தேடல் தொடங்கியதே..

Wednesday 22 May 2013

கீழக்கரை மாணவர்கள் சட்டம் படிக்க ஆசையா ? சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்வது எப்படி ? - 'வீட்டிற்கு ஒரு வக்கீல்' கல்வி வழிகாட்டி !


கீழக்கரை நகரில் இருந்து சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழில் செய்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். அவர்களுள் ஓரிரு வக்கீல்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கூட, பலர் இன்னும் ஞாயிற்றுக் கிழமை வக்கீல்களாகவே காலத்தை ஓட்டி வருவது வருத்தத்திற்குரியது. கீழக்கரைவாசிகள் தங்களுக்கு ஏற்படும் சட்ட சிக்கல்களை தீர்க்கவும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தங்களுக்காக திறம்பட வாதாடவும், நல்ல சட்ட அறிவு நிறைந்த வக்கீல் பெருமக்கள் இல்லாததால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். 



சமீப காலமாக நியாயத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்ட பாடுபடும், இந்த உன்னதமான வழக்கறிஞர் தொழிலை, தொலைக் காட்சி ஊடகங்களிலும், தரம் கெட்ட சினிமாக்களிலும், மிகக் கேவலமாக சித்தரிப்பது வழக்கமாகி வருகிறது. இதன் தாக்கத்தால் மாணவ மணிகள் சட்டப் படிப்பில் சேரத் தயங்குகின்றனர். நீதி மன்றங்களில் தங்களின் வழக்குகளை நடத்தி வரும் கீழக்கரை சாமானியர்கள் பெரும்பாலும், இராமநாதபுரத்திற்கும் மதுரைக்குமாக, நல்ல வக்கீல்களை தேடித் திரியும் நிலையே தற்போது நிலவுகிறது. அந்த சட்டம் படித்த சத்தியவான்களும், சிறு வழக்குகளை நடத்துவதாக இருந்தாலும் கூட, நீதி மன்ற நடை முறை தெரியாத பாமரர்களிடம் இருந்து கரன்சிகளை கணக்கில்லாமல் கறந்து விடுகின்றனர். 

இதில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும், தேவயில்லாத வழக்குகளில் அப்பாவிகள் சிக்கி தவிப்பதை களைந்தெரியவும், எதிர் வரும் காலங்களில் 'வீட்டிற்கு ஒரு வக்கீல்' இருக்க வேண்டிய கட்டாய சூழல் நிலவி வருகிறது. ஆகவே உள்ளூர் மாணவ மாணவிகள் சட்டப் படிப்பினை கசடறக் கற்று, இந்த  சிறப்பான தொழிலை, கீழக்கரையின் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில் செய்து, நற்பேறு பெற வேண்டுமென கீழை இளையவன் வலை தளம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

சட்ட படிப்பிற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தற்போது துவங்கி உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பும், பி.எல்., என்ற மூன்றாண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பிற்கு, 1,052 இடங்களும், மூன்றாண்டு பி.எல்., சட்ட படிப்பிற்கு, 1,262 இடங்களும் உள்ளன. இப்படிப்புகளில் சேர, பிளஸ் 2 தேர்வில்  45 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விலை, 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., சட்டப் படிப்பில் சேர, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள சட்ட பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ., பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 120 இடங்களும், பி.காம்.- பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கு, 60 இடங்களும், பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 60 இடங்களும் உள்ளன. 70 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விலை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்பங்களை தபாலில் பெற ரூ.1100 என்றும் பி.ஏ., பி.எல்., சட்டப்  படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 14.06.2013 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை, "பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் ச ட்ட பல்கலைக்கழகம், சென்னை'' என்ற பெயரில் "டிடி' எடுத்து மாணவர்கள் பெறலாம். ஜூன், 14ம் தேதிக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜூன், 25ம் தேதிக்குள், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இது தவிர கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளிலும் LL.B., பட்டப் படிப்புகளுக்கு அடுத்த மாதம் முதல் விண்ணப்பங்கள் வெளியிடப் படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 

இந்தாண்டு முதல் புதிதாக, பி.காம்., பி.எல்., (ஹானர்ஸ்) என்ற, ஐந்தாண்டு பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படிப்புக்கு மாணவர்களிடம் அதிகளவில் விண்ணப்பங்கள் வரும் எனவும் பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கு, 7,000 விண்ணப்பங்களும், பி.எல்., படிப்புகளுக்கு, 8,000 விண்ணப்பங்களும் இந்தாண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும்  கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் . 

