தேடல் தொடங்கியதே..

Thursday 26 April 2012

கீழக்கரையில் 'மின்சார சப்ளைக்கு' இடையூறு தரும் மரக்கிளைகள் அகற்றம் - மின்சார வாரியம் நடவடிக்கை !

நம் கீழக்கரை நகரில் 8 மணி நேர மின்வெட்டு ஒரு பக்கம், பொதுமக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது என்றால் அதையும் தாண்டி, நள்ளிரவு நேரங்களில் உயரழுத்த மின்சார வயர்களில் மரக்கிளைகள் ஒன்றோடொன்று உரசுவதால் மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய வியர்வையில் நீந்தி, 'காலை' கரையை அடைய கண் விழித்து காத்திருப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.



இந்த பிரச்சனையை களைய உடனடியாக, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினரும், மின் வாரிய நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் முதல் கட்டமாக, வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மின்சார வயர்களில் உரசுமளவிற்கு வளர்ந்து நிற்கும் மரக்கிளைகளை, மின் ஊழியர்கள் துரித நடவடிக்கை எடுத்து வெட்டி சீர்படுத்தினார்.



இது குறித்து மின் துறை ஆய்வாளர் ரிச்சர்ட் அவர்கள் கூறும் போது "இதே போல் நம் நகரின் அனைத்து பகுதிகளும் முறையாக ஆய்வு செய்து, மரக்கிளைகள் அகற்றப்படும்" என்று தெரிவித்தார்.  



வீதியில் வீழ்ந்த மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்தாததால், அப்பகுதியில் தொழில் புரியும் பலர் சில மணி நேரங்கள் அவதிக்குள்ளாயினர்.  பின்னர் நிலைமை சீரடைந்தது.

கீழக்கரை நகராட்சியில் இன்று நடை பெற்ற 'சாதிவாரி கணக்கெடுப்பு' விளக்க கூட்டம் - பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் !

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு 23.04.2012 அன்று துவங்கி 40 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பை விரைந்து நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் தாய்திரு  நாட்டில் கடைசியாக சுதந்திரத்துக்கு முன் 1931ம் ஆண்டில் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்குப் பின் இப்போது தான் இந்த சாதிவாரி சென்சஸ் நடக்கிறது.


 


நம் கீழக்கரை நகரிலும், இந்த சென்சஸ் சிறப்பாக நடைபெற நகராட்சி ஆணையர் தலைமையில், நகராட்சித் தலைவர் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்ட சிறப்பு விளக்க கூட்டம் இன்று (26.04.2012) காலை 11 மணியளவில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் சென்சஸ் திருப்திகரமாக நடைபெற, பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. 




இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான் அவர்கள் கூறுகையில் "இந்த கணக்கெடுப்பின் போது பணியாளர்கள் வீடு வீடாக சென்று அனைத்துத் தரப்பு மக்களின் படிப்பு, வேலை, வருமானம், பொருளாதார நிலை, வீட்டு வசதி, சார்ந்துள்ள சாதி, வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல்கள் உள்பட 32 கேள்விகள் கேட்டு கணினியில் பதிவு செய்வார்கள்.




சுமார் 100 பணியாளர்கள் வரை இந்தப் பணியில் ஈடுபட உள்ளார்கள். நம் கீழக்கரை நகராட்சிப் பகுதி 60 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நான்கு கட்டமாக நடை பெற உள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.




இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. நம் கீழக்கரை நகரில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும், கணக்கெடுப்பின் போது சரியான தகவல்களை கொடுத்து ஒத்துழைக்குமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday 24 April 2012

கீழக்கரையில் நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி !

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்க இன்னும் பத்து நாள்களே உள்ள நிலையில், கீழக்கரையில் வெயிலின் கடுமை நாளுக்கு நாள் தீயாய் தகித்துக் கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அக்னி நட்சத்திரத்தின் முன்னோட்டத்தை, பெரும் அவதியுடன் அனுபவித்து வந்தனர்.


நள்ளிரவு 1 .30 மணியளவில் எடுத்த புகைப்படம் (இடம் : N .M .T .தெரு)


இந்நிலையில், கீழக்கரை சுற்று வட்டாரத்தில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணியளவில் விட்டு விட்டு  லேசான சாரல் மழை பெய்ய துவங்கியது. இந்த தூரல் நள்ளிரவு 1:15 மணியளவில் கன மழையாக மாறியது.

இடம் : லெப்பை தெரு அருகில் (நேரம் : மாலை 5 மணி)



பலத்த மின்னலுடன் கூடிய இடி முழக்கம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் உறக்கத்தில் இருந்த பலர் இடி முழக்கத்தின் சப்தத்தால் திடுக்கிட்டு எழுந்தனர். மழை நீர் தெருக்களில் ஆறாக ஓடியது. அதிகாலை குளிர் காற்றுடன் உதயமானது. நள்ளிரவில் பெய்த கோடை மழை காரணமாக, கீழக்கரை நகரம் மட்டுமல்லாது, அனைத்து மக்களின் உள்ளங்களும் குளிர்ந்துள்ளது.


UPDATED PHOTO (TIME 4:30 PM)


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், நேற்று காலை முதல் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. வான்வெளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

கீழக்கரை, இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது (24.04.2012) பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. ( கூடுதல் புகைப்படங்களுடன் - நேரம் : மாலை 5 மணி )




சூழ்ந்திருக்கும் மழை மேகம் (இடம் : சின்னக்கடைத் தெரு)

இடம் : வள்ளல் சீதக்காதி சாலை
UPDATED PHOTO (TIME 4:30 PM)
எனவே, மழை பெய்யும் போது உயர்ந்த ஒற்றை  மரம், பரந்த சமவெளி பகுதி ஆகியவற்றில் பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Sunday 22 April 2012

கீழக்கரையில் இன்று (22.04.2012) நடைபெறும் இலவச பொது மருத்துவ முகாம் !

கீழக்கரையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட, இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை நடத்தும் 'இலவச பொது மருத்துவ முகாம்' இன்று (22.04.2012) காலை 10 மணி முதல் பழைய குத்பா பள்ளித் தெரு மக்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற்று வருகிறது. தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கும் நோய் கண்டறியும் சிகிச்சை நடை பெற்று வருகிறது. 



 


இது குறித்து இந்த முகாமின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் கூறும் போது "இங்கு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான தீவிர அறுவை சிகிச்சைகள், கருப்பை நோய்கள், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும்  நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் இலவச மருந்து மாத்திரைகள் அனைத்தும்  வழங்கப்படுகிறது. 


 



மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், உடனடியாக தெரிவு செய்யப்பட்டு பயனடைய வழி காட்டப்படுகிறார்கள். இந்த முகாமை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு :   திரு.சுரேஷ் குமார் - 7373004953