கீழக்கரை சின்னக்கடை தெரு, முத்தலிபு காக்கா அரிசிக் கடை அருகே, இயங்கி வரும் 'மாமா கடை' என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்படும் KFC (கீழக்கரை பிரைடு சிக்கன்) கடையில் இரவு 7 மணியாகி விட்டால், சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற வயது வித்தியாசமின்றி கூட்டம் அலை மோதுகிறது.
இந்த கடையின் நிறுவனர், கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த செய்யது குத்புதீன் அவர்களின் கை வண்ணத்தில் உருவான மசாலாக் கலவையில் சமைக்கப்படும் கீழக்கரை பிரைடு சிக்கன் தரும் அலாதி சுவையால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல் பணியாளர் போல உடையணிந்து, சுடச் சுட பரிமாறும் இவர் அன்புடன் உபசரிப்பது அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
மேலும் இங்கு பரிமாறப்படும் மாட்டுக்கறி பக்கோடா, காலி பிளவர் பக்கோடா போன்றவைகளை,உண்பதற்காகவே தினமும் பல்வேறு தூர தெருக்களிலிருந்து தங்கள் நண்பர் பட்டாளங்களுடன் படையெடுத்து வந்து சுவைத்து செல்கின்றனர். தற்போது ரமலான் நோன்பு துவங்கியிருப்பதால் வியாபாரம் மேலும் விறு விறுப்புடன், களை கட்டத் துவங்கியிருக்கிறது.
இது குறித்து KFC 'மாமா கடை' நிறுவனர் செய்யது குத்புதீன் நம்மிடையே பேசும் போது " இறைவன் அருளால் வியாபாரம் இப்போது சிறப்பாக இருக்கிறது. எனக்கு சிறு வயதில் இருந்தே சமையல் தான் தெரிந்த தொழில். ஆரம்பத்தில் இலங்கை நீர் கொழும்பில் சமையல் வேலை செய்து வந்தேன்.
பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு சென்னை ஐயப்ப செட்டி தெருவில், முதன் முதலாக 'கீழக்கரை மெஸ்' என்ற பெயரில் சாப்பாட்டுக் கடை நடத்தினேன். இப்போது இங்கு KFC துவங்கி மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டது.
வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்புக்கு காரணம், அன்பான உபசரிப்பு, சுத்தமான தயாரிப்பு, சுவையான சிக்கன் மட்டுமே " என்று தொழில் இரகசியத்தை மகிழ்ச்சியுடன் சொல்லியவாறு வேலையில் பிசியாகி விட்டார்.
No comments:
Post a Comment