தேடல் தொடங்கியதே..

Saturday 28 September 2013

கீழக்கரையின் 'மலரும் நினைவுகள்' - தங்கராசு நாகேந்திரன் அவர்களின் பழமையை நினைவூட்டும் பதிவு !

கீழக்கரையில் கடந்த 1970  ஆம் ஆண்டு கால கட்டங்களில் தனித்துவமாக (MONOPOLY) இருந்த வியாபார தளங்களை, கீழக்கரையை சேர்ந்த சகோதரர் தங்கராசு நாகேந்திரன் அவர்கள் பழமையை நினைவூட்டும் விதமாக பட்டியலிட்டு பதிவு செய்து இருக்கிறார். இவர் கீழக்கரையின் பழைமை நினைவுகளை தொடர்ந்து பதிந்து வருகிறார்.



கருப்பையா முடி திருத்தகம் :

கருப்பையா கடை நம்ம இம்பாலா ஹோட்டலுக்கு எதிரே இருந்த்தது. கீழக்கரையிலேயே அந்தக் காலத்தில் நவீனமான சலூன் அது தான். எப்பவும் கூட்டமாகத் தான் இருக்கும். இப்ப அந்த இடத்தில் ஒரு ஜவுளிக்கடை இருக்கு. 

தைக்கா ஹோட்டல் :

இதற்கு இரண்டு வாசல் ஒரு வாசல் ஸ்டேட் பேங்க் பின்புறமும் மறுவாசல் தங்கம் லேத் பின்புறமும் இருக்கும் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடனும். அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் என நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. ருசியும் நன்றாக இருக்கும். இந்த இடத்தில் ஹோட்டல் காலாவதியானதும் ஒரு மொசைக் கம்பெனி இருந்தது. இப்ப அதுவும் இல்லை.

சொர்ணம் புக் செண்டர் :

சீதக்காதி சாலையில் மூத்திர சந்து போற பாதையில் மெயின் ரோட்டில் இந்த கடை இருந்தது. சதக்கத்துன் ஜாரியாவில வேலை பார்த்த திருமனி டீச்சரின் தம்பி கடை இது. கரீம் ஸ்டோர் வருவதற்கு முன்னால் ஸ்டேசனரி கடையில் நல்ல கடை இதுதான் பேனாவில் கேம்லின் பேனாவில் மட்டும் பலவகை இருக்கும் எனக்குத் தெரிந்து கேம்லின் 47 பேனா இங்கு மட்டும்தான் கிடைக்கும்.

ஹேமந்த் டெய்லர் :

இதுவும் வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமலஹாசன் வருவது போல் ஹேமந்த் டெய்லர் பெரிய பெல்பாட்டம் பேண்ட் போட்டு இருப்பார். அந்த பேண்டில் பாட்டத்தில் ஜிப் எல்லாம் வைத்து ஒரு செட்டப்பாக இருக்கும். அந்த கால இளைஞர்களின் பேஷன் கடை அதுதான்.

அய்யர் ஹோட்டல் :

இதுவும் மெயின் ரோட்டில்தான் இருந்தது. சைவசாப்பாட்டில் தனித்துவமாக இருக்கும் சாம்பார் நன்றாக இருக்கும்.

கானா சீனா இரும்புக்கடை :

எனக்கு தெரிந்து கீழக்கரையின் முதல் ஹார்டுவேர்ஸ் கடை இதுதான் என நினைக்கிறேன் லெப்பை ஹோட்டல் எதிரில் இருந்தது. ஒரு புள்ளி மான் எப்பவும் கடையில் நிற்கும்.

சன் ஐஸ் கம்பெனி : 

வைக்கப் பேட்டை ரைஸ் மில்லுக்கு எதிரில் இருந்தது. சப்பை ஐஸ் குண்டு ஐஸ் சேமியா ஐஸ் என பல வெரைட்டி இருக்கும் கம்பெனியிலேயே போய் ஐஸ் வாங்கினால் ஐந்து பைசாவுக்கு இரண்டு கொடுப்பார்கள் எனது சின்ன வயதில் நான் அடிக்கடி செல்லும் இடம் இதுதான்.

விஜேந்த் போட்டோ ஸ்டுடியோ :

இப்ப கீழக்கரையில் ஸ்டுடியோ வைத்திருக்கும் எல்லோரும் தொழில் கற்று கொண்ட இடம் இதுவாக தான் இருக்கும் ராஜகோபால் டாக்டர் வீட்டின் எதிரில் இருந்தது. ஓனர் சற்று பெண்மைக் குரலில் பேசுவார். சின்ன வயதிலேயே மாரடைப்பால் காலமானார்.

