தேடல் தொடங்கியதே..

Wednesday 29 February 2012

கீழக்கரையில் நாளை (01.03.2012) மாதாந்திர மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு


கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (01.03.2012) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, களரி  மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கீழக்கரையில் ஏற்கனவே 10 மணி நேர அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Monday 27 February 2012

கீழக்கரையில் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் கேஸ் சிலிண்டர்கள் - ஓர் எச்சரிக்கை தகவல் !

கீழக்கரை நகரை பொறுத்த மட்டில், மிகுந்த நெருக்கமான வீடுகளையும், மிக குறைந்த பரப்பளவைக் கொண்ட இருப்பிடங்களையும் ( 4 கோல் வீடுகள், 5 கோல் வீடுகள், 300 சதுரடிகள் ) அதிகளவில் கொண்டு காணப்படுகிறது. நம் கீழக்கரையில் சிறிய பரப்பளவில் வீடுகள் கட்ட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், வீடுகளின் இல்லத்தரசிகள் பெருமளவு நேரங்களை செலவழிக்கும் இடமாக இருக்க கூடிய அடுப்பங்கரைகள், சமையலறைகள் மிக, மிக குறுகிய இடத்தில் 'கோழிக் கூடு' போன்றே அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது.

நெருக்கமான வீடுகள் - கிழக்குத் தெரு
தற்போது விறகடுப்புகள் பெரும்பாலும் காலாவதியாகி விட்டதால், நமது ஊரில் 80 % க்கும் மேலாக கேஸ் அடுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் புதிதாக கட்டும் வீடுகளில் கூட 'புகைக் கூடு' என்று சொல்லக் கூடிய புகைப் போக்கிகள் அமைக்கப் படுவது இல்லை. இதனால் கேஸ் அடுப்புகளுக்கான சிலிண்டர்கள் காற்று கூட செல்ல வழியில்லாத, இந்த சிறிய அறையான, சமயலறையில் வைக்கப்படுகிறது.

கேஸ் சிலிண்டர் விநியோகிஸ்தர்களால் வழங்கப்படும் சிலிண்டர்கள் பல நேரம் பழுதடைந்தவைகளாக, கேஸ் கசிவு இருக்கக் கூடியதாக இருக்கிறது. இதை முறையாக சரி செய்யப்படவில்லை என்றால், பெரும் ஆபத்துக்களை இவை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, கீழக்கரை சின்னக்கடை தெருவில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் வபாத்தாகியது குறிப்பிடத்த்தக்கது.

நெருக்கமான வீடுகள் - நடுத் தெரு

இது குறித்து கீழக்கரை சேது கேஸ் ஏஜென்சி மேலாளர் மணி அவர்களிடம் கேட்ட போது, "இது போன்று கேஸ் சிலிண்டர் கசிவுகள் குறித்து, பொது மக்கள் புகார்கள் தெரிவித்ததின் பேரில் எங்களுக்கு சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திடம் துரித நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். இது போன்று இனி வரும் காலங்களில் புகார்கள் எழாதவாறு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ", என்று உறுதியளித்தார்.


கீழக்கரையிலுள்ள சேது கேஸ் ஏஜென்சி



இவை ஒரு பக்கம் இருந்தாலும், நம் கவனமின்மையும் மற்றும் அடிப்படை எச்சரிக்கைகளை உணராமல் இருப்பதும் போன்ற காரணங்களினால் பெரும்பான்மை நேரங்களில் தான் இது போன்ற விபத்துகள் நிகழ்ந்து விடுகிறது.  இது போன்ற நேரங்களில் இந்த தீ மிகவும் வேகமாக பரவி 2 நிமிடங்களில் உயிர் அபாயம் விளைவிக்க நேரிடுகிறது. ஒரு முழு வீட்டை 5 நிமிடங்களுக்குள் பஸ்பமாக்கி விடும் இயல்பு இந்த தீக்கு உள்ளது. ஆகவே நாமும் மிகுந்த எச்சரிக்கையோடு இந்த கேஸ் சிலிண்டர்களை கையாள்வது அவசியமான ஒன்றாகிறது.

