தேடல் தொடங்கியதே..

Saturday 19 October 2013

கீழக்கரையில் பலத்த இடியுடன் கூடிய மிதமான மழை !

கீழக்கரை நகரில் இன்று (18.10.2013) காலை 11.45 மணிக்கு 15 நிமிடம் லேசான மழை பெய்தது. அதை தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 9 மணி முதல் மின்னல் வெட்ட துவங்கியது. தற்போது பலத்த இடி முழக்கத்துடன், மிதமான மழை விட்டு..விட்டு பெய்து வருகிறது. இதனால் கீழக்கரை நகரம் குளிர்ந்துள்ளது. இடையே சிறிது நேரம் மின்சாரமும் தடைபட்டது.




கீழக்கரையில் தற்போது மழைப் பொழிவு துவங்கியுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, சகோதரர்.குத்புதீன் ராஜா அவர்கள் முகநூல் வழியே இறைவனை இறைஞ்சும் வாசகங்கள்..

சகோதரர்.குத்புதீன் ராஜா
கருணைக் கடலே!
எங்கள் கண்ணீரைக் கண்டு
நீ விண்ணைத் திறந்தாய்!
உன் அருளால் எம் மண்ணும் குளிர்ந்தது!
எங்கள் இதயமும் குளிர்ந்தது..!

மழையருள் தந்த
மாட்சிமை பொருந்தியவனே!
இன்றுபோல் உன் அருள் மழையை
அனுதினமும் பெய்வித்து
வறண்டு கிடக்கும் எம் கேணிகளை
நிரப்பமாக்கியருள்வாய் நித்தியமானவனே..!

Friday 18 October 2013

கீழக்கரை மணல் மேடு கண்காட்சி திடலில் புதிதாக 'ஆம்புலன்ஸ்' வசதி - சுதாரிப்பில்லாமல் இருக்கும் சுகாதார நடவடிக்கைகளை இனி வரும் காலங்களிலாவது செயல்படுத்த வேண்டுகோள் !

கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் மேற்பார்வையில் நடைபெறும் கண்காட்சி திடலில் சுகாதாரம்,பாதுகாப்பு உள்ளிட்டவைகள் கடந்த சில ஆண்டுகளாக கேள்விக்குறியாகி வருவதாகவும், அவற்றை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட ஜமாத்தார்கள் முன் வர வேண்டும் என்றும் கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள் பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் கண்காட்சி திடலில் முதல் முறையாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சுகாதார நடவடிக்கையோ,பாதுகாப்பு அம்சங்களோ ஏற்படுத்தப்படவில்லை.



 குப்பைகளுக்கு நடுவே ஒரு கானா பாடல்...

பட விளக்கம் : மணல் மேட்டில் குப்பைகளை அகற்றக் கோரி, குப்பைகளுக்கு நடுவே அமர்ந்து கானா பாடும் சமூக ஆர்வலர் உஸ்மான் அவர்கள் 





இது குறித்து சமூக ஆர்வலர்  சேகு சதக் இப்ராஹிம் அவர்கள் நம்மிடையே பேசும் போது "ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளை செய்தமைக்கு நிர்வாகத்திற்கும், கீழக்கரை முஸ்லிம் டிரஸ்டிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் சுகாதார நடவடிக்கையில் ஏதும் முன்னேற்றம் இல்லை. 

குப்பைகள் பெட்டிகள் முறையாக இல்லாததால் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன. இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே நிர்வாகம் உடனடியாக அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் கடைகளை வைத்திருப்போர் கட்டாயம் குப்பை பெட்டிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

இது குறித்து கீழக்கரை ஜின்னா தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் உஸ்மான் அவர்கள் கூறும் போது "நேற்று மாலை கண்காட்சி திடலுக்கு சென்றேன். எங்கு பார்த்தாலும் குப்பைகள் தான் குவிந்து கிடக்கிறது. பாஸ்ட் புட் கடைகள் அருகில் உள்ள மணல் பகுதிகளில் அமர்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. 

தின்று விட்டு வீசி எறியும் கோழிக் கழிவுகள் தான் சிதறிக் கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் தான் அதிகமாக வீசுகிறது. மேலும் ஆயிரக் கணக்கானோர் கூடும் இந்த இடத்தில் தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்படவில்லை.

மணல் மேட்டில் பாதுகாப்பில்லாமல் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர் அடுப்புகளால் தீ பற்றக்கூடிய அபாயம் அதிகமாக இருக்கிறது என ஆயிரம் முறை எடுத்து சொன்னாலும் கேட்பதாக இல்லை.

