தேடல் தொடங்கியதே..

Saturday 18 February 2012

கீழக்கரையில் இலஞ்சப் பேர்வழிகளை பிடித்துக் கொடுத்தால் ரூ.5000 ரொக்கப் பரிசு - கீழை இளையவன் வலைத்தளம் அறிவிப்பு

கீழக்கரையில் இலஞ்சப் பணம் 'கடமை நெறி தவறா ??' அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல், 'எந்த ஒரு வேலையும் நடைபெறாது' என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது வருகிறது. குறிப்பாக நம் கீழக்கரையில் அதிக அளவு இலஞ்சப் பணம் பரிமாறப்படும் முதல் மூன்று இடங்களில் கிராம நிர்வாக அலுவலகம் இடம் பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இராமநாதபுரம் தாலுகா அலுவலகம் 
இந்த அலுவலகங்களில் காலை முதல் அலைமோதும் மக்கள் கூட்டம், பல்வேறு பணிகளுக்காக, கையொப்பம் பெற அதிகாரிகளை நாடுகிறார்கள். குறிப்பாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, சாதி சான்றிதழ் பெற, இருப்பிட சான்றிதழ் பெற, பாஸ்போர்ட்டுக்கான சான்றிதழ் பெற, மருத்துவ காப்பீட்டுக்கு சான்றிதழ் பெற என்று திருவிழா போல, மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 

அதிலும் இந்த பட்டா மாறுதலுக்காக இங்கு வருபவர்கள் தான், அதிகாரிகளின் கண்களுக்கு பணம் காய்க்கும் மரமாக காட்சியளிக்கிறார்கள். இந்த பட்டா மாறுதலுக்காக, இந்த இலஞ்சப்பேர்வழிகள்  அப்பாவிகளிடம் வசூலிக்கும் கட்டாயத் தொகை ரூ.3000 முதல் ரூ.5000 வரை  என்று தெரிய வரும் போது திகைப்பு மேலிடுகிறது.

ஆகவே இலஞ்சப் பணம் கொடுக்காமல் பட்டா மாற்றி சாதனை புரிந்து , இந்த இலஞ்சப் பேர்வழிகளை, முறையாக இலஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிடித்து கொடுத்தால், எங்களின் கீழை இளையவன் வலை தளம் சார்பாக ரூ.5000 பரிசுத் தொகையும், அவர்களுக்கான  பாராட்டு விழாவில் வெள்ளிக் கோப்பையும் வழங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இராமநாதபுரம் இலஞ்ச ஒழிப்பு அலுவலகம்

           இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி
இந்த பட்டா மாறுதலுக்கு முறையாக விண்ணப்பிக்க, என்ன மாதிரியான வழிமுறைகளை பின் பற்ற வேண்டும் என்று தாலுகா அலுவலகத்தில் வெளிப்படையான அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் சட்டப் பேரவையில் அறிவித்தபடி, பட்டா மாறுதலுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் படி, பட்டா மாறுதல் சம்மந்தமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு செய்யாமல், ஒவ்வொரு திங்கள்கிழமையும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் மனு செய்து பட்டா மாறுதல் பெறலாம். 
இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வைக்கபட்டிருக்கும் அறிவிப்பு பலகை
 
கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு வகிக்கும் கிராமங்களில் செவ்வாய்க்கிழமைகளில் மனு அளிக்கலாம். இவ்வாறு மனுஅளிப்போருக்கு உரிய படிவத்தில், ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். பட்டா கோரும் நிலம் முழுப் புலமாக இருந்தால, 15 தினங்களுக்குள்ளும், உள்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்ய வேண்டியது இருந்தால் 30 தினங்களுக்குள்ளும் பட்டா மாற்றம் செய்து தரப்படும்.
மனு அளிக்கும் நேரத்தில் உள்பிரிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பட்டா பெறும்போது. உரிய கட்டணம் செலுத்திய செலான் சமர்ப்பித்தால் போதுமானது. மனு அளிக்கும்போது, நிலப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் சமர்ப்பிக்கவும், அலுவலக விசாரணையின்போது அசல் ஆவணம் சமர்ப்பித்தால் போதுமானது. இப்புதிய திட்டம் 25-7-2011 முதல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசானை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Wednesday 15 February 2012

கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் - மோட்டார் சைக்கிள் பேரணி !

ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி 'புற்று நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த 2012 ஆம் ஆண்டில் 'இணைந்தால் இயலும்' (TOGETHER IT IS POSSIBLE) என்ற தலைப்பை முன் வைத்து அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் இறந்து வருகிறார்கள். 


 


நம் கீழக்கரை நகரிலும், பலர் புற்று நோய்க்கு ஆளாகி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். முன்பெல்லாம் எந்த வகையான புற்று நோயாக இருந்தாலும் குணப்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விட முடியும்.

புகையிலையின் பயன்பாடு தான் புற்று நோய்க்கான முதல் காரணமாக இருக்கிறது. இதற்கான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைந்தே காணப்படுகிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் அடிக்கடி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனடிப்படையில் ஒரு சிறப்பான விழிப்புணர்வுக் குழு நம் கீழக்கரையில் முஹம்மது சதக் கல்லூரி வளாகத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. 
விழிப்புணர்வுக் குழுவினரின் உற்சாகப் பேரணி



இதில் டி. ஜி. வைணவ கல்லூரியின் 20 பேர்கள் கொண்ட தேசிய மாணவர் படையும், ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனமும் இணைந்து நம் சுற்று வட்டார பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வுப் பேரணி கடந்த 4 ஆம் தேதி சென்னை மேயர் திரு. சைதை துரை சாமி அவர்களால், சென்னை மெரீனா கடற்கரையில் கொடியசைத்து துவக்கப்பட்டது. இந்த பேரணி தமிழகம் முழுதையும் 3150 கிலோ மீட்டர்கள் சுற்றி, விழிப்புணர்வு செய்து 19 ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது.
பேரணியினரால் வழங்கப்படும் விழிப்புணர்வு நோட்டீஸ்



இது குறித்து நம்மிடையே பேசிய இக்குழுவின் தலைவர் லெப்டினன்ட் டாக்டர் எஸ். சந்தோஸ் பாபு அவர்கள் கூறுகையில், "இந்த மோட்டார் சைக்கிள் பேரணியின் முக்கிய நோக்கமாக மக்களுக்கு புற்று நோய் வராமல் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், புற்று நோய் வகைகளை தெரியபடுத்துதல், புகையிலையினால் ஏற்படும் தீங்குகளைத் தெரியப்படுத்துதல், புற்று நோய் குறித்த தமிழக அரசின் பங்களிப்பை மக்களுக்கு தெரியப்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். எங்களுடைய இந்த முயற்சிக்கு கீழக்கரை மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது ", என்று மிகுந்த மகிச்சியுடன் தெரிவித்தார்.

புகைப்பதை விடுவோம்.. புகையிலை ஒழிப்போம்... புற்று நோயில்லாத நம் கீழக்கரை நகரை உருவாக்குவோம். 

Monday 13 February 2012

கீழக்கரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் - கூடன் குளத்திற்கு ஆதரவு வலுப்பெறுகிறது !


கீழக்கரையில் தொடர் மின் வெட்டை கண்டித்து, தமிழக அரசின் கவனத்திற்கு, இந்த பிரச்சனையை கொண்டு செல்வதற்காக, இன்று (13.02.2012) கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 ம‌ணிய‌ள‌வில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரையில் உள்ள   பல்வேறு அமைப்பினரும், சங்க நிர்வாகிகளும், பல்வேறு கட்சித் தொண்டர்களும், தங்கள் கட்சிக் கொடிகளுடன் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். 


