தேடல் தொடங்கியதே..

Saturday 26 October 2013

கீழக்கரை சாலை தெருவில் மந்தமாக நடைபெறும் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் பொதுமக்கள் அவதி - வேலைகளை தரமுடன் விரைந்து முடிக்க வேண்டுகோள் !

கீழக்கரை சாலை தெரு பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து சிமெண்ட் ரோடு வரை கழிவு நீர்குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் நகராட்சி ஒப்பந்த வேலை கடந்த ஒரு வார காலமாக நடை பெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ஜேசிபி இயந்திரத்தால் தோண்டப்பட்டதால், வீடுகளில் இருந்து செல்லும் கழிவு நீர் குழாய்கள் சரமாரியாக உடைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து விடப்படும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல், இந்தபகுதி முழுவதும் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட வழியின்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். 


இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் முறையாக பைப் ஜாயிண்ட்கள் பொருத்தப்படாமலும், கழிவு நீர் ஓடும் வாட்டம் சரியாக வைக்கப்படாமலும் வேலைகள் தரமற்று நடைபெற்று வருகிறது. 



இடையிடையே கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்தம் செய்யும் தொட்டிகளும் மிகக் குறைந்த ஆழத்தில் போடப்பட்டு வருகிறது. சிமிண்டு கலவைகள் சரியாகப் போடாமல் ஏதோ கடமைக்கு செய்வது போல் வேலை செய்து வருகின்றனர். எனவே  நகராட்சி நிர்வாகத்தினர், தரமான வேலைகளை விரைவாக செய்து தருமாறு இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

COMMENTS :

architect yasheer <yasheerarch@gmail.com>


 இவை அனைத்தும் நமது ஊர் நகராட்சியின் அலட்சியம் தான் காரணம். டெண்டர் எடுத்த engineer வேலை நடக்கும் இடத்திற்கு வருவதில்லை. இதை அந்தந்த வார்டு கவுன்சிலேர்கள் முறையாக கண்டு கொள்வதில்லை. இதிலிருந்து இவர்கள் மத்தனப்போக்கும் அலட்சியமும் தெரிகிறது. ஆளுக்கு ஆள் மாநகராட்சி அலுவலகத்தில் சண்டை போட மட்டும் தன் லயக்கி இப்படி ஊர் ப்றேச்சனைகளை கவனிப்பதற்கு ஒருவருக்கும் நேரம் இல்லை. 


architect yasheer <yasheerarch@gmail.com>



பாதல சாக்கடை என்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்தை நீங்கள் வந்து பார்த்தல் உங்களுக்கு தெளிவாக புரியும். இவர்கள் போடும் 8 இன்ச் பைப் தேவைக்கு குறைவாகவே உள்ளது. மேலும் பைப் சேர்க்கும் இடத்தில சரியாக பூசுவதில்லை. இது கண்டிப்பாக மக்களை ஏமாதுவடற்கு மட்டும் தன். கண்டிப்பாக நாளை அணைத்து தெருவிலும் ஜங்ஷன் இல் நீரில் பீரிட்டு தெருக்களில் ஓடுவதை நீங்கள் கண் குளிர பார்கதான் போகிறீர்கள். 

கீழக்கரையில் ஊராட்சி தலைவர்களுக்கு இலவச கணினி பயிற்சி - அரசு செலவில் CSC கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடை பெறுகிறது !

தமிழக ஊராட்சிகளின் அனைத்து செயல்பாடுகளையும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதனால் ஊராட்சி செயலாளர்களுக்கு பஞ்சாயத்துராஜ் மென்பொருளை இயக்கவும், அறிந்து கொள்ளவும் இணையதள வசதிகளை பயன்படுத்திட ஏதுவாக பயிற்சி வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் இணையதள வசதியுடன் கூடிய கணினி, பிரிண்டர் உட்பட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 



