ஒரு பக்கம் கீழக்கரையில் தற்போது மழை பெய்து பூமியை குளிர்வித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த 'நசீர் சுல்தான்' அவர்கள் 1980 கால கட்டத்தில் நிகழ்ந்த தன் பால்ய கால 'ரமலான் துவக்கம்' மற்றும் 'நோன்பு பெருநாள் தினம்' பற்றிய மலரும் நினைவுகளை முக நூலில் கவிதை மழையாய் பொழிந்து உள்ளங்களை குளிர்விக்கிறார். நீங்களும் இதனை வாசித்து சிறு வயது ஞாபகங்களை மீண்டும் அசை போட்டுப் பாருங்களேன்....
என் பால்ய கால
நோன்பு பெருநாள் தினங்களை
பகிர்ந்து கொள்கிறேன்...
எனையொத்த வயதுடைய எவரும்
இந் நிகழ்வுகளை நினைப்பர்
எண்ண கடலில் மிதப்பர் என நம்புகிறேன்..!
காலம்
நம் சம்பிரதாயங்களை மட்டுமன்றி
சில சமயம் சந்தோசங்களையும் மாற்றி விடுகிறது
புத்தாடைக்கும் புலவு சோற்றுக்கும் ஏங்கிய நேரமது
காலம் மாறி இப் பெருநாட்கள்
உணவு செரித்து உப்பிசம் போக
மருந்து தேடும் காலமிது....
அது ஒரு காலம்
ஆவலுடன் சிறு வயதில்
அம்புலியின் ஆரம்பம்
பார்க்க அநேகர் கூடிடுவோம் தைக்காவில்!
அன்பர்கள் பலர் கூடி
அலியின்(தைக்கா) அருகே
வாளியில் வைத்த பழ ரசம்
ஈத்த பழங்களுடன்
முகமன் கூறி
நண்பர்களை வரவேற்று
முதல் பிறை கொண்டாடுவோம்...!
பின்னிரவில்
முதல் கூச்சு எழுந்து
முகம் கழுவி பல் துலக்க
ரெண்டாம் கூச்சு உணவை துவக்க
மூன்றாம் கூச்சு முழுவதும் முடிக்க
(கூச்சு = பறை)
அரு அருகே வீட்டில்
தேங்காய் உடைக்கும் ஓசையிலேயே
விழித்து கொண்டு மின் விளக்கு ஏற்றுவோம்
நாள் மாறினாலும்
மாசி சம்பல் மாறாது
யோசிக்க தேவையில்லை
ஈசியான உணவு அதுதானே...!
கீழக்கரையில்
முதல் பிறை சஹரில்
உணவுடன் பருக
பானம் இருக்கும்
தேங்காய் பால் கட்டியாக எடுத்து
வாழை, ஈத்த பழங்களை
வகையாய் இனிப்புடன் சேர்த்து தர
வாய் முழுதும் இனிக்கும்....
காலை எழுந்து தைக்காவில்
அமர்ந்தால் கஞ்சிக்கு
தாளிக்கும் வாசனை
தைக்காவை தூக்கும்...
பசி தூண்டி பகல் பொழுதை வாட்டும்....
மதிய வேலை மஞ்சப்பம் வாங்க
காத்திருக்கும் போது வாய் ஊறும்
வயிறு கூவும்
காத்திருப்போம் அசர் வரை
அசர் முடிந்து தோட்டத்தில் குளியல்
வானம் சிவந்து நேரம் நெருங்கும் போது
பள்ளி சட்டி கஞ்சியில
நோன்பு முடிப்போம்....
எல்லோர் வீட்டிலும்
எலுமிச்சை பழரசம் இருக்கும்
நண்டுகால் போண்டா, சாலாவடை, பட்ஜியும்
நாக்கில் பட்டால்தான்
எங்கள் நோன்பு சிறக்கும்....
