தேடல் தொடங்கியதே..

Friday 13 April 2012

கீழக்கரையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் - இளநீர், கரும்பு ஜூஸ் விற்பனை அமோகம் ! 'சித்திரை ஸ்பெஷல்'

கீழக்கரையில் கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கி விட்டது. இதனால் இளநீர், கரும்பு ஜூஸ், நன்னாரி சர்பத் மற்றும் நுங்கு, பழங்கள் விற்பனை முழு வீச்சில் நடைபெறுகிறது. உள்ளூர்வாசிகள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கோடை வெப்பத்தை தணிக்க இளநீர் அருந்தி மகிழ்கின்றனர்.  

'பாதுஷா சர்பத் ஸ்டால்' - இடம் : சின்னக்கடைத் தெரு 
இதமான இளநீர் கடை (இடம் : முஸ்லீம் பஜார்)


கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் உக்கிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் நம் நகரில் ஆங்காங்கே காணப்படும் ஜூஸ் கடைகளையே நாடுகின்றனர். 

கரும்பு ஜூஸ் கடை (இடம் : வடக்குத் தெரு பள்ளி அருகில்)
சில்லுன்னு ஒரு ஜூஸ் கடை (இடம் : முக்கு ரோடு அருகில்)


சாலையோர இளநீர், மோர் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. பொதுமக்கள் கோடை வெயிலை தணிக்க எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, வெள்ளரி, தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் பழங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.

குளிர்ச்சியான தர்ப்பூசணி கடை (இடம் : முக்கு ரோடு)
'நாதன் மோர் கடை' (இடம் : ஜும்மா பள்ளி காம்ப்ளக்ஸ்)

கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில் பழரச கடைகள், கம்பங்கூழ் கடைகளும் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும், நுங்கு, பதநீர் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இளநீர் விற்பனை களைகட்டி உள்ளதால், ஒன்றுக்கு ரூ.15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. செவ்இளநீர், பச்சை இளநீர், பொள்ளாச்சி, தேனி போன்ற பகுதிகளில் இருந்து  கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்கிறார்கள்.

SAY SO 'டெய்லி பிரஸ்' பழமுதிர் சோலை (இடம் : V.S. சாலை)

இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில் 'சே-சோ டெய்லி பிரஸ்' 'என்ற பெயரில் ஜூஸ் மற்றும் பால் கடையை நிர்வகித்து வரும் ஜபருல்லா அவர்கள் கூறும் போது " நம்ம ஊர் மக்கள் பெரும்பாலும், பழரசம், பால் சர்பத், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, வெள்ளரி, தர்பூசணி போன்ற ஜூஸ் வகைகளை தான் அருந்தி செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர், வெப்பத்தை தணிக்க பெரும்பாலும் லஸ்ஸி மற்றும்   இளநீர் அருந்துவதை அதிகம் விரும்புகின்றனர். இறைவன் அருளால் வியாபாரம் நன்றாக இருக்கிறது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Thursday 12 April 2012

கீழக்கரையில் கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியின் 128 வது ஆண்டு விழா !

கீழக்கரை கிழக்குத் தெருவில் உள்ள பழம்பெரும்  பள்ளியான கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியின் 128 வது ஆண்டு விழா இன்று காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கிழக்குத் தெரு ஜமாஅத் உபத் தலைவர். முகைதீன் அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
 
 


 
 
கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக் காக்கா  மற்றும்  நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொருளாளர் மத்தின் காக்கா, செயலாளர் சேகு அபூபக்கர் சாகிபு காக்கா மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
 
 



 
 
 விழாவின் முடிவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Wednesday 11 April 2012

கீழக்கரையில் சுனாமி எச்சரிக்கை - மக்கள் பீதி அடைய வேண்டாமென அறிவிப்பு !

இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவை மையம் கொண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  8.9 அளவாக பதிவானது. இதையடுத்து த‌மிழ‌க்த்தின் க‌ட‌லோர‌ மாவட்ட‌ங்க‌ளில் க‌ட‌ற்கையோர‌மாக‌ குடியிருப்ப‌வ‌ர்க‌ள் பாதுகாப்பான‌ இட‌ங்க‌ளுக்கு செல்லுமாறு தொடர்ந்து காவல் துறையினரால் அறிவுறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே நிலநடுக்கம் உணரப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்த வண்ணம் இருக்கிறது.


கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ள காட்சி. (நேரம் : மாலை 5 மணி)

குறைவான அலைகளுடன் கடற்கரை

இந்நிலையில் கீழக்கரை பகுதியிலும் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை பள்ளிகளுடைய ஜமாத்தினரும், பல்வேறு பொது நல அமைப்பினரும் இரவு 7 மணி வரை ஆட்டோவில் அறிவிப்புகள் செய்த வண்ணம் இருந்தனர். கடற்கரை பாலத்திற்கும், கடலிக்கு மிக அருகாமையிலும் யாரும் செல்ல வேண்டாமென காவல் துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். 


பீதியான மக்கள் கூட்டத்தில், புதிய கடல் பாலம் !


தொடர்ந்து கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம் !

இருப்பினும், புதிய கடல் பாலம் பகுதியில் மாலை 5 மணி முதல் பொது மக்கள் திரளாக வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பாதுகாப்பு கருதி கடற்கரைக்கு செல்ல அனுமதி தர மறுத்தனர். மாலை 6 மணி வரை கடல் சீற்றம் ஏதுமின்றி, அலைக‌ள் குறைவாக‌வே காண‌ப்ப‌ட்ட‌து. ஆனால் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் மட்டம் சற்று உயர்ந்து காணப்பட்டது. 


மீன்பிடி படகுகளை அவசரமாக கரையேற்றும் மீனவர்கள் !

கயிறு கட்டப்பட்டிருக்கும் காட்சி (நேரம் இரவு : 8 மணி)

இந்நிலையில் தமிழகத்தில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக தேசிய பேரிடர் பாதுகாப்பு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து கீழக்கரையிலும் சுனாமி குறித்து யாரும் பீதி அடைய வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் !

 மூடப்பட்டிருக்கும் புதிய பாலத்தின் நுழைவு வாயில் ! (நேரம் : இரவு 8 மணி)


கீழக்கரை புதிய மற்றும் பழைய கடல் பாலத்திற்கு, பொதுமக்கள் செல்லாத வண்ணம், தடுப்புக் கயிறு கட்டப்பட்டு, இன்று இரவு 7 மணி முதல் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இறைவன் அருளால் நம் கீழக்கரை நகர் முழுவதும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

சகலவிதமான இயற்கை சீற்றங்களிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக.. ஆமீன்

Monday 9 April 2012

கீழக்கரையில் 'பயணிகள் நிழற்குடை' நிறுவப்பட பொதுமக்கள் வேண்டுகோள் !

கீழக்கரையில் இருந்து தினமும் இராமநாதபுரம், ஏர்வாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் பேருந்தில் பயணிக்கின்றனர். இவர்கள் தவிர பள்ளி செல்லும்  மாணவ, மாணவியர், சிறுவர்கள், மருத்துவ மனைக்கு செல்ல குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்மணிகள், முதியவர்கள் என ஏராளமானோர், சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து வாடி வதங்குகின்றனர்.

அவதிக்குள்ளாகும் பயணிகள் (இடம் : பழைய பஸ் ஸ்டான்ட்)


கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், பஞ்சாயத்து அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் பல இயங்குகின்றன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு பணி காரணமாக கீழக்கரை வந்து செல்கின்றனர். கீழக்கரை நகருக்குள் (பழைய பஸ் ஸ்டான்ட், கடற்கரை வரை) மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் வருகிறது.  



இவர்களுக்கு நிழலில் ஒதுங்கி அமர்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், சாலைகளின் ஓரத்தில், நிழலை தேடி  ஒதுங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தங்களின் நிலையை உணர்ந்து, நகராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தானர்.

அவதிக்குள்ளாகும் பயணிகள் (இடம் : பழைய போலீஸ் ஸ்டேஷன்)



இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம் கேட்ட போது " பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  பயணிகள் நிழற்க் குடை விரைவில் அமைக்கப்படும். இதற்கான தீர்மானம் நகர் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி ஆணையரின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

அவதிக்குள்ளாகும் பயணிகள் (இடம் :V.S.சாலை )

பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, நகராட்சி  நிர்வாகம் சார்பிலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நன்கொடை மூலமாகவே பயணிகள் நிழற்கூடத்தை அமைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோள் ...