தேடல் தொடங்கியதே..

Saturday 21 July 2012

கீழக்கரை பகுதியில் புனித ரமலான் நோன்பு துவக்கம் ! - ஏராளமானோர் இரவு நேரத் தொழுகைகளில் பங்கேற்பு !

தமிழகத்தின் செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவல் அடிப்படையாகக் கொண்டு, சென்னையிலுள்ள தமிழ்நாடு தலைமை காஜீ இன்று நோன்பு துவங்குவதை உறுதி செய்தார். இந்த அறிவிப்பின் படி, இன்று (21.07.2012) முதலாவது நோன்பு என்ற‌ முறைமையை கீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று முதல் ரமலான் நோன்பு நோற்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று (20.07.2012) இரவு முதல் பிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




ரமளான் மாதம் துவங்கிய செய்தி தெரிந்ததையடுத்து, கீழக்கரை நகரில் அனைத்து பள்ளிகளிலும் இரவு நேரத் தொழுகைகள் ந‌டைபெற்ற‌து. மிகுந்த எதிர்பார்ப்புடன் ரமலான் நோன்பை வரவேற்கும் அக மகிழ்ச்சியில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் திரளாக இரவு நேர தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌னர்.


கீழக்கரை பகுதி நோன்பு கால அட்டவணை

நம்மை சிந்திக்க தூண்டும் 'சிந்திக்கவும்' இனைய தளத்தின் ஆசிரியர் திரு.யாழினி அவர்கள் கூறிய புனித ரமலான் வாழ்த்து செய்தி உங்கள் பார்வைக்கு

ரமலான் நோன்பு என்பது தன் உடல் வருத்தி ஏழை எளியவரை நினைக்க வைப்பது. ஆண்டாள் திருப்பாவையில் ”மையிட்டெழுதோம், மலரிட்டு யாம் முடியோம், செய்யாதன செய்யோம்,  தீக்குறளை சென்றோதோம்” என்று சொன்னது போல் மனிதனை புனிதனாக்க, புற அழகை ஓரந்தள்ளி, அக அழகை அதிகரிக்க செய்ய கடைபிடிக்கும் நோன்பு என்பது புரிய வந்தது நான் வளைகுடா நாட்டில் வசிக்க தொடங்கிய பின்னரே..


மனித வாழ்க்கையில் அகம், புறம் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடுத்ததால் உண்ணாமல் விலகி இருக்கின்றார்களே இப்பயிற்சி பெற்றவர்கள்? அப்படிப்பட்டவர்கள், "பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' என இறைவன் தடுத்திருக்கையில் அதைச் செய்வார்களா...?

நோன்பு நோற்றவன் மனைவியுடன் சேரக்கூடாது என இறைவன் தடுத்திருக்கிறான். தன் மனைவியையே இறைவன் தடுத்ததால் அப்படித் தொடாமல் பயிற்சி பெற்றவன், "விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' என இறைவன் தடுத்திருக்கும் நிலையில் அதன் பக்கம் நெருங்குவானா? அப்படி நெருங்க கூடாது என்பதையே இந்த நோன்பின் மூலம் அவர்கள் பெறவேண்டிய படிப்பினை. 

நோன்பிருப்போர் செய்ய வேண்டியதைப் பின்வரும் நபிமொழிகள் கூறுகின்றன : "யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' மேற்கண்ட பொன்மொழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும், தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி பெறுகிறார். 



 

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறு, ஆறரை மணிவரை கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல், இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாட்டை நினைவில் நிறுத்திக்கொண்டு பார்த்தால், சுற்றிலும் உணவு புழங்குகையில் இந்த நோன்பை கடைபிடிப்பது அவர்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பது புரியும்.


இஸ்லாமியர்கள் இந்த சிரமங்களுடனே கூட தங்கள் மதக்கோட்பாட்டை கடைபிடிப்பது அவர்களது மன உறுதியையும்,  படைத்த கடவுள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் காட்டுகிறது. அவர்கள் மேல் மரியாதையை கூட்டுகிறது.

ஈதலின் அவசியத்தை உணர்ந்து தன் வருவாயின் சிறு பங்கை வறியோர்க்களிக்க ஈகையை புனிதக் கடமையாய் வலியுறுத்தும் நன்னெறியை அனைவரும் கைக்கொள்வோம். இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை நோன்பு மேற்கொண்டு வரவேற்கும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் .


நட்புடன்...யாழினி...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

புனித ரமலான் நோன்பினைத் தொடங்கும் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக வாத்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday 18 July 2012

கீழக்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் கவுன்சிலர்கள் நடத்தும் கவன ஈர்ப்பு நடை பயணம் - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு !

கீழக்கரை நகரில் நிலவுகின்ற குறைபாடுகளை களையும் நல்ல நோக்கோடும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்தும், தமிழக அரசின் கவனத்தை கீழக்கரையின் மீது விழச் செய்யும் விதமாகவும் கவன ஈர்ப்பு நடைபயணம் நடைபெறுகிறது. 



