கீழக்கரை நகரில் 10000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. பொதுமக்கள் இதற்கான மின் கட்டணத்தை, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் வரை, நகருக்குள் இயங்கி வந்த மின் கட்டண வசூல் மையத்தில் செலுத்தி வந்தனர். தனியாருக்கு சொந்தமான அந்த இடம் காலி செய்யப்பட தொடர்ந்து வலியுறுத்தப் பட்டதால், நகருக்குள் கட்டண வசூல் மையம் அமைக்க வேறு இடம் தேடினர். அப்போது இருந்த நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்காலும், யாரும் இடம் தர முன் வராத காரணத்தினாலும், கீழக்கரை நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில், கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த மின் கட்டண வசூல் மையத்தை கீழக்கரை நகருக்குள் கொண்டு வர பல்வேறு பொது நல அமைப்பினர்களும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர். பேராசிரியர். முனைவர். M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2011 ல் பொறுப்பேற்ற புதிய நகர் மன்றம், இந்த அவசியமான கோரிக்கையை ஏற்று, புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மின் வசூல் மையம் அமைக்க, முதல் நகராட்சி கூட்டத்தில், முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, மின்சார வாரியத்தினரின் ஒத்துழைப்புடன் அதற்கான பணிகள் நிறைவடைந்து, ஆள் பற்றாக்குறையின் காரணமாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.
இந்நிலையில், பொது மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, மின் கட்டண வசூல் மைய திறப்பு விழா இன்று காலை 11.15 மணியளவில், கீழக்கரை புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி சேர்மன் இராவியத்துல் கதரியா, நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முஹைதீன், இராமநாதபுரம் மாவட்ட தலைமை மின்சார வாரிய பொறிஞர். ரா.அசோக் குமார், கீழக்கரை அ.தி.மு.க நகர் செயலாளர் இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள், பொது நல அமைப்பினர்கள், சமூக நல சங்கங்களின் நிர்வாகிகள், நகராட்சி மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது திரளாக கலந்து கொண்டு மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டனர்.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி :
கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையம் அமைக்க நகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகளுக்கு பலன் இன்னும் 15 நாள்களில் கிடைக்கும் - கீழக்கரை சேர்மன் அறிவிப்பு !
முக்கிய குறிப்பு :
கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையம் அமைய, முழு முதற் காரணம் 'நாங்கள் தான்..' என்று எந்த ஒரு தனி மனிதனோ, பொது நல அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ பெருமை கொண்டாட முடியாத அளவிற்கு அனைத்து சமூக நல விரும்பிகளும் ஆரம்ப காலக் கட்டத்திலிருந்தே, இதற்காக தங்களளவில் முயற்சி மேற் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இந்த நல்ல சேவைக்காக, தங்கள் காலம் நேரம் பாராது, பெரும் முயற்சி எடுத்த கீழக்கரை நகர் மன்ற அங்கத்தினர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கும், அனைத்து பொது நல அமைப்பினர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், தங்களை வெளிக் காட்டிக் கொள்ளாது பாடுபட்ட அனைத்து சமூக சிந்தனைவாதிகளுக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.... நன்றி..... நன்றி......
நகரின் மக்கள் நலனில் அபரிதமான அக்கறை கொண்ட பொது நல அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தொடர் முயற்சியால் மின் கட்டண வசூல் மையம் தொடங்கியது நன்றி செலுத்த வேண்டிய, வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாகும்.
ReplyDeleteஇருப்பினும் இந்த அலுவலகத்தை கணிணி மயமாக்கினால் மட்டுமே மக்கள் முழுப் பயனையும் அடைய முடியும். சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து இதே முனைப்பை காட்டி செய்து முடிப்பார்கள் என பரிபூர்ணமாக நம்புவோமாக.
மேலும் கூடுதல் செய்தியாக,வளர்ந்து வரும் அப் பகுதியின் மக்களுக்கு பேருதவியாக நகராட்சியின் வீடு மற்றும் தண்ணீர் வரியை கட்டுவ்தற்கும் அதே மையத்தில் முன் கூட்டியே அறிவிக்காமல் வசதி செய்திருப்பதும் மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகும்.