மேலும் சட்டப் படிப்பு குறித்த தகவலுக்கு www.tndalu.ac.in என்ற இணைய தள முகவரியை சொடுக்கி பார்வையிடலாம். 

Tuesday 21 May 2013

கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் முயற்சியால் ரேஷன் கடைகளில் பச்சரிசி விநியோகம் துவங்கியது - மகிழ்ச்சியுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள் !


கீழக்கரை நகரில் கடந்த ஐந்து மாத காலமாக ரேஷன் கடைகளில் பச்சரிசி விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். ஒவ்வொரு முறையும், பெண்களும் முதியவர்களும் பச்சரிசி வாங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு சென்று, வெறும் கையுடனே திரும்பி வந்தனர். இதனால் இடியாப்பம், ஆப்பம் விற்பனை செய்யும் ஏழைக் குடும்பங்களும், இடியாப்ப பிரியர்களும் மன வருத்தத்திற்கு உள்ளாயினர்.


இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது. அந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கீழக்கரை பகுதியில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நேற்று முதல் பச்சரிசி விநியோகம் துவங்கப்பட்டது. இதனால் அடித்தட்டு பொது மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரை ரேசன் கடைகளில் ஐந்து மாதங்களாக பச்சரிசி போடாததால் பொதுமக்கள் அதிருப்தி - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கலெக்டருக்கு கடிதம் !

கீழக்கரை நகரில் உள்ள, பச்சரிசி பெற தகுதி பெற்று இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 கிலோ பச்சரிசி வீதம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் குடும்ப அட்டை தாரர்களுக்கு "பச்சரிசி இல்லை... காலியாகி விட்டது... பச்சரிசி தீர்ந்து விட்டது..." என்று ரேஷன் கடை நிர்வாகிகளோ அல்லது அதன் ஊழியர்களோ தெரிவித்தால் உடனடியாக கீழ்காணும் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினரின் அலைப் பேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

9677208987 / 9443358305 / 9791742074

  • Keelai Ilayyavan கீழக்கரை நகரில் உள்ள, பச்சரிசி பெற தகுதி பெற்று இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 கிலோ பச்சரிசி வீதம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் குடும்ப அட்டை தாரர்களுக்கு "பச்சரிசி இல்லை... காலியாகி விட்டது... பச்சரிசி தீர்ந்து விட்டது..." என்று ரேஷன் கடை நிர்வாகிகளோ அல்லது அதன் ஊழியர்களோ தெரிவித்தால் உடனடியாக கீழ்காணும் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினரின் அலைப் பேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    9677208987 / 9443358305 / 9791742074
    6 hours ago · Like · 5
  • Thameem Mohideen Very good
    6 hours ago via mobile · Like · 3

Monday 20 May 2013

கீழக்கரையில் சிறுவர்கள் நடமாடும் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் 'கேஸ் சிலிண்டர்கள்' - விபரீதம் நடைபெறும் முன் அகற்றப்படுமா ?


கீழக்கரை சின்னக்கடைதெரு  சாலை எப்போதும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருந்தபடியே இருக்கும். மேலும் இந்த சாலையில் பள்ளிக் கூடங்களுக்கு செல்லும் சிறுவர் சிறுமிகளும், பொதுமக்களும் நடந்து செல்லும் முக்கிய சாலையாக இருக்கிறது. முத்தலிபு காக்கா அரிசிக் கடை அருகே உள்ள இந்த சாலையில், கீழக்கரை சேது கேஸ் ஏஜென்சி நிறுவனத்தினரால் பாதி சாலையை ஆக்கிரமித்தவாறு வைக்கப்பட்டு இருக்கும் கேஸ் நிரம்பியிருக்கும் சிலிண்டர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், இப்போது இருக்கும் கடும் வெப்பத்தால் கேஸ் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயமும் இருப்பதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.





இந்த கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கும் பகுதியை கடந்து செல்லும் சிறுவர்கள் விளையாட்டாக, அதன் மீது ஏறி விளையாடுவதும், தாவுவதுமாக வயிற்றில் புளியை கரைக்கின்றனர். அவர்கள் தப்பி தவறி சிலிண்டர் மூடியை திறந்து விட்டால், இப்போது கீழக்கரையில் வீசும் அக்னி அனலுக்கு தீப்பற்றி கொள்வது பெரிய விசயமே அல்ல. 

இந்த சிலிண்டர்கள் பரப்பி வைக்கப்பட்டு இருக்கும் சாலையின் மேல் பகுதியில் தான், உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கிறது ஏற்கனவே இதே இடத்தில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பட்ட மரம் ஒன்று முறிந்து விழும் நிலையில் வேறு நின்று கொண்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்திற்கு புகார் செய்யும் போதெல்லாம் "சாலையில் நாங்கள் வைத்திருப்பது காலி சிலிண்டர் தான். அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று மட்டும் பதில் வருகிறது. 



