கீழக்கரை நகராட்சியில் இன்று (09.07.2013) செவ்வாய் கிழமை காலை 11.30 மணியளவில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகராட்சித் தலைவி இராவியத்துல் கதரியா தலைமையில் நடை பெற்றது. சுமார் 17 பக்கங்கள் கொண்ட, 29 தீர்மான பொருள்கள் அனைத்தும், நகர் மன்ற கவுன்சிலர்களின் எவ்வித ஒப்புதலும் இல்லாமல் 10 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, 11.45 மணிக்கெல்லாம் கூட்டம் நிறைவடைந்ததாக தெரிகிறது.
இதனை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களும், சுயேச்சை கவுன்சிலர்களுமாக 15 நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமையில், நகராட்சி தலைவியை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கீழக்கரை நகராட்சிக்கு சுமார் 12.30 மணியளவில், கீழக்கரை காவல் துறையினர் வந்து கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் "எங்களுடைய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே முன் வைப்போம்" என்று தெரிவித்தனர்.
இதனால் சமாதானம் ஏற்படாததால், காவல் துறையினர் அனைத்து கவுன்சிலர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு நடை பயணமாக அழைத்து சென்றனர். அப்போது கவுன்சிலர்கள் அனைவரும் நகராட்சி தலைவியை கண்டித்தும், அவருடைய கணவரின் நிர்வாகத் தலையீட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு நடந்து சென்றனர்.இதனால் பொதுமக்களிடையே, சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தற்போது 15 கவுன்சிலர்களும் கீழக்கரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே கீழக்கரை காவல் நிலையத்தில் குவிந்த பல்வேறு முன்னணி தொலைக்காட்சி ஊடகத்தினர், கவுன்சிலர்களிடம் நிலவரத்தை கேட்டறிந்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.
FACE BOOK COMMENTS :
FACE BOOK COMMENTS :
No comments:
Post a Comment