தேடல் தொடங்கியதே..

Sunday, 2 September 2012

கீழக்கரையில் 'ஆதார்' தேசிய அடையாள அட்டைக்கான பணிகள் தீவிரம் - ஆர்வமுடன் பதியும் பொதுமக்கள் !

கீழக்கரையில் ஆதார் என்று அழைக்கப்படும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணிகள் நேற்று துவங்கியது. கீழக்கரை நகரில் இதற்கென பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களில் அதற்கான பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தங்கள் தகவல்களை அளித்த வண்ணம் உள்ளனர். 

'ஆதார்' - தேசிய அடையாள அட்டை ஏன் ? எதற்கு ?

நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.  இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகத் தான் இந்த தேசிய அடையாள அட்டை இருக்கும்.


ஏனெனில் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க இந்திய தேசிய ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி என்பவர் இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். 

முதன்மை அட்டை

நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். அது மட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும் போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

 
அடையாள அட்டையில் என்ன இருக்கும் ?

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

கீழக்கரையில் 'ஆதார் அட்டை' பெற எங்கு செல்ல வேண்டும் ?

கீழக்கரையில்  இந்த முகாம்கள் எங்கெங்கு நடை பெறும்  என்பதை துவங்கி நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 

ஆக 30 முதல் செப் 2 வரை 1, 2, 6 ஆகிய வார்டுகளுக்கு மறவர் தெரு ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,

செப் 2 முதல் 5 வரை 3, 4, 5 வார்டுகளுக்கு கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியிலும்,

செப் 6 முதல் 8 வரை 7, 8, 9, 10 ஆகிய வார்டுகளுக்கு மஹ்தூமியா பள்ளியிலும்,

செப் 9 முதல் 11 தேதி வரை 11, 12, 13, 14 ஆகிய வார்டுகளுக்கு மேலத்தெரு ஹமீதியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 12 முதல் 14 வரை 15, 16, 17 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு தெற்குதெரு இஸ்லாமியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 15 முதல் 17 வரை 18, 19 ஆகிய வார்டுகளுக்கு சதக்கத்துன் ஜாரியா பள்ளியிலும்,

செப 18 முதல் 20 வரை 20, 21 வார்டுகளுக்கு வடக்குதெரு சிஎஸ் ஐ பள்ளியிலும் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படுகிறது.
 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.  

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை, விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை, 

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது,  கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி, இருப்பிடச் சான்றிதழ், சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு http://uidai.gov.in/ என்ற இணைய
தள முகவரியை சொடுக்கி பார்வையிடலாம்.

Monday, 27 August 2012

கீழக்கரையில் தொடரும் இருசக்கர வாகன விபத்துக்களால் உயிரிழப்புகள் - தலை காயத்தை தவிர்க்க மீண்டும் 'ஹெல்மெட் விழிப்புணர்வு' !

சாலை விபத்து முக்கியமான உயிர்க்கொல்லி நோயாக உலகளவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. நம் கீழக்கரை நகரிலும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத்துக்களும் மிக அதிகமாக நடந்த கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், கீழக்கரை நடுத்தெரு ஜமாத் ஆடறுத்தான் தெருவை சேர்ந்த காதர் மீரா சாகிப் என்பவரின் மகன் செய்யது சாகுல் ஹமீது (வயது 22) இரவு பைக்கில் இராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆர் எஸ் மடை அருகே விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன் தினம் காலமானார். 




இதே போல் தினமும் பலர் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள். பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்" என காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் நம் கீழக்கரையில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு, மூன்று விபத்துக்களாவது நடந்து விடுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.

இருப்பினும் நம் கீழக்கரை பகுதியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு கடந்த மார்ச் மாதம் மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினரும் காவல் துறையினரும் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவதாக இருந்தது. 

மொத்தமாக மூன்று ஹெல்மெட்கள் மட்டுமே இருந்ததால் பேரணி கை விடப்பட்டது. இப்போது பல்வேறு கோர விபத்துக்களை கீழக்கரை மக்கள் சந்தித்த பின்னர், மீண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. நம் உடல் உறுப்புகளை செயல்படுத்தும் ஒட்டு மொத்த கன்ட்ரோல் நம் தலையில் இருக்கக்கூடிய மூளையாகும். இதன் மொத்த எடை 1.5 கிலோ ஆகும். 100 கிலோவிற்கு மேல் உள்ள மனிதனுக்கும் இதே அளவுதான். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கும் திறன், அனுமானித்தல், கேட்டறிதல், செயல்படுத்துதல், கட்டளையிடுதல், செக்ஸ் உணர்வுகள் போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்வது இந்த மூளைதான்.

இந்த மூளையை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் தலையாய கடமையாகும். இந்த மூளை அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்தில் தான். 50 சதவீத சாலை விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவு, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தான் முக்கிய காரணங்களாகும்.

