தேடல் தொடங்கியதே..

Wednesday 18 April 2012

கீழக்கரையில் போதிய இட வசதியின்றி தவிக்கும் 'அரசு பொது நூலகம்' - கவனிப்பார் யாருமுண்டா ?

கீழக்கரையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முஸ்லீம் பஜாரில், அரசு பொது நூலகம் இயங்கி வந்தது. இது அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், ஊரின் மத்தியில் பிரதானமான இடத்தில் இருந்தது.  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு தேர்வுகளுக்கு முயற்சிப்போர், பொதுமக்கள் என அனைவரும் சிறப்பாக பயனடைந்து வந்தனர்.

போதிய இடவசதியின்றி இயங்கும் நூலகம்


நூலக கட்டிடம் மழை காலங்களில் ஒழுகும் நிலையிலும், மேற்கூரை இடிந்து விழும் நிலையிலும் இருந்தது. இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன் பெய்த கன மழையின் விளைவாக, விலை மதிக்க முடியாத, நூற்றுக்கணக்கான புத்தகங்கள், நூலகத்தில் புகுந்த மழை நீரால் வீணாகியது. அந்த கட்டிடம் பழுதடைந்து, தற்போது இடிக்கப்படும் நிலையில் உள்ளதால் அரசு பொது நூலகம், கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அன்பு நகரில், ஒரு குறுகிய சந்திலுள்ள கடைசி வீட்டின் மாடியில் இயங்கி வருகிறது.

நூலகம் செயல்படும் அன்பு நகரின் சந்து




இந்த சிறிய வீட்டில், இட நெருக்கடி காரணமாக, புத்தகங்கள் வைக்க பயன்படுத்தும் பீரோக்களும், ராக்கைகளும் வீதியிலேயே கிடத்தப்பட்டிருக்கிறது. அங்கு வாசிப்புப் பகுதியில் 6 வாசகர்கள் மட்டுமே அமர்ந்து வாசிக்கக்கூடியதான ஆசன வசதிகள் மட்டுமே காணப்படுகிறது. ஆகவே நூலகத்திற்கு அரசு சார்பில் தனியாக இடம் ஒதுக்கி கட்டுமானம் செய்து தர வேண்டுமென இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இட நெருக்கடியால் தெருவில் கிடக்கும் நூலக மேஜைகள், பீரோக்கள்




இது குறித்து கீழக்கரை நூலக பொறுப்பாளர் திரு.கோவிந்தராஜனிடம் கேட்ட போது  "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்குத் தேவையான தகவல்களடங்கிய நூல்கள் உட்பட, பல அரிய நூல்களைக் கொண்டுள்ள இந்நூலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக - புத்தகங்களை பார்வைக்கு வைக்க போதிய இட வசதி இல்லை. கீழக்கரை நகர் பகுதிக்குள், நூலகத்திற்கு யாரும் இடம் தராத காரணத்தால் தான், தற்போது புற நகர் பகுதியில் இயங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.

கட்டு கட்டாய் புத்தகங்கள் ஓய்வெடுக்கும் அறை !
'ஒரு நூலகம் திறக்கப்படும்போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகிறது' என்றார் மகாத்மா. இது போன்ற பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய பணிகளுக்கு - அரசின் தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) மூலம் உதவி பெற அனுமதி உள்ளது. தன்னிறைவு திட்டத்தின் விதிகள் படி - திட்ட மதிப்பீட்டில், பொது மக்கள் மூன்றில் ஒரு பங்கு வழங்கினால், தமிழக அரசு இரண்டு பங்கு வழங்கும். ஆனால் கட்டிடப் பணியை அரசு ஒப்பந்தக்காரர்களே செய்வர். ஆனால், 50% பொதுமக்கள் செலுத்தினால் கட்டிடப் பணியை - ஆர்வலரே தரமான முறையில் கட்டலாம் என்பது விதிமுறை.

நூலக அடுப்பாங்கரையில் நூல்கள் !
இதனைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவரும், நூலக வாசகர் வட்டத்தின் புரவலர்களும் புதிய நூலக கட்டிடம் கட்டுவது குறித்து, நம் நகரில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் எடுத்துரைத்து ஆவன செய்யுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

“காலம் என்னும் ஆழ்கடலில் நீந்துகிறவனுக்கு அறிவு என்னும் துறைமுகத்தை அடையக் கலங்கரை விளக்காக அமைந்துள்ளவை சிறந்த நூல்களே"   

 நூல்கள் வாழ..  நூலகம் தேவை... வாழ வைக்க யாருமுண்டா ?

கீழக்கரை 500 பிளாட் பகுதியில் தாகம் தீர்க்கும் 'நீர் மோர் பந்தல்' திறப்பு - கீழக்கரை த.மு.மு.க முயற்சி !

நம் கீழக்கரை நகரின் புற நகர் பகுதியாக இருக்கும் 500 பிளாட் பகுதியில், மரங்கள் மிகுதியாக இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் இருந்து, ஊருக்குள் நடை பயணமாக வரும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 




ஆகவே கொளுத்தும் கோடையில் இந்த பகுதி மக்களின் தாகம் தீர்க்க,  கீழக்கரை தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று காலை நடை பெற்றது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை த.மு.மு.க தலைவர் செய்யது இபுராகிம் தலைமை தாங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தஸ்பீக், மமக செயலாளர் அன்வர், கீழக்கரை நகர் செயலாளர் இக்பால், பொருளாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நகர் நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tuesday 17 April 2012

கீழக்கரையில் இன்று (17.04.2012) நடைபெறும் உதடு, அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் !

