தேடல் தொடங்கியதே..

Saturday 5 May 2012

கீழக்கரை பகுதியிலிருந்து 'ஒரு ஐ.ஏ.எஸ்' - கீழக்கரை மாவிலாத்தோப்பை சேர்ந்தவர் தேசிய அளவில் 5 ஆம் இடம் பிடித்து வெற்றி வாகை !

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.



இதில் தமிழகத்தை சேர்ந்த திரு. கோபால சுந்தர ராஜ் (வயது 27) , அவர்கள் அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் நம்  கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரி அருகில் உள்ள மாவிலாதோப்பு பகுதியை சேர்ந்த லேட். சண்முகவேல் மற்றும் ராஜம்மாள் அவர்களின் மகன் ஆவார். 

கீழக்கரை பகுதி மாவிலா தோப்பின் நுழைவு
இவர் ஆரம்ப கல்வியை, கீழக்கரை மாவிலாத் தோப்பிலுள்ள நாடார் நடுநிலைப் பள்ளியிலும், மேல் நிலைப் பள்ளிப் படிப்பை இராமநாதபுரம் செய்யதம்மாள் பள்ளியிலும், கல்லூரி படிப்பை கோவை விவசாய கல்லூரியிலும் படித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. இவர் டில்லி வஜ்ரம் ரவி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார்.


IAS விதை தூவப்பட்ட மாவிலாத் தோப்பிலுள்ள நாடார் நடுநிலைப் பள்ளி
 இது குறித்து கீழக்கரை மாவிலா தோப்பில் வசிக்கும் இவரின் சிறிய தகப்பனார் முருகேசன் அவர்கள் கூறும் போது "இந்த மாபெரும் வெற்றி எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியைக் காண, எனது அண்ணன் மறைந்த சண்முகவேல் அவர்கள் இல்லையே.. என்பது மட்டுமே குடும்பத்தார் அனைவரின் வருத்தமாக இருக்கிறது.


சிறிய தகப்பனார் முருகேசன் அவர்கள்

சிறு வயதிலிருந்தே கூர்மையான அறிவுடன் வளர்ந்த எங்கள் மகனார், தற்போது தேசிய அளவில் 5 ஆம் இடம் பிடித்திருப்பது எங்கள் பகுதி மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது." என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.


சிறு வயதில் குடும்பத்தாருடன் (இடது புறத்தில் முதலாவதாய் நிற்பவர்)
 நம் பகுதியிலிருந்து ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு முயற்சிப்போர் மிகக் குறைவானதாகவே இருந்து வரும் தருணத்தில், ஆர்வமுடையோர்களை ஊக்குவிக்கும் முகமாக, கீழை இளையவன் IAS வழிகாட்டி வலை தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழை இளையவன் IAS வழிகாட்டி வலை தளத்தின் முகவரி
http://keelaiilayyavanias.blogspot.in/ 

நம் இந்திய தேசத்திற்கு அரும் பணியாற்றி, மென்மேலும் வெற்றி வாகைகள் சூட, திரு. கோபால சுந்தர ராஜ்  அவர்களுக்கு எங்கள் கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரை நகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டம் - கவுன்சிலர்கள் காரசார விவாதம் !

கீழக்கரை நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் 03 .05 .2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமை வகித்தார். துணை தலைவர் ஹாஜா முகைதீன் ,கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். 


முன்னதாக நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும் 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்காததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் ஆகியோர், எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, 'கருப்பு சட்டை' அணிந்து வந்து மனு அளித்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
.

இதற்கு பதிலளிக்க தலைப்பட்ட கமிஷனர், 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நகராட்சி வழிகாட்டுதல் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று   தெளிவாக விளக்கி கூறியதோடு,  TAMIL NADU DISTRICTS MUNICIPALITIES ACT -1920 என்ற சட்ட புத்தகத்தை கையில் வைத்தபடி, மேற்கோள் காட்டி பதிலளித்தார்.

அவசர கூட்டத்தில் குறிப்பிட்ட ஓரிரு பொருள் குறித்து தான் பேச வேண்டும் என்றும் 40 பொருள்கள் அவசர கோலத்தில் கூட்டத்தில் முன் வைப்பது சால சிறந்ததல்ல என்றும் பல கவுன்சிலர்களால் முன் மொழியப்பட்டது. இருப்பினும் அனைத்து பொருள்களும் நகர் மன்றத்தில் வைக்கப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகளுக்கான பொருகள் 1 லிருந்து 36 வரை அமைதியான முறையில் 'ஜெட் வேகத்தில்' நகர்ந்தது.
 

37 ஆம் பொருளான தெரு விளக்கு பணிகளுக்கு ரூ50 லட்சம் டெண்டர் ஒப்புதலுக்கு வந்த போது, நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா அவர்கள் கூறியதாவது, "இப்பணியை ஒப்பந்ததாரர் மிக குறைந்த தொகைக்கு எடுத்துள்ளார். எனவே அவர்களால் இப்பணியை சரியாக செய்ய முடியாது என்று கருதுகிறேன் எனவே மறு டெண்டருக்கு விடலாம்" என்றார்.


இந்த தருணத்தில் பேசிய 21 வது வார்டு கவுன்சிலர் ஜெயப் பிரகாஷ் அவர்கள் " குறைந்த விலையில் டெண்டரை எடுத்துள்ளவர் சரியாக பணியை செய்யவில்லையென்றால் அவர்களுக்கான பில்லுக்கு ஒப்புதல் அளிக்காதீர்கள். எனவே மறு டெண்டர் விடவேண்டிய அவசியமில்லை . குறைந்த விலையில் டெண்டர் கேட்டவருக்கே கொடுக்க வேண்டும் என்று தன்  கருத்தை தெரிவித்தார்.


இவரின் கருத்துக்கு இடிமின்னல் ஹாஜா, முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததோடு கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா அவர்கள் பேசும் போது இந்த விசயத்தில் லஞ்சம் கைமாறி விட்டதாக நேரடியாக குற்றஞ்சாட்டிதோடு லஞ்சம் கைமாறவில்லையென்றால் மறுடெண்டர் விடக்கூடாது என்றார். மேலும்  அவர் போது  "ரூ 2 கோடியே 50 லட்சம் ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கைமாறியதாக பொது மக்கள் தரப்பில் பேசப்படுகிறது. அப்படி யாராவது லஞ்சம் வாங்கியிருந்தால் அவர்களுக்கு 'செய்வினை வைப்பேன்' மேலும் மக்கள் பணத்தை சுரண்டினால் அவர்கள் குடும்பம் விளங்காமல் போகும்" என சாபக் கணைகளை தொடுத்தார். 

  
இதற்கு பதிலளித்த சேர்மன் ராவியத்துல் காதரியா அவர்கள் "உங்களால் நிரூபிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நகராட்சி தலைவருக்கும் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாதம் நடைபெற்றது. கவுன்சிலர்கள் அஜ்மல் கான், சுரேஷ் ஆகியோர் மறு டெண்டருக்கு ஆதரவாக பேசினர். 


 பின்னர் இறுதி முடிவாக மறு டெண்டர் தேவையில்லை ஏற்கெனவே குறைந்த பதிப்பீட்டு புள்ளிகளை நிர்ணயித்துள்ள ஒப்பந்ததராருக்கே இப்பணியை வழங்கலாம் என்று நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா அறிவித்தார். இதனையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததுடன் நகர் மன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

Friday 4 May 2012

கீழக்கரையில் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை - குத்பா கமிட்டி வேண்டுகோள் !

கீழக்கரைவாசிகள் பொருளாதாரத்தைத் தேடி... வளைகுடாக்களில் கால் பதிக்க, ஆரம்ப காலகட்டங்களில், ஆணி வேராய்... அழுத்தமாய் நின்று அடித்தளமிட்ட அரும்பெரும் மனிதர் 'பி.எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா' என்றால் அது மிகையாகாது.



 
அவர்கள் தற்போது சென்னையில் உடல்நலமில்லாமல் இருப்பதால் அவர்கள்  உடல் நலம் பெற்று பூரண குணமடைய அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுமாறு குத்பா கமிட்டி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியில் குத்பா தொழுகை நிறைவடைந்து துஆ ஓதப்பட்டது. 

நம் கீழக்கரை நகர் மக்கள் அனைவரும், பி.எஸ்.ஏ காக்கா அவர்கள் விரைவில் நலம் பெற, இறைவனிடம் இறைஞ்சுமாறு எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.


பி.எஸ்.ஏ காக்கா அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தெரியாதவர்களே இருக்க முடியாது.  ஐக்கிய அமீரகமான துபாயில் இ.டி. ஏ. என்ற மாபெரும் நிறுவனத்தை நிறுவி, அதன் ஆரம்ப காலங்களில், வெற்றியின் சிகரத்தை நோக்கி பயணிக்க செய்தவர். 

 

 இன்று தமிழ் நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள், பி. எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா அவர்கள் வார்த்தெடுத்த நிறுவனங்களின் தளங்களான துபாய், அபுதாபி மட்டுமல்லாது  உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கனக்கானோர் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவருடைய அயரா உழைப்பு, நேர்மையான தொழில்சார் நடவடிக்கைகள், பணியாளர்களை அரவணைப்புடன் ஊக்குவித்த பண்பு  மிக முக்கியமானது.
 
 

அது மட்டுமல்லாது, சென்னை வண்டலூர் கிரசன்ட் கல்லூரி, கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுரி மற்றும்  பள்ளிகூடங்கள் நிறுவி கல்வி பணியிலும் முத்திரை பதித்தவர் 

B.S.A அவர்களின் ETA நிறுவனத்தினரால் கட்டப்பட்ட சென்னை அண்ணா மேம்பாலம்
பி.எஸ்.அப்துல் ரஹ்மான்  காக்கா அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய சென்னையின் இதய பகுதியாக அனைவராலும் பார்க்கப்படும் ஆயிரம் விளக்கு பகுதியின் அண்ணா சாலையில், பழைமையான, இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேல்ம்பாலம் கூட,  இவர்களின்  இ.டி.ஏ. நிறுவனம் தான் கட்டியது.  

Thursday 3 May 2012

கீழக்கரையில் இன்னும் தீராத 'குப்பை கிடங்கு' பிரச்சனை - தில்லையேந்தல் பகுதி பொது மக்கள் மீண்டும் எதிர்ப்பு !

தில்லையேந்தல் ஊராட்சியில், கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான 12 ஏக்கரில் குப்பைக்கிடங்கு  கட்டும் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. கீழக்கரை நகரின் முக்கியப் பிரச்சனையாக அனைத்து தரப்பினராலும் எதிர் கொள்ளப்பட்டிருக்கும், குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, இந்த குப்பை கிடங்கு அமையும் என கீழக்கரை பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் மிகுத்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி இருந்தனர். 


 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குப்பை கிடங்கின் கட்டுமானப் பொருட்களுக்கு சிலர் தீ வைத்தனர். இதையடுத்து கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் முன்னிலையில், கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
 

 இதில் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன், அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன், திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் செல்வக்குமார், தில்லையேந்தல் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், கீழக்கரை கவுன்சிலர்கள் மற்றும் கீழக்கரை பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 


இந்த கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் பேசும் போது "குப்பைகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுவதால் தில்லையேந்தல் பகுதி பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு சுமூக தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என கமிஷனர் விளக்கினார். 


 இதில் உடன்பாடு ஏற்படாத தில்லையேந்தல் பகுதி கிராமங்களின் முக்கியஸ்தர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், கலெக்டரிடம் முறையிடப்போவதாக தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களின் சுகாதார மேம்பாடுகளை கருத்தில் கொண்டு, எந்த ஒரு சாராரும் பாதிக்கப்படா வண்ணம் திட்டப் பணிகள் முடிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்பது இரு தரப்பினரின் வாதமும், கருத்துக்களும் .....

Wednesday 2 May 2012

கீழக்கரையில் 'உண்ணாவிரதப் போராட்டம்' - கவுன்சிலர்கள் பேட்டி !

கீழக்கரையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி, பத்து கவுன்சிலர்களால் அறிவிக்கப்பட்டிருந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று (02.05.2012) காலை பத்து மணியளவில் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் (வெங்கடேஸ்வரா திருமண மஹால் முன்பு) துவங்கியது.






உண்ணாவிரதப் பந்தலில், கூடியிருந்த மக்கள் முன்னிலையில் சன் தொலைக் காட்சி செய்திகள் உட்பட பல்வேறு மீடியாக்களுக்கு கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், முகைதீன் இபுறாகீம், ஹாஜா நஜிமுதீன் (இடி-மின்னல்) ஆகியோர் பேட்டியளித்தனர். மேலும் இந்த போராட்டத்தில்  கவுன்சிலர்கள் அன்வர் அலி, தங்கராஜ், சாகுல்ஹமீது, அரூசியா பேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







இது குறித்து கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் கூறுகையில் "மக்கள் நலனை முன்னிறுத்தி, ஜனநாயக முறையில் நடை பெற்று வரும் எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நிச்சயம் எங்கள் போராட்டத்தின் எதிரொலி விரைவில் நகராட்சியில் பலமாய் ஒலிக்கும். தொடர்ந்து ஆதரவு தரும் பொது மக்கள் அனைவருக்கும் எங்கள் போராட்டக் குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று நம்பிக்கையடன் தெரிவித்தார்.

Tuesday 1 May 2012

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு !

கீழக்கரை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். K.S.செய்யது இபுறாகீம், பரீதா பீவி ஆகியோர்களின் மகனும், V.K.நெய்னா முஹம்மது அவர்களின்  மருமகனுமாகிய 'K.S.சாகுல் ஹமீது' அவர்கள் நேற்று (29.04.2012) இரவு 9 மணியளவில் மதுரையில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்). 




                        
சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்புப் பலகை
 
அன்னாரின்  ஜனாஸா இன்று (30.04.2012) மாலை 5 மணியளவில் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Monday 30 April 2012

கீழக்கரையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி 10 கவுன்சிலர்களின் ஒரு நாள் அடையாள 'உண்ணாவிரத அறிவிப்பு' !

கீழக்கரையில் பத்து கவுன்சிலர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து, கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாகவும், நகராட்சியின் பணிகள் மேம்படவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பிரதான பகுதி ஒன்றில் 02.05.2012 ஆம் தேதி காலை 9 .30 மணி முதல் மாலை 5 மணி வரை (போராட்டப் பகுதி இன்னும் முடிவாக அறிவிக்கப்படவில்லை.) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது குறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் 20 ஆவது வார்டு கவுன்சிலர் ஹாஜா நஜிமுதீன் அவர்கள் கூறும் போது "நாங்கள் நல்லது செய்வோம், என்று முழு நம்பிக்கை கொண்டு எங்களுக்கு வாக்களித்து  வெற்றி பெறச் செய்த, மக்கள் நலனை முன்னிறுத்தி தான்.. இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் அனைத்து நிலைகளிலும் காணப்படும் குறைபாடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். பொது மக்களும் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டு, தங்களுடைய எதிர்பார்ப்புகளை தமிழக அரசுக்கு உணர்த்த தலை பட வேண்டும்" என்று தெரிவித்தார்.


போராட்டக் குழுவினர் வெளியிட்டுள்ள '10 அம்ச கோரிக்கை' நோட்டீஸ் !

இது குறித்து 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்கள் கூறுகையில் "கீழக்கரை நகராட்சியில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு எட்டப் படும் வரை, எங்கள் போராட்டம் தொடர்ந்து பல்வேறு ஜனநாயக வழிகளில், சட்டத்திற்குட்பட்டு நடை பெற்றுக் கொண்டே இருக்கும். 

நகராட்சியில் நிரந்தர ஆணையரை நியமிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பொறுப்பிலிருக்கும் உயரதிகாரிகள், பிரச்சனைக்குரிய பகுதிகளை நேரடி ஆய்வுகள் வழமையாக செய்து, நல்ல தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.