பல ஆயிரங்கள் கொடுத்து, தனக்கு பிடித்த மாடல் பைக்குகளுக்காக  மட்டும் பல மாதங்கள் காத்திருந்து வாங்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒரு ஆயிரம் செலவழித்து ஹெல்மெட் வாங்க முயற்சிப்பதில்லை.

ஹெல்மெட்டுகளை கடன்காரன் தான் அணிந்து ஊருக்குள் நடமாடுவான். எங்களுக்கு தேவையில்லை என்று எகத்தாளம் பேசுபவர்களும் உண்டு. ஹெல்மெட் அணிவதை கேவலமாகவும், கவுரவ குறைச்சலாகவும் பார்ப்பது வருத்தத்திற்குரியது. ஆகவே 'வரு முன் காப்பது' சாலை விபத்தினால் ஏற்படும் மூளைக்காயத்திற்கு சாலச்சிறந்தது.

இது குறித்து கீழக்கரை காவல் ஆய்வாளர் இளங்கோவன் அவர்கள் கூறும் போது, "நமது கீழக்கரை நகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதிலும் சில பேர்கள் ஹெல்மெட்டை வண்டியில் மாட்டி விட்டுட்டு தான் ஓட்டுறாங்க.  இந்த இரு சக்கர வாகனங்கள் ஓட்டி ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலும் தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது.  தலைக்காயத்தை முழுமையாக தடுக்கவே  இந்த ஹெல்மெட். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாது ஹெல்மெட் அணிய வேண்டும்." என்று தெரிவித்தார். 

இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக இணைச் செயலாளர் செய்யது சாகுல் ஹமீது அவர்கள் கூறும் போது "தினந்தோறும் நாளிதழ்களில் இரு சக்கர வாகன விபத்துக்களில் பலியாகிறவர்கள் பற்றி செய்திகள் வரும் போது  'ஹெல்மெட் அணியவில்லை' என்று அடைப்புக் குறியிட்டு செய்தி வெளியிட்டிருப்பார்கள். அதற்கான காரணம் இது போன்ற விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி இறந்து விட்டார்கள் என்றால் இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க.

அதற்கு அத்தாட்சியாகத் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தா மட்டும் தலையில அடிபடாமலா இருக்கப் போகுது? என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அதேல்லாம் கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

இரு சக்கர வாகன ஓட்டிகளை சிந்திக்கத் தூண்டும், அதிரை நண்பர் சபீர் அவர்களின் வைர வரிகள் இதோ :

நண்பனே
வேகம்  குறை…
உன்னை விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்..!


உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?


உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்,
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம் ??

விவேகத்தைக் காட்டு..
வேகத்தைக் கூட்டாதே...

Sunday, 26 August 2012

கீழக்கரையில் வளரும் சந்தன மரங்கள் - தோட்டக்கலை ஆர்வலர் 'செல்லாப்பா' வின் புதிய முயற்சி !

கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த செல்லாப்பா அவர்கள் தோட்டக் க‌லையில் அளப்பரிய ஆர்வமுடையவர். இவருடைய தோட்டம் கீழக்கரை அருகே மாலாக்குண்டு பகுதியில் அமைந்துள்ளது. இவருடைய தோட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட, மரக்கன்றுகளும், செடிகளும் வளர்க்கப்படுகிறது. லிபியா நாட்டிலிருந்து வாங்கி வரப்பட்ட ஆலிவ், ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மெகா சைஸ் எலுமிச்சை, இலங்கையிலிருந்து வாங்கி வரப்பட்ட தென்னை என்று இதன் பட்டியல் நீள்கிறது. இவை தவிர இன்னும் பல்வேறு வகையான, அரிய மரக் கன்றுகளை தன்னுடைய தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இந்த பட்டியலில் தற்போது 'மைசூர் சந்தன மரங்களும்' இடம் பெற்று இருக்கிறது. 



நம் கீழக்கரை மண்ணில் சந்தன மரங்கள் வளர வாய்ப்புள்ளதா? என்று ஆச்சிரியத்தில், இவருடைய தோட்டத்திற்கு தினமும் ஏராளமானோர் காண வருகின்றன‌ர்.  தற்போது இவர் துபாயில் தலைமையகத்தை கொண்டு இயங்கி வரும் ஈ.டி.ஏ ஸ்டார் குழுமத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செல்லாப்பா அவர்கள் கூறும் போது, "என‌க்கு சிறு வயதிலிருந்தே, தோட்ட‌க்க‌லை மீது ஆர்வ‌முண்டு. என‌வே நான் ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு சென்று வ‌ரும் போதெல்லாம், நம் பகுதியின் சீதோசன நிலைக்கு ஏற்ற, ஏதாவ‌து ஒரு செடியை வாங்கி வ‌ருவேன். இப்படி நான் வாங்கி வந்த செடிகள் தான், தற்போது என் தோட்டத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மைசூர் சந்தன மரங்களையும் நடவு செய்து வளர்த்து வருகிறேன். இவ்வகை மரங்களை வ‌ள‌ர்ப்ப‌து ம‌ன‌திற்கு மிக‌வும் ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து. 

