தேடல் தொடங்கியதே..

Saturday 13 July 2013

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

ஒவ்வொரு ஊரிலும் வித விதமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், செய்முறையும் சுவையும் வேறுபடலாம்.ஆனால் கீழக்கரைப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் சமைக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், ஒரே விதமான  தனிச் சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கிறது. அது போலவே கீழக்கரை சின்னக்கடைத் தெரு, மக்கள் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் நோன்புக் கஞ்சியின் மணமும், சுவையும் இருக்கிறது.





கீழக்கரை நோன்புக் கஞ்சி குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவைக் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

<<<<<  கீழக்கரை நோன்புக் கஞ்சி மணம் - இன்னும் வரும்.... 

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் மீது, முதன் முறையாக, தூய்மைப் பணிகள் ஒப்பந்ததாரர் இலஞ்ச குற்றசாட்டு - பொது மக்கள் அதிர்ச்சி !

கீழக்கரை நகராட்சியில் இருந்து, கீழக்கரை நகரின் பொது சுகாதாரம் கருதி, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்காக, 1 வது வார்டு பகுதி முதல் 11 வது வார்டு பகுதி வரையிலான, முதல் நிலை திடக் கழிவு சேகரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, தனியார் நிறுவனமான மதுரையை சேர்ந்த EXCEL NEAT AND TIDY AGENCY நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு, வேலைகள் நடை பெற்று வந்தது.  ஆனால் தற்போது இப்பகுதியில் துப்புரவுப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால் குப்பைகள் மீண்டும் தேங்க துவங்கியுள்ளது.



இந்நிலையில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் மீது, முதன் முறையாக, தனியார் தூய்மைப் பணிகள் ஒப்பந்ததாரர்  திரு. ஆறுமுகம் அவர்கள் நகராட்சி நிர்வாகத்தினர் மீது இலஞ்ச குற்றசாட்டு வைத்துள்ளார். தன்னுடைய குற்றசாட்டுகள் அனைத்தையும் மனுவாக எழுதி, அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளார். (அந்த கடிதத்தின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.). 

அந்த கடிதத்தில் அவர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் நகராட்சி தலைவியின் கணவர் உள்ளிட்டோர் மாதா மாதம் ரூ.30000 இலஞ்சம் கேட்பதாகவும், அதனால் நீதி மன்ற வழக்கு தொடர்ந்து தடுப்பு ஆணை  (LEGAL STAY  ORDER) பெறப் போவதாகவும், இதனால் எதிர் காலத்தில், துப்புரவுப் பணிகள் நடக்காமல், நகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கும் சூழல் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாததால் பொது மக்கள் படும் வேதனை குறித்து நாம் முன்னதாக வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.

கீழக்கரை தெருக்களில் மீண்டும் குப்பைகள் தேங்குவதால் பெரும் சுகாதாரக் கேடு - பொது மக்களே தெருக்களை கூட்டி அள்ளும் அவலம் !

கீழக்கரை தெருக்களில் மீண்டும் குப்பைகள் தேங்குவதால் பெரும் சுகாதாரக் கேடு - பொது மக்களே தெருக்களை கூட்டி அள்ளும் அவலம் !

கீழக்கரை நகராட்சியில் 1 வது வார்டு பகுதி முதல் 11 வது வார்டு பகுதி வரையிலான தெருக்களில் சேரும் குப்பைகளை, அகற்ற துப்புரவுப் பணியாளர்கள் யாரும் வராததால், கடந்த 10 நாள்களாக இந்த பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவெங்கும் குப்பைகள் சிதறிக் கிடக்கிறது. இந்த நாறும் குப்பைகளால், இந்த வார்டு பகுதிகளில் பெரும் சுகாதாரக் கேடு  நிலவி வருகிறது.