பள்ளிகள் மின் விளக்கு பூணும்
புது கோலம் காணும் இரவில்
புத்தாடையுடன் முதல் தராவிஹ் முடிப்போம்
இருபத்திஏழு
அச்சத்துடன் உற்சாகமும் தொற்றி கொள்ளும்
அலங்கார விளக்குகள் அத்தனையும் ஏற்றி
பள்ளி சொர்ணமாய் ஒளிரும்....
அவல் கஞ்சி, ஐந்து பைசா பிஸ்கட் ஜிலேபி
வரிசையாய் வெளி பள்ளியில் அமர்ந்து
இரவு முழுதும் திக்ர் ஓசை
இருலோகத்தின் நன்மைக்கும் துஆக்கள்
சலவை ஆடையுடன் ஜன்னது பிர்தௌசின் வாடை....
இடை இடையே அன்றைய பெரியவர்களின் அதட்டல்கள்
அன்று வானத்தை அண்ணாந்து நோக்கினால்
புதிதாய் தெரியும்.மனம் லேசாகி
இரவை பனியால் நனைத்தது போல் ஒரு மாற்றம்...
அறியா வயதில் அன்னை சொல்லுவார்
ஒன்று, பனிரெண்டு, இருபத்திஏழு, முப்பது
போதும் உனக்கு நோன்பு
முப்பதை முடித்து விட்டாய்
முழுமையாக எல்லாம் பிடித்து விட்டாய்
அப்பனே....
இவ்வயதில் வைப்பது அம்மாவுக்கே சேரும் என்பார்....
இருபது நோன்பு நெருங்கும் போதே
இறக்கை கட்ட ஆரம்பித்து விடும் மனம்
புத்தாடையின் கனவுகள்
கண்ணுக்குள் வந்து வந்து போகும்
கழிந்த பெருநாள் ஆடையின் கலர்களை
கூட்டி பார்த்து வேறு வண்ணத்திற்கு தாவும்....
குறிப்பாய்
ஐந்து நாட்களுக்கு முன்பே
பொட்டணி காரர் கூட்டம் ஒரு புறம்
அனல் பறக்கும் விளம்பரம் மறு புறம்.....
கடை தெருவின் மாடியிலே
கர்ணமாய் ஒலி பெருக்கி கேட்கும்
யாரோ
சாயம் போகா சாரி என்பர்
வருடம் முழுதும் உழைக்கும் அங்கி என்பர்
வண்ண வண்ண லுங்கி என்பர்
விளம்பரம் கேட்கவே கடைதெருவில் சுற்றுவோம்....
இலங்கை வானொலியின்
விளம்பர தழுவல்கள
சேலைகளில் ஆண்களின் ஆடைகளில் கேட்கும்
பாடல்களுக்கு இடையே பலவித விளம்பரங்கள்
குரல் கொடுத்து நபரை பார்த்து வியந்துள்ளேன....
நிச்சயமாக
அவர் குரலுக்கும் உடலுக்கும் இணக்கம் இல்லை
ஊரே உற்சாகமாய் பெருநாளை எதிர் பார்க்கும்
அன்று
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜவுளி கடைகளுடன்
புதிதாய் பல கடைகள் முளைக்கும்
அலங்காரம் கொடுத்து அனைவரையும் இழுக்கும்....
கடை பல ஏறி
தேர்ந்தெடுத்த ஆடை தைக்க
படை எடுப்போம் பல கடை
யார் சூப்பர் டைலர்
எடுத்ததோ வருடத்தில் ஒன்றோ இரண்டோ
பாழாய் போனவன் அவசரத்தில் துணியை
பாழ் படுத்திவிட்டால்
பயம்...
தேர்ந்தெடுத்த துணி
தைக்கப்பட்டு திரும்பும் போது
தொட்டு தொட்டு பார்த்து கொள்வோம்
மனதுக்குள் ஆடை மாற்றி மகிழ்வோம்....
முப்பதோ இருப்பத்து ஒன்பதோ முடித்து
ஆவல் அதிகரித்து அதிகரித்து
இறுதி நோன்பின் களைப்பை
உற்சாகம் தின்று விடும்………
பெரு நாள் இரவு சுகமானது
நினைவுக்கு சுவையானது
இரவில்
ஆரம்ப பிறை காண இலங்கை வானொலியின்
அருகிலே இருப்போம்....
