தேடல் தொடங்கியதே..

Saturday 22 September 2012

கீழ‌க்க‌ரை கிழக்குத்தெரு அருகே அர‌சு நகர்புற ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் துவக்கம் - பொது மக்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதைப் போல, நகர்ப் புறத்திலுள்ள ஏழை மக்களும் பயனடையும் நோக்குடன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தின் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் துவக்கப்பட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், கீழக்கரை நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு, நகர்மன்றம் சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில், தற்காலிக கட்டிடத்தில் தற்போது ஆரம்ப சுகாதர நிலையத்தைத் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான துவக்க விழா கீழ‌க்க‌ரை கிழக்குத் தெரு சேகு அப்பா பள்ளி அருகாமையில் தமிழக அரசின் 'நகர்ப் புற ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம்' இன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவ‌ட்ட‌ ஆட்சியர் திரு. ந‌ந்த‌குமார் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த சுகாதார மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பணிகளை இனிதே துவங்கி இருப்பதால், பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இந்த நிக‌ழ்ச்சியில் சுகாதார‌த்துறை துணை இய‌க்குந‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன், கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன், ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா, துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன், அரசு மருத்துவர் ராசிக்தீன், பல்வேறு ஜ‌மாத் நிர்வாகிக‌ள், க‌வுன்சில‌ர்க‌ள் ம‌ற்றும் ஏராள‌மான‌ பொது மக்க‌ள் க‌ல‌ந்து கொண்டன‌ர்.


இது குறித்து துணை இய‌க்குந‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன் அவர்கள் கூறும் போது "இங்கு திற‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஆரம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் ஒரு பொது மருத்துவர் ம‌ற்றும் நான்கு செவிலியர்களுடன் 24 ம‌ணி நேர‌ம் செய‌ல்ப‌டும். எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் இங்கு வந்து, இலவச சிகிச்சைகளை உடனுக்குடன் பெற்று பயன் பெறலாம். மேலும் ஊரின் ம‌த்திய பகுதியில், இன்னும் பெரிய‌ க‌ட்டிட‌ம் கிடைத்தால், இன்னும் அதிக‌ வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கத்துடன் ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் விரிவுப‌டுத்த‌ப்ப‌டும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Friday 21 September 2012

கீழக்கரையில் அமைதியில் ஆரம்பித்து ரகளையில் முடிந்த நகராட்சி கூட்டம் !

கீழக்கரை நகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை அன்று  மாலை 4 மணியளவில் நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடை பெற்றது. துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், கமிஷனர் முகம்மது முகைதீன், மேற்பார்வையாளர் அறிவழகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 நலத் திட்ட பொருள்கள் மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் அமைதியான முறையில் துவங்கிய கூட்டத்தின் முடிவில் தகாத வார்த்தையால் சென்ற நகர் மன்ற கூட்டத்தில் 10 ஆவது வார்டு கவுன்சிலர் பேசியதாக கூறியும், அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவருடன் சில கவுன்சிலர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால், கூட்டம் சலசலப்புடன் நிறைவுற்றது.




இந்த கூட்டத்தில் 10வது வார்டு உறுப்பினர் அஜ்மல்கான் மூலம் கொண்டு வந்துள்ள நலத் திட்ட பொருளில் "கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நவீன குளிர்சாதன வசதியுடன் மீன், கோழி, ஆடு, காய்கறி விற்பனைக்காக 25 கடைகளை கட்டவும், உணவுபொருட்கள் கெடாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் வகையிலும், வசதியை ஏற்படுத்தும் பொருட்டும் மத்திய அமைச்சர் சரத்பவார் பரிந்துரை நிதியில், மீன்வளத்துறை மூலம் புதிய திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த விண்ணப்பத்தை நகர் மன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நகர் மன்றத்தை அரசியல் மேடையாக ஆக்கக் கூடாது என்றும் எந்த எழுத்து மூல ஆவணமும் இல்லாமல் இனி நலத் திட்ட பொருளாக அரசியல் கட்சிகளின் வேண்டுதல்களை ஏற்கக் கூடாது என்றும் கூறி கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா (20வது வார்டு), முகைதீன் இபுராகிம் (18வது வார்டு), ஜெயபிரகாஷ் (21வது வார்டு) சாகுல்ஹமீது (5வது வார்டு) உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