குமரன் பிரேம் கடை :

லெப்பை ஹோட்டலுக்கு அருகில் அண்ணா படக்கடை என ஒருவர் வைத்திருந்தார். இருப்பினும் குமரன் பிரேம் கடை விஜேந்த் ஸ்டுடியோவிற்கு அருகிலேயே இருந்ததால் படம் எடுக்கவும் பிரேம் செய்யவும் வசதியாக இருந்தது. 

கனி பால் டிப்போ :

கீழக்கரையில் பிரமாண்டமான பால் பண்ணை இதுதான் எவ்வளவு எருமை மாடுகள் அதிலும் காளை எருமை மாடுகள் பார்க்கவே பயமாக இருக்கும் இப்ப இந்த பால் பண்ணை இருந்த இடத்தில் வணிக வளாகம் உள்ளது.

அப்சரா தியேட்டர் :

வாழ்க்கையில் படிக்கிற காலத்துல பாதி நாள் இங்கதான் போனது. நீயா படத்துக்கு கூட்டம் மாட்டிறைச்சி கடை வரை இருந்த்தது. ஹமிதீயா ஸ்கூலில் படிக்கும் போது பிஸிக்ஸ் மாஸ்டர் முஸ்தபா கமால் மதியம் பிராக்டில் கிளாஸ் கிடையாது தியரி கிளாஸ் தான்னு சொன்னால் சொல்லிவச்ச மாதிரி எல்லா பயலுகளும் அப்சராவில் ஐக்கியமாயிடுவோம்.

மாங்காய் கடைகள் :

சதக்கத்துன் ஜாரியாவில் படிக்கும்போது அதன் அருகில் கே கே ஆர் பேக்கரி அருகில் பாரின் ஹுட்ஸ் கடைகளில் மாங்காயை குழம்போடு ஒரு கிண்னத்தில் ஊற்றி கொடுப்பார்கள் நல்ல சுவையாக இருக்கும் இப்ப அந்த மாதிரி கிடைப்பது இல்லை.

இந்தமாதிரி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். செக்கடியில் கீச்சு பூச்சு செட்டியார் கடை, கடலைக்கடையும் சர்பத்து கடையும் வச்சிருந்த காக்கா கடை பண்டகசாலை தெருவில் சீப்பு பணியாரமும் ரோஸ் மில்க்கும் வியாபாரம் செய்யும் சேனா கடை, சந்திரன் பால் டிப்போ அதற்கு பக்கத்திலேயே ஒரு விளம்பர போர்டுகள் எழுதும் ஒரு ஓவியர், சிக்கர் லைட்டு கல் பம்பரம் கோலிகுண்டு வியாபாரம் செய்யும் அலவாக்கரைவாடி ராமர் கடை, பாட்டு புத்தகம் விற்கும் தவ்பீக் கடை இப்படி மறக்க முடியாத சிறுவயது ஞாபகங்களை தூண்டும் நிறையக் கடைகள்... என் கீழக்கரையில் உண்டு.


ஆக்கம் : தங்கராசு நாகேந்திரன்

நண்பர்களே... இங்கு இன்னும் எத்தனையோ தனித்துவமிக்க வியாபார தளங்கள் விடுபட்டு இருக்கலாம். நெஞ்சில் நீங்காத அந்த ஞாபகங்களை, கீழக்கரையின் இளைய தலை முறையினரும் அறியும் வண்ணம் உங்கள் கருத்துகளை இங்கு பதிவிடுங்களேன்..

கீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் !

கீழக்கரையில் பிறந்த அனைவருக்கும், சிறுவயது காலங்களில் இந்த பனை ஓலையாலான கலர் கலரான இடியப்ப பொட்டிகளை எடுத்து கொண்டு, இடியப்பம் அவிக்கும் வீடுகளில் கால் கடுக்க காத்திருந்து வாங்கி சென்ற அனுபவம் கட்டாயம் இருக்கும். சிறு பிள்ளையாய் இருக்கும் போது நண்பர்களுடன் விளையாடப் போற அவசரத்துலே வீட்டிலிருந்து கிளம்புகையில், 'உம்மா' இடியப்ப பொட்டிய கையில் தந்து, இடியப்பம் வாங்கி வர சொல்லுவார்கள். இடியப்பக்கார வீட்டுலே போயி உம்மா அவசரமா இடியப்பம் கேட்டாங்கனு மூச்சிரைக்க சொல்லுவோம். "பொட்டிய கீழே வச்சிட்டு செத்த இரு வாப்பா, இடியப்பம் அடுப்புலே இருக்கு.. புதுசா மாவு பீச்சி தாரேன்.." என்று சொல்லி ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்து கலவரப்படுத்துவார். 