கீழக்கரையில் குறிப்பாக முஸ்லீம் பஜார் ஓட்டை கடிகாரம் சாலை, சேரான் தெரு மீன் கடைப் பகுதி, பழைய குத்பா பள்ளி தெரு, பருத்திக்காரத் தெரு, கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அருகாமை உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் அளவற்று குவிந்து வருகிறது. கீழக்கரை நகராட்சியில் இருந்து துப்புரவுப் பணிக்கு ஆள்கள் வராததால், தெருக்களில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை பொது மக்களே அள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து கீழக்கரை தெருவை சேர்ந்த மூத்த சமூக ஆர்வலர் அலி பாட்சா அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகராட்சி தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகளில் முதன்மையானது குப்பைகரையாக இருக்கும் நம் கீழக்கரையை, குப்பைகள் இல்லாத முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவது தான். ஆனால் கடந்த இரண்டாண்டு சாதனைகள், இந்த நாறும் குப்பைகளில் மட்டும் தான் நாற்றமெடுக்கிறது. 

தற்போது அள்ளப்படாத குப்பைகளால் நிலவும் அசாதாரண சூழலால் மீண்டும் பெயர் சொல்லத் தெரியாக நோய்கள் ஆட்டிப் படைக்குமோ என்று அச்சம், அனைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு நல்ல தீர்வு எட்டப்பட முயற்சிக்க வேண்டும்" என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார். 

Friday 12 July 2013

கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா கல்விக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

கீழக்கரை வடக்குத் தெரு ஜமாத்தின் பொதுக் குழு கூட்டம், ஜமாஅத் தலைவர் ஜனாப். M.Y.அக்பர் கான் அவர்கள் தலைமையில், கடந்த 05.07.2013 வெள்ளிக் கிழமை கிழமை அன்று, முஹைதீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இதில் வடக்குத் தெரு ஜமாஅத் பெரு மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்தனர்.


வடக்குத் தெரு நடை பெற்ற இந்த நிகழ்வின் போது, வடக்குத் தெரு முஹைதீனியா கல்விக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முஹைதீனியா கல்விக் குழுவின் தலைவராக ஜனாப். சேகு முஹைதீன் அவர்களும், துணைத் தலைவராக ஜனாப். M.M.S.முஹைதீன் இபுராஹீம் அவர்களும், முஹைதீனியா பள்ளியின் தாளாளராக ஜனாப். E.M.S.மவ்லா முஹைதீன் அவர்களும், செயலாளராக டாக்டர். செய்யது ராசிக்தீன் அவர்களும், துணை செயலாளராக ஜனாப். S.அஹமது மிர்ஷா அவர்களும், துணை செயலாளராக ஜனாப். M.Y.முஹம்மது ரபீக் அவர்களும், பொருளாளராக ஜனாப். A.பசீர் அஹமது (கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர்) அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

Thursday 11 July 2013

கீழக்கரையில் வெளுத்து கட்டும் விற்பனையில் KFC (கீழக்கரை பிரைடு சிக்கன்) - 'மாமா கடை' நோக்கி படையெடுக்கும் இளைய பட்டாளம் !

கீழக்கரை சின்னக்கடை தெரு, முத்தலிபு காக்கா அரிசிக் கடை அருகே, இயங்கி வரும் 'மாமா கடை' என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்படும் KFC  (கீழக்கரை பிரைடு சிக்கன்) கடையில் இரவு 7 மணியாகி விட்டால், சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற வயது வித்தியாசமின்றி  கூட்டம் அலை மோதுகிறது. 



இந்த கடையின் நிறுவனர், கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த செய்யது குத்புதீன் அவர்களின் கை வண்ணத்தில் உருவான மசாலாக் கலவையில் சமைக்கப்படும்  கீழக்கரை பிரைடு சிக்கன் தரும் அலாதி சுவையால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல் பணியாளர் போல உடையணிந்து, சுடச் சுட பரிமாறும் இவர் அன்புடன் உபசரிப்பது அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.


