தேடல் தொடங்கியதே..

Wednesday, 26 June 2013

கீழக்கரை தெருக்களில் தொடர்ந்து கொட்டப்படும் கட்டுமானப் பொருள்கள் - கடும் போக்குவரத்து இடையூறால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிப்பு !

கீழக்கரை நகரில் புதிய வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் கீழக்கரையில் செழிப்பான தொழிலாக, கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது. கீழக்கரை நகரின் குறுகிய தெருக்களுக்குள், வீடு கட்டுபவர்களால் கொட்டப்படும் மணல், ஜல்லி, செங்கல், கட்டுமான இடிபாடுகள் போன்றவைகள்,போக்குவரத்து மிகுந்த நேரங்களில் கொட்டப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் இந்த தெருக்களை கடந்து செல்ல முயலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 


இது குறித்து மீன் கடைத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். செய்யது காசீம் அவர்கள் கூறும் போது " கீழக்கரையில் எந்தப் பகுதிக்கு போனாலும் கட்டுமானப் பொருள்களை நடு ரோட்டில் கொட்டி விட்டு போய் விடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், இடறி கீழே விழுது விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.இந்த தெருக்களை கடந்து செல்லும் பள்ளி வாகனங்களும், ஆட்டோக்களும், சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்டிருக்கும் மணல், ஜல்லி போன்றவற்றில் சிக்கி கடும் அவதி ஏற்படுகிறது. மானவரிகள் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர்.இதனை உடனே சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார் 

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் இணைச் செயலாளர் B. செய்யது காசீம் அவர்கள் கடந்த ஆண்டு இதே பிரச்சனை எழுந்த போது கூறியதாவது "தார்ச் சாலையாக இருந்த சாலைகள் பலவும், தற்போது மீண்டும் மணல் சாலைகளாக மாறி வருகிறது. முக்கியமாக கீழக்கரை நடுத் தெரு, சாலை தெரு, O.J.M.தெரு உள்ளிட்ட தெருக்களில் மணல் குவியல்கள் அதிகமாக கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் பிரதான சாலைகளில் உள்ள மணல், ஜல்லி போன்றவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த, கட்டிட உரிமையாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் கொட்டப்படும் லாரிகள், டிராக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.  



இது குறித்து ஜின்னா தெருவைச் சேர்ந்த மேஸ்திரி ஹபீப் அவர்கள் கூறும் போது "நமது ஊரைப் பொருத்தமட்டில் மிகக் குறுகிய சாலைகளையும், நெருக்கமான வீடுகளையும் கொண்டு அமைந்துள்ளது. வேறு வழியில்லாமல் தான் இது போன்று சாலைகளில் கொட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சாலைகளில் கொட்டிய பிறகு அதனை அகற்றுவதற்கு வேலையாள்கள் பல நேரங்களில் கிடைக்காமல் போவதாலும் தொடர்ந்து இரண்டு அல்லது 3 நாள்கள் அங்கேயே கிடக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் சாலைகளில் மணலை கொட்டக் கூடாது என்றால், யாருமே வீட்டு கட்டுமான வேலைகளை செய்ய முடியாது." என்று தெரிவித்தார்.



நம் நகரின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, மணலை கொட்டி விட்டு உடனே அள்ளுவதற்கு, வேலையாள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது எந்த பிரச்சனைகளும் எழ வாய்ப்பில்லை. அதோடு மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமாவது, கட்டுமான பொருள்களை சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் என்றால், கீழக்கரை நகராட்சி சார்பாக, கீழக்கரையில் முக்கு ரோடு பகுதியிலிருந்து கடற்கரை வரை உள்ள மெயின் ரோட்டில் குவிந்திருக்கும் மணலை அப்புறப்படுத்துவதற்கு ரூ.500000 (ஐந்து இலட்சம்) டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. ஆனால் எந்த இடத்திலும் மண்ணை அல்லாமல், பணத்தை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். விரைவில் இவர்களின் வாயிலும் மண் தான் விழும் என்பதில் மாற்றமில்லை.

Tuesday, 25 June 2013

கீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் !

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஓரிரு நாள்கள் கன மழையும், ஜூன், ஜூலை மாதத்தில் மிதமான மழையும் பெய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த படி, குறித்த காலத்தில் பருவமழை பொய்த்துப் போனது. ஏற்கனவே வறட்சியான மாவட்டம் என பெயர் போன, நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயப் பெருமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அது மட்டும் அல்லாமல் கீழக்கரை நகரின் பெரும் பகுதிகளில் உள்ள வீடுகளின் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிப் போயுள்ளது. 


இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு கூட போதுமான நீர் கிடைக்காமல் கடும் அவதி அடைய துவங்கியுள்ளனர். இதே நிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால், இதுவே நகரின் தலையாய பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை பகுதிக்கு ஆய்வுக்கு வந்திருந்த அரசு அதிகாரிகள், அதி நவீன‌ கருவிகள் கொண்டு கீழக்கரையில் காற்றின் ஈரப்பதம், ஆக்சிஜன் அளவு, மழையின் அளவு போன்ற பல்வேறு கணக்கெடுப்புகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் 21 %  மட்டுமே இருக்கிறது. இது இயல்பான அளவினை விட மிக குறைவானதாகும். 

பசுமை அளவு குறைந்த பட்சம் 33 % அளவாவது இருக்க வேண்டும் என்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டதோடு, கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க 'வீட்டுக்கு ஒரு மரம்' வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்ஸிஜன் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும். இல்லை எனில் எதிர் காலத்தில் மழையளவு குறைவதோடு, நிலத்தடி நீர் வெகுவாக குறைய ஆரம்பிக்கும். 



மேலும் இந்த சீரில்லாத இயற்கை மாற்றத்தால், கீழக்கரைவாசிகளுக்கு  பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும். கீழக்கரையில் இயற்கை சீற்றங்களும் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி சார்பாக வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை நடை முறைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிர மூர்த்தி அவர்கள் கூறும் போது "தற்போது கீழக்கரையில் மழை சரியாக பெய்யாத காரணத்தால்  நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக குறைந்துள்ளது. அவ்வாறு மழை பெய்தாலும், பெரும் அளவிலான மழை நீர் பூமிக்குள் செல்ல வழியில்லாமல், கடலில் கலந்து வீணாகிறது. கீழக்கரையை பொருத்தமட்டில் அனைத்து வீடுகளிலும் கிணறுகள் உள்ளது.

ஆகவே குறைவாக பெய்யும் மழை நீரையும் முறையாக சேகரிக்க, வருங்காலத்தை மனதில் கொண்டு, அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பை அமைக்க பொதுமக்கள் முன் வர வேண்டும். இது வரை மழை நீர் சேகரிப்பை அமைக்காதவர்களின் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு செய்ய  வலியுறுத்தி விழிப்புணர்வு செய்து வருகிறோம்" என்று அக்கறையுடன் தெரிவித்தார்.


இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் A.M.S.தமீமுதீன் அவர்கள் கூறுகையில், "கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரின் இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது. வீட்டு கிணறுகளில் தண்ணீர்  இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வரும், இவ்வேளையில், எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொது மக்கள் உணர்ந்து,  தங்கள் வீடுகளில் அதனை அமைக்க விரைந்து செயல்பட வேண்டும். மேலும் பசுமை அளவினை அதிகரிக்கும் வண்ணம் ஆளுக்கொரு மரம் நட்டு வளர்க்க உறுதி எடுக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :


  • Mohamed Quraishi GROW TREE & SAVE WATER& POWER
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழை இளையவரின் செய்திக் குறிப்பில் // வறட்சியான மாவட்டம் என பெயர் போன, நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயப் பெருமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அது மட்டும் அல்லாமல் கீழக்கரை நகரின் பெரும் பகுதிகளில் உள்ள வீடுகளின் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிப் போயுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு கூட போதுமான நீர் கிடைக்காமல் கடும் அவதி அடைய துவங்கியுள்ளனர். இதே நிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால், இதுவே நகரின் தலையாய பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.// உண்மை தான்.

    கீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள்
    http://keelaiilayyavan.blogspot.in/2013/06/blog-post_25.html

    நம் தேசத்தில் ஒரு பக்கம் அபரிமிதமான மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்றொரு பக்கம் மழை சிறிதுமின்றி நிலத்தடி நீர் இல்லாமல் வறண்டு போயுள்ளது. 

    அல்லாஹ் நம் அனைவரயும் பாதுகாப்பானாக.

    பெரு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும், மழை வேண்டி காத்திருக்கும் நமக்காகவும் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் இறைவனுடன் இரு கரம் ஏந்தி துஆ செய்ய வேண்டும். 