கீழக்கரையில் பனை ஓலையால் செய்யப்பட்ட இடியப்ப பெட்டிகள், தலை சுமை பெட்டிகள், கலவாடைகள், கீழக்கரையில் பேச்சு வழக்கில் சொல்லப்படும் சொளவு என்கிற அரிசி புடைக்கும் முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, போன்ற கை வினைப் பொருள்களுக்கு கிராக்கி இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. கீழக்கரை வீடுகளில் எது இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் பனை ஓலையில் செய்யப்பட்ட இடியப்ப பொட்டியும், பனை ஓலை விசிறியும் நிச்சயம் இருக்கும்.  இருப்பினும் பனை ஓலையால் செய்யப்பட்டு வந்த ஓலை பாய், கிலுகிலுப்பை உள்ளிட்ட சிறுவர் விளையாட்டுப் பொருள்கள் போன்ற பல்வேறு கைவினை பொருள்கள் தற்போது வழக்கொழிந்து வருகிறது. 


அழகிய வண்ண சாயங்கள் தோய்க்கப்பட்ட பனை ஓலைகளால் பின்னப்பட்ட கண் கவரும் இடியப்ப பொட்டிகள் இன்றும் கீழக்கரை மக்களால் விரும்பி வாங்கப்பட்டும், உபயோகப்படுத்தப்பட்டும் வருகிறது. கீழக்கரையில் 10 ஆண்டுகளுக்கு முன் வரைக்கும் தெருவுக்கு இரண்டு குடும்பத்தினர் வீதம் இந்த பனை ஓலை கைவினைப் பொருள்களை செய்து வந்தனர். ஆனால் தற்போது பலர் இந்த தொழிலை கைவிட்டு விட்ட நிலையில் இந்த பொருள்களுக்கு கிராக்கி இருந்தாலும், உடனடியாக கிடைப்பதில்லை. பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல், அதில் வைக்கப்படும் உணவுப் பொருள்களும்  பலநாட்கள் கெடாமல் இருக்கும்.


அது மட்டுமல்லாமல் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும். இதனால் கீழக்கரை மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை இன்னும் மறக்காமல்  பயன்படுத்தி வருகின்றனர். கீழக்கரையில் முன்னொரு காலத்தில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.

கீழக்கரை பகுதிகளில் தொதல், அல்வா, மைசூர்பாகு உள்ளிட்ட திண்பண்டங்கள் கூட பனை ஓலைப் பெட்டிகளிலேயே வைத்து விற்கப்பட்டு வந்தது.  கடந்த 1980 கால கட்டங்களில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது. நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் விசிறி விற்கும் மூதாட்டி 

புதிய புதிய பெயர் தெரியாத பல நோய்களுக்கு அடித்தளமாக இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன்களுக்கு மாற்றாக இந்த பனை ஓலைப்பெட்டிகள் திகழ்கிறது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம். மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும்  ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் விருப்பமாக இருக்கிறது.

Friday 27 September 2013

கீழக்கரையில் 'மழைத் தொழுகை' - ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் அறிவிப்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்க இருக்கும் 'மழைத் தொழுகை' எதிர் வரும் ஞாயிற்று கிழமை (29.09.2013) காலை 8 மணியளவில் பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த அவசியமான மழைத் தொழுகையில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு நடுத் தெரு ஜும்மா பள்ளி, வடக்குத் தெரு ஜும்மா பள்ளி, தெற்குத் தெரு ஜும்மா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் மழைத் தொழுகை குறித்த அறிவிப்பு நோட்டீஸும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

Thursday 26 September 2013

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனுக்கு உதவ வேண்டுகோள் !

கீழக்கரை புது கிழக்கு தெருவைச் சேர்ந்த S.M.கபீர் (கீழக்கரை த. மு. மு. க ஆம்புலன்ஸ் முன்னாள் டிரைவர்) அவர்களின் சகோதரி மகன் ஷாரூக்கான் (வயது 16) என்கிற சிறுவன் கடந்த 08.09.2013 அன்று இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூளையில் ஏற்பட்டுள்ள இரத்தக் கசிவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் 09.09.2013 முதல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது வரை தலையில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. 


