தேடல் தொடங்கியதே..

Thursday 9 August 2012

கீழக்கரையில் மிதமான மழையுடன் நிலவும் ரம்மியமான சீதோசன நிலை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வெயிலின் உக்கிரம் தணிந்து காணப்பட்ட நிலையில், நம் கீழக்கரை நகரில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இதனால் ரமலான் நோன்பு வைத்திருந்த இஸ்லாமிய மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.


இந்நிலையில் கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில், வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் கார் மேகங்கள் தென்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று (08.08.2012) மாலை 6 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் லேசான தூறல் விழுந்தது. இரவு 7 மணியளவில் மிதான சாரல் மழை பெய்ய துவங்கியது. கடும் புழுக்கத்தில் அவதியுற்ற பொதுமக்கள் மண் வாசனையை நுகர்ந்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 




இன்றும் (09.08.2012) பிற்பகல் 4 மணியிலிருந்து குளிர்ந்த தென்றல் காற்றுடன் லேசான தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் கீழக்கரை நகர் முழுவதும் ரம்மியமான சீதோசன நிலை நிலவுகிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறு தரும் மணல் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் !

நம் கீழக்கரை நகரில்  வீடு கட்டுபவர்கள், மாணவ மாணிவிகள் பள்ளி செல்லும் காலை நேரங்களில் சாலைகளில் மணலை கொட்டி வைத்திருப்பதால் அவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு மட்டுமல்லாமல் விபத்துக்களுக்கும் வழி வகுக்கிறது. பல தெருக்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் இரவு நேரங்களில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் மணல், முண்டுக்கல், ஜல்லி கற்கள் போன்றவற்றை கொட்டி வைத்து விடுவது மேலும் போக்குவரதுக்கு இடையூறாக இருந்து வருகிறது.




இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் இணைச் செயலாளர் B. செய்யது காசீம் அவர்கள் கூறும் போது "தார்ச் சாலையாக இருக்கும் சாலைகள் பலவும், தற்போது மீண்டும் மணல் சாலைகளாக மாறி வருகிறது. முக்கியமாக கீழக்கரை நடுத் தெரு, சாலை தெரு, O.J.M.தெரு உள்ளிட்ட தெருக்களில் மணல் குவியல்கள் அதிகமாக கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் பிரதான சாலைகளில் உள்ள மணல், ஜல்லி போன்றவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த, கட்டிட உரிமையாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் கொட்டப்படும் லாரிகள், டிராக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து ஜின்னா தெருவைச் சேர்ந்த மேஸ்திரி ஹபீப் அவர்கள் கூறும் போது "நமது ஊரைப் பொருத்தமட்டில் மிகக் குறுகிய சாலைகளையும், நெருக்கமான வீடுகளையும் கொண்டு அமைந்துள்ளது. வேறு வழியில்லாமல் தான் இது போன்று சாலைகளில் கொட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சாலைகளில் கொட்டிய பிறகு அதனை அகற்றுவதற்கு வேலையாள்கள் பல நேரங்களில் கிடைக்காமல் போவதாலும் தொடர்ந்து இரண்டு அல்லது 3 நாள்கள் அங்கேயே கிடக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் சாலைகளில் மணலை கொட்டக் கூடாது என்றால், யாருமே வீட்டு கட்டுமான வேலைகளை செய்ய முடியாது." என்று தெரிவித்தார்.

நம் நகரின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, மணலை கொட்டி விட்டு உடனே அள்ளுவதற்கு, வேலையாள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது எந்த பிரச்சனைகளும் எழ வாய்ப்பில்லை. அதோடு மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமாவது, கட்டுமான பொருள்களை சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Sunday 5 August 2012

கீழக்கரை வண்ணாந்துறை அபாய வளைவில் ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் - கீழக்கரை ரோட்டரி சங்கம் அர்ப்பணிப்பு !

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. இந்த விபத்துக்களில் சிக்குபவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்த பகுதியில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகையோ, ஒளிரும்  பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளோ, வேகத்தை கட்டுப் படுத்தும் தடுப்பு வேலிகளோ  இல்லாதது தான் என்பது நாம் யாவரும் அறிந்ததே.

இராமநாதபுரம் - கீழக்கரை சாலை !

இதனையடுத்து கீழக்கரை ரோட்டரி சங்கத்தினர் ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை சாலையின் இரு புறங்களிலும் அமைத்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக‌, கடந்த வருடம் சாலைகளின் இரு ஓரங்களின் வளைவுகளிலும் ஏராளமான‌ கற்கள் பதித்து இரவு நேரங்களில் ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை பொருத்தியிருந்தார்கள்.