    தற்போது மழை வேண்டி நமக்காகவும், தாவர இனங்களுக்காகவும், விலங்கின வர்கத்திர்காகவும், உலகில் வாழும் இன்ன பிற ஜீவ ராசிகளுக்கும், போதுமான தண்ணீருக்காக இறைஞ்சுவது நம் கடமையாக இருக்கிறது.

    மழை வேண்டி பிரார்த்திக்கும் போது ஓத வேண்டிய துஆ!

    இரு கைகளையும் உயர்த்தி:

    اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا

    அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.

    பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. (ஆதாரம்: புகாரி 1013)

    اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا

    அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.

    பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! (ஆதாரம்: புகாரி 1014)

    அல்லாஹ் நம் அனைவரயும் பாதுகாப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

Monday, 24 June 2013

கீழக்கரையில் 'அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்' (JVC) நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி - விழாக் கோலம் பூண்ட வடக்குத் தெரு மணல் மேடு பகுதி !

கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேட்டில் கடந்த இரண்டு நாள்களாக, (சனி மற்றும் ஞாயிறு)  அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப் (JVC) ஏற்பாட்டில் 14 ஆம் ஆண்டின் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நடை பெற்றது.  இதனை காண நூற்றுக்கணக்கானோர் வடக்குத் தெரு மணல் மேடு பகுதியில் குவிந்தனர். இதனால் இந்த பகுதியே விழாக் கோலம் பூண்டது. இரவு 7 மணிக்கு துவங்கிய கைப்பந்துப் போட்டி நள்ளிரவு வரை நீண்டது. இருப்பினும் பொதுமக்கள் சுவராஸ்யமாக சென்ற கைப்பந்து போட்டியை ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் கண்டு களித்தனர். 



இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. மிகவும்  விறு விறுப்பாக சென்ற போட்டிகளை பொதுமக்கள், தங்கள் நகங்களை கடித்தவாறு, ஆரவாரம் செய்ததுடன், விளையாட்டு வீரர்களை கை தட்டி உற்சாகம் ஊட்டினர். 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்த கைப்பந்து போட்டியில், முதல் பரிசை AVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், இரண்டாம் பரிசினை JVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், மூன்றாம் பரிசினை CVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும் தட்டிச் சென்றது. 








இந்த விளையாட்டு போட்டியினை அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சேர்மன். ஆபித் அலி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் அஹமது மிர்ஷா, விளையாட்டு ஊக்குவிப்பாளர். திரு. கிருஷ்னமூர்த்தி,

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அஹமது, பொருளாளர். ஹாஜா அனீஸ், ஜமாஅத் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

FACE BOOK COMMENTS :


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல முயற்சி. வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த காலத்தில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதே காலாவதி ஆகி இருந்த சூழலே நிலவி வருகிறது. கிரிக்கெட்டை மட்டுமே விளையாடும் இளைய தலை முறையினர்களை இது போன்ற அருமையான விளையாட்டுகளின் பக்கம் ஊக்குவிக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி.
  • Asan Hakkim மாணவர்களை ஊக்க படுத்தும் நோக்கத்தோடு.., வருடம் தவறாமலும், தடம்புரளாமலும், அழகான முறையில் சிறப்பாக தொடர்ந்து செய்துவரும் மதிப்பிக்குரிய அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சேர்மன். ஆபித் அலி காக்கா அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள் பல..பல.. - சௌதியிலிருந்து கஸ்டம்ஸ் ரோடு அன்புள்ள அசன் ஹக்கீம்%% & ஜனாப் முல்லை சரிப் மவன் வடக்குத்தெரு ஹீரோ அம்ஜத்(ராஜ ராஜசோழன்)

Sunday, 23 June 2013

கீழக்கரையில் வபாத்து (மரண) அறிவிப்பு !

கீழக்கரை சேரான் தெருவை சேர்ந்த மர்ஹும். முஹம்மது முஸ்தபா லெப்பை அவர்களின் மகளும், வெள்ளை லெப்பை என்கிற ஜனாப். முஹம்மது முகைதீன் லெப்பை  அவர்களின் மனைவியும், ஜனாப். முஹம்மது அபுல் ஹசன் அவர்களின் தாயாரும், முஹம்மது ஆதில் அவர்களின் பெரியம்மாவுமாகிய 'முஹம்மது மீரா உம்மாள்' அவர்கள் (22.06.2013) நேற்று இரவு 11:30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (23.06.2013) காலை 11:00 மணியளவில் கீழக்கரை மின் ஹாஜியார் பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுவனத்தில் நற்பதவி வழங்கவும், அன்னாருடைய மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.