இன்னும் இரண்டு மாதங்கள் வரை தீவிர சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதே வேளையில் இலட்ச ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படுகிறது.  மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்தினரால், மேல் சிகிச்சைக்கு பொருளாதார வசதிகள் இன்றி பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆகவே அன்பர்களே.. நண்பர்களே.. உயிருக்கு போராடும் இந்த சிறுவனை காப்பாற்றும் முகமாகவும், சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்துள்ள இந்த ஏழை குடும்பத்தினரை தேற்றும் விதமாகவும் கீழ் காணும் தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தகுந்த பொருளாதார உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஷாரூக்கான் 
வார்டு எண் : 5201, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை
மருத்துவ அடையாள அட்டை எண் : 634005

பொருளாதார உதவிகளை அனுப்பித் தர :

மாஜிதா பீவி
வங்கி கணக்கு எண் : 890656614  
இந்தியன் வங்கி கிளை 
இராமேஸ்வரம் 

தொடர்புக்கு :

முஹம்மது ஹுசைன் - 9710740559

 S.M.கபீர் - 8870163902

Wednesday 25 September 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை கடற்கரைப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த தம்பி நைனா பிள்ளை தெரு மர்ஹூம். ஜனாப். 'வாட்டி' சையத் அபுதாகிர் அவர்கள் இளைய மகளும், மர்ஹூம். ஜனாப். அப்துல் ரசாக் அவர்கள் மனைவியும், ஜனாப். நெய்னா முஹம்மது அவர்கள் சகோதரியும், செய்யது ராபியா அவர்களின் தாயாருமாகிய ஜனாபா. ஐனுல் பரிதா அவர்கள் இன்று (25.09.2013) காலை வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9.30 மணியளவில் கடற்கரை பள்ளி மைய வாடியில் நடைபெற்றது. மர்ஹூமா. ஐனுல் பரிதா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பாக 'புனித ஹஜ்' யாத்திரைக்கு புறப்படும் ஹஜ் பயணிகள் !

உலகமெங்கும் இருந்து ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள், ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் யாத்ரீகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டி செய்து வருகிறது. மேலும் தமிழக ஹஜ் கமிட்டி மூலமாக ஒவ்வொரு ஆண்டும் மெக்காவிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3729 பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து வெளி விவகாரங்களையும் தமிழக ஹஜ் கமிட்டி செய்து முடித்துள்ளது. 


கீழக்கரையில் இருந்து, இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாகவும், பல்வேறு தனியார் ஹஜ் சர்வீஸ்கள்  மூலமாகவும் 50 க்கும் மேற்பட்டோர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக இன்று (25.09.2013) கீழக்கரையிலிருந்து பலர், இராமநாதபுரத்தில் இருந்து இரயில் மூலம் சென்னை புறப்படுகிறார்கள். அங்கிருந்து  29-09-2013 அன்று விமானம் மூலம் ஜித்தா செல்ல இருக்கிறார்கள். 

இவர்களுள் சின்னக்கடை தெருவில் இருந்து 2 பேர், அம்பலார் தெருவில் இருந்து 2 பேர், தெருவில் இருந்து 3 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இறை கடமையை இனிதே நிறைவேற்ற அடியெடுத்து வைக்கும் இவர்களை வழியனுப்ப, ஜமாத்தார்கள் தெருவாசிகள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அன்பை வெளிப்படுத்தும் முகமாக ஸலாத்துடன், மார்போடு ஆரத் தழுவி, தங்களுக்கும் ஹஜ்ஜில் துஆ செய்யுமாறு வேண்டி கொண்டனர். 



இது குறித்து கீழக்கரையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் S.N.தெருவைச் சேர்ந்த S.N.சுல்தான் அவர்கள் (தாஜ் மலர் நிலையம்) கூறும் போது "இறைவன் அருளால், இறைக் கடமையை நிறைவேற்ற புனித ஹஜ் பயணத்தை என் மனைவி மற்றும் சகோதரியுடன், இன்று இறைவனின் திருப் பெயரால் துவங்குகிறேன். எங்களுடைய இந்த ஹஜ் கடமை சிறப்பாக நிறைவேற அனைவரும் இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று கண்ணிய வார்த்தைகளுடன் ஆனந்தமாய் தெரிவித்தார்கள்.


புனித ஹஜ் பயணத்தின் முதல் குழு நேற்று (24.09.2013) காலை 9 மணிக்கு, சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 131 பெண்கள் உள்பட 275 பேர் சென்றனர். அடுத்த மாதம் (அக்டோபர்) 2–ந்தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற N.S.S தின விழா!