மேலும் இங்கு பரிமாறப்படும் மாட்டுக்கறி பக்கோடா, காலி பிளவர் பக்கோடா போன்றவைகளை,உண்பதற்காகவே தினமும் பல்வேறு தூர தெருக்களிலிருந்து தங்கள் நண்பர் பட்டாளங்களுடன்  படையெடுத்து வந்து   சுவைத்து செல்கின்றனர். தற்போது ரமலான் நோன்பு துவங்கியிருப்பதால் வியாபாரம் மேலும் விறு விறுப்புடன், களை கட்டத் துவங்கியிருக்கிறது.

இது குறித்து KFC 'மாமா கடை' நிறுவனர்  செய்யது குத்புதீன் நம்மிடையே பேசும் போது " இறைவன் அருளால் வியாபாரம் இப்போது சிறப்பாக இருக்கிறது. எனக்கு சிறு வயதில் இருந்தே சமையல் தான் தெரிந்த தொழில். ஆரம்பத்தில் இலங்கை நீர் கொழும்பில் சமையல் வேலை செய்து வந்தேன். 

பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு சென்னை ஐயப்ப செட்டி தெருவில்,  முதன் முதலாக 'கீழக்கரை மெஸ்' என்ற பெயரில் சாப்பாட்டுக் கடை நடத்தினேன். இப்போது இங்கு KFC துவங்கி மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டது.

வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்புக்கு காரணம், அன்பான உபசரிப்பு, சுத்தமான தயாரிப்பு, சுவையான சிக்கன் மட்டுமே " என்று தொழில் இரகசியத்தை மகிழ்ச்சியுடன்  சொல்லியவாறு வேலையில் பிசியாகி விட்டார்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை நகரில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்,  மாலையில் நோன்பை நிறைவு செய்யும் போது, சாப்பிடுவதற்கு முதன்மை உணவாக, சுவை மிகுந்த நோன்புக் கஞ்சியும், வடையும் இல்லாமல் இருப்பதில்லை. இதற்கென கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் பள்ளிவாசல்களிலும், பெரும்பாலான பொது நல சங்கங்களிலும்  நோன்புக் கஞ்சி சிறப்பாக தயாரிக்கப்படுகிறது.

இடம் : மேலத் தெரு புதுப் பள்ளி 

இடம் : மேலத் தெரு புதுப் பள்ளி 

இந்த ருசிமிக்க கீழக்கரை நோன்புக் கஞ்சியை, வீட்டிலுள்ள நோன்பாளிகளுக்கு வாங்கி செல்வதற்காக, தூக்குச் சட்டிகளுடனும், பாத்திரங்களுடனும் சிறுவர், சிறுமியர்கள், பெரியவர்கள், முதியவர்கள் பெண்கள் என  ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 

இடம் : பழைய குத்பா பள்ளி 
இடம் : நடுத் தெரு ஜும்மா பள்ளி 

நோன்புகஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து சக்தியையும் தந்து விடுகின்றது. வெளிநாடு வாழ் கீழக்கரை மக்கள்   உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் கூட, அங்கும் நோன்புக் கஞ்சியை தேடிய பயணம்  தொடரவே செய்கிறது. வெளி உணவகங்களில் நோன்பு  கஞ்சி கிடைக்காவிட்டாலும்  தாங்களாகவே தங்கள் வீட்டில்  தயாரித்தாவது  அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர்.  

கீழக்கரை 'நோன்புக் கஞ்சி' மணம் - இன்னும் வரும்.....

கீழக்கரையில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து - மின்சார வாரியத்திற்கு தமுமுக நன்றி !

கீழக்கரையில் இன்று (11.07.2013) மாதாந்திர பரமரிப்பு  பணி காரணமாக மின்தடை என்று இணைய தளங்களிலும், அனைத்து பத்திரிக்கைகளிலும் நேற்றைய தினம் செய்தி வெளியானது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் முதல் நாள் என்பதால் ஊர் மக்கள் சிறப்பான உணவுகள் ஏற்பாடு செய்யவும் மற்ற ஏற்பாடுகளுக்கும் மின்சாரம் மிக அவசியம் என்பதால் மின்வாரியம் இன்று மின்தடை செய்யாமல் வேறு ஒரு நாளில் மாதாந்திர பணி செய்ய வேண்டுமென தமுமுக,  SDPI, கீழக்கரை சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று கீழக்கரையில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமிய மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இது குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜீதீன்  அவர்கள் கூறியதாவது,