இனி வரும் காலங்களிலாவது சம்பந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகத்தினர், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முயற்சி எடுக்க வேண்டும்."என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

கீழக்கரை புது கிழக்குதெரு முஹைதீன் மஸ்ஜித் 'மைய வாடி' சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சி - பழைய குத்பா பள்ளி ஜமாத்தார்கள் பங்கேற்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் செயல்படும், புதுக் கிழக்குத் தெரு முகைதீன் தொழுகைப் பள்ளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் ஐவேளை தொழுகையும் நடந்து வருகிறது. இந்த பள்ளியின் அருகாமையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, கடந்த சில வருடங்களாக நல்லடக்கங்கள் நடை பெற்று வருகிறது. ஆனால் கப்ருஸ்தானை  சுற்றி, சரியான தடுப்பு சுவர் இல்லாததால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்தது. 



இந்நிலையில் தற்போது முஹைதீன் பள்ளியின் கப்ருஸ்தானை  சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்த மதில் சுவர், முன்னாள் ஜமாஅத் தலைவர் M.M.ஜின்னா சாகிபு அவர்களின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டிடமும், தற்போது கட்டப்பட்டுள்ள மைய வாடி மதில் சுவரும், மர்ஹூம். முகைதீன் அப்துல் காதர் (குருவிப் பிள்ளை சம்மாட்டி) அவர்களின் குடும்பத்தினரின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 




இந்த மையவாடியின் வாசல் சாவியினை, ஜமாத்தாரிடம் முறைப்படி ஒப்படைவு செய்யும் நிகழ்ச்சி இன்று (18.10.2013) மாலை சரியாக 5 மணியளவில் புதுக் கிழக்குதெரு முஹைதீன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. அச்சமயம் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவரும் கீழக்கரை நகராட்சி துணை தலைவருமாகிய H.ஹாஜா முஹைதீன் அவர்களிடம், மூர் டிராவல்ஸ் M.S.ஹசனுதீன் அவர்கள், மைய வாடி வாசலின் சாவியினை ஒப்படைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பழைய குத்பா பள்ளி ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கீழக்கரையில் இன்று (18.10.2013) லேசான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகரில் கடந்த ஓராண்டாக மழை பொலிவு இல்லாத  காரணத்தால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிணற்றில் நீர் இன்றி பொதுமகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில், இஸ்லாமிய மக்கள் மழை வேண்டி, சிறப்பு தொழுகையும் நடத்தி, கண்ணீர் மல்க இறைவனை இறைஞ்சினர். கீழக்கரையில் கடந்த இரண்டு நாள்களாக, இரவு நேரங்களில், கண்ணை பறிக்கும் ஒளியுடன் மின்னல் வெட்டியது. 



இரவு 10 மணிக்கு மேல் குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று இரவு 10 நிமிடம் லேசான சாரல் மழையும் பெய்தது. வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை 11.45 மணியளவில் 15 நிமிடம் லேசான மழை பொழிவு இருந்தது. இதனால் மழை இன்றி துன்பப்ப்பட்டு வந்த மக்கள், பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, இரு கரம் ஏந்தி, இன்னும் சிறப்பான மழைப் பொழிவினை வேண்டி துஆ செய்தனர். கீழக்கரையில் தற்போது மாலை 5.30 மணி நிலவரப்படி, மிக மெல்லிய தூறலுடன், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.







தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவ மழை ஓரிரு நாட்களில் முடியவுள்ள நிலையில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இறைவன் நாடினால், இந்த காலத்தில் தான் பெரும்பாலும் கடலோரப் பகுதியான, நம் கீழக்கரை அதன் சுற்று வட்டாரங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

படங்கள் : கீழக்கரை முக நூல் நண்பர்கள் 

Thursday 17 October 2013

கீழக்கரை வடக்குத் தெரு 'ராயல்' திடலில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை வடக்குத் தெருவில் கொந்தக்கருனை அப்பா தர்ஹா அருகாமையில் உள்ள  ஈத்கா தொழுகை திடலில் (ராயல் திடல்) நேற்று காலை 7.30 மணியளவில், நபி வழி ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. பெருநாள் உரையினை சகோதரர். ஆசிப் அவர்கள் நிகழ்த்தினார். இந்த தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். 






கீழக்கரையில் TNTJ சார்பாக நிறைவேற்றப்படும் 'கூட்டு குர்பானி' புகைப்படங்கள் !

கீழக்கரை நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகைக்குப் பின்னர், நேற்று முதல் 'கூட்டு குர்பானி' கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று 50க்கும் மேற்பட்ட ஆடுகள் குர்பான் கொடுக்கப்பட்டது. இன்று (17.10.2013) காலை முதல், மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு வருகிறது.  

தியாகத் திரு நபி இபுறாஹீம் அலைஹிவசல்லம் அவர்களின் தியாகத்தினை நினைவு கூறும் கொருட்டு, இறை கடமையை நிறைவேற்றும் முகமாக, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கூட்டுக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சிகளை பங்கிட்டு குர்பானி பங்காளிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், இறையோனின் கட்டளைப்படி விநியோகம் செய்து வருகின்றனர். 