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், மாநில தொழில் நுட்ப இயக்குனரகம் சார்பில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மண்டல அளவிலான N.S.S தின நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை முஹம்மது சதக் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ஹமீது இபுராகிம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர். பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேவைகள் குறித்து உரை நிகழ்த்தினார். ஆளுமை வளர்ச்சி,தலைமை பண்புகள் குறித்து நெல்லை மனிதவள ஆராய்ச்சி மேம்பாட்டு மைய நிறுவன இயக்குனர் எஸ்.மணியன் அவர்கள் உரையாற்றினார்.  

வேலை வாய்ப்பு திறன் குறித்து மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிறுவன அலுவலர் தூத்துக்குடி ஜெயசெல்வம் அவர்கள் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், செய்யது ஹமீதா கலைக்கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி, முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி இயக்குநர் ஹூசைன் ஜலால் ஆகியோர்கள் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியின் போது மண்டல அளவில் 20 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் அதிகமான மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். தனித்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில் திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.

படங்கள் : பாலாஜி கணேஷ்

கீழக்கரையை 'மாசில்லா நகராக' மாற்றும் முயற்சியில் கீழக்கரை நகராட்சி !

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் சேர்கிறது. அந்த குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகமும், தனியார் தொண்டு நிறுவனமான வெல்பேர் டிரஸ்ட் அமைப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், கீழக்கரை பகுதி முக்கியஸ்தர்கள் முயற்சியில்  மாவட்ட நிர்வாகத்தினரின் மேற்பார்வையில், தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்டி உரமாக்கும் நவீன குப்பை கிடங்கு உருவாக்கப்பட்டது.


குறுகலான தெருக்களை கொண்ட கீழக்கரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாததாலும், நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதாலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை அந் தந்த பகுதியிலேயே கொட்டி வந்தனர். இதனால் நகரசபை நிர்வாகத்துக்கு குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் குப்பைகள் அதிகளவில் சேர்ந்து சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் நகரசபை தலைவர் கீழக்கரையை மாசில்லா நகராக மாற்றும் திட்டத்தில் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதன்படி கீழக்கரை நகராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் நகரசபை தலைவர் ராவியத்துல் கதரியா 20 'மினி' குப்பை தொட்டிகள் வாங்கி ஆணையாளர் அயூப்கானிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகி அமீர் ரிஸ்வான், துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday 24 September 2013

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் வறட்சியால் கருகிய 5000 மரக் கன்றுகள் !

கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் சாலையின் இரு புறங்களிலும் ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியிலும், ஒரு மரம் வீதம் 5000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பனியின் போது பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது.



அதற்கு பகரமாக, அதை விட இரண்டு மடங்கு மரங்களை நடுவதற்காக, தமிழக சாலை போக்குவரத்து துறையினரின் வழிகாட்டுதல் படி, தமிழக வனத் துறையினர்  நிழல் தரும் புங்கை, வேம்பு, கொன்றை, இலுப்பை போன்ற மரக்கன்றுகளை நட்டு, தினமும் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்

ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து  மரக்கன்றுகளை பாதுகாக்கும் பொருட்டு, தென்னங் கீற்றுகளால் வேயப்பட்ட தட்டிகளை கொண்டு பாதுகாப்பு தடுப்பும் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தாலும், சரி வர மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாகவும், நடப்பட்ட 5000 மரக் கன்றுகளும் கருகிப் போனது. இதனால் கீழக்கரை இராமநாதபுரம் சாலை, 'சோலைவனமாக போகிறது' என எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து நாம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை  சொடுக்கவும்.

Monday 23 September 2013

கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாத்தினர் பங்கேற்கும் 'மழைத் தொழுகை' அறிவிப்பு !

கீழக்கரை நகரில் மழை பெய்யாததன் காரணமாக, கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்லொன்னா துயரத்தில் தவிக்கின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இறையோனிடம் கையேந்தும் முகமாக, கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் ஒன்றிணைந்து, திறந்த வெளியில் 'மழை தொழுகை' நடத்த முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.



இந்நிலையில் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்க இருக்கும் மழை தொழுகை எதிர் வரும் ஞாயிற்று கிழமை (29.09.2013) காலை 7.45 மணியளவில் பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற உள்ளது.


இது குறித்து கீழக்கரை நகரின் மூத்த சமூக ஆர்வலர். அலி பாட்சா அவர்கள் அனுப்பித் தரும் தகவல் பின்வருமாறு :

அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ.