மேல் குறிப்பிட்ட காரணத்தை மனுவாக எழுதி கீழக்கரை மின்வாரிய அதிகாரியிடம் கொடுத்து வேண்டு கோள் வைத்தோம். அதனை ஏற்று கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஊர் மக்கள் பிரச்சனைகளை அறிந்து உடனே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

எங்கள் வேண்டுகோளை ஏற்று மின்வாரியம் இன்று மின்தடை செய்யாமல் வேரேரு நாளில் மாதாந்திர பணி செய்ய மாற்றியதற்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தார். 

பேட்டியின் போது நகர் செயலாளர் பவுசுல் அமீன் ஒன்றிய செயலாளர் சாதிக் மமக செயலாளர் இக்பால் துணை செயலாளர் சலீம் மற்றும் புகாரி PRO கமால் நாசர் மற்றும் அன்பின் அசன் வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான். உடன் இருந்தனர்

கீழக்கரையில் ஏழை நோன்பாளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட 20 மளிகை சாமான்கள் - சமூக ஆர்வலர்கள் பங்கேற்று வழங்கினர் !

கீழக்கரையில் ஏழை நோன்பாளிகள், நல்ல முறையில் நோன்புகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக,  அவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், தேங்காய், இஞ்சி, பூண்டு, மசாலா பொருள்கள்  உள்ளிட்ட 20 மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. 

இதற்கான நிகழ்வு நேற்று (10.07.2013) கிழக்குத் தெரு அப்பா பள்ளி எதிரே உள்ள ஹைராத்துல் ஜலாலியா மதரசாவில் நடை பெற்றது. சென்னை நண்பர்கள் குழுவிடமிருந்து பெறப்பட்ட மளிகை பொருள்களை, கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ஏழை நோன்பாளிகள்  குடும்பத்தார்களுக்கு வழங்கினர்.



                    

சென்னையில் வசிக்கும் பல்வேறு ஊர்களை சேர்ந்த சகோதரர்களின் அளப்பரிய முயற்சியால், செல்வந்தர்கள், தொழில் ரீதியான நண்பர்கள், கொடை வள்ளல்கள், ஜமாத்தார்கள், சமூக நல விரும்பிகள்,  பொது நல அமைப்பினர் உள்ளிட்டோர்களிடம் இருந்து ஜகாத், சதக்கா போன்றவற்றை பெற்று, தற்போது கீழக்கரை பகுதியில் வாழும் ஏழை நோன்பாளிகள் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

இந்த நண்பர்கள் குழுவினரால், கீழக்கரை மட்டுமல்லாது, கடந்த மூன்று வருடங்களாக சென்னை புற நகர் பகுதி, மதுரை, கம்பம், கல்லிடைக் குறிச்சி, ஆம்பூர் பகுதிகளிலும் ஏழை எளிய மக்கள் சிரமமின்றி நோன்பு நோற்கும் பொருட்டு, அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கீழக்கரை ஜாமியா நகர் பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 




தற்போது கிழக்குத் தெரு சுற்றுவட்டார பகுதியில் உள்ள  215 ஏழைக் குடும்பங்களுக்கு, இந்த மளிகைப் பொருள்கள் தரப்பட்டு உள்ளது. இறைவன் நாடினால் இன்னும் சிறப்பாக வரும் காலங்களில் கீழக்கரை நகர் முழுதும் உள்ள ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டு விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும், இந்த நண்பர்கள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.  

கீழக்கரை பள்ளி வாசல்களில் தராவீஹ் தொழுகை - திரளாக பங்கேற்ற இஸ்லாமிய பெருமக்கள் !