நம் கீழக்கரை நகரில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு / உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (17.04.2012) மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கீழக்கரை நகர் நல அலுவலகத்தில் (K.T.M.பில்டிங், பாண்டியன் கிராம வங்கி அருகில்) நடை பெற உள்ளது.


முகாம் நடைபெற்ற போது எடுத்த படம் (UPDATED PHOTO)
 


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப். செய்யது இபுராஹீம் ( இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு ) அவர்கள் கூறும் போது " இந்த இலவச முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 40 வயது வரை உள்ள உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.


ஜனாப். செய்யது இபுராஹீம் அவர்கள்

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள்

அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்து, மாத்திரை, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே நம் நகர் மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் (நேரம் : மாலை 4 மணி)
கீழக்கரை நகர் நல இயக்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ்

தாங்களுக்கு  தெரிந்த, நபர்கள் எவெரேனும் மேற்கண்ட பாதிப்புக்குள்ளாகி இருந்தால், அவர்களை இந்த முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். 

Sunday 15 April 2012

கீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி !

கீழக்கரையில் குப்பைகள் பிரச்சனை எங்கு நோக்கினும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை காண தற்போது தில்லையேந்தல் பகுதியில், குப்பை கிடங்கு கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பெரு முயற்சி மேற் கொண்டு  'எக்ஸ்னோரா' என்ற தொண்டு அமைப்பின் உதவியோடு திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை, பொது மக்கள் மத்தியில் குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சிறப்பான சேவைகளை, நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு செயல் படுத்தி வருகிறார்கள்.


வழங்கப்பட்டு வரும் குப்பை வாளிகள்

இந்த வரவேற்க்கத்தக்க முயற்சியின் ஒரு பகுதியாக, மேலத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். அஹமது லாபீர் மற்றும் அவர்கள் சார்ந்த குழுவினர் 'யூத் எக்ஸ்னோரா' அமைப்பினரின் வழிகாட்டுதலின் படி, சோதனை முயற்சியாக, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை, வீடுகளிலேயே பிரிக்க, பச்சை மற்றும் சிகப்பு வண்ணத்திலான, இரண்டு பிளாஸ்டிக் வாளிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.





இதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி லாபீர் காக்கா அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இதில் அஸ்கான் தலைவர் சபீர் காக்கா, அஹமது லாபீர் காக்கா, இஸ்மாயில் காக்கா, கேப்டன்.ஜாபர் ரிபாய் காக்கா, மெஜஸ்டிக் ஜாவித் காக்கா, நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா, ரிஸ்வான் காக்கா, இஞ்சினியர் கபீர் மற்றும் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது குப்பை பிரச்சனை சம்பந்தமான பல்வேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


வாளிகளுடன் கொடுக்கப்படும் கையேடு

இது குறித்து அஹமது லாபீர் அவர்கள் கூறும் போது "முதற்கட்டமாக, 2000 வாளிகளை மேலத்தெரு, சங்கு வெட்டி தெரு, பன்னாட்டார் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் கொடுத்து வருகிறோம். விரைவில் நம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் வாளிகள் வழங்கப்படும். வாளிகளோடு ஒரு கையேடும் வழங்கியுள்ளோம். அதில் குப்பைகளை, இல்லத்தரசிகள் சுலபமாக பிரிப்பதற்கு ஏதுவாக, படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.


 வாளிகளுடன் கொடுக்கப்படும் கையேடு
 
அதனை பொதுமக்கள் அனைவரும் புரிதலுடன் படித்து, குப்பைகளை பிரித்து வெல்பேர் பணியாள்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  இறைவன் நாடினால், குப்பை கொட்டும் தளத்தின் வேலைகள் நிறைவடையும் தருணத்தில், 'குப்பை மேலாண்மை' (WASTE MANAGEMENT) நகராட்சி ஒத்துழைப்போடு முழு வீச்சில் துவங்கும்" என்று மிகுந்த எதிர் பார்ப்புடன் தெரிவித்தார்.

நம் கீழக்கரை நகரை குப்பையில்லா நகராக மாற்ற, மாபெரும் முயற்சி எடுத்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

கீழக்கரையில் இன்று (15.04.2012) நடைபெறும் 'போலியோ சொட்டு மருந்து முகாம்' !

இந்தியா முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு இரண்டாவது தவணையாக போலியோ தடுப்பு கூடுதல் சொட்டு மருந்து இன்று (15.04.2012) வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் என்ற நோயை  முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்படுகிறது.




தமிழகத்தில் 40,000 மையங்கள்:
  தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வைத்திய சாலைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் சுமார் 40,000 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.


விழிப்புணர்வு பிரசாரத்தில் களமிறங்கி இருக்கும் சிறுவர்கள் !  ( இடம் : நடுத் தெரு )

நம் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் இன்று (15ம் தேதி) இரண்டாம் கட்டமாக போலியோ சொ ட்டு மருந்து வழங்கும் முகாம் நடை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடந்த முகாமில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயம் வழங்க வேண்டும். கீழக்கரையில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி, ஹமீதியா தொடக்கப் பள்ளி, கிழக்குத் தெரு பள்ளிவாசல் நுழைவு வாயில் போன்ற இடங்களில் நடை பெற்று வருகிறது.  



கிழக்குத் தெரு பள்ளிவாசல் அறிவிப்பு பலகை

இந்த முகாம் மாலை 5 மணி வரை நடை பெற இருக்கிறது. ஆகவே தவறாது தாய்மார்கள் அனைவரும், இந்த இலவச முகாமை பயன்படுத்தி 5 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து கிடைக்க செய்யும் படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேலும் வெளிநாடு வாழ் சகோதரர்கள், தங்கள் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு, இந்த முகாமிற்கு செல்ல அறிவுறுத்துமாரும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.