இது போன்ற சந்தன மரங்களை வளர்க்க ஆர்வமுடன் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமின்றி வளர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிவிப்புகளை வழங்க வேண்டும். பலகோடி சந்தன மரங்களை வளர்க்கும் வகையில் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் இயற்கை வளமும், சுற்றுச் சூழலும் மேம்படும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் பல கோடி ரூபாய் அன்னியச் செலவாணியை ஈட்ட முடியும். இதனால் நம் கீழக்கரை பகுதியிலுள்ள தரிசு நிலங்கள் எல்லாம், இறைவன் நாடினால், பொன்  விளையும் பூமியாகும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கீழக்கரை பகுதியில் சந்தன மரம் வளர்க்க, முன் வருபவர்களுக்கான அறிவுரைகள்

சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சந்தன மரத்தின் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே சந்தன மரங்களை வளர்க்க அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அனைவரும் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்கலாம். சந்தன மரங்கள் வேலிகளிலும், தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய மரமாகும்.

தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடமே அனுமதி பெறவேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.

சந்தன மரங்களை வீடுகளிலும், பூங்காக்களிலும், விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்க்கலாம். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் வளரக்கூடியது.

விவசாயமாக செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, நெல்லி, சப்போட்டா, முருங்கை, சீத்தா, காட்டாமணக்கு, முந்திரி மற்றும் பலவகையான தோப்புகளில் ஊடுபயிராக வளர்க்கலாம்

தற்போது ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 8000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு மரத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம்.

இன்றைய‌ நில‌மைக்கு ம‌ர‌ம் வ‌ள‌ர்ப்பும் லாப‌க‌ர‌மான‌து தான். மிக‌க்குறைந்த‌ ஆட்தேவை, இடுபொருள் செல‌வு, ப‌ராம‌ரிப்பு செல‌வு, அதிக‌ லாப‌ம் இத‌ற்காக‌வே ம‌ர‌ம் வ‌ள‌ர்ப்பும், ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌டுகிறது. இதனை மிகச் சிறப்பாக நம் கீழக்கரை பகுதியில் செயலாற்றி வரும் செல்லாப்பா அவர்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரையில் புதிய கமிசனருடன் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர் சந்திப்பு - கமிசன் இல்லாத நகராட்சி மலர வேண்டுகோள்!

கீழக்கரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நகராட்சிக்கு தனி ஆணையர் நியமனம், தமிழக அரசால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டது. கீழக்கரை நகராட்சியில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருந்த கூச்சல், குழப்பங்களுக்கு, பொறுப்பேற்றிருக்கும் நகராட்சி ஆணையாரால் ஒரு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அனைத்து தரப்பு மக்களும் எதிர் பார்க்கின்றனர். இது குறித்து நம் வலை தளத்திலும் ஏக்கத்துடம் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 

இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்கு புதிய கமிஷனராக பொறுபேற்றுள்ள முகம்மது மைதீனுக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது  நிர்வாகிகளான தமீமுதீன், கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம், முஹம்மது சாலிஹ் ஹீசைன், பாபா பக்ருதீன், மாணிக்கம், செய்யது சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் நலப் பாதுகாப்புக் கழக நிர்வாகிகள், புதிய கமிஷனரிடம் பேசும் போது "கீழ‌க்க‌ரையில் உள்ள‌ ப‌ல்வேறு குறைக‌ளை நிவ‌ர்த்தி செய்யும் ப‌டியும்,  குறிப்பாக‌ ஊழ‌ல் ந‌டைபெறாம‌ல் த‌டுக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் படியும், மக்கள் பணம் மக்களுக்குத் தான்.. மக்கள் பிரதிநிகளுக்கு ஒரு போதும் கிடையாது... ஒவ்வொரு ஒப்பந்த பணிகளின் போதும், மக்கள் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கில் கமிசன் பெறுவதை இனி வரும் காலங்களில் வேரோடு ஒழிக்க முன் வர வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக கவுன்சிலர்களுக்கு கமிசன் கொடுக்கும் காண்ட்ராக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்த‌ன‌ர்.

இது குறித்து புதிய கமிசனர் முகம்மது முகைதீன் கூறுகையில் "எதிர் வரும், என்னுடைய பணிக் காலங்கள், கீழக்கரை நகராட்சிக்கு சிறப்பானதொரு காலமாக அமையும்.

கீழக்கரை நகராட்சியின் அனைத்து பிரச்சனைகளும், முறையாக ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும். பொது மக்கள் அலைக்கழிக்கப் படாதவாறு, அலுவலக வேலைகள் துரிதப் படுத்தப்படும்.

கீழக்கரை நகராட்சியை 'முன் மாதிரி' நகராட்சியாக மாற்ற, என் பணி காலத்தில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்." என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.