இதில் கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, தங்கராஜ், அன்வர் அலி, முகைதீன் இபுறாகீம், ஹாஜா நஜிமுதீன், ஜெயப்  பிரகாஷ் ஆகியோர்கள் தலைமையில் இன்று (18.07.2012) காலை 7.30 மணியளவில் கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து புறப்பட்டது. இந்த நடை பயணம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.




கீழக்கரை நகராட்சிக்கு தனி ஆணையர் நியமனம், கீழக்கரை நகரின் சுகாதார நலன் கருதி கூடுதல் துப்பரவு பணியாளர்கள் நியமனம், கீழக்கரை நகரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் மெத்தனம் காட்டும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை, ஊழலுக்கு துணை போகும் மக்கள் பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுமக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் (செவிடன் காதில் சங்கு போல்) மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை


 


முறையான திட்டங்கள் இல்லாமல் மக்கள் வரிப் பணம் சீரழிக்கப்படுவதை தடுப்பது, கீழக்கரை காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள், கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம், ரேசன் கடை முறைகேடுகளை தடுத்தல், கூடுதல் மின் வாரிய ஊழியர்கள் நியமனம், கேஸ் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் எரிவாயு ஏஜென்சி ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி இந்த நடைபயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Tuesday 17 July 2012

கீழக்கரையின் சுகாதார சீர்கேட்டை தோலுரித்து காட்டும் 'ஜீ தமிழ்' தொலைகாட்சி - சொல்வதெல்லாம் உண்மை !

கீழக்கரை நகர் நல இயக்கத்தினரின் மாபெரும் முயற்சியால், கீழக்கரையின் சுகாதார சீர்கேடுகள் ஜீ தமிழ் தொலைகாட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை, நிகழ்ச்சியின் மூலம் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. இந்த நல்ல நிகழ்ச்சியின் மூலம், எங்கு நோக்கினும் சாக்கடையின் வாசனைகளும், குப்பைகளின் கோரப் பிடியில் புதுப் புது வியாதிகளின் சங்கமமும்  வியாபித்து நிற்பதை, உள்ளக் குமுரலாய், நகர் வாசிகள் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். 




கீழக்கரையின் இந்த சின்ன குப்பை பிரச்சனையை இவ்வளவு தூரம், மீடியா அளவிற்கு கொண்டு சென்று பெரிது படுத்த வேண்டுமா? என்று சில அறிவிலிகள் கேட்பதுண்டு. நம் இந்திய திருநாட்டில் ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களாக வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம்-சட்டமன்றம், நீதித்துறை, அதிகாரம் ஆகிய அனைத்தும் அரசின் கீழ் இருக்கும் நிலையில், நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் (மீடியா) செய்தி ஊடகங்கள் மட்டுமே மக்களின் குரலாக, உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் சத்தியவானாக சுதந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. 




ஆண்டாண்டு காலமாய் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாத பல விசயங்களை, பிரச்சனைகளை, எளிதில் அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்து செல்லும் பலம் பொருந்திய இந்த நான்காம் தூணை, நம் கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் நாடியதில் தவறொன்றும் இல்லை.

கீழக்கரையா? குப்பைக்கரையா? என்று சாடும் அளவிற்கு கீழக்கரை நகரின் சுகாதார சீர்கேட்டினை, உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய  'ஜீ தமிழ்'  தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை காண, கீழ் காணும் லிங்கில் சொடுக்கி பார்வையிடவும்.

இங்கே கிளிக் செய்க


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி. 
கீழக்கரை நகருக்குள் சாக்கடை ஆறுகளை கடக்க 'படகு போக்குவரத்து' - பொது மக்கள் வேண்டுகோள் !


(குறிப்பு : தற்போது 1ஆம் வார்டுக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில், பல்லாண்டு காலமாக ஓடிக் கொண்டிருந்த சாக்கடை நதிக்கு மட்டும் விடிவு கிடைத்துள்ளது).

இந்த சுகாதார சீர்கேட்டினால் உருப்பெறும் கொலை வெறிக் கொசுக்கள் "காலையில் கடித்தால் டெங்கு, மாலையில் கடித்தால் மலேரியா" என்ற அவல நிலையில், இனியாவது எங்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்காதா? என  ஏங்கித் தவிக்கும் பொது மக்களின் குமுறல்களுக்கு, நிரந்தர தீர்வாக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பார்வை நம் கீழக்கரையின் மேல் விழுமா ? இனியொரு மாற்றம் பிறக்குமா ??

Sunday 15 July 2012

கீழக்கரையில் நாளை (16.07.2012) மாதாந்திர மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு !

கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (16.07.2012) திங்கள் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம்,  காஞ்சிரங்குடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, களரி, கொம்பூதி   மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளர் யோகானந்தன் தெரிவித்துள்ளார்.



கீழக்கரை பகுதியில் மீண்டும் 4 மணி நேர அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொது மக்கள் அனைவரும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.