ஏக நாயனே, யாரப்பே... எனது நீண்ட நாள் ஆதங்கம் நிறைவேறும் முகமாக நம்பகமான இனிய செய்தி ஒன்று இன்று மதியம் எனது காதில் தேனாக பாய்ந்தது. அது தான் நம் கீழக்கரை நகரின் அனைத்து ஜமாத்தினரும், ஒற்றுமையுடன் பங்கேற்று தொழ இருக்கும் மழை தொழுகை  அறிவிப்பு. அல்ஹம்துலில்லாஹ்...

எங்கள் இறைவனே.. கிணற்று நீரின்றி நாங்கள் குறிப்பாக பெண் மக்கள் படும் பெரும் துயரினை நீக்க உன்னிடன் பொறுப்பு சாட்ட இப்போதே நீராடும் கண்களோடு இரு கரம் ஏந்தி விட்டோம். நீயே அனைத்து மக்களுக்கும் போதுமானவன், ஆமீன், ஆமீன், யாரப்பில் ஆலமீன்." என்று அக மகிழ்வுடன் தன் கருத்தை பதிவு செய்தார்.

இது குறித்து பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர். ஹாஜா முஹைதீன் அவர்கள் கூறும் போது "இறைவன் நாடினால் குறிப்பிட்ட தேதியில் நடை பெற இருக்கும் மழை தொழுகையில், கீழக்கரை இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, இறைவனிடம் இரு கரம் ஏந்தி மழைக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பெண்கள் தொழுவதற்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை - நடுத்தெரு ஜும்மா பள்ளியில் நடை பெற்றது !

Sunday 22 September 2013

கீழக்கரை நகரில் 'விடுமுறை தினங்களில் ' விளையாட்டு மைதான வளாகங்களுக்குள் விளையாட அனுமதிக்குமாறு வேண்டுகோள் !

'ஓடி விளையாடு பாப்பா ! கூடி விளையாடு பாப்பா !!' என்னே வரிகள், முண்டாசு கவிஞன் பாரதியின் அரைகூவல். ஆனால் இன்று மாணவ மணிகளின் பதிலுரை பாடலோ... பாரதியே! வழி நெடுகிலும் வாகனம், வழியோரத்தில், ஜல்லியும், மணலும், பள்ளிக்கூடமும் விடுமுறை. நான் எங்கு சென்று விளையாடுவேன்?” என்பதாக இருக்கிறது. மாணவர்களே, உங்களுக்கு பிடித்த “ஸ்கூல் பீர்யட்” எது? யோசிக்காமல் பதில் சொல்வர் “விளையாட்டு பீரியட்” என்று.. ஆம்... மாணவப் பருவத்தில் விளையாடாமல், எப்பொழுது விளையாட முடியும்.



நம் ஊரின் ஒவ்வொரு விளையாட்டு மைதானமும் பள்ளிகளைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் பள்ளி நேரங்களில் அதிக நேரங்கள் பாடத்தில் செலவிடும் மாணவர்கள், வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தான் அதை விளையாட்டுக்காக பயன்படுத்துகின்றனர். விடுமுறை நாட்களில் விஷேச அனுமதியின்றி, உரிய பயிற்சியாளர் இன்றி, அவர்கள் விளையாட அனுமதிக்கப் படுவதில்லை.

ஜமாத்களின் கட்டுப்பாட்டில் வருகிற பொது மைதானங்களும், அந்தந்த தெரு ஜமாத் ஆளுமையின் கீழ் வரும் பள்ளிகளை மையமாக வைத்தோ, அல்லது தனியார் விளையாட்டு பயிற்சிக்கழகத்தை மையமாக வைத்தோ செயல்படுகிறன. உதாரணமாக: வடக்குத் தெரு மணல் மேடு மற்றும் தெற்குத்தெரு மினி கிஷ்கிந்தா.

இது குறித்து, நமதூர்  பிரபல வாலிபால் வீரர் சாகுல் ஹமீத் கூறுகையில், நகரின் பெரிய மற்றும் பிரதான விளையாட்டு மைதானமானமான ஹமீதியா விளையாட்டு மைதானம், பொது மக்கள் உடற் பயிற்சிக்காகவும், நடை பயிற்சிக்காகவும், விளையாட்டு பயிற்சிக்காகவும், பொழுது போக்கு விளையாட்டிற்காகவும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு வந்தது,

நமதூரைச் சேர்ந்த பல நண்பர்கள், வட்டார / மாவட்ட / மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்புற்று திகழ்ந்தனர். நானெல்லாம் மைதானத்திற்கு வர அவர்கள் தான் “இன்ஸ்பிரேஷன்”. ஆனால் தற்சமயம் சில பல காரணங்களால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. என்று ஆதங்கப்பட்டார்.

