தேடல் தொடங்கியதே..

Saturday 24 March 2012

கீழக்கரையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை - காவல் துறை ஆய்வாளர் முயற்சி !

சாலை விபத்து முக்கியமான உயிர்க்கொல்லி நோயாக உலகளவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. நம் கீழக்கரை நகரிலும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத்துக்களும் அதிகமாக நடந்த கொண்டிருக்கிறது.  

"விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள்; காரில் செல்லும் போது 'சீட் பெல்ட்' அணியுங்கள். பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்" என காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் நம் கீழக்கரையில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு, மூன்று விபத்துக்களாவது நடந்து விடுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.




தற்போது தமிழகத்தில் பல இடங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஹெல்மெட் விற்பனையும் நம் பகுதிகளில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. ஆனால் விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக, தரமற்ற ஹெல்மெட்களை, வாகன ஓட்டிகள் வாங்கி செல்கின்றனர். 


சில காலங்கள் மட்டும் சூடு பிடிக்கும் ஹெல்மெட் விற்பனை

இது குறித்து கீழக்கரை காவல் ஆய்வாளர் இளங்கோவன் அவர்கள் கூறும் போது, "நமது கீழக்கரை நகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதிலும் சில பேர்கள் ஹெல்மெட்டை வண்டியில் மாட்டி விட்டுட்டு தான் ஓட்டுறாங்க.  இந்த இரு சக்கர வாகனங்கள் ஓட்டி ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலும் தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது.  


இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அவர்கள்
தலைக்காயத்தை முழுமையாக தடுக்கவே  இந்த ஹெல்மெட். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாது ஹெல்மெட் அணிய வேண்டும். நம் கீழக்கரை நகரில், வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கீழக்கரை காவல் துறையும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகமும் இணைந்து, ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தும் நோக்கோடு முயற்சிகள் மேற்கொள்ள இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.


ஹெல்மெட் அணிந்த வாகன ஒட்டி (இடம் : புதுக் கிழக்குத் தெரு, கீழக்கரை)

இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக இணைச் செயலாளர் செய்து சாகுல் ஹமீது அவர்கள் கூறும் போது "தினந்தோறும் நாளிதழ்களில் இரு சக்கர வாகன விபத்துக்களில் பலியாகிறவர்கள் பற்றி செய்திகள் வரும் போது  'ஹெல்மெட் அணியவில்லை' என்று அடைப்புக் குறியிட்டு செய்தி வெளியிட்டிருப்பார்கள். அதற்கான காரணம் இது போன்ற விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி இறந்து விட்டார்கள் என்றால் இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க.





அதற்கு அத்தாட்சியாகத் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தா மட்டும் தலையில அடிபடாமலா இருக்கப் போகுது? என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அதேல்லாம் கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.



ஹெல்மெட் அணிந்த வாகன ஒட்டி (இடம் : பாலாக்கா கறிக் கடை அருகில்)

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. நம் உடல் உறுப்புகளை செயல்படுத்தும் ஒட்டு மொத்த கன்ட்ரோல் நம் தலையில் இருக்கக்கூடிய மூளையாகும். இதன் மொத்த எடை 1.5 கிலோ ஆகும். 100 கிலோவிற்கு மேல் உள்ள மனிதனுக்கும் இதே அளவுதான். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கும் திறன், அனுமானித்தல், கேட்டறிதல், செயல்படுத்துதல், கட்டளையிடுதல், செக்ஸ் உணர்வுகள் போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்வது இந்த மூளைதான்.

அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் காலம் வருமா?

இந்த மூளையை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் தலையாய கடமையாகும். இந்த மூளை அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்தில் தான். 50 சதவீத சாலை விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவு , மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தான் முக்கிய காரணங்களாகும்.


முஸ்லீம் பஜாரில் NASA அமைப்பினரால் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு

பல ஆயிரங்கள் கொடுத்து, தனக்கு பிடித்த மாடல் பைக்குகளுக்காக  மட்டும் பல மாதங்கள் காத்திருந்து வாங்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒரு ஆயிரம் செலவழித்து ஹெல்மெட் வாங்க முயற்சிப்பதில்லை. ஹெல்மெட் அணிவதை கேவலமாகவும், கவுரவ குறைச்சலாகவும் பார்ப்பது வருத்தத்திற்குரியது.  ஆகவே 'வரு முன் காப்பது' சாலை விபத்தினால் ஏற்படும் மூளைக்காயத்திற்கு சாலச்சிறந்தது.

Wednesday 21 March 2012

கீழக்கரையில் புதிதாய் முளைத்திருக்கும் 'ஹைடெக் வட்டிக் கடைகள்' - அலைமோதும் பரிதாபத்துக்குரிய பொது மக்கள் !

