தேடல் தொடங்கியதே..

Saturday 7 January 2012

எப்போது வரும் இந்த '02.02.2012' ? - எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கீழக்கரை சமூக ஆர்வலர்கள் !

கடந்த மாதம் நம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் தலைமையில் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் கீழக்கரையில் பிளாஸ்டிக் பை,கப் போன்றவை விற்பதற்கு தடை விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து இக்கூட்டத்தில் கீழக்கரை வியாபாரிகளின் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 2-2-2012 முதல் பாலிதீன் விற்பனைக்கான தடை விதிப்பு அமலுக்கு வருமென்று ஒருமனதாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள்
பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள் கூட்டம்

இது குறித்து கிழக்கு தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது அமான் அவர்கள் கூறுகையில், "நம் நகராட்சியில் எடுக்கபட்டிருக்கும் இந்த நல்ல தீர்மானம் வரவேற்கத்தக்கது. முதலில் இந்த பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு ஒழிந்தாலே, நம் கீழக்கரை குப்பை பிரச்னை ஓரளவு குறைந்து விடும். நம் நகரில் தேங்கும் குப்பைகளில் 40 % க்கும் மேல் இந்த பிளாஸ்டிக் பைகள் தான் இருக்கிறது. பாலிதீன் ஒழிப்பு தினமான அந்த நல்ல நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம். பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நகராட்சி சார்பாக, பாலிதீன் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்சிகளை முன்னதாக ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.

யாருமே மதிக்காத 'குப்பைகள் கொட்டாதீர்கள்' அறிவிப்பு பலகை
நம் கீழக்கரை வியாபார பெருமக்களும், பொது மக்களும் இப்பொழுதே அதற்கான ஒத்திகையில் ஈடுபட வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, எளிதில் மண்ணில் மக்கும் பேப்பர் போன்ற பொருள்களின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் குப்பைகள் இல்லாத கீழக்கரையை உருவாக்கும் பெரு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மாபெரும் வெற்றி கிட்டும் என்பதில் ஐயமில்லை.

Wednesday 4 January 2012

கீழக்கரை நகராட்சி தலைவர் - தமிழக அமைச்சர்கள் சந்திப்பு, பொலிவு பெறுமா நம் கீழக்கரை ?

சென்னையில் பல்வேறு அமைச்சர்களை சந்தித்து, நல்ல பல கோரிக்கைகளை அவர்களிடம் மனுவாக அளித்துள்ள நகராட்சித் தலைவர் ராபியத்துல் காதரியா அவர்கள் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ். விஜய் அவர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி அவர்கள், சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா அவர்கள்,  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் அமைச்சர் பழனிச்சாமி அவர்கள் ஆகியோரை சந்தித்து  வளர்ச்சிப்பணிகளுக்கான கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளார்.



இது குறித்து நெய்னா முஹம்மது தண்டையல் தெருவை சேர்ந்த ஹமீது இப்ராகிம் அவர்கள் கூறும் போது, "கீழக்கரை நகர் மன்ற தலைவர் அவர்கள், நம் நகர் வளர்ச்சிக்கு தேவையான, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து, நமதூரின் முக்கிய பிரச்சனைகளை களைய, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ,அமைச்சர் பெருமக்களிடம் பெறப்பட்ட வாக்குறுதிகளை  விரைவில் நிலை நிறுத்த, நம் நகர் நலனை முன்னிறுத்தி, இடை விடாது முயற்சி மேற் கொள்ள வேண்டும். அதற்கான உள்ளத்தின் உறுதியை, இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டும்" என்று அக்கறையுடன் தெரிவித்தார்.



இந்த அமைச்சர்களின் சந்திப்புகள் குறித்து நகர் மன்ற தலைவர் ராபியத்துல் காதரியா அவர்களிடம் கேட்ட போது "நம் கீழக்கரையின் அனைத்து குறைகளும் விரைவில் களையப்பட்டு, அனைத்து அத்தியாவசிய பணிகளும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தரப்படும் என அனைத்து அமைச்சர்களும் உறுதி மொழி அளித்திருப்பதாக", மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 



முதன் முறையாக, கீழக்கரை நகராட்சியை பொறுப்பு ஏற்றிருக்கும் அ.தி.மு.க அரசு, நிச்சயம் நம் கீழக்கரை நலனில் அக்கறை கொண்டு, அனைத்து ஆக்க பணிகளிலும் தன் ஒத்துழைப்பை தரும் என்பதை நாம் நிதர்சனமாக நம்புவோம்.  தமிழக அமைச்சர் பெருமக்களிடம் பெறப்பட்ட வாக்குறுதிகள் காக்கப்படுமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Monday 2 January 2012

கீழக்கரையில் 'கிழக்கு முஸ்லீம் டிரஸ்ட்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை உதயம்

கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த, சமூக நலனில் பேராவல் கொண்ட நண்பர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து  'கிழக்கு முஸ்லிம் டிரஸ்ட்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை துவங்கியுள்ளனர். இந்த அறக்கட்டளையின் திறப்பு விழா இன்று (01.01.2012) இரவு 8.30 மணியளவில் கிழக்கு தெருவிலுள்ள மௌலானா காம்ப்ளக்ஸில் சிறப்பாக நடைபெற்றது. 