இது போன்று பொதுமக்கள் அச்சப்படும் வகையில், சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டர்களை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என 'ஒரு சாவு விழும் வரை...' பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Asan Hakkim "ஒரு சாவு விழும் வரை...' பொறுத்திருக்க அவசியம் இல்லை மக்கள் சக்தி மகத்தான சக்தி, ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் ஒரே நாளே போதும் காலி பண்ணிவிடலாம் - சும்மா ஒன்னும் இல்லாத விசயத்துக்கெல்லாம் கட்ட பஞ்சாயத் வைக்கிறார்கள். இது போன்ற விசயத்துக்கு கட்ட பஞ்சாயத் வைக்க மாட்டர்களா என்ன? ஒரு உசுரு போனால் சும்மா வந்து விடுமா என்ன?? காலி சிலிண்டர்....காலி சிலிண்டர்....என சொல்லுபவர்கள் உசுரு போனால் கூலியா(உயிரைய்) கொடுக்க போகிறார்கள் என்ன??? {குரல் கொடுப்போம் வெற்றிபெறுவோம். - அன்புள்ள அசன் ஹக்கீம்%%

Sunday 19 May 2013

கீழக்கரை நகராட்சியால் தொடர்ந்து புறக்கணிக்கப் படும் 18 வது வார்டு பகுதி - குமுறும் பொது மக்கள் !


கீழக்கரை 18 வது வார்டு பகுதியில் உள்ள வாருகால்களிருந்து சாக்கடை சகதிகள், பொது மக்கள் நடமாடும் பாதைகளில் அள்ளி வைக்கப்படுவதால் பெரும் சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதாகவும், இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பல்வேறு விதமான நோய்களால் அவதிப்படுவதாகவும், இந்த 18 வது வார்டு பகுதி மட்டும் நகராட்சி நிர்வாகத்தினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


இது குறித்து தெற்குத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். அஸ்வத் கரீம் அவர்கள் கூறும் போது " எங்கள்  18 வது வார்டு பகுதியான நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதியிலிருந்து, டவுன் காஜி இல்லம் வழியாக கட்டளிமுசா பங்களா முதல் பாபு ஆட்டோ ஸ்டாண்ட் வரை உள்ள சாக்கடை வாருகால்கள் எதற்கும் முறையாக மூடி போட வில்லை. இதனால் தெருக்களில் சேரும் குப்பைகள் அத்தனையும் வாருகால்களில் விழுந்து, கழிவு நீர் சரியாக ஓடாமல் சாக்கடை தண்ணீர் தெருவெங்கும் வழிந்து ஓடுகிறது. 


பின்னர் துப்புரவுப் பணியாளர்களால் தெருக்களில் அள்ளி வைக்கப்படும் சாக்கடைகள், அங்கிருந்து அப்புறப் படுத்தப்படாமல் நடப்பவர்களின் கால்களில் மிதிபட்டு துன்பம் ஏற்படுத்துவதுடன், சகிக்க முடியாத துர் நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நகர்ராட்சி அலுவலர்களிடம் இது சம்பந்தமாக கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 18 வது வார்டை பொருத்தமட்டில் ,இந்த சாக்கடை விஷயம் மட்டுமல்ல. இது போன்ற அனைத்து பிரச்சனைக்கும், உடனடியாக தீர்க்கப்படாமல், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது." என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

இது குறித்து தெற்குத் தெருவை சேர்ந்த ஜமீல் அஹமது அவர்கள் கூறும் போது "நகராட்சி சார்பாக எங்கள் பகுதியில் எந்த பணிகளும் சரிவர செய்யப்படுவது இல்லை. கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்து தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளிகளுக்கு செல்லும் சாலையில், பாபு ஆட்டோ ஸ்டான்ட் அருகில் ( 18வது வார்டு பகுதி ) 'அபாயப் பள்ளம்' ஒன்று வாயைப் பிளந்தவாறு பேராபத்தை விளைவிக்க காத்திருக்கிறது.



முதியவர்களும் பள்ளிச் சிறுவர்களும் கடந்து செல்லும் இந்த சாலையில் உள்ள பள்ளத்தை, சீர் செய்ய பலமுறை நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் இல்லை. யாரவது விழுந்து முதுகெலும்பு ஒடிந்தால் மட்டும் தான் விடிவுகாலம் பிறக்கும் போலத் தெரிகிறது" என்று தளர்ந்த குரலில் தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினார். 

