தேடல் தொடங்கியதே..

Saturday 31 December 2011

நிரந்தர ஆணையரில்லாத கீழக்கரை நகராட்சி - அலைகழிக்கப்படும் பொது மக்கள்

கீழக்கரை நகராட்சியில் நகராட்சி ஆணையர் இட மாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும், இன்னும் அந்த பணியிடம்  தமிழக அரசால் நிரப்பப்படவில்லை. கூடுதல் பொறுப்பை ஏற்றிருக்கும், தற்காலிக ஆணையரால் அனைத்து பணிகளையும் சரி வர செய்ய முடியாமல் போகிறது.

  பூட்டியே கிடக்கும் நகராட்சி ஆணையர் அறை


இது குறித்து லெப்பை தெருவை சேர்ந்த முஹம்மது ஜமீல் அவர்கள் கூறுகையில், "கையொப்பத்திற்காக காத்திருக்கும் பைல்கள் அனைத்தும் இராமநாதபுரம் எடுத்து செல்ல வேண்டியுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.  சுகாதார ஆய்வாளரும் பணியிட மாற்றம் வாங்கி சென்று விட்டதால், அந்த பணியிடமும் நம் நகராட்சியில் காலியாக இருக்கிறது. நகராட்சிக்கு மிக முக்கிய பொறுப்புகளான இந்த இரண்டு பணியிடங்களும் காலியாக இருப்பதால் கட்டிட வரைபட ஒப்புதல் பெறுவது, வரி மாறுதல் செய்வது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது மிகுந்த கால தாமதம் ஆகிறது. இதனால் நகராட்சியின் பெரும்பாலான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது ", என்று தன் வருத்தத்தை தெரிவித்தார்.


திறக்கப்படாத சுகாதார ஆய்வாளர் அறை

இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகத் தலைவர் தமீமுதீன் அவர்கள் கூறும் போது, வரும்  புது  வருடத்தின் முதல் மனுவாக, மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் நாளில் நமது கீழக்கரை நகருக்கு நிரந்தர ஆணையரையும், சுகாதார ஆய்வாளரையும் நியமிக்க, கீழக்கரை அனைத்து மக்கள் சார்பாக, கோரிக்கை மனு கொடுக்க இருக்கிறோம். நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்  கவனத்திற்கும் இந்த கோரிக்கையை கொண்டு செல்வோம். அவர்கள் உடனடியாக மனுவினை  பரிசீலனை  செய்து தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு விரைவில் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.", என்று தெரிவித்தார்.

நம் நகராட்சிக்கு, ஒரு சிறப்பான நற்குணம் பொருந்திய, நேர்மையான நிரந்தர நகராட்சி ஆணையரையும், சுகாதார ஆய்வாளரையும் , தமிழக அரசு பணி நியமனம் செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.
 

Friday 30 December 2011

கீழக்கரையில் அநாதை ஆதரவு இல்லங்கள் நடத்தி பணம் கொழுக்கும் ஆசாமிகள் - பகீர் ரிப்போர்ட்



பல நல்ல நோக்கங்களை மனதில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் எத்தனையோ தொண்டு அமைப்புகளும், ஆதரவு இல்லங்களும் இருக்கும் போது, கடந்த சில ஆண்டுகளாக, அநாதை இல்லங்கள் என்ற பெயரில் புதிதாய் முளைத்திருக்கும் இந்த 'அவமானச் சின்னங்களால்' அனைத்து அமைப்புகளின் கண்ணியமும் சீர் குலைந்து வருகிறது. தற்போதைய சூழ் நிலையில் இந்த ஆதரவு  இல்லங்கள் பணம் பண்ணும் புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது. ஆண்டிகளாய் கீழக்கரையில் கால் பதித்த சில ஆசாமிகள், ஆதரவு இல்லங்கள் மூலம், ஐந்தாண்டுகளுக்குள் கோடிகளில் புரண்டு வரும் தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இது குறித்து கிழக்கு தெருவை சேர்ந்த சகோதரி ஆமினத்து அவர்கள் கூறுகையில், " அனாதைகளின் பண விசயத்தில் நமது மார்க்கம் மிக கண்டிப்பாக  நடக்க சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் மார்க்கத்தை கற்றறிந்த இந்த ஆசாமிகள் துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, வருடத்தில் இரு முறை பறந்து, அங்கு பணி புரியும் நம் நகரவாசிகளிடம், லட்சக் கணக்கில் வசூல் வேட்டை நடத்தி, அத்தனையும் ஏப்பம் விட்டு, விட்டு.. பிஞ்சு குழந்தைகளை பசியும், பட்டினியுமாக போட்டு, சரியான உடுமானம் கூட கொடுக்காமல், 'சைக்கோ தண்டனைகள்' கொடுத்ததை நான் கண்ணுற நேர்ந்த போது நெஞ்சே வெடித்து விட்டது. "யாரு பெத்த புள்ளைகளோ.. இங்கே வந்து, பசியும் பட்டினியுமா கெடந்து கஷ்டப்படுது", என்று கண்களின் ஓரமாய் பூத்த கண்ணீரை மறைத்து கொண்டு பேசினார்.

கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் முஹம்மது ஜுல்பி அவர்கள் கூறும் போது, நமது மாவட்டத்தில் எத்தனையோ சிறப்பாக செயல்பட்டு வரும் அநாதை இல்லங்கள் இருக்கும் போது சுகாதாரமற்ற முறையில் இயங்கி வரும் இது போன்ற 'அடாவடி ஆதரவு இல்லங்கள்' விசயத்தில் உடனடியாக அரசு தலையிட்டு, இவற்றை மூட உத்தரவிட வேண்டும். இது சம்பந்தமாக நாங்களும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகமும் இணைந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும், சம்மந்தப்பட்ட துறையினருக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம். உள்ளூர் காவல் துறையினர் இவர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டாமல், தண்டனை பெற்று தர ஆவண செய்ய வேண்டும்" என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.



இந்த அநாதை இல்லங்களுக்கு 'ஒரு பக்கம் வள்ளல்கள் வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள். மற்ற்றொரு பக்கம் இந்த ஆசாமிகள் வாரிச் சுருட்டி கொண்டு இருக்கிறார்கள். இந்த வள்ளல்கள் வருடம் ஒரு முறை ஊர் வரும் போதாவது, மறக்காமல் நேரம் ஒதுக்கி, சம்பந்தப்பட்ட ஆதரவு இல்லங்களை நேரடி ஆய்வு செய்ய வேண்டும். தங்களால் வழங்கப்பட்ட கொடைகள், முறையாக செலவு செய்யப் பட்டதா ? அல்லது ஏப்பம் விடப்பட்டதா ? என கண்காணிக்க வேண்டும்.

வெளி நாடுகளில் ஓடாய் தேய்ந்து உழைக்கும் நம் சொந்தங்கள், அநாதை இல்லங்களை புகைப்படத்தில் காட்டி யாராவது பணம் கேட்டால், அது ஒரு பைசாவாக இருந்தாலும் சரி.. உடனே வாரி வழங்கி விடாமல், விபரம் அறிந்த உள்ளூர் வாசிகளிடம் நன்றாக விசாரித்து விட்டு கொடுப்பது நல்லது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். ஒரு முறை ஏமாறுபவன் தான் மனிதன்.. மறுமுறை ஏமாறுபவன் முட்டாள்... விழிப்புடன் இருப்போம். விழிப்புணர்வு பெறுவோம் ..

Thursday 29 December 2011

கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு - பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை.

இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்
இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்

மார்கழி மாதம் ஆரம்பித்ததிலிருந்தே, பனியின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. இதனால் கீழக்கரையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பொது மக்கள் எப்போதும் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.

இது குறித்து இராமநாதபுரம் தனியார் பள்ளி ஒன்றில்  பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் மெஹ்மூது ரிபான் அவர்கள் கூறுகையில், "தினமும் கீழக்கரையில் இருந்து 7 மணிக்கே அரசு பேருந்தில் பள்ளிக்கு புறப்படுகிறேன். கடந்த ஒரு வாரமாக காலை 9 வரை பனி மூட்டம் சாலைகள் முழுதும் பரவி கிடக்கிறது.  ஆனால் இது எனக்கு மிக புதிய அனுபவமாக இருக்கிறது. ஊட்டியும், கொடைக்கானாலும் நம் கீழக்கரைக்கே இடம் பெயர்ந்து வந்ததாக எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்", என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்தார்.


இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்
அதே நேரம், இராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் காலை நேரங்களில் சவாரி செல்லும் ஆட்டோ டிரைவர் ரமீஸ் கூறுகையில், "இந்த கடும் பனி பொழிவு காரணமாக ஆட்டோவை ஓட்டி வருவது பெரும் சிரமமாக இருக்கிறது. முகப்பு விளக்குகள் எரிய விட்டு சென்றாலும், காலை 8 மணிக்கு கூட சாலைகள் தெரிவதில்லை. இதனால் பயண நேரம் 30 நிமிடத்திலிருந்து 45 நிமிட  நேரம் ஆகிறது. வேகமாக சென்றால், விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. ஒரு 15 நிமிடம் தாமதமானால் பரவாயில்லை. பயணிகள் பாதுகாப்பு தான் முக்கியம்", என்று தெரிவித்தார்.

இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்

குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த பனிபொழிவு நேரங்களில் மிகுந்த கவனத்துடனும், முறையாக சாலை விதிகளை பின்பற்றியும் வாகனங்களை ஓட்ட வேண்டும். இது போன்ற பனி பொழிவு காலைகளில், இரு சக்கர வாகன ஓட்டிகள் 100 ல போனா.. 108 பின்னால வரும்... என்பது உறுதி. ஆகவே இது போன்ற நேரங்களில் விழிப்புடன் செயல்பட்டு விபத்துக்களை குறைக்க வேண்டும்.

Monday 26 December 2011

கீழக்கரை அரசு அலுவலகங்களில் லஞ்சமா? கவலை வேண்டாம்..

நம் கீழக்கரை பொது மக்கள் வாழ்கையில் அன்றாட நிகழ்ச்சி போல, தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நேரில் சந்திக்க கூடிய சூழ்நிலை உள்ளது. பொது மக்களின் பணிகளை நிறைவேற்ற கடமைப்பட்ட அரசு அதிகாரிகளில் சிலர் லஞ்சத்தை எதிர் பார்த்து, கடமை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.




இது குறித்து அஹ்மது தெருவை சேர்ந்த சுல்தான் இபுராஹீம் அவர்கள் கூறுகையில், "முறையான ஆவணங்கள் இணைத்து மனு செய்தாலும், லஞ்சம் கொடுக்காமல் வேலை நடப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. அப்படியே லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று நாம் அடம் பிடித்தால், அடுத்த தலைமுறை வரை அலைக்கழிப்பு தான் தொடர்கிறது.. அரசு அலுவலகங்களுக்கு நடந்து, நடந்தே மன நோயாளியாவது தான் லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களுக்கு மிஞ்சுகிறது. ", என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.




கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக இணை செயலாளர், செய்யது சாகுல் ஹமீது அவர்கள் கூறுகையில், "மாட்டி கொள்ளாமல் லஞ்சம் வாங்குவது எப்படி?" என்ற ஆசிரியர் உத்தமனின் புத்தகத்தை படித்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும், இந்த லஞ்ச பேர்வழிகளை பிடிக்க, பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவர்களை இனம் காணும் முன், அரசு அலவலக வாசல்களில் லஞ்சப் பணம் பரிமாற, புடை சூழ நிற்கும் புரோக்கர்களை இனம் கண்டு, சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர விழிப்புடன், பொது மக்கள் அனைவரும் முன் வர வேண்டும்.", என்று தெரிவித்தார்.



நம் அரசாங்கம், அரசு அதிகாரிகளுக்கு தகுந்த சம்பளம், சலுகைகள் இன்ன பிற படிகள் என ஆயிரக்கணக்கில் அள்ளி வழங்கினாலும், லஞ்சம் வாங்குவது கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை. அதே நேரம், நாமும் ஒரே நாளில், காலையில் மனு கொடுத்து, மாலையிலேயே தங்கள் வேலையை முடித்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு ஊழியர்களின் கைகளில் லஞ்ச பணத்தை திணிப்பது தவறான அணுகுமுறையாகும்.


நமது கீழக்கரையின்  லஞ்ச பேர்வழிகள்  பற்றி நீங்கள் தகவல் தர வேண்டிய முகவரி.... உங்கள் தகவல்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.

லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறை
ஓம் சக்தி நகர், பாரதி நகர்,
இராமநாதபுரம்
தொலை பேசி : 04567 - 230036


"லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும், ஊக்குவிப்பதும் சட்டப்படி குற்றம்
லஞ்சத்தை ஒழிப்போம்.. லஞ்சமில்லாத நம் கீழக்கரை நகரை உருவாக்குவோம்."