கீழக்கரை வடக்குத் தெரு முஹையிதீனியா பள்ளியில், முதன் முறையாக நடை பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை வடக்குத் தெருவில், இந்த வருடம் முதன் முறையாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை முஹையிதீனியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நேற்று (16.10.2013) காலை 8 மணியளவில் நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு, பெருநாள் தொழுகையை தொழுதனர். 





கீழக்கரையில் KECT சார்பாக நடைபெற்ற தியாகத் திருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக புதுக் கிழக்குத் தெரு KECT பள்ளிவாசல் திடலில் நேற்று 16.10.2013 புதன் கிழமை காலை 7.30 மணியளவில் நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

 

கீழக்கரையில் TNTJ சார்பாக நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை !

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கிழக்குத் தெரு பால் பண்ணை, கீழக்கரை 500 பிளாட் மற்றும் தெற்குத் தெரு பகுதிகளில் சார்பாக நேற்று 16/10/2013 புதன் கிழமை காலை 7.30 மணியளவில் நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இந்த திடல்களில் ஆண்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்துக்கொண்டனர். 




கீழக்கரை 500 பிளாட் கிளையில் பெருநாள் உரையினை  சகோதரர். அபுபக்கர் சித்திக் (ஹைபிரைட்) அவர்கள் பேசினார். தெற்குத் தெருவில் லக்கி அப்பாஸ் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். கிழக்குத் தெரு திடலில் சகோதரர். சத்தார் அலி அவர்கள் பெருநாள் உரையாற்றினார். 

கீழக்கரை நடுத் தெருவில் நாறிக் கிடக்கும் சாக்கடை குவியல்களால் நிலவும் சுகாதாரக் கேடு - மீண்டும் மலேரியா, டெங்கு பீதியில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் !

கீழக்கரை நடுத் தெரு பகுதியில், புரதான ஜும்மா பள்ளிக்கு செல்லும் பாதையில், வாருகால்களில் சாக்கடை நீர் தேங்கி வழிந்தோடுவதால் பெரும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. வாருகால்களில் சேரும் சாக்கடை கழிவுகளை துப்புரவுப் பணியாளர்கள் பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலைகளில் அள்ளி வைத்து விட்டு, முறையாக சுத்தம் செய்யாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். 


இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.  மேலும் இந்த பகுதியில் நடந்து செல்லும் மக்கள், பெருநாளைக்கு உடுத்திய புதுத் துணிகளில் சாக்கடை தெறித்து விடாமல் வீடு போய் சேருவது சாதனையாக கருதப்படுகிறது. தொழுகைக்கு செல்பவர்களுக்கும், இப்பகுதியை கடக்கும் பாதசாரிகளையும் மூக்கைப் பிடித்து கொண்டு வேக நடை போடும் நிலையே உள்ளது. 


இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது கீழக்கரையில் மீண்டும் மலேரியா, டெங்கு போன்ற வியாதிகள் பரவ  துவங்கியுள்ளதால், உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களின், இது போன்ற மெத்தனப் போக்கால், இந்த பகுதி மக்கள் மிகுந்த வருத்தமடைந்து உள்ளனர். நடுத் தெரு பகுதியில் உள்ள வாருகால்கள் பல ஆண்டு காலமாக சரி செய்யப்படாமலும், மூடிகள் போடப்படாமலும் இருக்கிறது. ஆகவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண முன் வர வேண்டும்.

இது குறித்து நாம் கடந்த வருடம் வெளியிட்டிருந்த செய்தியை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


குறிப்பு : நாம் செய்தி வெளியிட்ட பிறகு, கீழக்கரை நடுத் தெருவில் உள்ள சில பகுதிகளில் மட்டும் குறிப்பாக, 'கீழக்கரை டைம்ஸ்' யாசீன் அவர்கள் வீட்டின் முன் புறம், வாருகால் உயர்த்தி கட்டப்பட்டு மூடி போடப்பட்டுள்ளது. அதற்காக இந்த தருணத்தில் கீழக்கரை நகராட்சிக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday 16 October 2013

கீழக்கரையில் KECT சார்பாக நிறைவேற்றப்படும் கூட்டு குர்பானி புகைப்படங்கள் !

கீழக்கரையில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் அக மகிழ்வுடன் ஹஜ் பெருநாள் தொழுகையை  முடித்தவுடன், வீட்டுக்கு வந்து பெருநாள் சாப்பாடு சாப்பிட்டு, இறை கடமையை நிறைவேற்றும் முகமாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை குர்பானி கொடுத்து,அதன் இறைச்சிகளை குடும்பத்தார்களுக்கும்,உறவினர்களுக்கும்,ஏழை எளியவர்களுக்கும்,  கொடுத்து வருகின்றனர். 

அதே நேரம் KECT, TNTJ, TMMK உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகள் சார்பில் கூட்டு குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. அங்கு வரும் ஏழை எளியவர்களுக்கு குர்பான் இறைச்சிகள் குறைவின்றி வழங்கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் பள்ளிவாசல் தோறும் தக்பீர் முழக்கம் ஒலித்த வண்ணம் உள்ளது.