கீழக்கரை நகரில் ரமளான் மாதம் துவங்கிய செய்தி தெரிந்ததையடுத்து, அனைத்து பள்ளி வாசல்களிலும், தராவீஹ் எனும் இரவு நேரத் தொழுகைகள் சிறப்பாக ந‌டைபெற்ற‌து. மிகுந்த எதிர்பார்ப்புடன் ரமலான் நோன்பை வரவேற்கும் அக மகிழ்ச்சியில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் திரளாக இரவு நேர தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌னர்.

இடம் : ஓடக்கரைப் பள்ளி, கீழக்கரை 
இடம் : நடுத் தெரு ஜும்மா பள்ளி, கீழக்கரை 
தொழுகை நிறைவடைந்தவுடன், இறைவனை இறைஞ்சிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து சலாம் கூறியும், ரமலான் நோன்பு  வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.

Wednesday 10 July 2013

கீழக்கரையில் புனித ரமலான் நோன்பு நாளை (11.07.2013) துவக்கம் - கீழக்கரை டவுன் காஜி அறிவிப்பு !

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருப்பது ஆகும். தமிழகமெங்கும் இன்று முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நோன்பு துவக்க நாள், ரமலான் பிறை நேற்று எங்கும் தென்படாத காரணத்தாலும், ஷாபான் மாதம் முழுமையாக நிறைவடைந்து விட்டதாலும், நாளை (வியாழக்கிழமை) முதலாவது நோன்பு என்ற‌ முறைமையை, கீழக்கரை டவுன் காஜி A.M.M.காதர் பக்‌ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நாளை (11.07.2013) முதல் ரமலான் நோன்பு நோற்கப்படுகிறது. நாளை அதிகாலை 4.19 மணிக்கு, நோன்பு வைக்கும் சஹர் நேரம் முடியும் முடிவடைகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோன்பு நேரம் அதிகமாக இருக்கும். முதல் நோன்பு அதிகபட்சமாக 14 மணி நேரம் மற்றும் 43 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.


இது படிப்படியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குறைந்து கடைசி ரமலான் நோன்பு 14 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்களாக இருக்கும். இம்முறை ஐந்து வெள்ளிக் கிழமைகள் ரமலான் நோன்பில் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 29 வது நோன்பு நாளான ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை ரமலான் பிறை தென்படாமல் போனால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 30வது நோன்பு நாளாக கணக்கில் கொள்ளப்படும். 


துபாய் உள்ளிட்ட வளைகுடாப் பகுதிகளில் ரமலான் நோன்பு இன்று (10.07.2013) புதன்கிழமை துவங்கியது: இதனையொட்டி செவ்வாய்க்கிழமை தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை துவங்கியது. துபாயில் தமிழக முஸ்லிம்கள் அதிகம் இருந்து வரும் தேரா குவைத் பள்ளி, கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி-பிளாக் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்புத் தொழுகைகளில் அதிகமானோர் பங்கேற்றனர்.

கீழக்கரையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் முஹம்மது அனஸ் அவர்களுக்கு 'உயிரை காத்த உன்னத சேவை'க்காக பாராட்டு பத்திரம் - கோவை போலீஸ் கமிசனர் வழங்கினார்.

கீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி, சீரிய முறையில் பணியாற்றி வரும் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த யூசுப் சாகிப் அவர்கள் மகனார் முஹம்மது அனஸ் அவர்கள் கடந்த 2011 ஆம் வருடம் தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். தற்போது கோவை மாவட்டத்தில் பணியாற்றும் அனஸ் அவர்களுக்கு கடந்த 08.05.2013 அன்று உயிரை காத்த உன்னத சேவைக்கான பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வழங்கினார்.


காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் முஹம்மது அனஸ் அவர்கள்  கோவை நகரின் பிரதானப் பகுதியான லக்ஸ்மி மில் சந்திப்பு அருகே உள்ள AXIS வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, சிக்கி தவித்த வங்கி பணியாளர்களை, விரைந்து மீட்டு அவர்களின் உயிரை காத்தமைக்காக, இந்த பாராட்டுப் பத்திரம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 


வெளிநாடு செல்லாமல் நமது தாய்நாட்டிலேயே பணி புரிய வேண்டும் குறிப்பாக அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்கிற நல்ல நோக்கோடு சென்னை புதுக்கல்லூரியில் 2005 - 2008 ஆண்டுகளில் பி.காம் பட்டபடிப்பை முடித்த இவர் தொடர்ந்து மேற்படிப்பான எம்.பி.ஏ. 2008 - 2010 வரை கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். 



பின்னர்  அதே வருடத்தில் அரசு தேர்வு எழுதி, 2011 ல் சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.  அதனை தொடர்ந்து ஓராண்டாக  சப் இன்ஸ்பெக்டரக்கு உண்டான‌ பல் வேறு பயிற்சிகளை மேற்கொண்டு, பணியில் இணைந்தார். தற்போது தனது சிறப்பான பணியினால் பல்வேறு பாராட்டுகளை பெற்று வருவது கீழக்கரை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது. 

சப் இன்ஸ்பெக்டர் முஹம்மது அனஸ் அவர்கள், இன்னும் பல்வேறு சாதனைகள் புரிந்து, உயரிய விருதுகளை பெற்று, காவல் துறையில் ஜொலிக்க, கீழை இளையவன் மற்றும் கீழக்கரை டாட் காம் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரையில் நாளை (11.07.2013) மின்சார விநியோகம் இருக்காதாம் - முதல் நோன்பை எதிர் நோக்கி இருக்கும் பொது மக்கள் தகுந்த முன்னேற்பாடுகள் செய்து கொள்ள அறிவிப்பு !

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால், கீழக்கரை நகர், ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த, சுற்று வட்டார பகுதிகளில் நாளை வியாழக் கிழமை  (11.07.2013) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று இராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆகவே ரமளானின் முதல் நோன்பை எதிர் நோக்கி இருக்கும், நம் பகுதி பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் வாசிக்கும் இந்த தகவலை, நம் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday 9 July 2013

கீழக்கரை நகராட்சியில் கவுன்சிலர்களின் 'கூச்சல் குழப்பங்கள்' அத்தனையும் திட்டமிட்ட சதியே.. - கீழக்கரை சேர்மன் தரும் பிரத்யோக பேட்டி !

கீழக்கரை நகராட்சியில் இன்று (09.07.2013) காலை நடை பெற்ற நகர் மன்ற கூட்டத்தில், முறையாக நகராட்சி சட்ட விதிகள்  பின்பற்றப்படாமல், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் காவல் துறையினரால் சமாதனம் பேச முயற்சிக்கப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் செய்த கவுன்சிலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சித் தலைவி இராவியத்துல் கதரியா அவர்கள் கீழை இளையவன் மற்றும் கீழக்கரை டாட் காம் வலை தளத்திற்கு தரும் பிரத்யோக பேட்டி பின் வருமாறு :


கீழை இளையவன் : கீழக்கரை நகராட்சியில் இன்று நடை பெற்ற கூட்டத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், 8 கவுன்சிலர்களை வைத்தே தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

கீழக்கரை சேர்மன் :  இன்று நடை பெற்ற சாதாரண கூட்டத்தில் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளது. அனைத்து கவுன்சிலர்களுக்கும், இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே கூடத்திற்கான அழைப்பும், தீர்மான பொருள்களின் நகலும் வழங்கப்பட்டு விட்டது. அதில் கூட்டம் 11.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு வராமல், நகராட்சிக்கு எதிரே உள்ள சாயாக் கடையில் அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும் வரை நகராட்சி கூட்ட வளாகத்திற்குள் வரவில்லை. அவர்கள் சரியான நேரத்திற்கு வராததால், கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. 

மொத்த நகர் மன்ற உறுப்பினர்களில், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வந்தாலே, கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றலாம். 8 பேர் கூட்டத்தில் கலந்துள்ளனர். இதில் எந்த சட்ட விதி முறைகளும் மீறப்பட வில்லை. இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளைவித்து வரும் குழப்பங்கள் அனைத்தும் பணத்திற்கு தான். இதில் மக்கள் நலன் குறித்த அக்கறை ஏதும் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்து பார்க்கும் மக்கள் அனைவரும் நன்கறிவர்.




கீழை இளையவன் : நகராட்சி கூட்டத்தில் சுமார் 17 பக்கங்கள் கொண்ட, 29 தீர்மான பொருள்கள் எதுவும் வாசிக்கப்படாமல் அவசரகதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகிறார்களே ..?

கீழக்கரை சேர்மன் :  குற்றச்சாட்டு பொய்யானது. அனைத்து தீர்மானங்களும் முறைப்படி வாசிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலுடன் தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கீழை இளையவன் :  கவுன்சிலர்களின் கைது குறித்த உங்கள் கருத்து ?

கீழக்கரை சேர்மன் :  கவுன்சிலர்கள் பலர் 'இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது', 'தீர்மானங்கள் நிறைவேற விடாமல் பிரச்சனை செய்ய வேண்டும்' என்று நேற்றே, கூட்டம் போட்டு, திட்டமிட்டே இன்று அரங்கேற்றம் செய்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கமிஷனரை ஆக்ரோசத்துடன் சப்தம் போட்டு மிரட்டியதால் தான், அவர் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த கைது விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. கவுன்சிலர்களின் இந்த தேவையற்ற போராட்டம், பொது மக்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதை, இவர்கள் உணர்ந்து நடக்க வேண்டும். 

கீழை இளையவன் :  கீழக்கரை நகராட்சியில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கூச்சல், குழப்பங்களால், கீழக்கரை நகரின் வளர்ச்சியை பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்களே ? அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வழி வகை செய்யப்படுமா ?

கீழக்கரை சேர்மன் :  உண்மை தான். அதற்காக எத்தனையோ முற்சிகள் மேற்கொண்டும் பயன் ஏதும் இல்லை. ஒவ்வொரு வளர்ச்சிப் பணிகளும் நிறைவேற பணம் பெற்றுத் தான் ஒப்புதல் வழங்குவோம் என்று ஒரு சில கவுன்சிலர்கள் வெளிப்படையாகவே கேட்கின்றனர். இல்லை என்கிற போது, கூட்டணி சேர்ந்து கொண்டு அவதூறாக குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். பணத்திற்காக அல்லாமல், மக்களுக்கு பணியாற்ற விரும்பும் கவுன்சிலர்களாக இருந்தால் மட்டுமே, இங்கு ஒற்றுமை என்பது ஏற்படும்.

இருப்பினும் கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கு எங்களால் இயன்ற அளவிற்கு அயராது பாடுபடுவோம். இது வரை பணத்திற்காக எத்தனையோ நோட்டீஸ்களையும், போஸ்டர்களையும் அவதூறாக வெளியிட்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நான் தவறுதலாக ஒரு முறை கூட யாரிடமும் கருத்து கூறியது கிடையாது. நம்மை படைத்த படைத்த இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிவான். காலம் பதில் சொல்லட்டும். இவ்வாறு தெரிவித்தார்.

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்று (09.07.2013) நடைபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

கீழக்கரை ரோட்டரி சங்கம், முஹம்மது சதக் கல்லூரி ரோட்ராக்ட் கிளப்,  மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை மற்றும் வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய பள்ளி, கல்லூரி ஆசிரிய பெரு மக்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (09.07.2013) செவ்வாய்க் கிழமை  காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளி வாளாகத்தில் நடை பெற்றது.







இந்த இலவச முகாமை ரோடரியன். மேஜர் டோனர். டாக்டர். சின்னதுரை அப்துல்லாஹ் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் கீழக்கரை நகரில் உள்ள ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரிய பெருந்தகைகள், ஊழியர்கள் கலந்து கொண்டு, தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். இந்த நிகழ்வில் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் பிரதானிகள், வடக்குத் தெரு ஜமாஅத் முக்கியஸ்தர்கள், முஹைதீனியா பள்ளியின் நிர்வாகத்தினர் மற்றும் பல்வேறு பொது நல அமைபினர்கள் கலந்து கொண்டனர்.

FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit