தேடல் தொடங்கியதே..

Sunday, 10 November 2013

மதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் !

புனித ஹஜ் பயணத்தை முடித்து  தாயகம் திரும்பும் முன்னதாக ஹஜ் பயணிகள் சிலர், மதினா நகரில் பிரசித்தி  பெற்ற ஒரு சில இடங்களை சுற்றி பார்த்து வருவது  வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து  சன் ஷைன் ஹஜ் சர்வீஸ் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு, ஊர் திரும்பும் முன்னதாக சிலர் மதினா நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாதி பேதா ஜபல் ஜின் என்கிற பெயரில் உள்ள ஒரு காந்த மலையை பார்க்க, மூன்று பெண்கள் உள்ளிட்ட 7 பேர்கள் நேற்று (09.11.2013) காலை சவூதி அரேபிய நேரம் 8 மணியளவில்  சென்ற போது விபத்து  நேர்ந்துள்ளது.  அந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவரும், பரமக்குடி அருகே கீளையூரை சேர்ந்த கபீர் அவர்களின் மகனார் சென்னை புதுக்காலூரி முன்னாள் மாணவர் காதர் கனி ( வயது 24)  ஆகியோர் வபாத்தாகி விட்டனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கீழக்கரை நடுத் தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இப்போது அவர் இறைவன் அருளால் நலமுடன் இருப்பதாக மதினாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பட விளக்கம் : எமனை சர்புதீன் அவர்கள் நேற்று முகப் புத்தகத்தில் பகிர்ந்திருந்த புகைப்பட செய்தி 

இந்த பகுதியை சுற்றிப் பார்க்க செல்வதற்கு முக்கிய காரணம், சாலையின் இருபக்கங்களிலும் எங்கு பார்த்தாலும் கருநிறமலை பிரம்மாண்டமாக காணக் கிடைக்கும். சாலையின் மீது உள்ள காந்த சக்தியால் கியர் இல்லாமல், ஆக்சிலேட்டர் போடாமல் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது ஆச்சரியப்படும் ஒரு விசயமாக கருதப்படுகிறது. 

இப்படி சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் இந்த பகுதியில் செல்கிறதாம். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் வடிவ தண்ணீர் கேனில் முழுதும் நீரை நிரப்பி சாலையின் மையத்தில் வைத்தால் உருளை வடிவ தண்ணீர் கேன் சாலையில் குடு குடுவென்று ஓடும் அதிசயமும் இங்கு நிகழ்வதாக கூறப்படுகிறது.

இது போல் செய்து பார்க்கும் போது தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது. ஆகவே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்கள்,  தாங்கள் பயணிக்கும் ஹஜ் சர்வீஸ்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே எந்த பகுதிக்கும் செல்ல முனைய  வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட விதத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. இறைவன்  அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன் 

தகவல் : ரியாத்தில் இருந்து 'கீழை இனியவர்' மன்சூர் 

No comments:

Post a Comment