தேடல் தொடங்கியதே..

Thursday 11 October 2012

கீழக்கரையில் உச்சி வெயிலிலும் சுடர் விட்டு எரியும் தெரு விளக்குகள் - தொடர் மின் வெட்டிலும் தொடரும் சாதனை !

தமிழகம் முழுவதும் மீண்டும் இருட்டில் மூழ்கத் துவங்கியுள்ளது. சென்னை தவிர்த்த, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 10 மணி முதல் 14 மணி நேர அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடிக்கிறது. இது போதாதென்று தற்போது இன்னும் அதிக நேரம் மின் வெட்டு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் இந்த நிலை மேலும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் குண்டை தூக்கி போட்டுள்ளது. இரவு நேரங்களில் மின்சாரம் நிறுத்தப் படுவதைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


கீழக்கரை நகரிலும் அறிவிப்பில்லாமல் ஏற்படும் இந்த பல மணி நேர மின்தடையால் லேத் பட்டறை, ஆட்டோ ஒர்க் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், ரைஸ் மில், இன்ஜினியரிங் ஒர்க்ஸ், கம்ப்யூட்டர் சென்டர்கள், வெல்டிங் ஷாப், ஜெராக்ஸ் கடைகள் உள்ளிட்ட சிறு தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பலர் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். தாய்மார்கள் வீட்டில் பகல் நேரத்தில் சமையல் செய்ய முடியாத அளவிற்கு வெக்கையால் தவிக்கின்றனர். மின்சாரம் இல்லாததைப் பயன்படுத்தி டெங்கு கொசுக்களும் தாராளமாக தங்கள் பணியினை செய்ய துவங்கியுள்ளது.


இடம் : நடுத்தெரு, கீழக்கரை  (நேரம் - 11.45 A.M)

இந்நிலையில் தமிழக மக்கள் மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் குறைந்த மின்சாரம் தேவைப்படும் சி.எப்.எல். பல்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இரவு நேரங்களில் மின் மோட்டார்,  ஏ.சி, வாசிங் மெஷின், கிரைண்டர், பிரிட்ச் போன்ற உபகரனங்களை உபயோகிக்க கூடாது என்றும் பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் கீழக்கரையில் உச்சி வெயில் பொழுதிலும் தெரு விளக்குகள் அத்தனையும் பிரகாசமாக எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் செய்தும் இன்னும்  முறை படுத்தப்படவில்லை என இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நடுத்தெருவைச் சேர்ந்த ஹாமீது இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "பொழுது விடிந்ததும், தெரு விளக்குகளில் அதிகாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட வேண்டிய மின்சாரம் நண்பகல் வேலை ஆகியும் நிறுத்தப்படாமல் வீண் விரையம் செய்யப்படுகிறது. தெரு விளக்குகளை உடனே அணைக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலை பேசியில் உரிய தகவல் அளித்தும் தொடர்ந்து இதே நிலையே நீடிக்கிறது. இரவு நேரங்களில் மின் வெட்டால் இருளில் தவிக்கும் மக்களுக்கு உதவாத இந்த தெரு விளக்குகள், பகலில் பிரகாசிப்பதால் யாருக்கு என்ன பயன்..? இதனால் அதிக அளவில் மின்சார இழப்பு ஏற்பட காரணமான அரசு ஊழியர்கள மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்,