ஆறு மணி ஆனவுடன் அத்தனை
மின் விளக்கும் ஏற்றி
இரவே பகலாகும்
அழுக்கு மண் களைந்து
வாசல் அழகு பெற
குறுத்த மண் பரப்புவோம்....
குதுகலமாய் மருதாணி இடுவோம்....
சீனி வெடி சிறுவர்க்கு ஆகாது
சங்கு சக்கரம் கம்பி மத்தாபால் ஒண்ணும் கெடாது
பெரியவன் பட்டாசின் தலையில் கொள்ளி வைப்பதை
தள்ளி நின்று பார்ப்போம்...
உடல் உறங்கும்
உற்சாகம் விழித்து கொள்ளும்
உறக்கத்தை கொல்லும
ஊர்வலமாய் கனவுகள் உள்ளத்துக்குள்
காலையில் காப்பிக்கு பின
அடை கறி, இடியப்பம்.....
அடுத்த நாள் ஒத்தையும் வட்டலப்பமும்
அசருக்கு பின் மணமேட்டில் ஊஞ்சல்
ஐயர் கடையில் தோசையும் இட்லியும் இரவில்
கணக்கு போட்டு கண்கள் உறங்க மறுக்கும்
காலையில் விழிக்கும் போது
கண்ணும்மாவின் குரல் கேட்கும்
தக்பீர் இறங்கும் போதே குளித்து கொள்
சொல்லுவார்.....
தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது
உடை உடுத்தும்போது, உண்ணும்போது,
புத்தாடையுடன் தெருவில் இறங்கும்போ து
பள்ளி செல்லுவரை தக்பீர் கூறி செல்…………
புதிய கைலியின் மொடமொடப்பு
புது சட்டையின் விறைப்பு
ஜன்னத்துல் பிர்தௌசின் மணம்
பையில் பித்ரா பணம்
புது உற்சாகம்
ஒவ்வொரு வீட்டை கடக்கும்போது....
கறிக்கு தாளிக்கும் ஓசை
கலவையான அத்தருடன்
மல்லிகை, கனகாம்பரம் மணம்............
பள்ளியை நெருங்க நெருங்க
கலர், வெள்ளை கைலிகளின் சங்கமம்....
கர்சிப், கரும் பச்சை, நீளத்தில் தொப்பி
காலரில் கைக்குட்டை வைத்தவர்,
சிவப்பில் ஜரிகை தொப்பியில் சிறார்கள்
காண கிடைக்கா காட்சி....
இடைவிடா தக்பீர் முழக்கம்
இடம் பார்த்து அமரும் முன்
அறிந்தவர்களின் புன்னகை
அடையாளமாய் சலாம்....
அவுதுக்குள் அலையும் தண்ணீர் ஓசை
சிரித்து கொண்டே உலவும் சிறுவர் கூட்டம்
எல்லாம் இணைந்து தொழுகை முடித்து
அறிந்தவர் அறியாதோர் பிரிக்காமல்
கட்டு தழுவி கை கொடுத்து
கண்ணில் சுருமா இட்டு....
வெளியே வரும்போது
திடீர் கடைகள் முளைத்திருக்கும்.
பீடாகாரப்ப வண்ண திரை சீலையில் சட்டை போட்டு இருப்பார்
சிவந்த முகத்தில் பிரெஞ்சு தாடி, பெரிய வயிறு
வாங்காமல் போறவரை வசை பாடுவார்
அப்போது அவரின் வசவுகள் புரியாது
அர்த்தம் கேட்போம்....
அருகிலே அச்சார் உறுகாய்
ஐந்து பைசா கொக்கச்சி, கடழச்சி,
தேங்காபூ பீடா, கலர் ஐஸ், பால் ஐஸ்,
சீனியை சட்டிக்குள் போட்டு ஆட்டிய
சிவப்பு பஞ்சு மிட்டாய்,
பட்டாணி சுண்டல், பருத்தி பால்,
தாளிச்ச தண்ணியில் போட்ட மாங்காய்.......
