ் கிளினிக் மற்றும்  குழந்தைகள் நலமருத்துவர் ஜபருல்லா கிளினிக் செயல்படும் கட்டிட வாசலில்) அமைந்து உள்ள கட்டிடத்தின் சிலாப் இன்று (22.10.2013) இரவு சுமார் 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததில், அதன் அருகில் பேருந்திற்காக நின்றிருந்த  முனியம்மாள் (வயது 55) மற்றும் காந்தாரி (வயது 75) ஆகியோர் படு காயமடைந்தனர்.




காயமடைந்த இருவரையும் உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. படு காயமடைந்த இருவருக்கும் தற்போது இராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. 

கீழக்கரை அத்தியிலை தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடையால் டெங்கு அபாயம் !

கீழக்கரை அத்தியிலை தெருவில் கடந்த நான்கு நாள்களாக, சாக்கடை நீர் தெருவெங்கும் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் பெண்மணிகளும், பள்ளிகூடங்களுக்கு சென்று வரும் சிறு பிள்ளைகளும், இந்த சாக்கடையில் நடந்தே செல்கின்றனர். தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் இருக்கிறது. 



இது குறித்து இந்த பகுதியை கடக்க முடியால் தவித்த ஒரு மூதாட்டியிடம் பேசிய போது "பஞ்சாயத்து பொது சாக்கடை குழாயில அடப்பு ஏற்பட்டு நாலு நாள் ஆவுது. இந்த வார்டு கவுன்சிலருட்டே இது சம்பந்தமா, எங்க தெரு புள்ளைவ சொல்லியிருக்கு. ஆனா இது வரை ஒன்னும் நடக்கலை. பஞ்சாயத்து ஆபீஸ் வரைக்கும் போவதற்கு எனக்கு ஏழலை. வாப்பா சீதேவி எதாச்சும் ஏற்பாடு செய்யுங்க" என்று வயோதிக கோபத்தை அடக்கி கொண்டு பேசினார். 



கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தற்போது செயல்படுத்தி வரும் கழிவு நீர் உறிஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை வைத்து, உடனடியாக இந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்துவதோடு, நட்கராட்சி பொது  கழிவு நீர் குழாயை சுத்தப்படுத்த வேண்டும் என்பதும் டெங்கு, மலேரியா போன்ற நோய் நொடிகளை உருவாக்கும் கொசுக்கள் உருவாகாமல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதும் இப்பகுதி மக்கள் அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.  

கீழக்கரை நடுத்தெருவில் பயனற்று கிடக்கும் அபாய வாருகலை விரைந்து மூட பொதுமக்கள் வேண்டுகோள் !

கீழக்கரை நடுத்தெருவின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான, கீழக்கரை டவுன் காஜி அவர்களின் வீட்டு அருகாமையில், ஒரு 'அபாய வாருகால்' இருந்து வருகிறது. இந்த பகுதியிலிருந்து மேடான பகுதி துவங்குவதால் கழிவு நீர் சரியாக ஓடாமல் சாலைகளில் வழிந்தோடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. அதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து, சுகாதாரத்தை கருத்தில் கொண்டும், கழிவு நீர் சரியாக ஓடும் வாட்டத்தை முறையாக செய்ய வேண்டியும், பொது கழிவு நீர் செல்லும் குழாய் தடத்தை ஏற்படுத்தினர். 



அதன் பிறகு இன்று வரை சாக்கடை நீர் சரியாக சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் தற்போது வாருகால் பயனற்ற நிலையில் இருப்பதோடு, காலியாக இருக்கும் இந்த வாருகாலில் குப்பைகள் சேர்ந்து  கொசுக்களின் பிறப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த பாதை மிகக் குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாகவும் இருக்கிறது. 



மேலும் இரவு நேரங்களில், தொழுகைப் பள்ளிக்கு செல்லும் பொதுமக்களும், பெண்மணிகளும், சிறுவர்களும், இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ஒதுங்கும் போது இடறி விழுந்து அடிபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த அபாய வாருகாலை மூட ஆவன செய்யும் படி, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இது குறித்து நகராட்சி சேர்மன் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் அவர்களிடம் இப்பகுதி பொதுமக்கள் முறையிட்ட போது "பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த அபாய வாருகாலை மூடுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதாக தெரிவித்திருக்கிறார். 

கீழக்கரை பழைய குத்பா பள்ளியை 'பழமை மாறாமல்' புதுப்பிக்கும் முதற்கட்ட புனரமைப்பு பணி துவங்கியது - ஜமாத்தார்கள் மகிழ்ச்சி !

கீழக்கரையில் அமைந்திருக்கும் மிக தொன்மையான, பல நூற்றண்டுகள் பழமை மிக்க புரதானப் பள்ளியாக திகழும் பழைய குத்பா பள்ளியை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டி, ஜமாத்தார்கள் பல்வேறு கட்ட கலந்தாய்வு ஆலோசனைகளை தொடர்ச்சியாக செய்து வந்தனர். இதில் பள்ளியை புனரமைப்பு செய்யவும், விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும், பழைய குத்பா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.  



இது குறித்து நாம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 



இந்நிலையில் தற்போது பழைய குத்பா பள்ளியின் ஒரு பகுதியில், சுண்ணாம்பு பூச்சுகள் அகற்றப்பட்டு, முதற்கட்ட புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது. இதனால் பல காலங்களாக, பள்ளியை புனரமைப்பு செய்து பொலிவாக்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்த ஜமாத்தார்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 




இது குறித்து பழைய குத்பா பள்ளி ஜமாத்தை  சேர்ந்த மூத்த சமூக ஆர்வலர். கீழக்கரை அலி பாட்சா அவர்கள் நம்மிடையே பேசும் போது "தற்போது முதல் கட்ட பணிகள் துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பள்ளி மிக உறுதியான பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்த இந்த பள்ளியை பழமை மாறமல் புதுப்பிக்கும் பணி எனபது மிக நுட்பத்துடன் செய்யும் பணியாகும். இறைவன்  அருளால் இப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று, நிறைவடைந்திட அனைவரும் இறைவனிடம் கையேந்துவோம்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

படங்கள் : நண்பர்கள் பரக்கத் அலி & அபு சாலிஹ்