கீழக்கரை நகரில் இது போலவே இன்னும் சாக்கடையிலிருந்து விமோசனம் பெறாத பகுதிகள் ஏராளமாக காட்சியளித்தே வருகிறது. உதாரணமாக கீழக்கரை நடுத்தெரு, நெய்னா முகம்மது தண்டையல் தெருப் பகுதியை குறிப்பிடலாம். 



இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி பார்க்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.  

கீழக்கரை நடுத் தெருவில் நாறிக் கிடக்கும் சாக்கடைகளுக்கு தீர்வு கிடைக்குமா ??
http://keelaiilayyavan.blogspot.in/2012/11/blog-post_22.html

FACE BOOK COMMENTS :
  • Segu Sathaku Ibrahim ஊர் முழுக்க வாருகால்வாய்களுக்கு மூடி போட ஒன்ணரை ஆண்டு காலம் போதாதா?
  • Hassan Ali ராமராஜன் (டவுசர்)சொன்னமாத்ரி சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போலவருமா இதை பார்த்து பார்த்து சலிச்சி போச்சி வேற எதாவது இருந்தால் போடுங்கள் சாக்கடையும் ,குப்பையும் இருந்தாதான் அது கீழக்கரை நம் குழந்தைகள் நம்ம ஊரில் வாழ்ந்து விட்டால் போதும் அந்த குழந்தைகள் வேறு எங்கும் நோயில்லாமல் வாழ்ந்துவிடும் ஏன்டா அது வாழ்ந்த இடம் அப்படி
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை நகராட்சிக்கு ஒரு நல்ல பொறுப்பான ஆணையரை, தமிழக அரசு பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆவல் கொண்டிருந்த சமயத்தில், கடந்த ஆண்டு பொறுப்பேற்ற, கமிசனர் ஆரம்பத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டதோடு சரி. அதோடு பழைய குருடி கதவ தொறடி என்று பழைய பஞ்சாங்கத்திற்கே சென்று விட்டது அவர் மீது நம்பிக்கை வைத்திருந்து பொதுமக்கள் தலையில் இடியாய் இறங்கி இருக்கிறது. 

    அவருக்கும், அரசியல் தலைகளுக்கும் ஒத்துப் போகும் வார்டு கவுசிலர்களின் பகுதிகள் மட்டுமாவது ஓரளவுக்கு நாறாமல் இருக்கிறதா ? என்றால் அதுவும் இல்லை. இப்படி நகர் நலனில் அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளும் கமிஷனரின் பொறுப்பற்ற பல பணிகளால், கீழக்கரை நகராட்சியின் வருவாயும், மத்திய மாநில அரசுகளின் நிதிகளும் வீணாகி வருகிறது. 

    ஒரு உதாரணத்திற்கு கீழக்கரை நகராட்சிக்கு வாங்கியிருக்கும் கழிவு நீர் உருஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை சொல்லலாம். கீழக்கரை நகரின் எந்த தெருக்குள்ளும் செல்ல முடியாத இந்த பிரமாண்டமான, மிகப் பெரிய உருவில் இருக்கும் வண்டியை என்ன காரணத்திற்காக வாங்கினார்கள் என்று இது வரை யாருக்கும் புரியவில்லை. 

    கமிசனர் ஒரு முறை யோசித்து செயல்பட்டு இருந்தால், இந்த மெகா வண்டியை வாங்கியதற்கு பதிலாக, அதே தொகையை வைத்து, கீழக்கரையின் அனைத்து தெருக்களுக்கு உள்ளும் செல்லக் கூடிய மூன்று சிறிய அளவில் இருக்கும் கழிவு நீர் உருஞ்சும் ( மினி சக்கர் ) வாகனங்களை வாங்கி இருக்கலாம். 

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று இறுமாப்போடு இருக்கும் மங்குனி மனிதர்களே.. உங்களை இறைவன் கடுமையாக பிடித்து உலுக்கும் நாள், வெகு விரைவில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்.

கீழக்கரையின் 'ஸ்பெஷல்' பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் தின மலர் நாளிதழ் - மூத்த பத்திரிகையாளருக்கு குவியும் பாராட்டுகள் !


கீழக்கரையின் வாழும் பெருமைகளை, உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக, நேற்று  (18.05.2013) தின மலர் நாளிதழின் மதுரை பதிப்பில் 'அக்கம் பக்கம்' பகுதியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பக்கம் முழுவதும் கீழக்கரையின் ஸ்பெஷல்களான ஒட்டுமா, பட்டை சோறு, மீன் பிடி தொழில், பூத்துக் குலுங்கும் புதுமைப் பூக்கள், கீழக்கரையில் வரலாற்று ஆய்வாளர் என்று மூத்த பத்திரிகையாளர். அருமை சகோதரர். ஜனாப். தாஹீர் ஹுசைன் அவர்கள் அதிரடியாக அசத்தி இருக்கிறார்.