தற்போது பொதுமக்கள் வழங்கிடும் விண்ணப்பங்களையும், அவர்களுக்கு தேவையான குறிப்புகளை கணினி மூலம் பதிவு செய்தல், உரிய மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும், கணினி பதிவு செய்வதன் மூலம் அறிந்து கொள்ள ஏதாவது ஒரு ஊராட்சியில் கணக்குகள் குறித்து கேட்டறிந்தால் கணினியில் எளிதான  தெரிந்து கொள்ள முடியும். அனைத்து விதமான குறிப்புகளையும் குறிப்பு எடுத்துக் கொள்ள கணினிப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. எனவே, கணினியைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதற்கான கணினி பயிற்சி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோருக்கு பேருக்கு கணினி பயிற்சி, கீழக்கரை CSC நிறுவனத்தில் நடை பெற்று வருகிறது.  இதில் ஓரு குழுவிற்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் 17 நபர்கள் வீதம், மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு ஐந்து நாட்கள் வீதம் மூன்று வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.




இந்த பயிற்சியில், மைக்ரோசாப்ட் ஆபிஸ், மைக்ரோசாப்ட் எக்சல், ஓப்பன் ஆபிஸ், மின்னஞ்சல், கானொளி காட்சி, அரசு நிர்வாத்தில் தொழில்நுட்ப பயன்பாடு, விண்டோஸ்-7 அறிவு, வன்பொருள், மென்பொருள் உள்ளிட்ட 19 கணினி சம்பந்தமான தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவரும் புரியும் வண்ணம் தமிழ் மொழியில் பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Friday 25 October 2013

கீழக்கரை வடக்குத் தெருவில் பாதாள பள்ளம் - பாதசாரிகள் கவனமாக 'பார்த்து' செல்லவும் !

கீழக்கரை வடக்குத் தெரு சேகு அப்பா சாலையில், முன்னாள் கீழக்கரை தி.மு.க சேர்மன் பஷீர் அவர்கள் வீட்டின் அருகாமையில் (வார்டு கவுன்சிலர் 'இடி மின்னல்' ஹாஜா அவர்களின் மளிகை கடை சமீபம்) ஒரு பெரிய பாதாள பள்ளம் காணப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் கீழக்கரை நகராட்சியால் குடிநீர் குழாய் சீர் செய்வதற்காக தோண்டப்பட்ட, இந்த பள்ளம் மூடப்படாமல், வேலையும் நடக்காமல், அப்படியே கை விடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்களும், நடந்து செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பலர் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விடுகின்றனர். 


இது குறித்து இந்த பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் சகோதரர்.ஜகுபர் அவர்கள் கூறும் போது " கடந்த ஆறு மாதத்தில் மட்டும் மூன்று முறை, இந்த இடத்தில் குடி நீர் குழாயை சீரமைக்கிறோம் என்கிற பெயரில் பள்ளம் தோண்டி இருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை கூட வேலையை சரியாக செய்யாமல், பள்ளத்தையும் மூடாமல் வேண்டுமென்றே இப்பகுதி மக்களை பழி வாங்குகின்றனர். பலமுறை தோண்டி மூடுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதில் ஏகப்பட்ட கமிஷன் வேட்டை வேறு. போதும் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இதனால் நாங்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லை. முதலில் பள்ளத்தை மூடுங்கள்" என்று நகராட்சி நிர்வாகத்திற்கு வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தார். 


கீழக்கரை நகராட்சி நிர்வாகம், இந்த பள்ளத்தை மூடும் வரை,  இப்பகுதியில் வாகனம் ஓட்டி செல்வோரும், நடந்து செல்லும் பொதுமக்களும், மிகுந்த கவனத்துடன் பள்ளத்தை 'பார்த்து' செல்லுமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 

கீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா !

கீழக்கரை அத்தியிலை தெருவில்  'அல் மதரஸத்துல் ஃபிர்தௌஸ்' எனும் அழகிய பெயரில், கடந்த ஹிஜ்ரி 1429 ஆண்டு, அத்தியிலை தெரு நண்பர்கள் ஜியாவுல் ஹனீப், அப்துல் ரசீக் (கல்யாண தம்பி), சேகு ஜலாலுதீன் உள்ளிட்ட நண்பர்களால் துவங்கப்பட்டு இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சிறுவர்கள் மதரசாவில் 5 வயது முதல் 16 வயது வரையிலான 60 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இஸ்லாமிய அடிப்படை கல்வியை கற்று வருகிறார்கள். 


வெள்ளிக்கிழமை தவிர மாலை 6.30 மணி முதல் 8.45 வரை மதரஸா நடை பெறுகிறது. ஆரம்பத்தில் சம்சுதீன் சதக்கீ, அப்துல் நாசர் ஜமாலி  உள்ளிட்ட  மூன்று உஸ்தாதுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி, தற்போது அஷ்ரப் அலி மிஸ்பாஹி, அப்துல் மஜீது உலவி, முஹம்மது பிலால் ரியாஜி   உள்ளிட்ட 5 உஸ்தாதுகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அத்தியிலை தெருவில் பெண்களுக்கு தனியாக  'அல் மதரஸத்துல் ஃபிர்தௌஸியா' எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ளது. 



இந்த மதரஸாவில் 5 வயதுள்ள சிறுவர்களுக்கு 'பிதாயா ஊலா' எனும் ஆரம்ப வகுப்பில் அரபி மொழி எழுத்துக்களை கற்பித்தல், சிறிய துஆக்கள், ஹதீஸ் பற்றிய பாடங்கள் நடை பெறுகிறது. அடுத்ததாக 7 வயது சிறுவர்களுக்கு 'ஸனத்துன் வாஹிதா' எனும் முதலாம் வகுப்பில் குர் ஆன் ஓதுதல், சிறிய சூராக்கள் மனனம், இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள், துஆக்கள், ஹதீஸ்கள், நபிமார்களின் வரலாறு உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. 



அடுத்த கட்டமாக இரண்டாம் ஆண்டில் 'ஸனத்துன் ஸானியா' எனும் வகுப்பில் விரிவான இஸ்லாமிய சட்டங்களும், குர் ஆன்  மனனமும் கற்பிக்கப்படுகிறது.நிறைவாக மூன்றாம்  ஆண்டில் 'ஸனத்துன் ஸாலிஸா' எனும் வகுப்பில் பயான் பயிற்சியும், அர் ரஹ்மான், வாகிஆ, யாசீன் சூராக்கள் மனனம் மற்றும் 30 ஆம் பாகம் முழுமையும் (அம்ம ஜஸ்வு மட்டும்) உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 'அல்குர் ஆன் கூறும்...' என்று ஆரம்பிக்கும் ஏதேனும் ஒரு தலைப்பில் THESIS செய்ய வைத்து இறுதியில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.  



இஷா தொழுகை பாங்கு 
இது குறித்து மதரசாவின் முதல்வர் பாசில் அகரம் அவர்கள் கூறும் போது "இந்த பள்ளி துவங்கும் சமயத்தில், கீழக்கரையில் சிறுவர்களுக்கு முறையான மகதப் மதரஸா இல்லை.

மார்க்க கல்வியின் அடிப்படை கல்வி பயிலரங்கமான இந்த மகதப் மதரஸாவில் பயிலும் சிறுவர்களுக்கு மார்க்க கல்வி போதிப்பதோடு, சரியான முறையில் ஐவேளை தொழுகையையும் கடைபிடிக்கிறார்களா..? என்பது கண்காணிக்கப்படுகிறது.

அதற்காக ஒவ்வொரு சிறுவருக்கும் தனித் தனியாக பைல் போடப்பட்டு, நிர்வாக பொறுப்பாளர்களால் (சகோதரர்கள் குர்ஷித் ஆலம்கான், சதாம் ஹுசைன், சலீம் சர்ஹான் மற்றும் மதார் ஆகியோர்களால்) ஒழுங்கப்படுத்தப்பட்டு வருகிறது.