 
இவ்விழாவில் கிழக்கு முஸ்லிம் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரையற்றினார். கிழக்கு தெரு முஸ்லீம் ஜமாஅத் முக்கியஸ்தர் சாதிக் காக்கா அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கீழக்கரை அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள், அனைத்து சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த அறக்கட்டளைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் ஆஷிக் காக்கா அவர்கள் கூறும் போது, "நமது கீழக்கரை நகரில் எத்தனையோ அறக்கட்டளைகள் சிறப்பாக செயல்பட்டாலும் கூட, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே தான் எங்களுடைய நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'மருத்துவ சேவையை' முதன்மை நோக்கமாக முன்னிறுத்தி ஏழை, எளிய மக்களுக்கு சேவை புரியும் நல்ல நோக்கில் இந்த அறக்கட்டளையை துவங்கியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு மாத காலத்தில் அனைத்து மக்களின் நலனுக்காக 'ஆம்புலன்ஸ் சேவையை துவங்க உள்ளோம். இனி வரும் காலங்களில் இன்னும் பல நல்ல திட்டங்களை எங்கள் அறக்கட்டளை மூலம் செயல்படுத்த இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அறக்கட்டளை தலைவர் ஆஷிக் அவர்கள்
இந்த துடிப்பான கிழக்கு தெரு  இளைய தலைமுறையின் 'கிழக்கு முஸ்லீம் அறக்கட்டளை' மென் மேலும் வளர கீழை இளையவனின் செய்திகள் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Sunday 1 January 2012

தூய்மைக்கரை ஆகப் போகும் நம் கீழக்கரை - மீண்டும் நல்ல உள்ளங்களின் புதிய முயற்சி

 நம் கீழக்கரையில் குப்பை பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வே கண்டுபிடிக்கப் படாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கின்ற இந்த வேலையில் புதிய முயற்சியாக, கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பெரு முயற்சி மேற் கொண்டு  'எக்ஸ்னோரா' என்ற தொண்டு அமைப்பின் உதவியோடு திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை, பொது மக்கள் மத்தியில், குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு போன்ற சிறப்பான சேவைகளை, நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு செயல்படுத்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் இன்று (31.12.2011) மதியம் மேலத்தெரு சதக்கதுல்லா அப்பா வளாகத்தில் நடைபெற்றது.




இது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட நடுத்தெருவை சேர்ந்த நவாஸ்கான் அவர்கள் கூறும் போது, "இந்த நல்ல முயற்சியை மேற்கொண்டு உள்ள அனைத்து பொது நலவாதிகளுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர். அருண் ராய் அவர்கள் பேசும் போது கீழக்கரை நகராட்சியில் கடந்த 1964 ஆம் ஆண்டுக்கு பிறகு இது வரை துப்பரவு பணியாளர்களுடைய எண்ணிக்கை உயர்த்தப் படவில்லை. துப்பரவு பணியாளர்கள் 70 ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டியது, தற்போது 32 ஆக மட்டுமே இருக்கிறது.  ஆனால் இந்த பணியாளர்களை அவ்வளவு சீக்கிரம் அரசு நியமிக்காது என்று தன் வருத்தத்தை தெரிவித்ததுடன் இந்த பணியை  தொண்டு நிறுவனங்கள் தான் கையில் எடுத்து செய்ய வேண்டும் என்றார்.

பொது மக்களின் வரிப் பணத்தில் திட்டங்கள் தீட்டும் நம் அரசாங்கம் ஏன் சீக்கிரம் நடவடிக்கை எடுக்காது? என்று தெரியவில்லை. 1964 ம் ஆண்டில் இருந்த அதே மக்கள் தொகையா இன்னும் இருக்கிறது? தொண்டு நிறுவனங்களும், பொது நலவாதிகளும் முயற்சிகள் மேற்கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும். இதில் சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் அவர்களும், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும் அரசாங்க ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.", என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மனோகரன்


இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மனோகரன் அவர்கள் கூறும் போது, "ஒரு பக்கம் குப்பைகள் அள்ளிக்கொண்டு இருக்கிறோம். மற்ற்றொரு பக்கம், குப்பைகள் மலை போல் குவிந்து வருகிறது. காலையில் குப்பைகள் அள்ளி தெளித்த ப்ளீசிங் பவுடர் காய்வதுக்குள் மாலையில், இங்கு குப்பை அள்ளப்பட்டதா? என்று கூட தெரியாத அளவிற்கு குப்பைகள் குவிந்து விடுகிறது. இது போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொது மக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

எங்களுடைய துப்பரவு பணிகளில் கீழக்கரை வெல்பேர் அசோசியேசனும் இணைந்து பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்கள். அப்படி இருந்தும், துப்பரவு பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது. தற்போது எங்களுடன் எக்ஸ்னோரா அமைப்பினரும் சேர்ந்து பணியாற்ற இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளில் பொது மக்கள் குறைவாக கலந்து கொண்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு குப்பை இல்லாத கீழக்கரை நகரை உருவாக்க முயற்சிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

கீழக்கரை பொது மக்கள் அனைவரும் இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருந்து குப்பைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு பெற வேண்டும். குப்பைக் கரை என்று கேலி சித்திரமாக்கப்பட்ட நம் கீழக்கரை, இந்த நல்ல உள்ளங்களின் புதிய முயற்ச்சியால் தூய்மை கரையாகட்டும்.