மேலும் ஒருமையிலும், தகாதமுறையிலும் சென்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் அஜ்மல்கான், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் க‌வுன்சிலர் அஜ்ம‌ல்கான் வ‌ருத்த‌ம் தெரிவிக்க‌ மறுத்ததால், பெரும் கூச்சல் குழப்பத்துடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. க‌வுன்சில‌ர் அஜ்மல்கானுட‌ன்  சில கவுன்சிலர்கள் நேருக்குநேர் கைகலப்பில் ஈடுபட முய‌ன்ற‌ன‌ர். நிலைமை எல்லை மீறி செல்வதை உணர்ந்த கமிஷனர் முகம்மது முகைதீன் ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ள் வாக்குவாத‌த்தில் ஈடுப‌ட்ட கவுன்சிலர்களை சமாதானம் செய்து கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Sunday 16 September 2012

முஹம்மது நபிகளை அவமதிக்கும் அமெரிக்கன் திரைப்படம் - கீழ‌க்க‌ரையில் கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - உருவ பொம்மை எரிப்பு !

இறைவனின் இறுதித் தூதராகவும், முஸ்லீம்களால் உயிரினும் மேலாக மதிக்கப்படும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும்  ‘innocence of muslims’ திரைப்படத்திற்கு எதிராக, உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கண்ணுற்ற லிபியா, எகிப்து உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த முஸ்லீம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை கண்டித்து உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு அமைப்பினரால் அமெரிக்க தூதரகமும் முற்றுகையிடப்பட்டு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளது. 



இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் கீழ‌க்க‌ரை வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் ஏராள‌மான இஸ்லாமிய‌ பெரும‌க்க‌ள் திர‌ண்டு க‌ண்ட‌ன‌ முழ‌க்க‌ங்க‌ளை எழுப்பியவாறு ஆர்பாட்ட‌த்தில் ஈடுபட்டனர். நபிகள் நாயகத்தைக் அவ மரியாதையாக சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து பலர் மிகுந்த ஆக்ரோசத்துடன் தங்கள் கண்டன வாசகங்களை பதிவு செய்தனர். எவ்வித முன்னறிவிப்பின்றி ஆர்பாட்டம் ஆரம்பித்தாலும், ஏராள‌மான‌ இளைஞ‌ர்க‌ள் ஆர்பாட்ட‌ம் ந‌டைபெறும் இட‌த்திற்கு சிறிது நேரத்திலேயே குவிந்தனர்.



‘எமது உயிரிலும் மேலான தூதரை கேவலப்படுத்தாதே, அமெரிக்காவே முஹம்மது நபியை இழிவு படுத்தும் வீடியோவை உடனடியாக தடை செய், இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, அமரிக்காவே உனது காட்டு மிராண்டித்தன்த்தை இஸ்லாத்தில் காட்டாதே' போன்ற வாசகங்களை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தொடர்ந்து முழங்கினர். முடிவில் இந்த திரை படத்தின் தயாரிப்பாளன் யூதன் சாம் பாலிசி போல் உருவாக்கப்பட்டிருந்த உருவ பொம்மைக்கு துடப்பக்கட்டை, செருப்பு மாலை போடப்பட்டு, நடு ரோட்டில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 14 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

(சென்னையில் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டத்தில் களமிறங்கிய இஸ்லாமிய அமைப்பினர்கள் )

முஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சான முஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் செய்து வருகிறார்கள். இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள் தண்டிப்பதாக தெரியவில்லை. ஆனால் இனி அவர்கள் அப்படி தண்டிக்காமல் இருந்து விட முடியாது என்பதை, உலகமெங்கும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் போராட்டங்கள் தெளிவு படுத்தி கொண்டிருக்கிறது.



தற்போதைய சூழலில் எகிப்து, லிபியா, இந்தியா நாடுகளில் மட்டுமல்லாது ஜோர்டான், இஸ்ரேல், எமன், லெபனான், துனீஷியா, சூடான், நைஜீரியா, பாலஸ்தீனம், வெஸ்ட் பேங்க், மொராக்கோ, எத்தியோப்பியா, கென்யா, ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, ஓமன், பஹ்ரைன், கத்தார், குவைத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு, ஆஸ்திரேலியா, லண்டன், இந்தோனேசியா என்று உலகின் மூளை முடுக்கெல்லாம், அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு ஓங்கி ஒழித்துக் கொண்டிருக்கிறது.

இத்தகைய கொடுஞ்செயலை கடுமையாக கண்டிப்பதோடு மட்டும் நில்லாமல், 'இத்திரைப்படத்தில் நடித்த 14 பேரையும் உலக நீதி மன்றத்தின் முன்னால் விலங்கிட்டு நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் என்பதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும், இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்' என்பதும் அனைத்து இஸ்லாமியர்களின் எதிர் பார்ப்பாய் இருக்கிறது.