விளையாட போதிய இடமின்மை, பதின்பருவ மாணவர்கள் தவறான நடவடிக்கைகளில் செல்ல, எத்தனிக்க காரணமாகி விடும். அதை தவிர்க்க போதிய பாதுகாப்புடன் விளையாட்டு மைதானத்திற்கு அனுமதியளித்து நமதூர் இளந்தூண்கள், தேசிய, உலக அளவில் பிராகாசிக்க நம் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆவண செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பதிலளிக்கையில், ”இவர் பாட்டுக்கு ஒரு பக்கம் விளையாட,  திறந்த “கேட்” ல் ஆடு / மாடு / கழுதை / நாய் என்று எல்லாம் வந்து “கக்கா” போயிடுது. விளையாட போயிட்டு சும்மாவா வர்ராங்க, சில நபர்கள் சுவற்றோரம் சிறுநீர் கழித்து விடுகின்றனர், விளையாட்டு மைதான மேடையையும் மேற் கூறையையும் சேதப்படுத்துகின்றனர், சிகரெட் பீடி துண்டுக்களை இறைகின்றனர். அடுத்த நாள் அங்கு விளையாட வரும் பள்ளி மழலைகள், இதே இடத்தில் விளையாடுவர், அமர்வர் என்று அவர்கள் துளியும் நினைப்பதில்லை” என்று யதார்த்தத்தை பதிவு செய்தார்.

இந்த உரையாடலை பிரசுரிப்பதின் நோக்கம் இதுதான்:

விளையாட்டு ஆர்வம் உடைய, மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து, விடுமுறை நாட்களில் உரிய உபகரணங்கள் கொண்டு முறையாக விளையாடவும், எந்த அசாதாரண காரியங்களிலும் ஈடுபடுவதில்லை என்றும் உறுதியளித்து வேண்டுகோள் வைத்தால், எந்த மைதான அனுமதியும்  உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

கூடுதலாக, பெயர், முகவரி, பள்ளி / கல்லூரி ஆகியன கொண்ட பதிவின் (“registration”) அடிப்படையில், ”பதிவு செய்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்” என்பன போன்ற விதிகளை முன் மொழிந்து அனுமதி பெற்றால், விஷமிகளில் பொருள் சேதத்திலிருந்தும் பள்ளியின் / மைதானத்தின் கட்டுமானம் / உடமைகள் பாதுகாக்கப்படும்.

தகவல் மற்றும் பொதுநலம் கருதி வெளியிடுவோர் : கீழக்கரை.காம்

FACE BOOK COMMENTS : 
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இந்த கணினியுக காலத்தில், நம் பிள்ளைகள் விளையாடோ போறேன் என்று வீட்டில் சொல்லி விட்டு, நேராக ப்ளே ஸ்டேசன் கேம்களில் கால்பந்தும், கிரிக்கெட்டும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மைதான விளையாட்டுகள் என்பது அறவே மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்த வேளையில் நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வையும் கருத்தில் கொண்டு, விளையாட்டு மைதானங்களை பூட்டி வைத்து பாதுகாக்காமல், அவர்கள் சுததிரமாக விளையாடி மகிழ்வதற்கும், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கிலும் தினமும் திறந்து வைக்க வேண்டும்.

கீழக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்பில் முனைப்புடன் பணியாற்றும் கூர்க்கா - சந்திர பகதூர் சிங் !

கூர்க்கா (Gurkha) எனும் விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமான நேபாளத்து மக்கள் தமிழகத்தின் சில இடங்களில் இரவு நேர ஊர் காவல் பணியில் ஈடுபட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இமயமலையின் ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் 'கூர்க்கா' எனும் பெயரை பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்கும் பணியில், இந்த கூர்க்காக்கள் பல்லாண்டுகளாக  ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் அயாராத விழிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபடும் கூர்க்காக்ககள் எழுப்பும் விசில் சப்தம், பொதுமக்களின் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகை செய்கிறது.


கீழக்கரை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்பில் முனைப்புடன் பணியாற்றும் கூர்க்கா - சந்திர பகதூர் சிங் (வயது 58) அவர்கள் நேபாளத்தில் பஜங் பகுதியை சேர்ந்தவர். 15 வயதில் கூர்க்கா பணிக்கு கீழக்கரை வந்துள்ளார். தற்போது கீழக்கரை நகரில் எல்லைகள் விரிவடைந்து 500 பிளாட் பகுதி முதல், புதுக் கிழக்கு தெரு பகுதி (பெரிய காடு) வரை சென்று விட்டது.

