தேடல் தொடங்கியதே..

Monday 28 October 2013

கீழக்கரையில் நூற்றாண்டு தாண்டியும் நிழல் தரும் விசித்திர வேப்ப மரம் - நீங்காத நினைவலைகள் !

கீழக்கரை வடக்குத் தெரு சி.எஸ்.ஐ சர்ச் மற்றும் C.S.I.நடுநிலைப் பள்ளி இருக்கும் புனித பேதுரு ஆலய வளாகத்தில் நூற்றாண்டை தாண்டி நிழல் தரும் ஒரு வைரம் பாய்ந்த வேப்ப மரம்  காணப்படுகிறது. தரைமட்டத்தில் படுத்து உறங்குவது போல நீண்டு, பின்னர் வான் நோக்கி உயர்ந்துள்ள இந்த விசித்திர மரத்தின் கீழாக அமரும் போது, எத்துணை டிகிரி வெயில் கொளுத்தினாலும் கூட, குளுமையான காற்று மேனியில் தழுவி உள்ளத்தை வருடுகிறது. 


கீழக்கரை நகரில் கடந்த 1890 காலக் கட்டங்களில் துவங்கப்பட்ட மிகப் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றாக இந்த பள்ளிக்கூடம் திகழ்கிறது. அதற்கு முன்னதாகவே இந்த மரம் இங்கு இருந்துள்ளதாக தெரிகிறது. இன்றளவும் நிலைத்து நிற்கும்  இந்த வேப்ப மரத்தில், பள்ளி சிறுவர்களாய் இருந்த போது துள்ளி விளையாடிய காலங்களை, எண்ணி மகிழ்பவர்கள் ஏராளம். இன்று தாத்தாக்களாக வலம் வரும், CSI பள்ளிக் கூடத்தில் பயின்ற ஆயிரக்கணக்கான, முன்னாள் மாணவர்களின் மனதில் எல்லாம் நீங்காமல் நிற்கும் இந்த மரத்தடியின் மகிழ்ச்சி தருணங்கள் மறப்பதற்கில்லை. 

கீழக்கரையில் இது போன்ற நூற்றாண்டை கடந்த மரங்கள் எராளம் இருந்தன. அவற்றுள் வடக்குத் தெரு தைக்காவில் இருந்த பிரம்மாண்ட புளிய மரம், புதுக் கிழக்குத் தெரு பெரியகாட்டில் இருந்த அரச மரம், கண்ணாடி வாப்பா தர்ஹா பாதையில் நின்ற பப்பரப்புளி மரம் நெஞ்சில் நீங்காதவை.

இது குறித்து இந்த பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தின்பண்டங்கள் விற்கும் 80 வயதை தொடும் மூதாட்டி ராக்காயி அம்மாள் அவர்கள் நம்மிடையே பேசும் போது " 

நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே இந்த மரம் மிக பிரமாண்டமாக வளர்ந்து இருந்தது. இதை சுற்றி சுற்றித் தான் விளையாடுவோம்.

நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும், இந்த பசுமையான வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். 

இந்த மரத்தின் நிழலில் தினந்தோறும் அமர்ந்து இருப்பது மனதிற்கு நிம்மதியை தருகிறது"என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

மூலிகை மரங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த வேப்ப மரங்களின் எண்ணிக்கை, கீழக்கரை நகரில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் கீழக்கரை நகர் முழுவதும் பரவலாக காணப்பட்ட, தொன்மையான வேப்ப மரங்கள் பல இடங்களில் வெட்டப்பட்டு விட்டன. கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கீழக்கரை பகுதிகளில் கரு வேம்பே காணப்படுகிறது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்ட இந்த வேப்ப மரங்கள் 50 ஆண்டுகள் தொடும் போதே மனிதப் பதறுகளால் கொலை செய்யப்பட்டு விடுகிறது. 

கீழக்கரை நகராட்சியில் 1920 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சேர்மன் பதவி வகித்த, நடுத்தெருவை சேர்ந்த நிலக்கிழார், மர்ஹூம். அஹ்மது இப்ராகீம் அவர்கள் சுற்றுச்சூழல் விசயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்திருந்த காரணத்தால், கீழக்கரை நகருக்குள் வள்ளல் சீதக்காதி சாலை முதல் நகரின் எல்லை முடியும் பாலையாறு வரை ஆல மரங்களையும், வேப்ப மரங்களையும் நட்டு வளர்த்துள்ளார். அவை தான் இன்றளவும் 
நிழல் தரும் பொக்கிசங்களாக நிற்கிறது. 



வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டதாக இருப்பதால், இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது. எனவே தான் நம் மூதாதையர்கள், வேப்பமரங்களை வீட்டின் முன் புறங்களில் அதிகமாக வளர்த்துள்ளனர். இதனால் நோய்கள் தாக்கமும் குறைந்து இருந்துள்ளது. இப்போதும் கூட நம் கீழக்கரை சுற்று வட்டாரங்களில், வீட்டில் யாருக்காவது அம்மை பார்த்திருந்தால், கிருமி நாசினிக்காக உடனடியாக வீட்டு வாசலில் வேப்பிலை கட்டுவதும், வேப்பிலையை அரைத்து அம்மை புண்களில் பூசுவதையும் பார்க்க முடிகிறது. 

No comments:

Post a Comment