அவசரமாய் வாங்கி தின்று விட்டு
பின் அடுத்த கட்டமாய்
குத்பா பள்ளி செல்வோம்......
அங்கு
பயான் முடிந்து தைக்கா திரும்பும் போது
பெண்கள் கூட்டம் கிழவன் ஷாப் அருகே குழுமி இருக்கும்
பட்டு, வாயில் சேலை, பல வித கலரில்,
அருகே சிறுமிகள் அலங்காரத்துடன்
ஆலிம்ஷா பாதிஹா சொல்லி ஆமீன் கூறி
முடிக்கும் போது மணி பனிரெண்டை தொட்டிருக்கும்
நண்பர்களுடன் பேசி, சிரித்து களைந்து,
பகல் உணவு உண்ட பிறகு உறக்கம் வராது.....
மனது மணமேட்டை வட்டமிடும்
நுழைந்தவுடன் கண்ணில் படுவது
அன்னல் ஊஞ்சால் அருகே ஐஸ் கிரீம்
பஞ்சு மிட்டாய், ராட்டினம்,
நுழை வாயிலின் வலது புறம் நாக கன்னி,
குச்சி ஐஸ், சீவல் ஐஸ்,
வெள்ள முருக்கு, அச்சர் ஊறுகாய்.....
ஆடி முடித்து, உண்டு உலாவி ஆறு மணிக்கு
ஐயர் கடைக்கு படையெடுப்பு
கூச்சல்கள், காச், மூச் கடத்தல்கள் கடந்து
தோசை, இட்லி வடையால் வயிறு நிறைத்து
இறங்குபோது மணி ஒன்பதை தாண்டி விடும்.
உண்ட களைப்பும்,
உறக்கமும் சேர கண் கெஞ்ச
அடுத்த நாள் கனவிலே உறங்கி போவோம்....................
FACE BOOK COMMETS :
- Keelakarai Ali Batcha உண்மையிலேயே மனதை நெருட வைத்த கவிதை.அந்த காலம் மீண்டும் வரப் போவதில்லை. இருப்பினும் மலரும் நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.
சகோதரர் வடக்குத் தெரு நசீர் சுல்தான் அவர்களுக்கு முன் கூட்டியே இனிய ரமழான் பெருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக.
குறிப்பு: கவிஞர் அவர்கள் பால்ய வயதில் ரமழான் பெருநாள் நெருக்கத்தில் செம்மானிடம் (லப்பை மாமா டீக்கடைக்கு எதிரில்) தோல் செருப்புக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அதை வாங்க அழைவதையும், இப்போதய இரவுக் கடை சீனியப்பா கடைக்கு எதிரில் தொப்பிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அதை வாங்க நண்பர்களுடன்ஆவலுடன் அழைவதையும் ஏனோ விட்டு விட்டார்கள், - Nazir Sultan Thanks for all comment, Mr. Ali batcha i could not recollect that incident you mentioned, anyway thanks for reminder.
உண்மையிலேயே மனதை நெருட வைத்த கவிதை.அந்த காலம் மீண்டும் வரப் போவதில்லை. இருப்பினும் மலரும் நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.
ReplyDeleteசகோதரர் வடக்குத் தெரு நசீர் சுல்தான் அவர்களுக்கு முன் கூட்டியே இனிய ரமழான் பெருநாள் வழ்த்துகள் உரித்தாகுக.
குறிப்பு: கவிஞர் அவர்கள் பால்ய வயதில் ரமழான் பெருநாள் நெருக்கத்தில் செம்மானிடம் (லப்பை மாமா டீக்கடைக்கு எதிரில்) தோல் செருப்புக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அதை வாங்க அழைவதையும், இப்போதய இரவுக் கடை சீனியப்பா கடைக்கு எதிரில் தொப்பிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அதை வாங்க நண்பர்களுடன்ஆவலுடன் அழைவதையும் எஅனோ விட்டு விட்டார்கள்,
AWE SOME
ReplyDelete