தேடல் தொடங்கியதே..

Saturday 17 August 2013

கீழக்கரையில் நாளை நடை பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் - பரபரப்பாகும் '18 ஆம்' தேதி !

கீழக்கரை நகரில் நாளை (18.08.2013) ஞாயிற்றுக் கிழமை காலை முதல் நள்ளிரவு வரைக்கும், நடுத் தெரு, மேலத் தெரு, கிழக்குத் தெரு, கோக்கா அஹமது தெரு, வடக்குத் தெரு, பழைய குத்பா பள்ளி தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, சின்னக்கடைத் தெரு, தெற்குத் தெரு, சாலை தெரு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தெருக்களில் இரு மனம் இணையும் 'திருமண வைபவங்கள்' நடக்க இருக்கிறது. 

இதற்காக வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான நண்பர்கள் தற்காலிக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். பெரும்பாலான திருமணங்கள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடை பெறுகிறது. இதனால் கீழக்கரை நகரமே, மிகவும் பரபரப்பாக விழாக் கோலம் பூண்டுள்ளது. 



கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் பள்ளிவாசல்களிலும், பள்ளிக் கூடங்களிலும், திருமண வளாகங்களிலும், திருமண மண்டபங்களிலும், கல்யாணங்கள் நடை பெற இருப்பதால், அனைத்து திருமணங்களிலும் கலந்து கொள்ள முடியுமா..? எந்த திருமண நிகழ்ச்சிக்கு முதலில் செல்வது..? யார் தரும் திருமண விருந்தில் பங்கேற்பது..? என்று நண்பர்களும், உறவினர்களும் லேசான கலக்கம் அடைந்துள்ளனர். 

சரியான நேரத்தில் திருமண நிக்காஹ் செய்து வைக்கும் நோக்கோடு பள்ளிகளில் ஆலீம் பெருமக்கள் திருமண நிக்காஹ் பதிவேட்டினை முறைப்படி , வரிசைக்கிரமமாக பட்டியலிட்டு வைத்துள்ளனர்.

கீழக்கரையில் நாளை நடக்க இருக்கும் திருமண வைபவங்கள் தவிர கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக தமிழக அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி, பொது நல அமைப்புகள் மற்றும் சங்கங்களில் நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள், கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் திறப்பு விழா, இலவச மருத்துவ முகாம்கள் என அடுக்கடுக்காக நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை ஓய்வின்றி வலம் வருகிறது. 

இதனால் இறைவன் நாடினால், நாளைய சூரிய உதயம், கீழக்கரை வாசிகளுக்கு பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும், மன மகிழ்வுடனும், சந்தோசமுடனும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கீழக்கரையில் மகப்பேறின்மை சிகிச்சைக்கான 'இலவச மருத்துவ முகாம்' - 'மதுரை விக்ரம் மருத்துவமனை' மற்றும் 'மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கம்' இணைந்து நடத்துகிறது !

கீழக்கரை சின்னக்கடைத் தெருவில் செயல்பட்டு வரும் மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கம் மற்றும் மதுரை விக்ரம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மகப்பேறின்மை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (18.08.2013) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்க கட்டிடத்தில் நடை பெற உள்ளது. 



இந்த முகாமில் கலந்து கொண்டு, மேல் சிகிச்சை தேவைப் படுபவர்களுக்கு, மதுரை அண்ணா நகரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் பங்கு கொண்டு ஆலோசனைகள் பெற முன் பதிவு அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த இலவச முகாமை சிகிச்சை அவசியப்படுபவர்கள், தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் 'மதரஸா திறப்பு விழா' - மின் ஹாஜியார் பள்ளி ஜமாத் சார்பாக நடை பெற்றது !

கீழக்கரை நகரில் இருக்கும் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான 'மின் ஹாஜியார் பள்ளி' ஜமாத்தினரின் சார்பாக 'மதரஸது சல்மா' எனும் அழகிய பெயரில், இஸ்லாமிய சிறுவர்கள், சிறுமியர்களுக்கான மதரஸா திறப்பு விழா நேற்று (16.08.2013) வெள்ளிக் கிழமை, அஷர் தொழுகைக்குப் பின்னர் மாலை 4.30 மணியளவில் சிறப்பாக நடை பெற்றது. 





இந்த மதரஸாவினை K.T.M.S ஹமீது அப்துல் காதர் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார். பின்னர் அழகிய முறைமையாக பாங்கு சொல்லப் பட்டது. அதனையடுத்து மின் ஹாஜியார் பள்ளி வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாப்.ஆசாத் ஆலீம் அவர்கள் கிராத் ஓதினார். மின் ஹாஜியார் பள்ளி ஜமாஅத் தலைவர் S.N.செய்யது இபுறாஹீம் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். சிறப்பு விருந்தினராக  K.T.M.S ஹமீது அப்துல் காதர் அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 



சிறப்பு விருந்தினரை ஜனாப். மு.அ. நெய்னா முஹம்மது அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து அருமையான மார்க்க சொற்பொழிவினை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் ஜனாப். அஹமது ஆசிப் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை ஜனாப்.லெப்பை தம்பி அவர்கள் சிறப்புற ஒருங்கிணைப்பு செய்து தொகுத்து வழங்கினார்.