தங்க நகைகளுக்கு ஈடாக கடன் பெற்று, காலம் முழுதும் வட்டி கட்டுவது என்பது இன்று தவிர்க்க முடியாத ஆறாவது விரலாகிவிட்டது. அதிபராக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் ஒரு முறை இந்த மாய வலையில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்... செக்கு மாடாகி சுற்றிச் சுற்றி நுரை தள்ளிச் சாக வேண்டிய சூழல் தான் தற்போது எங்கும் நிலவுகிறது. தற்போது நம் கீழக்கரையிலும் தங்க நகைகளை அடமானம் பெற்றுக் கொண்டு, கேட்கும் பணத்தை, கை நிறையக் கொடுக்கும் ஹைடெக் 'உடனடி தங்க நகை கடன்' வழங்கும் நிறுவனங்கள் பொது மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்து வருகிறது.


வட்டிக் கடைகளின் கூடாரங்கள் இருக்கும் வள்ளல் சீதக்காதி சாலை, கீழக்கரை

இந்த அதிநவீன வட்டிக் கடைகள் 'மார்வாடு செய்யும் சேட் ஜி' க்களையும் விஞ்சும் வண்ணம் அநியாய வட்டிகளை வசூல் செய்து வருகிறது. நம் கீழக்கரை நகரிலுள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில், மூன்று புதிய நிறுவனங்கள்  திறக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் கடைகளில் எந்த நேரமும், பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இது குறித்து  வட்டி கட்ட முடியாமல் தங்க நகைகளை இழந்த நடுத்தெருவைச் சேர்ந்த முகைதீன் கருணை அவர்கள் கூறும் போது "அவசர தேவைகளுக்காக, பணம் தேவைப்படும் போது சில மணி நேரங்களிலேயே, பணத்தை புரட்ட, வேறு வழியில்லாமல் தான் இங்கு வருகிறோம். இங்கு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளும் வட்டிக் கடை ஊழியர்கள், புரியாத மொழியில், கண்ணுக்கு தெரியாத எழுத்துக்களில் எழுதி இருக்கும், பல பக்க தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர்.



வள்ளல்கள் வாழும் ஊரிலே... வட்டிக் கடையா ?

இங்கு பணத் தேவைகளுக்காக, அவசர கோலத்தில் வரும் எங்களை போன்றவர்கள், அவர்கள் நீட்டிய இடத்தில் கையெழுத்தை போட்டு விட்டு பணத்தை வாங்கி செல்கிறோம். வட்டி விகிதமோ, அவர்களின் நடைமுறை விதிமுறைகளோ எங்களுக்கு தெரியாது. சில மாதங்கள் வட்டி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டால், உடனே நகைகள் ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வந்து விடுகிறது. வட்டி கட்ட கொஞ்சம் தாமதித்தாலும், இங்கு தங்கும் தங்கம் நிச்சயம் நம்மிடம் திரும்பாது. என் மனைவியுடைய தாலி சங்கிலி, இந்த அநியாய வட்டிக் கடையில், திருப்ப முடியாமல் மூழ்கி விட்டது" என்று வழியும் கண்ணீருடன் தெரிவித்தார்.  

இது குறித்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். முஹம்மது அபுதாகிர் அவர்கள் கூறும் போது  "சில தனியார் வங்கிகளும் கந்துவட்டி வசூலில் இறங்கி இருக்கின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வட்டியைவிட இந்த வங்கிகள் அதிகமாகவே வாங்குகின்றார்கள். கடந்த 2003-ம் ஆண்டு கந்து வட்டித் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கைது செய்யப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். 


வட்டிக் கடைகளின் கூடாரங்கள் இருக்கும் வள்ளல் சீதக்காதி சாலை, கீழக்கரை


ஆனால், இந்த சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவரை புள்ளிவிவரங்கள் இல்லை, ஜாமீனில் எளிதில் வெளி வர முடியாத அளவுக்கு சட்டத்தைக் கடுமையாக்கினால் மட்டுமே இதற்குத் தீர்வு" என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார். 

தங்கத்தின் விலை உயர்வால் நகைகளை அடமானம் வைத்து, கடன் பெறுவோர் தற்போது அதிகரித்துள்ளனர். அதற்கேற்ப நகை கடன் வர்த்தகத்திலும் கடும் போட்டி நிலவுகிறது. வங்கிகளின் தனிநபர் கடன், வாகனக் கடன், வியாபார கடன் பெற பல ஆவண நடைமுறைகளை முடிக்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசமும் அதிகம். ஆனால், நகை கடனில் குறைந்த நேரத்தில் உடனடி பணம் கிடைப்பதால், இங்கு அதிகளவில் மக்கள் குவிகின்றனர். வங்கிகளில் நகை கடனுக்கு தனியாரை விட குறைந்த அளவே கடன் அளிப்பதால், தனியார் நகை கடன் நிறுவனங்களிடம் மக்கள் செல்கின்றனர்.




