தேடல் தொடங்கியதே..

Thursday 8 March 2012

கீழக்கரையில் இன்று +2 பொதுத் தேர்வுகள் துவக்கம்... எதிர் கொள்ள தயாராகும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் !

தமிழகமெங்கும் இன்று (08.03.2012) +2 தேர்வுகள் துவங்கியது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும், எப்படி தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளும் அடுத்த மாதம் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கீழக்கரை மற்றும் அதன் சுற்று வாட்டார மாணவ மாணவியர்களும் இந்த தேர்வுகளை சிறப்பாக எழுத தயாராகி விட்டார்கள். பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும் அவர்களோடு கை கோர்த்து, உயரிய கனவுகளோடு களமிறங்கி விட்டார்கள்.



இது குறித்து ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளியில் பல்லாண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் லெப்பைத் தம்பி மாஸ்டர் அவர்களிடம் கேட்ட போது "தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல.. எதிர் வரும் இறுதித் தேர்வினை எப்படி சிறப்பாக எழுத போகிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். 


கீழக்கரையின் பள்ளிக்கூட சாலை , மேலத் தெரு

இந்த இறுதித் தேர்வுக்காக, பெற்றோர்களாகிய நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பிற்கு இடையூறாக தொடர்ந்து தொல்லைதரும் 'தொல்லைக்காட்சி பெட்டிகளை' இன்னும் இரண்டு மாதங்களுக்காவது ( மார்ச்,ஏப்ரல் மட்டுமாவது ) மூடி விட்டு,அவர்களுடைய எதிகால வாழ்க்கைக்கு உதவ வேண்டும்" என்று மிகுந்த எதிர் பார்ப்புடன் கூறினார்.



ஹமீதியா பெண்கள்  மேட்ரிகுலேசன் பள்ளி, கீழக்கரை 


+2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் முறையாக படித்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறலாம். தேர்வுக்கு தயாராவதற்கான சில வழிகள்:
  • பத்தாம் வகுப்பு மாணவர்களும் இன்னும் நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  • முந்தைய ஆண்டு வினாத்தாள்களை கொண்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தது மூன்று முறையாவது சுயமாக தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முறையான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் நீண்டநேரம் கண்விழித்து படிப்பது உடலுக்கு நல்லதல்ல. அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் ஆழ்மனதில் பதியும்.
  • அனைத்துக் குழந்தைகளின் ஞாபகத்திறனும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு ஒருமுறை படித்தாலே மனதில் பதிந்து விடும். சிலருக்கு பலமுறை படித்தாலும் ஞாபகத்தில் நிற்பதில்லை. இதற்கு கவனச் சிதறலும் ஒரு காரணம். எனவே, முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
  • தேர்வுக்கு தயாராகும் போது, டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மேலும், படிக்கும்போது முக்கியமானவற்றை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். படித்த பிறகு, அந்த குறிப்புகளை பார்த்து மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளலாம். பிறகு அதனை பார்க்காமல் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை முறையாக கடைபிடித்தால், ஞாபகசக்தி அதிகரிக்கும்.
  • நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

கீழக்கரையின் பள்ளிக்கூட சாலை , மேலத் தெரு


நம் கீழக்கரையில் கடந்த காலங்களில், அரசு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் வெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று நாம் கேட்டபொழுது, "படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம்" என்று பதிலளித்தார்கள் . மேலும் "நாங்கள் 9ஆம் வகுப்பு ஆரம்பிக்கும் போதே எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம்" என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து புரிந்து கொண்டவர்களாக...

நம் கீழக்கரையில் இன்று முதல் தேர்வுகளை எழுத, மிகுத்த எதிபார்ப்புடன் களமிறங்கி இருக்கும் +2 மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக வெற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கனவுகள் விதையுங்கள்.. அறிவின் தோட்டத்தில்... (இறைவன் நாடினால்)
வெற்றியின் அறுவடை தூரமில்லை !

Tuesday 6 March 2012

கீழக்கரையில் 'நோ பார்கிங்' அறிவிப்புகளை மதிக்காத பொதுமக்கள் ! திருந்தப் போவது எப்போது ?

நமது கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில், கு. த கடைப் பகுதியில்  இருந்து ஜும்மா பள்ளி பகுதிவரையிலும் (வலது புறம்), போஸ்ட் ஆபீஸ் தெருவில் லெப்பை மாமா டீக் கடையில் இருந்து முஸ்லீம் பஜார் வரையிலும் (இடது புறம்) போக்குவரத்துக் காவல் துறையினரால் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக (NO PARKING) அறிவிக்கப்பட்டு, இன்று வரை இந்தத் தடை அமுலில் இருக்கிறது.


கீழக்கரை ஜூம்மா பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள 12 அறிவிப்பு பலகைகள்

ஆனால் இந்த அறிவிப்புகளை எல்லாம் காதில் வாங்காமல், காவல் துறையினரால் வைக்கப் பட்டிருக்கும் 'நோ பார்கிங் அறிவிப்பு 'பலகைக்கு மிக அருகிலேயே தங்கள் வாகனங்களை பொது மக்கள் நிறுத்தி செல்வது கேலிக் கூத்தாக இருக்கிறது.


இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில் வசிக்கும் 'வீனஸ்' பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் கூறும் போது, "பொது மக்கள் யாரும் இந்த அறிவிப்புகளை  மதிப்பது இல்லை.  15 மீட்டர் முகப்பு அளவுள்ள ஜூம்மா பள்ளி முன் பகுதில் மட்டும் '12 நோ பார்க்கிங் போர்டுகள்' காவல் துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இது போன்று வேறு எங்கும் இவ்வளவு அறிவிப்பு பலகைகளை காண முடியாது. இப்படி அறிவிப்புகள் முறையாக வைத்தும், இன்னும் பொதுமக்கள் திருந்தவில்லை. போர்டு அருகிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். கேட்டால், தொழுகைக்கு நிறுத்தி விட்டு செல்கிறோம் என்று சாக்கு, போக்கு சொல்லி நழுவி விடுகின்றனர்." என்று தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.


அறிவிப்பை மதிக்காத அறிவிலிகள் !

இது குறித்து புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவுசுல் அமீன் அவர்கள் கூறும் போது , "இந்த நோ பார்கிங் பகுதிகளில், பெரிய கண ரக வாகனங்களினால் தான் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.


கனரக வாகனங்களால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து - கீழக்கரை முஸ்லீம் பஜார்



கேரளாவில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் சொகுசு பேருந்துகள் தவிர, சென்னைக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் மற்றும் மக்கள் நெரிசல் நேரங்களில் வலம் வரும் சரக்கு லாரிகள் போன்றவற்றால் பல நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ஆகவே காவல் துறையினர் இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெளிவாக விளக்கி கூறினார்.


கீழக்கரை முஸ்லீம் பஜாரில் போக்குவரத்து நெரிசல் !

என்ன கொடுமை சார் இது !?


இங்கு 'சிறு நீர் கழிக்காதீர்கள்' என்ற அறிவிப்பு பலகையின் மீதே சிறு நீர் கழிப்பதும், 'எச்சில் துப்பாதீர்கள்' என்று எழுதி இருந்தால், அதன் மீதே காரி உமிழ்வதும், இங்கு 'புகை பிடிக்காதீர்கள்' என்று போர்டு வைத்திருந்தால், அதன் மீதே புகையை ஊதுவதும், இங்கு 'குப்பைகள்   கொட்டாதீர்கள்' என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தால் அதன் மீதே குப்பையை கொட்டுவதும், நாங்கள் காலம் காலமாக செய்யும் மரபு; அதில் இந்த நோ பார்கிங் மட்டும் என்ன விதி விலக்கா ? என்று கேட்கும் அன்பானவர்களே..! சிந்தியுங்கள்... இந்த அறிவிப்பு பலகைகளுக்கு பின்னால் நம் ஒழுக்க மரபுகளின் சித்தாந்தங்கள் ஒழிந்திருக்கிறது..என்பதனை... இனியாவது ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவோம் !  

Monday 5 March 2012

கீழக்கரையில் இன்று நடந்த காவல் துறை, பொது மக்கள் கலந்துரையாடல் - ஓர் நல்ல துவக்கம் !

நமது கீழக்கரை நகரில் இன்று (05.03.2012) மாலை 5 மணியளவில், காவல் துறையினர், பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா மஹாலில் நடைபெற்றது.




இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய காவல் ஆய்வாளர் இளங்கோவன் அவர்கள் பேசும் போது, "கீழக்கரை நகரில் குற்ற செயல்களைத் தடுக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து நம் ஊருக்குள் வேலை பார்க்கும் கட்டிட தொழிலாளர்கள் பற்றிய முழு விபரங்களை, அவர்களை வேலையில் அமர்த்தி இருக்கும் கட்டிட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மிக விரைவில் காவல் நிலையத்தில் அளித்து எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் நாங்கள் இங்கு சிறப்பாக பணியாற்றி, விருதுகள் பல பெற்று, கீழக்கரை காவல் நிலையத்திற்கு பெருமை சேர்ப்போம்" என்று உறுதியளித்தார்.  




இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பழைய குத்பா பள்ளி  தெருவைச் சேர்ந்த லெப்பை தம்பி அவர்கள் கூறும் போது, "நம் நகர் நலனுக்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இஞ்சினியர் ஆசாத் அவர்களுக்கும், இஞ்சினியர் கபீர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரம், இது போன்ற பொது மக்களுக்கு அவசியமான, விழிப்புணர்வு  நிகழ்சிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்வது மிகுந்த வருத்தமளிக்கிறது. கீழக்கரை பொது மக்கள் அனைவரும் இது போன்ற கலந்துரையாடல் நிகழ்சிகளை தவற விடாமல் கலந்து கொண்டு காவல் துறையினருக்கு தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார். 




இந்த  காவல் துறையினர், பொது மக்கள்  கலந்துரையாடல் நிகழ்ச்சி 'ஒரு நல்ல துவக்கமாக'  இருந்து, இது போன்று ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்பட்டு, பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்டறிந்து, அதற்கொப்ப காவல் துறையினர் சிறப்பாக சேவைகள் செய்ய ஆவன செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

Sunday 4 March 2012

கீழக்கரை பொதுமக்களுக்கு காவல் துறையினரின் முக்கிய வேண்டுகோள் !

நம் கீழக்கரை நகரில் குற்ற செயல்களைத் தடுக்கும் முயற்சியாகவும், பொது மக்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துவதற்காகவும், கீழக்கரை காவல் நிலையம் சார்பாக, துண்டுப் பிரசுரம் (நோட்டீஸ்) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அவர்கள்    (படம் : கீழக்கரை டைம்ஸ்)


இந்த துண்டுப் பிரசுரத்தில், பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல அத்தியாவசிய நடை முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும்  இது குறித்த பொதுமக்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நாளை (05.03.2012) திங்கட்கிழமை அன்று கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா மஹாலில் நடை பெற உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.


கீழக்கரை காவல் நிலையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ்

ஆகவே கீழக்கரை பொது மக்கள் அனைவரும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு, காவல் துறையினர் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.