இதனால் கூடுதல் கூர்க்கா பணிக்கு இவருடன் இணைந்து கோகன் பகதூர் (வயது 50), தில் பகதூர் (வயது 43), பல பகதூர் (வயது 40) ஆகியோர்கள் இரவு நேரங்களில் பாது்காப்புக்காக சுற்றி வருகின்றனர். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, நடுங்க வைக்கும் பனி என்று எக்காலத்திலும் இவர்களின் பணி ஒரு நாளும் தடை படுவதில்லை. 


ஆரம்ப காலத்தில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர்.

கூர்க்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், சிங்கப்பூரின் உள்ளூர் காவல் படைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்திய இராணுவப் படையில் 7 கூர்க்கா படை பிரிவுகளில் சுமார் 32000 க்கும் மேற்பட்ட கூர்க்காக்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பகதூர் பிரிவினர் வீரம் செறிந்தவர்களாக விளங்குகின்றனர்.

இது குறித்து நம்மிடையே பேசிய  கூர்க்கா - சந்திர பகதூர் சிங் அவர்கள் கூறியதாவது,

கீழக்கரையில்  கூர்க்காவாக இருந்து மக்களுக்கு பணி செய்வது, எங்களுக்கு  பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு கூர்க்கா பணியில் சேர்ந்து இது வரைக்கும் ஏராளமான கொள்ளை மற்றும் திருட்டுக்களை தடுத்து்ள்ளேன். திருடர்கள் பலரை விரட்டி பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளேன்.

நாங்கள் பொதுவாக 'குக்குரி' என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் எங்களுடனே வைத்திருப்போம். திருடர்கள் எவ்வளவு தூரத்தில் ஓடினாலும், இந்த கத்தியை இலாவகமாக வீசி தாக்கும் வித்தை எங்களுக்கு கை வந்த கலை.

கீழக்கரையின் குறுகிய தெருக்களுக்குள், நள்ளிரவு நேரங்களில் சந்தேகபடும் படியாக யாரேனும் நடமாடினால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்து விடுவேன். வருடம் ஒரு தடவை, குடும்பத்தாரை காண 15 நாள்கள் விடுமுறை எடுத்து கொண்டு நேபாளம் சென்று வருவேன்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு, வீடுகளில் பெறப்படும் சிறிய தொகை மூலம் வாழ்க்கையை நகற்றி வருகிறோம். வேறு எந்த ஒரு வருமானமும் இல்லை. வெளிநாடு வாழ் கீழக்கரை மக்கள், ஊர் வரும் போது, எங்களுக்கு ஏதேனும் பொருளாதார உதவிகள் செய்யுங்கள்" என்று கண்ணியமான வார்த்தைகளுடன் வேண்டுகோள் விடுத்தார்.

FACE BOOK COMMENTS :
  • Mohamed Irfan இந்த கூர்க்கவை இங்கு முதலில் பணி அமைத்தியவர் மற்றும் வீடு சம்பளம் வழங்கியவர்கள் யார் என்ற வரலாற்று செய்தியையும் இங்கு தந்தால் மிக பலனுள்ளதாக இருக்கும்..... நண்பா உன் தகவலுக்கு என் வாழ்த்துகள்......
  • Saheerudeen Klk great identification brother! people silently toiling much from the bottom. salute to him & ur identification may help him & his people.. thank you very much for this info !

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஊர் பாதுகாப்பில் அரை நூற்றாண்டாக பணியாற்றி பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் இன்னும் நம் மக்கள் அவருக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு தாராளமாக பொருளுதவி தருவதோடு, அவரை பாராட்டி கவுரவிக்க அனைவரும் முன் வர வேண்டும்.
  • Saheerudeen Klk @puthiya otrumai: mihachariyaha soneerhal.. ivaradhu ulaipinai adayalam kandu awarukku udhai seyyavendum ! seyvom insha allah
  • Fouz Ameen நல்ல தகவலை தந்த கீழை இளையவனுக்கு நன்றி
  • Syed Abusalique Seeni Asana Good work.. which shows clearly the keelai ilaiyavan minds always seeking to find the real heros.. really these people works are major and and more helpful for us.. but they are just curry leaves b4 this news articles.. thanks to keelai ilaiyavan to focus on this.. I hope Keelakarai Ali Batcha mama knows this history of how gurka's comes into this service in our town.. they living long long us a big family in sathikali appa house..
  • A.s. Traders நல்ல தகவலை தந்த கீழை இளையவனுக்கு நன்றி