கீழக்கரை - இராமநாதபுரம் சாலை !

இதன் மூலம் ஒளிரும் விளக்குகள் இரவு நேரம் வாகன ஒட்டிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது . தற்போது சமூக விரோதிகளால் அனைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு விட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் காவல்துறை சார்பில், வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால் அதையும் லாரிகளில் வருபவர்கள், தடுப்புகளை சாலையோரம் வீசி விட்டு லாரிகளை வேகமாக ஓட்டி சென்று விடுகின்றனர். தற்போது இங்கு தடுப்பு வேலிகளும் இல்லை.

இந்த விபத்துப் பகுதியில் சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்தி, வளைவின் இரு மருங்கிலும் மீண்டும் இரும்பு தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும். நம் நகரின் பொது நல அமைப்பினர்க்ளும் முயற்சி மேற்கொண்டு ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை ஓட்ட முயற்சிகள் மேற்க் கொள்ள வேண்டும். இந்த தருணத்தில், மக்கள் நலனை முன்னிறுத்தி பல நல்ல முயற்சிகள் எடுத்து வரும் கீழக்கரை ரோட்டரி சங்கத்தினருக்கு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் காவிரி குடி நீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் - சமூக ஆர்வலர்கள் கவலை !

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் வண்ணாந்துறை வளைவு அருகே உள்ள பாலையாறு பகுதியில் செல்லும் காவிரி கூட்டுக் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு, கீழக்கரை பகுதிக்கு வர வேண்டிய குடி நீர் பெருமளவு வீணாகி வருகிறது. இதனால் கீழக்கரை பகுதி சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே மிகவும் வறட்சியான மாவட்டமாக இருக்கும், நம் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ. 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் காவிரி குடிநீர் அவ்வப்போது மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

மழையில்லாத நேரத்திலும் நிரம்பி வரும் பாலையாறு !

இது குறித்து கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற (KMSS சங்கம்) சங்கத்தின் செயலாளர் ஜனாப்.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "இந்த பாலையாறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே, கடுமையான வறட்சியின் காரணமாக நீர் முழுவதும் வற்றி காணப்பட்டது. ஆனால் திடீரென கடந்த வாரம் மழை எதுவும் பெய்யாத நிலையில் பாலையாரில் நீர் ஆறாக ஓடுகிறது. சாலையை விட்டு கீழே இறங்கி பார்க்கும் போது, கீழக்கரைக்கு வரும் காவிரி கூட்டுக் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு குடி நீர் வீணாவது தெரிய வந்தது.  இன்னும் இராமநாதபுரம் செல்லும் வழிகளில் சில இடங்களில் கால்நடைகளுக்காக காவிரி குடிநீர் குழாய் உடைக்கபட்டு, மக்களுக்கு சென்றடையாமல் வயல் வெளிகளில் தண்ணீர் வீணாகி வருகிறது. 

தற்போது கண்மாய்கள், ஊரணிகள் வறண்டு போய் உள்ளதால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இதனையறிந்த சில விவசாயிகள் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் கால்நடைகளின் தண்ணீர் தேவைக்காக, வேறு வழியின்றி சாலையோரங்களில் செல்லும் காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து, வயல் வெளிகளில் தேக்கி, கால்நடைகளுக்கு வழங்கி வருகின்றனர். ரோட்டோரங்களில் உடைக்கபடும் குடிநீர் குழாய்களால், கீழக்கரை பகுதிக்கு குடிநீர் செல்லாமல் வயல் வெளிகளில் தேங்கி வீணாகி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் சீர் செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும்" என்று ஏக்கத்துடன் தெரிவித்தார்.



'சிறு துளி.. பெரு வெள்ளம்..' இது சிறிய உடைப்பு தானே.. என்று சம்பந்தப்பட்ட துறையினர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக குழாயை சரி செய்ய முன் வர வேண்டும். நம் கீழக்கரை நகரில் சில பகுதிகளுக்கு மட்டும், மிகக் குறைந்த அளவே வந்து கொண்டிருக்கும் இந்த காவிரி நீர்,  நம் நகர மக்கள் முழுமைக்கும் தாகம் தீர்க்கும் தண்ணீராக என்று மாறும்?? என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் மக்களுக்கு, குடி நீர் வீணாகும் குழாயையாவது சரி செய்து ஆறுதல் படுத்த அதிகாரிகள் விழைய வேண்டும்.