 


இதில் கண்டன உரையாற்றிய பலரும், கூடங்குளம் அணு உலையை, உடனடியாக திறந்து, மின்சார உற்பத்தியை துவங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த அணு உலையினை போர்க்கால அடிப்படையில் திறப்பதோடு நில்லாமல், மின்சார உற்பத்திக்கான, இன்னும் பல திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டுமெனவும் உரையாற்றினர்.

 

தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும், தற்காலிக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதால், இந்த தொடர் மின் வெட்டு இன்னும் கூடுதாலாகும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாக, தமிழகமெங்கும் நடைபெற்று வரும், தொடர் மின் வெட்டை கண்டித்த போராட்டங்களின் விளைவாக, இறைவன் நாடினால், ஆட்சியாளர்களின் வாயிலாக, விரைவில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

கீழை இளையவன் கவிதைகளில் இருந்து சில மேற்கோள்கள்:

"உயிர் பயம் காட்டியே,
அணு உலையின் கதவுகள் அடைக்கப்படுகிறது !
கூடங்குளத்தில்..
அணை மதகுகளின் கதவுகள் திறக்கப்படுகிறது !
முல்லை பெரியாரில்...

நூறாண்டு மட்டும்
வாழ்பவனின் கைரேகை,
கணிக்கப்படுகிறது - உனக்கு
அணு உலையால் தான் மரணமென்று !
கூடங்குளத்தில்..


தொள்ளாயிரம் ஆண்டுகள்
வாழ வேண்டியவனின் ஆயுள் ரேகை,
அழிக்கப்படுகிறது - நீ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று !
முல்லை பெரியாரில்...


மரண நண்பன்
கணப் பொழுதும் நம்முடன் தான்,
காலம் கழிக்கிறான்...

கூடங்குளத்திலும்,
முல்லை பெரியாரிலும் அல்ல !"

Sunday 12 February 2012

கீழக்கரையில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றுமை குரல்கள் - மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு நிலவி வரும் சூழ்நிலையில், கீழக்கரையில் அறிவிக்கப்பட்ட மின் வெட்டான 8  மணி நேரத்தையும் தாண்டி, அறிவிக்கப்படாத மின் வெட்டாக 'நாளின் சரி பாதி, மின் வெட்டு போக மீதி' என்று சொல்லுமளவிற்கு பாதி நாள் மின் வெட்டாகவே கரைந்து விடுகிறது. 




இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து, குழந்தைகள், சிறுவர்கள், நெருங்கி வரும் அரசு போது தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், முதியவர்கள், அடுப்பாங்கரையில் வேர்வை சிந்தும் இல்லத்தரசிகள், வியாபார பெருமக்கள் என்று இந்த மின்வெட்டால் பாதிக்கப்படாத 'எந்த ஒரு தனி மனிதனும் இல்லை' என்று சொல்லுமளவிற்கு பொது மக்கள் அனைவரும் பேதமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.




இந்த தொடர் மின் வெட்டை கண்டித்து, தமிழக அரசின் கவனத்திற்கு, இந்த பிரச்சனையை கொண்டு செல்வதற்காக,  நாளை (13.02.2012) கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 ம‌ணிய‌ள‌வில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கீழக்கரையில் உள்ள  30 க்கும்  மேற்ப்பட்ட பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும், கட்சிகளும், மகளிர் அமைப்புகளும்  இணைந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கப் போவதாக, அவர்கள் வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதங்கத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, அனைவரும் முன் வர வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கீழக்கரையின் 30 க்கும் மேற்ப்பட்ட அமைப்புகள், ஒரு பொதுப் பிரச்சனைக்காக, ஒற்றுமையாக போராட முன் வந்திருப்பது, அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒற்றுமையோடு அனைத்து குரல்களும், ஓங்கி ஒலிக்கும் போது, நிச்சயம்  ஆட்சியாளர்களின் காதுகளில் தெளிவாய் விழுந்து, நல்லவை நடக்கும் என்பதை விரைவில் எதிர் பார்ப்போம்.