 மதரஸாவில் இஷா தொழுகை நடை பெறுகிறது 




இங்கு ஓதி முடிப்பவர்களால், கீழக்கரையின் பல்வேறு பள்ளிகளில் ரமலான் மாதங்களின் கடைசி மூன்று நோன்புகளின் இரவு தொழுகைகளை நடத்தப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. மேலும் இங்கு பயிலும் மாணவர்களால், அரபிக் கல்லூரிகளில் மிக எளிதாக படங்களை பயில முடியும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 






மதரஸாவின் முன்னாள் மாணவர்கள் 

'அல் மதரசத்துல் ஃபிர்தௌஸ்' சிறுவர் மதரசாவில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து இஸ்லாமிய மார்க்க கல்வியை வழங்கிட தொடர்பு கொள்ள வேண்டிய அலைப் பேசி எண் : 7845482824 (மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும்)

குறிப்பு : இந்த மதரசாவின் தற்போதைய நிர்வாகிகளான பாசில் அகரம் (B.Arch இறுதியாண்டு), சலீம் சர்ஹான் (DME.,) மற்றும் மதார் (B.A.,Eng) ஆகியோர் முஹம்மது சதக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Thursday 24 October 2013

கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் திடீரென சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு !

கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் கனி ஒர்க் ஷாப் கட்டிடத்தில் இன்று (24.10.2013) மாலை 6.30 மணியளவில் திடீரெனெ சிலாப் இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தள்ளு வண்டி அப்பளம் போல் நசுங்கியது. இறைவன் அருளால், இந்த விபத்து ஏற்பட்ட சமயத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


கீழக்கரையில் கடந்த சில தினங்களாக சிதிலமடைந்த கட்டிடங்களில் இருந்து சிமிண்டு சிலாப்புகள் பெயர்ந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் உயிருக்கு பாதகமாக இருக்கும் பழைய கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். 



இது குறித்து நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரையில் பால்கனி சிலாப் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம்!


கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை இடிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !

கீழக்கரை முஹ்யித்தீனியா பள்ளிகளின் 23 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி - கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ் பங்கேற்பு !

கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் 23வது ஆண்டு ஆண்டு விழா இன்று (24.10.2013) மாலை 3.30 மணியளவில் முஹ்யித்தீனியா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ராஜன்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  டாக்டர். ஜோசப் ராஜன் அவர்களும், கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ்  (காவல் துறை சார்பு ஆய்வாளர், கோயம்பத்தூர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.





இதில் மாணவர்களை அரசுப் பணிகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் விதமாக, கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ் அவர்கள் பேசினார். மேலும் அவர் பேசும் போது "கீழக்கரையில் ஆணாக பிறந்தால் 'துபாய்' ; பெண்ணாக பிறந்தால் 'துபாய் மாப்பிள்ளை' என்கிற நிலை மாறி கல்விக் கூடங்கள் நிறைந்த நம் ஊரிலிருந்து IAS, IPS அதிகாரிகள் உருவாக முயற்சிக்க வேண்டும். நம் எண்ணங்கள் எப்படியோ, அது போலவே நம் எதிர்காலமும் அமையும். ஆகவே வெளிநாட்டு மோகத்தை விடுத்து, இப்போதே மாணவர்கள் நல்ல குறிக்கோள்களை மனதில் நிறுத்த வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்." இவ்வாறு பேசினார். 





இந்த நிகழ்ச்சியில் டாக்டர்.பாரூக் அவர்களின் நினைவு வளாகத்தை,  டாக்டர். ஜோசப் ராஜன் அவர்கள் திறந்து வைத்தார். பள்ளி மாணவ மானிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்குதெரு ஜமாத் செயலாளர் முஹைதீன் இபுறாஹீம் தம்பி வாப்பா, கல்விக்குழு செயலாளர்  டாக்டர். செய்யது ராசிக்தீன், கல்விக்குழு இணை செயலாளர் அஹமது மிர்ஷா, பொருளாளர் சேகு அஹமது பசீர், துணை செயலாளர் முஹம்மது ரபீக், பள்ளி முதல்வர் தேவி புவனேஸ்வரி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை இடிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !

கீழக்கரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பழைய கட்டிடங்கள் பல இடங்களில் காணப்படுகிறது. பெரிய அளவில் வெடிப்புகளுடன் அதன் மதில் சுவர்களும், சாரமும் சிதலமடைந்து காணப்படுவதால் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் அந்த கட்டிடங்களின் வழியே செல்வதை காணும் போதே 'இடிந்து விழுந்து விடுமோ..?' என மனம் பதறித் துடிக்கிறது.




இடம் : கண்ணாடி வாப்பா திருமண மண்டபம் எதிர் புறம், பழைய பேருந்து நிலையம் 

தற்போது கீழக்கரை நகரில் மழை பெய்ய துவங்கியிருப்பதால், ஏற்கனவே விழும் நிலையில் இருக்கும் மதில் சுவர்கள் ஊறி போய் பொது பொதுவென ஆபத்தை விளைவிக்கும் நிலையில் நிற்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பாபு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே பேருந்திற்காக நின்றிருந்த முதியவர்கள் தலையில் திடீரென பால்கனி சிலாப் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இடம் : புறாக் கடை சமீபம், அபாய மரம் எதிரில், செக்கடி 

இது குறித்து நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.



 இடம் : அலியார் வகையறா கட்டிடம், கிழக்குத் தெரு 



இடம் : நைஸ் வாப்பா கடை (SVM வகையறா கட்டிடம்), வள்ளல் சீதக்காதி சாலை


இடம் : பாப்புலர் மெடிக்கல் எதிர்புறம், முஸ்லீம் பஜார் 


இடம் : பழைய அபின் கடை, நடுத் தெரு 

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பே தவிர்க்கும் முகமாக, இது போன்ற அபாய கட்டிடங்களை உடனடியாக இடித்து பொதுமக்கள் நலனை காக்க சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர்களும், நகராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது கீழக்கரை நகர மக்களின் மேல் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. 

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் ஏற்பாட்டில் மாணவர்கள் கேரளாவிற்கு 'கல்விச் சுற்றுலா' - பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர் !

கீழக்கரை தெற்குத் தெரு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் சார்பாக மாணவர்களை அழைத்து செல்லும் கல்வி சுற்றுலா பயணம் இன்று (23.10.2013) இரவு 10 மணியளவில் இஸ்லாமியா பள்ளிகள் வளாகத்தில் இருந்து இனிதே துவங்கியது. தங்கள் பிள்ளைகளை வழியனுப்ப பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்திருந்தனர். மாணவ செல்வங்களும் மகிழ்வுடன் புறப்பட்டு சென்றனர். கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சின், எர்ணாகுளம் மற்றும் கேரளாவின் சுற்றுலா தளங்களுக்கும் செல்லும் நான்கு நாள்கள் கல்வி சுற்றுலாவை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் M.M.K.முகைதீன் இபுராகீம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.



இஸ்லாமியா பள்ளிகளின் சார்பாக, பள்ளியின் மாணவர்கள் கடந்த ஆண்டு, டார்ஜிலிங், கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கல்வி சுற்றுலா சென்ற போது நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.




இதில் இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள 72 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியப் பெருந்தகைகள், ஆசிரியர் திரு.அருள் டேவிஸ் ராஜ் அவர்கள் தலைமையில் சென்றுள்ளனர். முன்னதாக, தெற்குத் தெரு பள்ளியின் தலைமை இமாம் அமானி ஆலீம் அவர்கள் பயணத்திற்கான துஆ வை ஓதி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் அவர்கள் கல்வி சுற்றுலாவை நல்ல முறையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

இஸ்லாமியா பள்ளி மாணவர்களின், இந்த கல்விச் சுற்றுலா இனிதே சிறப்புற, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனவார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.