Saturday 24 December 2011

வருடம் தோறும் டிசம்பர் மாத உள்ளூர் விலையேற்றம் - பொது மக்கள் குமுறல்



ஒவ்வொரு ஆண்டும் நம் கீழக்கரை நகரில் மற்ற மாதங்களை விட டிசம்பரில், அனைத்து பொருள்களின் விலைகளும், கூலிகளும், வாடகைகளும் பெருமளவு உயர்ந்து விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பால் விலையும், பேருந்து கட்டணமும் நம் தலையில் இடியாய் இறங்கி இருக்கும் போது, உள்ளூர் விலையேற்றமும் நம் கீழை மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

நம் கீழக்கரை மக்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் போன்றவை இந்த டிசம்பர் மாதத்தில் தான் பெரும்பாலும் அதிகமாக நடை பெறுகின்றது. இதற்காக வருடம் தோறும் டிசம்பர் மாதத்தில் வெளி நாடுகளில் வசிக்கும் கீழக்கரை வாசிகள் ஊருக்கு வந்து குடும்பத்து  நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதனால் நம் கீழக்கரை உள்ளூர்  வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் நம் கீழக்கரை வாழ் கீழ் தட்டு மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

புது கிழக்கு தெருவை சேர்ந்த குடும்ப தலைவி பரிதா பேகம் அவர்கள் கூறுகையில் "வெளி நாடு வாழ் கீழக்கரை வாசிகள் பெரும்பாலும் இந்த ஒரு மாதம் மட்டும் தான் ஊருக்கு வருகிறார்கள். அதனால் நம் ஊரின் நடப்புகள் அவர்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. வெளி நாட்டில் இருந்து லீவில் வரும் நம்  சொந்த, பந்தங்கள் உள்ளூர் வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் கேட்கும் காசை கொடுத்து விடுகிறார்கள்.. இதனால் எங்களுக்கும் அதே விலையில் தான் பொருள்களை விற்கிறார்கள். இது தடுக்க பட வேண்டும்.  இல்லை என்றால் எங்களை மாதிரி ஏழைகள் ரொம்ப பாதிக்க படுவோம்." என்று மிகுந்த வருத்ததுடன் தெரிவித்தார்.





இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தமீமுதீன் அவர்கள் கூறும் போது , "வெளி நாடுகளில் இருந்து திரும்பும் நம் சொந்தங்கள், முதலில் தாங்கள் வாங்கும் பொருள்களின் உள்ளூர் விலை, குறிப்பாக, மீன், கறி போன்றவற்றின் விலை எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  கார், ஆட்டோ, சுமோ போன்றவைகளை வாடகைக்கு எடுக்கும் முன், ஊருக்குள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல ஏற்கனவே எவ்வளவு வாடகை இருந்தது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்", என்று தெரிவித்தார்.


"தேவைகள் அதிகரிக்கும் போது விலைகளும் அதிகரிக்கும்." என்பது பொருளாதார விதி. அதற்காக, கீழ்தட்டு மக்களை பாதிக்கும் அளவிற்கு விலைகளை, எந்தவித முன்னறிவிப்புமின்றி சகட்டுக்கு விலைகளை உயர்த்தி விடுவது, "டிசம்பர் வந்தாலே  ஏழை மக்கள் அச்சப்படும் மாதமாக மாறும்" என்பதில் மாற்று கருத்தில்லை. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நம் கீழக்கரை கீழ் தட்டு மக்களின் அச்சத்தை போக்க முன் வர வேண்டும்.

Saturday 17 December 2011

கீழை இளையவன் என்ற பெயரில் விரைவில் வெப் தளம் துவக்கம்.

அன்புள்ள கீழக்கரை வாழ்  சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் வெளி நாடு வாழ் கீழக்கரை சகோதர, சகோதரிகளுக்கும், பாசமிகு நண்பர்களுக்கும் எனது உளம் கனிந்த

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு"

இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் நம் கீழக்கரை நகரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு "கீழை இளையவன்" என்ற பெயரில் வெப் தளம் துவங்க பட இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த வெப் தளத்தின் உருவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறைவன் நாடினால் விரைவில் உங்களை வெப் தளம் மூலமாக சந்திக்கிறேன்... "இருட்டடிப்பு செய்யும் செய்திகளை  உண்மையின் வெளிச்சத்தில்  ஒளி ஏற்ற ....." உங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.

இந்த வெப் தளம் மூலமாக செய்திகளை உடனடியாக தர முடியாவிட்டாலும், நிச்சயம் உண்மை செய்திகளை தர உறுதி மொழி ஏற்கிறேன்.


அன்புடன்,

கீழை இளையவன்