நம் கீழக்கரையில் வட்டியில்லா கடன் திட்டத்தை 'இஸ்லாமிய பைத்துல்மால்' மற்றும் இன்ன பிற சமூக நல அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு தானிருக்கிறது எனபது மட்டும் இனிப்பான செய்தி. அதே நேரம் இன்னும் வீரியமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அமைந்தால், பல குடும்பங்களின் வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை. இறைவன் காட்டித் தந்த வழிதனில்...வட்டிப் பிணி நெருப்பில் வறுபடும், மனித நேயத்தை சீரமைப்பு செய்ய, வட்டியின் கொடிய வலைதனில் இருந்து மீள, ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்காத வரை... வட்டிக் கடைக் கூடாரங்கள் இங்கு முகாமிட்டுக் கொண்டே தானிருக்கும்...

Tuesday 20 March 2012

கீழக்கரையில் குப்பை கொட்டும் தளத்தின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகள் தீவிரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி !

நம் கீழக்கரை நகரில் முதன்மை பிரச்சனையாக குப்பைகள் பிரச்சனைகள் எதிர் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த   பல்வேறு அமைப்புகளும், நகர் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும், கீழக்கரை நகராட்சியின் ஒத்துழைப்போடு தீவிர முயற்சிகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.


முழு வீச்சில் கட்டப்பட்டுள்ள குப்பை கிடங்கின் பில்லர்கள்

நேற்று  (24.03.2012) எடுக்கப்பட்ட புகைப்படம்

துரிதமான வேலைகளின் பிரதிபலிப்பு

நேற்று (24.03.2012) எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்த முயற்சிகளின் எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக அமைய இருக்கும் குப்பைகள் கொட்டும் தளத்திற்கான சுற்றுச் சுவர் கட்டும் பணி தற்போது கீழக்கரை நகராட்சியின் மேற்பார்வையில் நடை பெற்று வருகிறது. இந்த கட்டுமானம் நடை பெறும் இடத்திற்கு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக நேரடி விசிட் அடித்தோம். அங்கு பணிகள் விரைவாக நடை பெற்று வருவதை காண முடிந்தது.

குப்பை கொட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர்

இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம் கேட்ட போது "பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு, தற்போது தில்லையேந்தல் பகுதியில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சுற்றுச் சுவர் கட்டும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தும் வகையிலும், தரமான முறையில் வேலைகள் நடை பெறுவதை உறுதி செய்யும் நோக்கோடும் இரண்டு நாளுக்கொரு முறை நேரடி ஆய்வு செய்து வருகிறோம்.

கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்திருந்த கவுன்சிலர்கள்

தற்போது நம் நகரில் சேரும் குப்பைகள் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இறைவன் நாடினால் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள், சுற்றுச் சுவர் முழுவதும் கட்டப்பட்டு, குப்பைகள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். எனவே பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு  தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

குப்பை கொட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர்

குப்பை கொட்டும் தளத்திற்கு சுற்றுச் சுவர் கட்டுவதோடு நின்று விடாமல் குப்பைகளை மேலாண்மை செய்யும் தொழில் நுட்பங்களை (WASTE MANAGEMENT SYSTEM) கையாள்வதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தி, குப்பைகள் மலை போல் குவியாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ள ஆக்கப் பூர்வ எதிர் கால திட்டங்களை கையாள வேண்டும் என்பது தான் அனைத்து பொது மக்களின் விருப்பமும், ஆசையும்....

Monday 19 March 2012

கீழக்கரையில் இன்று தமிழக அரசின் 'மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை' வழங்கப்படுகிறது - ஜும்மா பள்ளியில் குவியும் பொது மக்கள் !

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (19.03.2012) 10 மணி முதல் நடுத்தெரு ஜும்மா  பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு  தற்போது ஏராளமான பெண்கள், மற்றும் முதியவர்கள், புதிய அட்டைகளை பெற்று செல்வதற்காக வந்த வண்ணம் உள்ளனர். 





இந்த நிகழ்வினை நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலையில் பெரும்பாலான வார்டு கவுன்சிலர்களின் முயற்சியால் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இராமநாதபுரம் மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் திரு சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு, அடையாள அட்டை வழங்கும்  பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.





இது குறித்து திரு சுரேஷ் அவர்கள் கூறும் போது "ஏற்கனவே மருத்துவ காப்பீட்டுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் ரேசன் கார்டினைக் காட்டியோ அல்லது பழைய மருத்துவ காப்பீட்டு அட்டையை காண்பித்தோ, புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மின்வெட்டினால் கொஞ்ச நேரம் பணிகள் தொய்வடைந்தாலும்,  தற்போது மிக துரிதமான முறையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 5 மணி வரை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அட்டைகள் வழங்கப்படும்.  





அதே நேரம், ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் இல்லாத நபர்கள், விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழும்,  ரேசன் கார்டு நகலும் இணைத்து அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடமோ அல்லது அதற்கான சிறப்பு முகாம்கள் நடை பெறும் போதோ கொடுக்கலாம்." என்று தெரிவித்தார்.





பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவ காப்பிட்டுத் திட்ட முகாம் அலுவலகத்தை நேரிலோ அல்லது கட்டணமில்லா தொலை பேசியிலோ (தொலைபேசி எண் -  1800 425 3993) அணுகலாம்.