இந்த பதிவினை வாசித்த உள்ளூர்வாசிகளும், சமூக ஆர்வலர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, தாஹீர் ஹுசைன் அவர்களை நேரிலும், அலைப் பேசியில் தொடர்பு கொண்டு  தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



(மேலே உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கும்) 'பஞ்சுமா ராத்தா' என்கிற செய்யது அலி பாத்திமா அவர்கள் கீழக்கரை நடுத் தெரு (பெத்தம்மா கபுரடி) அருகில் குடிசைத் தொழிலாக, தன் கணவரின் ஒத்துழைப்போடு  வீட்டிலேயே ஒட்டுமா, கலகலா, லொதல், சீப் பணியம் என ருசி மிகும் உணவு பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் செயலாளரும், 18 ஆவது வார்டின் கவுன்சிலருமான M.U.V.முஹைதீன் இபுறாகீம் அவர்களின் மனைவியார் எனபது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து துபாய் ETA STAR STEEL நிறுவனத்தில் பணியாற்றும் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த நசீர் சுல்தான் அவர்கள் தன் முகப்புத்தகத்தில் எழுதி, பகிர்ந்து இருக்கும் மணம் கமழும் ஒட்டுமா பற்றிய கவிதை வரிகள் இதோ :

ஒட்டுமா
பசி ஓட்டும் மா...

கடற்கரையோர மண் - புது
கட்டிட முன் குவித்திருக்கும்
சரளை மண்
பார்க்கும் போது
சட்டென்று
மனதிற்குள் ஒட்டும் ஒட்டுமா

கிள்ளி எடுக்கும் பசிக்கு
கொஞ்சம் அள்ளி போட்டால்
அப்படியே அடங்கும் பசி...
அரை மணி ஆகியும் - வாயில்
அடங்காது அதன் ருசி..!

முட்டையும்
உருக்கிய நெய்யும்
கட்டி தேங்காய்ப் பாலும்
சீனியும் சேர்த்து பெரும்
வட்டியில் இட்டு வறுக்கும் போது
வாசனை வா வா எங்கும்...
வாசலில் போறவரை
வீட்டுக்குள்ளே அழைக்கும்....

எங்க ஊருக்கென்றே ஒரு குணம்
வேறெங்கும் கிடைக்காது இது தினம்
பக்குவமாய் செய்வோர் செய்தால்
கிடைக்கும் தனி மணம்..!

குடும்பத்தில் ஒருவர் வெளி நாட்டில்
குடி பெயர்ந்து இருப்பதால்
எடுக்கும் பார்சலில் எல்லாம்
ஒட்டுமா கிடைக்கும்...
ஒருவர் போய் ஒருவர் வந்தும்
ஒட்டுமா கட்டாயம் இருக்கும்..!

கீழை இளையவன் மறு மொழி : அன்புக் காக்கா.. கடல் கடந்து தொலை தூரத்தில் இருக்கும் நம் கீழக்கரை  அன்பர்களின்  ஸ்பெஷல் இறக்குமதியான ஓட்டுமா... அங்கு ஒரே நாளில் தீர்ந்து விட்டாலும் கூட,  தங்களின் கவிதை வரிகளை வாசிக்கும் தருணங்கள்... கற்பனை நினைப்பில் அவர்கள் வாயில் இடும் ஓட்டுமா.. நிச்சயம் நெஞ்சில் நீங்காது ஒட்டிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.




கீழக்கரை பெத்தரி தெருவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆனா மூனா சுல்தான் அவர்கள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 

கீழக்கரையில் ஒரு வரலாற்று ஆய்வாளர் - ஆனா. மூனா சுல்தான் அவர்களின் ஆச்சரியமூட்டும் ஆய்வுகள் ! (முந்தைய செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்)

கீழக்கரையின் சுவராஸ்யங்களை சுவை குன்றாமல் அள்ளித் தந்திருக்கும் மூத்த மத்திரிகையாளர் சகோதரர். ஜனாப். தாஹீர் ஹுசைன் அவர்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மூத்த பத்திரிக்கையாளருக்கு வாழ்த்து சொல்ல விரும்பும் அன்பாளர்கள் அழைக்க வேண்டிய அலைப் பேசி எண் :

94880 06095 / 99524 05581 / 04567 - 241555