நெருக்கமான வீடுகள் - சின்னக் கடைத் தெரு
நாம் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டியவைகள்:

1.   கேஸ் சிலிண்டரை வீட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்னால், அதை கொண்டு வரும் லோடு மேனை வைத்தே, முறையாக பரிசோதனை செய்து, பிறகு அதற்கான சிலிப்பில் கையொப்பமிடவும்.

2.  படுக்க போகும் முன்பு, மறக்காமல் கேஸ் சிலிண்டரை அணைத்துவிடுங்கள். புதிய மற்றும் பழுதில்லாத ட்யூப்களையே பயன்படுத்தவும்.

3.  புதிய வீடுகள் கட்டும் போது, போதிய இடவெளியோடு கட்டமைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு சமையலறையை கொஞ்சம் காற்றோட்டம் நிறைந்ததாக, விசாலமானதாக இருக்குமாறு கட்ட முயற்சி மேற்க் கொள்ளுங்கள்.

4.  சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கேஸை கடத்தும் டியூப், உறுதியான ரப்பர் டியூப்பாக இருந்தால் எலிக் கடி, லீக்கேஜ் பிரச்னைகள் இருக்காது. தரமான பலவகை டியூப்களும் தற்போது கிடைக்கின்றன. இவற்றை மாதம் ஒரு முறையாவது, ஏதேனும் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதா? என பரிசோதனை செய்ய வேண்டும்.

5.  வீட்டுக்கு வெளியே சிலிண்டரை வைத்து, அடுப்புக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் சிலர். 'கசிந்தாலும் வீட்டுக்குள் எந்தப் பிரச்னையும் இருக்காது' என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், சிலிண்டர் மாற்றும்போது ஒயர் இழுக்கப்படுவதால் வீட்டின் உள்ளே ஸ்டவ்வில் பொருத்தப்பட்டிருக்கும் ஒயரின் முனை லூஸாகி, வீட்டுக்குள்ளும் கேஸ் லீக்காகலாம். உஷார்!

6.  இல்லத்தில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் சிறந்த முறையில் அமைத்துகொள்ளுங்கள்.ஓவர்லோட் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது வீட்டின் மின் இணைப்புகளை பராமரிப்பது நல்ல வழக்கமாகும்.

7.   எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை அடுப்படியில் வைக்காதீர்கள்.

நெருக்கமான வீடுகள் - தெற்குத் தெரு

தீ விபத்து ஏற்பட்டால் செய்யவேண்டிய செயல்கள் :

1.  உங்கள் துணியில் தீப்பற்றிக்கொண்டால், உடனே நின்று, உடை களைந்து, தீ அணையும்வரை மண்ணில் உருளவும். ஓடினால் தீ இன்னும் பரவும் வாய்ப்பு உள்ளது.

2.  மூடிய கதவுகளை திறக்கும் முன்பு அவற்றின் வெளிபுறத்தில் தீ பற்றாததை உறுதிபடுத்திகொள்ளுங்கள். அவ்வாறு திறக்க நேரிட்டால், கதவின் தாழ்பாள், விரிசல்களில் தங்கள் பின்னங்கையை வைத்து பார்த்து சோதித்துகொள்ளுங்கள்.

3.  வெப்பத்தை அறிய உள்ளங்கையை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். உள்ளங்கையில் சூடு பட்டுவிட்டால் தவழ்ந்து செல்லவோ, ஏணியில் ஏறிச்செல்லவோ முடியாமல் போய்விடும்.

4.  அதிகமான புகைமூட்டமுள்ள பகுதியை தவழ்ந்த நிலையில் மட்டுமே கடக்கவும். ஏனெனில், புகையும், நச்சுவாயுவும் முதலில் விட்டத்திலிருந்து தான் தொடங்கும்.

5.  கதவை திறந்து தப்பிக்கும் பொழுது, தீ மேலும் பரவாமல் இருக்க கதவை மூடிவிட்டு செல்லவும்.

6.  வீட்டிற்கு வெளியே வந்து அடைந்தபின், மீண்டும் உள்ளே போகாமல், தீ அணைப்பு வீரர்களை உடனே அழைப்பது புத்திசாலித்தனமாகும்.

7.  தீ விபத்து நேர்ந்தால், அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையதிற்கு உடனடியாக தகவல் அளியுங்கள். அவர்கள் தொலைபேசி எண்களை எப்போதும் மனதில் பதிய வைத்திருப்பது அவசியமாகும்.

சாலையோரம் அடுக்கப்பட்டு இருக்கும் சிலிண்டர்கள்

எதிர் பாராமல் தீ விபத்து எந்த நேரத்தில் ஏற்பட்டாலும், நாம் உடனடியாக அழைக்க வேண்டிய, நிச்சயம் மனதில் கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :

  தீயணைப்புத் துறை உதவிக்கு - 101       அவசர போலீஸ் உதவிக்கு  - 100

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தரும் பாதுகாப்பு குறிப்புகள்

நம் கீழக்கரை பொதுமக்கள் இந்த கேஸ் சிலிண்டர் விசயத்தில் மிகுந்த கவனம் கொண்டு, இறைவன் நாடினால் விழிப்போடு இருந்து, 'ஆபத்துக்கள் வரும் முன் காக்க' முயற்சி மேற்க்கொள்ள வேண்டும்.

Sunday 26 February 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும் ?


 நம்முடைய விண்ணப்ப மனு சாதாரண வெள்ளை தாளில் கைகளால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாக இருந்தாலே போதுமானது. மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன ? , விண்ணப்பிக்கும் தேதி, இடம், விண்ணப்பிப்பவரின்  தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம் ஆகியவைகள் இடம் பெற வேண்டும்.

மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும். வெளிநாடு வாழ் கீழக்கரை சகோதரர்கள், தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்திரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்து கொள்ளலாம்.

நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்னென்ன கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமோ, அதனை சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை கேட்டுப்பெறலாம்.


எடுத்துக்காட்டாக, நம் கீழக்கரை நகராட்சிக்கு, பொது நலன் கருதி பொதுமக்களால் கேட்கப்பட்ட கேள்விகள் சில

1 ) கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை நம் கீழக்கரை நகராட்சியின் வரவு, செலவுகள் எவ்வளவு? முழு விபரம் தரவும்.

2 ) தற்போதைய நிதியாண்டில் (2011 -12 )  நகராட்சி தலைவர் பதவியேற்கும் போது நிதி நிலை எவ்வளவு?

3 ) கடந்த கீழக்கரை மூன்றாம் நிலை நகராட்சியின் நிர்வாகத்தில், சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு?

4 ) தற்போதைய சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்களின் சம்பளம் எவ்வளவு ?

அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ? என்று கூட நம்மால் கேட்க முடியும் !



 
சில மாதிரி கேள்விகள் தங்கள் பார்வைக்கு 

1. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

2. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

3. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

4. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

6. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

7. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

8. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

9. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட அரசு அலுவலக பொது தகவல் அதிகாரிகளிடம் கேட்டுப் பெறலாம். அவர்கள் தகுந்த கால அவகாசத்தில் பதில் தராத போது மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.


மாநில அரசு தகவல்கள் பெற :- (Tamil Nadu Information Commission)

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email : sic@tn.nic.in http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :- (Central Information Commission)

Shri Satyananda Mishra

Chief Information Commissioner
Room No.306, II Floor
August Kranti Bhavan
Bhikaji Cama Place
New Delhi - 110 066.
Phone:- 011 - 26717355
E-mail :- s.mishra@nic.in http://cic.gov.in/

இந்த தகவல் அறியும் சட்டம் மூலமாக, எப்படி விண்ணப்பம் எழுதுவது? என்பது முதல் என்னென்ன கேள்விகள் கேட்கலாம்? எந்த மாதிரி கேள்விகள் கேட்கக் கூடாது? எப்படி மேல் முறையீடு செய்வது? என்பது வரை அத்தனை வழிகாட்டுதல்களையும் கீழ்வரும் இனைய தளம் நமக்கு வழங்குகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய இனைய தளம் 
http://rightact2005.blogspot.in/

தேசிய தகவல் மையம் - National Informatics Centre (NIC) 
http://rti.gov.in/ 

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத் தளம்


"ஏன் என்ற கேள்வி, என்று கேட்காமல் வாழ்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.. 
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே"