தேடல் தொடங்கியதே..

Monday 23 January 2012

கீழக்கரை நகராட்சியில் வேலை நேரத்தில் காணாமல் போன அதிகாரிகள் - பொது மக்கள் தேடி திரிந்த அவலம் !

இன்று திங்கள் கிழமை (23.01.2012) கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு அரசாங்க விடுமுறையா ? என்று தான் அங்கு வந்து, அதிகாரிகளைத் தேடி அலைந்து திரிந்த பொது மக்களை பார்க்கும் போது எண்ணத் தோன்றியது. இன்று நகராட்சி அலுவலகமே வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக வேலை நேரம் ஆரம்பித்து நண்பகல் 12 மணி ஆகியும் அலுவலர்கள் ஒரு சிலரை தவிர யாரும் வரவில்லை. நகராட்சி அலுவலகத்திலுள்ள அனைத்து அலுவலர்களின் இருக்கைகளும் காலியாக இருந்தது.. 



அதிகாரிகளை காணவில்லை ! கண்டு பிடிக்க யாரிடம் சொல்வது ??


இது குறித்து அங்கு வந்து அதிகாரிகளை தேடித் திரிந்து களைத்துப் போன சின்னக்கடை தெருவை சேர்ந்த ரியாஸ் கான் அவர்களிடம் கேட்ட போது, "காலை 10 மணியிலிருந்து பொது தகவல் அதிகாரியை சந்திக்க இங்கு காத்திருக்கிறேன். இப்போது 12 மணியாகி விட்டது. இது வரை எந்தவொரு முறையான பதிலுமில்லை. வந்திருந்த கீழ் நிலை ஊழியர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் அனைவரும் இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாளுக்கு சென்று விட்டதாக கூறுகிறார்கள். நகராட்சியில் இருந்து ஒருவர் தான் அதில் கலந்து கொள்வார். அலுவலகத்தை விட்டு அத்தனை அதிகாரிகளுமா அங்கு சென்று விட்டார்கள் ? என்று தெரியவில்லை." என்று வெறுப்புடன் தெரிவித்தார்.


ஐயா, பணி நேரத்தில் தாங்கள் எங்கே சென்று உள்ளீர்கள்?


நம் கீழக்கரை நகராட்சியில் களப் பணிகள் ஆற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தவிர நகராட்சி அலுவல கட்டிடத்திலேயே பணியாற்றும் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தான் 'பேப்பர் ஒர்க்' என்று சொல்லக் கூடிய, அலுவலக கோப்புகளை தயாரிப்பது முதல், பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்வது, அலுவலக கணக்கு வழக்குகளை சீர் செய்வது, சம்பந்தப்பட்ட கீழ் நிலை ஊழியர்களுக்கு பரிந்துரைப்பது, ஒப்புதல் கையொப்பமிடுவது வரை அத்தனை நகராட்சி நிர்வாக வேலைகளையும் செய்பவர்கள்.


சில பொறுப்புள்ள கீழ் நிலை ஊழியர்கள்
 
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து, பணிகளை சரிவர செய்யாமல் 'ஓ.பி' அடித்து, பொது மக்களை அலைகழிப்பு செய்வது கடும் கண்டனத்துக்குரியது. நம் கீழக்கரை நகராட்சியில், நிரந்தர நகராட்சி ஆணையரும், சுகாதார ஆய்வாளரும் இன்னும் நியமிக்கப் படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த செய்தி :


 
என்ன கொடுமை சார், இது ?

நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவல் நிலையங்களில் 'எஸ்.பி' அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு பணியில் இல்லாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். (பார்க்க பெட்டி செய்தி). அதே போல் சம்பந்தப்பட்ட துறை மேலதிகாரிகளும், இது போன்ற அலுவலகங்களில் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு, வேலை நேரத்தில் பணியில் இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நன்றி : தினத் தந்தி நாளிதழ் - 23.01.2012


அலுவலகப் பணி சம்பந்தமாக, எங்கு வெளியில் சென்றாலும் சரி, "தான் எங்கு சென்று இருக்கிறேன். எத்தனை மணிக்கு பணிக்கு திரும்புவேன்", என்பதை அதற்கான அறிவிப்பு பலகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்பது அரசாங்க சட்டம். ஆனால் எதையும் முறைப்படி செய்யாமல் பொது மக்களை வெறுப்படைய செய்வது  நியாயமற்றது.

மேலும் உச்சநீதி மன்ற வழக்கு எண் 6237 /1990  தீர்ப்பு நாள் : 05.11.1993 லக்னோ வளர்ச்சி அதிகாரக் குழு - Vs - M .K . குப்தா  என்பவர் வழக்கில் "ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு"  என்பதனை சட்டபூர்வமாக அறிவித்துள்ளது.  ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்கள் தவறுகளை உணர்ந்து, பொறுப்புள்ள அதிகாரிகளாக பணி செய்து, மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்க முன் வர வேண்டும்.