தேடல் தொடங்கியதே..

Thursday 15 March 2012

கீழக்கரை புதிய கடல் பாலத்தில் தொடர்ந்து மீறப்படும் விதிமுறைகள் - காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

நம் கீழக்கரையில்  புதிய கடல் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், இங்கு தினமும் அனைத்து நேரங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 2006 ஆம் ஆண்டு, அப்போதைய திமுக அரசால் ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தை சுற்றி குவியும் மணல் திட்டுகளை சரி செய்யும் பொருட்டு ,இன்னும் திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது.


அறிவிப்பு பலகை வைத்து என்ன செய்ய ?




இதற்கிடையில் அங்கு நடைபெறும் கலாச்சார சீர்கேடுகள் குறித்து, காவல் துறையினர் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு சென்றனர்.  இங்கு பொழுது கழிக்க வரும் பல இளைஞர்கள் புதிய பாலத்தை மது அருந்தும் 'பாராக'  மாற்றியதும், அவர்கள் இரு சக்கர வாகனங்களில் பாலத்திற்குள் வந்து செய்யும் ரகளைகளும் தடுக்கப்பட, சமூக ஆர்வலர்கள் பலராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.



ஆனாலும் இந்த பகுதியில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையே இருந்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் உள்ளே வருபவர்கள், கொஞ்சம்கூட வேகத்தைக் குறைக்காமல் நேராக பாலத்திற்குள் சென்று 'ஸ்டன்ட்' (ஆபத்தான விளையாட்டுக்கள் செய்வது) இப்போதும் குறைந்த பாடில்லை. பல நேரம் இந்த குறுகிய பாலத்திற்குள் பைக் ரேஸ்கள் விடப்படுவதாகவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே....


இது குறித்து இந்த பகுதியில் வசிக்கும் அஹமது தெருவைச் சேர்ந்த ஹபீபு முஹம்மது அவர்கள் கூறும் போது "புதிய கடல் பாலம் இன்னும் இங்கு திறக்கப்படாத போதும், தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து போகிறார்கள். கடந்த மாதங்களில் இங்கு இரவு நேரங்களில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது.  அதன் ஒரு கட்டமாக, காவல் துறையின் அறிவிப்பு பலகைகள் அங்கு பல இடங்களில் வைக்கப்பட்டது.





ஆனால் இங்கு வரும் இளைய சமுதாயம் அதை  எல்லாம்  பொருட்படுத்துவதே  இல்லை. புகார்கள் எழுந்த சில நாட்களுக்கு மட்டும் காவல் துறையினர் இந்த பகுதிக்கு தினமும் ரவுண்ட்ஸ் வந்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது மீண்டும் இங்கு பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கிறது. ஆகவே காவல் துறையினர் தொடர்ந்து இந்த பகுதிக்கு கண்காணிப்பு பணிகளை மேற்க்கொள்ள வேண்டும்." என்று புலம்பலுடன் தெரிவித்தார்.

Tuesday 13 March 2012

கீழக்கரையில் மத்திய அரசின் புதிய வேலை வாய்ப்புக்கான 'இலவச திறன் வளர்ப்பு பயிற்சி' - கிராமப்புற மாணவர்கள் பங்கேற்பு

இந்திய அரசின் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும், ITCOT நிறுவனமும் இணைந்து SGSY ('ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஸ்கார்  யோஜனா) பொன்விழா ஆண்டு கிராமப் புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக, தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 5360 நபர்களுக்கு 'CSC கல்வி நிறுவனம்' மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கி வருகிறது. நம் கீழக்கரை நகரிலும், அதன் சுற்று வட்டார கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.





இது குறித்து CSC கல்வி நிறுவனத்தின் இராமநாதபுரம் மண்டல தலைமை நிர்வாகி ராஜா முஹம்மது அவர்கள் கூறும் போது "இந்த சிறப்பான திட்டத்தில், நம் கீழக்கரை சுற்று வட்டார ஏழை மாணவ, மாணவிகள் இணைந்து, வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், இலவசமாக மூன்று மாதங்களுக்கு பயிற்சியும் அளித்து, வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.




இந்த பயிற்சியில் கீழக்கரை நகராட்சியிக்கு உட்பட்டவர்கள் தவிர, ஏர்வாடி, காஞ்சிரங்குடி, நத்தம், குலபதம், சிக்கல்,  செங்கல் நீரோடை, மாயாகுளம், மோர்க்குளம் போன்ற சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆர்வமுடையவர்கள் இதில் சேர்ந்து பயனடையலாம்." பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.",என்று தெரிவித்தார்.

ITCOT நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்வு 


தற்போது இந்த மூன்று மாத பயிற்சி முடிவடையும் நிலையில், மீண்டும் இந்த பயிற்சி வரும் மே மாதம் இறுதியில் துவங்க இருக்கிறது. ஆகவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள, கீழக்கரையின் CSC கல்வி நிறுவனத்தை  04567 - 244996 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.

கீழக்கரையில் கிலோ கணக்கில் ' தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள்' பறிமுதல் - நகராட்சி ஆணையர் நடவடிக்கை !

நம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கீழக்கரை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகளை விற்கவும், பயன்படுத்தவும்  02.02.2012 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பெரும்பாலான கடைகளில் மாற்று ஏற்பாடாக, துணிப்பை மற்றும் பேப்பர் பைகளை பயன் படுத்தி வருகின்றனர்.


பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பைகளின் ஒரு பகுதி
 ஆனால் ஒரு சில கடைகளில் மட்டும் இன்னும் தொடர்ந்து பாலிதீன் பைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது குறித்து நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து புகார் செய்யப்பட்டது. அவரது உடனடி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் முஜீபுர் ரஹ்மான் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் கீழக்கரை நகரில் நேற்று (12.03.2012) அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.


நன்றி : (படம்) கீழக்கரை டைம்ஸ்

இந்த அதிரடி சோதனையில், கடைகளில் விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கும் குறைவான 227  கிலோ எடை உள்ள பாலிதீன் பைகளை பண்டல், பண்டலாக கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது போன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்று நகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday 12 March 2012

கீழக்கரையில் கிராம நிர்வாக அதிகாரிகள் அதிரடி மாற்றம் ! - புகார்கள் எதிரொலியா ?

கடந்த சில மாதங்களாகவே, கிராம நிர்வாக அதிகாரிகளின் மீது பல்வேறு விதமான புகார்கள் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், சென்ற புதன் கிழமை (07.03.2012) அன்று இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு. முத்துக்குமரன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் 38 பேரை அதிரடியாக பணி இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் கீழக்கரையில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர்களும் அடங்குவர்.

கிராம நிர்வாக அலுவலகம், கீழக்கரை

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி


08.03.2012 அன்று நாளிதழில் வெளி வந்த செய்தி - நன்றி : தினத் தந்தி

இது குறித்து சின்னக் கடைத் தெருவைச் சேர்ந்த சுல்தான் செய்யது இபுறாகீம் அவர்கள் கூறும் போது, "இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கு, பொது மக்கள் சார்பாக என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழக்கரை நகருக்கு, புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள், பொது மக்களின் நன் மதிப்பைப் பெற்று சேவை ஆற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்", என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.

கீழக்கரையில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை ! - எங்கும் குளுமை !

நம் கீழக்கரை நகரில் நேற்று இரவு முதலே லேசான காற்றுடன் தூரலும் விழுந்தது. இன்று (12.03.2012) அதிகாலை முதல் அவ்வப்போது சாரல் மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. கீழக்கரை மட்டுமல்லாது, திருப்புல்லாணி, இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் முழுவதும் மழை மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. 





இது குறித்து கோக்கா  அஹமது தெருவைச் சேர்ந்த 'மஸ்தான்' என்கிற அஹமது இபுறாகீம் அவர்கள் கூறும் போது "கடந்த சில நாள்களாகவே, வெயிலின் கடுமையால், 'ஆரம்பமே அனலாய்த் தகித்த' நம் கீழக்கரை நகரம், இந்த திடீர் சாரல் மழையால் குளுமை அடைந்துள்ளது. 




அதே நேரம், இது போன்ற சிறு மழைகளில் நனைய நேரும் போது, ஜலதோஷம், குளிர் காய்ச்சல் போன்ற உபாதைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் கவனமுடன் இந்த சாரல் மழையை எதிர் கொள்ள வேண்டும்" என்று அக்கறையுடன் தெரிவித்தார்.

Sunday 11 March 2012

கீழக்கரையில் புதிய 'மெடிக்கல் கிளினிக்' உதயம் - பொது மக்கள் மகிழ்ச்சி!

கீழக்கரை கிழக்குத் தெருவிலுள்ள, பழைய கைராத்துல் ஜலாலியா ஆரம்ப பள்ளி வளாகத்தில் இன்று (11.03.2012) 10 மணியளவில், பொது மக்களின் மருத்துவ சேவைக்காக புதிய மெடிக்கல் கிளினிக்கை 'கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்ட்' சார்பாக துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ மனையை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் திறந்து வைத்து, மருத்துவ பணிகள் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.




இது குறித்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்டின் தலைவர் முஹம்மது ஜுல்பிகார் அவர்கள் கூறும் போது, "நம் கீழக்கரை நகரில் குறிப்பாக கிழக்குத் தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவமனைகளோ, அவசர சிகிச்சைகளுக்கான வழிகளோ இல்லை. நமது கீழக்கரை நகரமும், மிக வேகமாக பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் விரிவடைந்து வருகிறது. அதற்கேற்ப மருத்துவ வசதிகள் இல்லை. பல சிறப்பு சிகிச்சைகளுக்கு இராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழல் தான் தற்போது உள்ளது.

தலைவர் முஹம்மது ஜுல்பிகார் அவர்கள்



ஆகவே தான், நம் மக்களுக்கு மிக அருகாமையிலேயே, நல்ல தரமான சிகிச்சைகளை, மிகக் குறைவான கட்டணத்தில் செயல்படுத்த முனைந்துள்ளோம். இதனால் பொது மக்களுக்கு, வீட்டிலிருந்து, மருத்துவமனைக்கு செல்லும் போக்குவரத்து செலவுகள் பெருமளவு குறைகிறது. இறைவன் நாடினால், விரைவில் இன்னும் பல சிறப்பு மருத்துவர்களை முழு நேரப் பணிகளில் அமர்த்தி சேவையாற்ற இருக்கிறோம்" என்று மிகுந்த அக்கறையுடனும்,மகிழ்ச்சியுடனும் தெரிவித்தார்.




இது குறித்து இந்த மருத்துவமனையின் டாக்டர். ஜவாஹீர் ஹுசைன் அவர்கள் கூறும் போது "நம் நகர் மக்களின் நலனுக்காக, எந்தவித இலாப நோக்கமுமின்றி துவங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவ சேவையை, பொது மக்கள் அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.


டாக்டர்.ஜவாஹீர் ஹுசைன் மற்றும் டாக்டர். அல்-அம்ரா அவர்கள்

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கீழக்கரை  முஸ்லீம் டிரஸ்டின் தலைவர் ஆசீக் அவர்கள் கூறும் போது " இது போன்ற நம் கீழக்கரை நகர் மக்களுக்கான, மருத்துவ சேவைகள் வரவேற்கத்தக்கது. நமது ஊரில் பல்வேறு விதமான சிகிச்சைகளுக்காக, மருத்துவ மனைகளை நாடி, தொலை தூரம் பயணித்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கான தரமான சிகிச்சைகளை வழங்க துவங்கி இருக்கும் இந்த நல்ல சேவை, தொய்வில்லாமல் தொடர இறைவனை வேண்டுகிறேன்", என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.


கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்டின் மருத்துவ சேவைகள், மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.