தேடல் தொடங்கியதே..

Saturday, 9 November 2013

கீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து !

கீழக்கரை லெப்பை தெருவில், பெண்கள் தொழுகைப் பள்ளி (மதரஸா) அருகாமையில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று இருந்தது. அதன் மீது சட்ட விரோதமாக நகராட்சியின் முறையான அனுமதி இன்றி அவசர கதியில், வெறும் பத்தே நாளில் கட்டி முடிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் மட்டுமே பூர்த்தி அடைந்திருந்த 'சாதனை' வீட்டின் பால்கனி திடீரென இன்று (09.11.2013) மாலை 6.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அந்த நேரம் மதரஸாவில் இருந்து பிள்ளைகள் வந்து கொண்டிருந்தனர். இறைவன் அருளால்.. இந்த பெரிய விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை.இது குறித்து லெப்பை தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர். பைரோஸ் கான் அவர்கள் கூறும் போது "குறுகிய தெருக்களை கொண்ட நமது நகருக்குள் இது போன்று சட்ட விரோதமாகவும், தரமில்லாமலும், அவசர கோலத்தில் கட்டப்படும் வீடுகளின் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்கள் மீதும் காவல் துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த வீட்டின் ஏனைய பகுதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உடனடியாக இடிக்க ஆவன செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.கீழக்கரையில் இது வரை  பழைய கட்டிடங்களின் சிலாப்புகள்  மட்டும் தான் திடீர் திடீரென இடிந்து விழுந்து விபத்து நேர்ந்தது. ஆனால் தற்போது அனுமதியின்றியும், பிளேன் அப்ரூவல் இன்றியும் அவசர கோலத்தில் கட்டி முடிக்கப்படும் வீடுகளும் இடிந்து விழும் நிலை  ஏற்பட்டுள்ளது.  இவை இடிந்து விழும் முன்னரே நகராட்சியினர் வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வீட்டை இடிக்க முன் வர வேண்டும். இல்லாத போது  வீட்டில் குடியிருப்பவர்களே விரைவில் விபத்தை சந்திக்கும் அபாயம்  ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் திடீரென சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு !


கீழை இளையவன் வாசக நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ! 

(UPDATED 11.11.2013 11 am)

கடந்த சில தினங்களுக்கு முன்பு லெப்பை தெருவில், நகராட்சி கிணற்றை ஆக்கிரமித்து அவசர கோலத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விழுந்தது குறித்து, பொதுமக்கள் நலன் கருதி ஒரு செய்தியினை பகிர்ந்திருந்தோம். அதில் நாம் குறிப்பிட்டிருந்த வாசகங்கள் அத்தனையும் உண்மை தான் என்பதை விளங்கி கொள்ளாமல் நண்பர்கள் சிலர் கருத்து பதிவிட்டிருந்தனர். 

பொது சொத்துக்களை சமூகத்திற்கு பயனளிக்கும் விதமாக, பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தால் அதில் யாரும் குறை கூறவோ, அதை மீட்டெடுக்கவோ முனைந்திட மாட்டார்கள். மாறாக தனி நபரின் ஆக்கிரமிப்பிற்கு, சம்பந்தப்பட்ட பொது சொத்து சிக்கும் போது, அதற்கு எதிராக குரல் கொடுப்பது அவசியமாகிறது. அது ஒரு சதுரடி நிலமாக இருந்தாலும் சரியே.

அன்பு நண்பர்களே.. கீழை இளையவன் வலை தளத்தின் வாசகராக, இதற்கு முன்னர் பகிரப்பட்ட முந்தைய பதிவுகளையும் வாசித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். எந்த பதிவாக இருந்தாலும் அதில் ஆதாரங்களுடன் உண்மைகள் மட்டுமே பேசப்பட்டு இருக்கும். இதிலும் அவ்வாறே பதியப்பட்டுள்ளது. பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, சொந்த  பந்தங்களுக்காகவோ, அரசியல் இலாபத்திற்காகவோ செயல்படுபவன் நான் அல்ல. அவ்வாறு செயல்பட்டு வரும் தளமும் இதுவல்ல. 

மேற்குறிப்பிட்டுள்ள பொது சொத்து குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பதில் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரியும், சர்வேயரும் முறைப்படி ஆய்வு செய்து, நகராட்சிக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் கீழக்கரை நகராட்சியும் முறைப்படி கடந்த 11.10.2013 அன்று இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றிடுமாறு, சம்பந்தப்பட்ட வீட்டாருக்கு அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அதனை அகற்றிடவில்லை. அவ்வாறு உரிய நேரத்தில் வீட்டை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு  பகுதிகளையும், ஆபத்தான பகுதிகளையும் அகற்றி இருந்தால் இது போன்ற விபத்தை தடுத்து இருக்கலாம்.கீழக்கரை நகர் மிக குறுகிய தெருக்களை கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களும், மதரசா சிறுவர்களும் செல்லும் பாதை இது. இனி இது போல் யாரும் அவசர கதியில் கட்டிடங்களை கட்டி, மகத்துமிக்க மனித உயிர்களுடன் விளையாடி விடக் கூடாது என்பதும், பொது சொத்துக்களை யாரும் எள்ளளவும் அபகரித்து விடக் கூடாது என்கிற நல்ல நோக்கம் கொண்ட பதிவு இது. இது சம்பந்தமாக வீட்டின் உரிமையாளர், முகநூல் வாயிலாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கும் உரிய பதிலை அளித்து  இருக்கிறேன். இதற்கு மேல் தேவையற்ற விவாதங்கள் தொடர்ந்திட வழி  வகை செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். எனினும் இதனை சட்டத்தின் துணை கொண்டு எதிர் கொள்கிறேன்.