இந்த பள்ளியின் கட்டுமான பணிகளுக்கான பொருளாதார உதவிகளை  K.T.M.S ஹமீது அப்துல் காதர் அவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளியின் கட்டுமான வேலைகளை கீழக்கரை 'நியூ கன்ஸ்ட்ரக்ஸன்' ஜனாப். ஹாஜா அனீஸ் நல்ல முறையில் செய்து இருந்தார்.இந்த நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Friday 16 August 2013

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை - தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடை பெற்றது !

கீழக்கரையில் மழை பெய்யாததால் கடும் வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது.  வீடுகளில் உள்ள கிணறுகள் நீர் வற்றிக் காணப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக மழை தொழுகை நேற்று  (15.08.2013) காலை 7:30 மணிக்கு தெற்கு தெரு 'கிஸ்கிந்தா திடலில்' நடை பெற்றது. 
 


இந்த தொழுகையில் கீழக்கரை நகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். மேலும் TNTJ அங்கத்தினர்கள் மாவட்ட துணை தலைவர் நசுருதீன் தலைமையில் நிர்வாகிகள் ஜஹ்பர் சாதிக்,உமர் பாரூக், ஹாஜா முஹைதீன், சபீக், அமீர் அப்பாஸ், சுல்தான் ஆகியோர்கள் கலந்து கொண்டு தொழுதனர். மாநில பேச்சாளர் அர்சாத் அலி தொழுகை நடத்தினார்.

 தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கீழக்கரை

துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் அல் வாஸல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) துபாய் மண்டலம் மற்றும் அல் வாஸல் மருத்துவமனை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம், எதிர் வரும் 23.08.2013 அன்று வெள்ளிக் கிழமை காலை 8 மணி முதல், லத்திபா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து  சமுதாய  சகோதரர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


குறிப்பு: இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்களின் வசதிக்காக சோனாப்பூர் கிளையிலிருந்து செல்வதற்கு வாகன ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல் குர்ஆன்)

                     தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபாய் மண்டலம்

கீழக்கரையில் 'கை தொடும்' தூரத்தில் தொங்கும் மின்சார வயர்கள் - உடனடியாக சீர் செய்ய 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' மாவட்ட ஆட்சியருக்கு மனு !

கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில், மின்சார வாரியத்தினரின் மெத்தனப் போக்காலும், நகாரட்சி அதிகாரிகளின் அக்கரையின்மையாலும், வீடுகளுக்கு செல்லும் மின்சார வயர்கள், சிறுவர்கள் கூட எட்டிப் பிடிக்கும், கை தொடும் தூரத்தில் செல்கின்றது. இன்னும் பல இடங்களில், மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில், மிக மோசமாக உயிர் பலி வாங்க காத்திருக்கிறது.  



                    இடம் : நடுத் தெரு பெத்தம்மா கபுரடி அருகாமை - கீழக்கரை 

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் துணைச் செயலாளர். B.செய்யது காசீம் அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகரின் ஒட்டு மொத்த மின் கம்பங்களும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டவை.

ஒவ்வொரு முறையும் கீழக்கரை நகராட்சி 'சாலை போடுகிறோம்' என்கிற பெயரில், முறையாக பழைய சாலைகளை தோண்டி போடாமல், அதன் மேலேயே அவசரக் கோலத்தில் போடுவதாலும், சாலைகள் ஏகத்திற்கு உயர்ந்து மின்சார வயர்கள் எல்லாம் கை தொடும் தூரத்திற்கு வந்து விட்டது. 

இன்னும் சில இடங்களில் மின்சார வாரிய ஊழியர்களின் 'அடாவடி' மெத்தனப் போக்கால் உயர் அழுத்த மின் வயர்கள் கூட தரையில் தவழ்கிறது. இதனை உடனடியாக சீர் செய்ய ஆணையிடக் கோரி மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும் :

கீழக்கரையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் உயிர் பலி ஆபத்து - உடனடியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி - போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது !

கீழக்கரை மேலத் தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கத்தின், அருமையான மேற்பார்வையின் கீழ் கல்வி சேவை ஆற்றி வரும் ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நேற்று (15.08.2103) காலை 9 மணியளவில், நாட்டின் 67 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெற்றது.




இந்த விழாவிற்கு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கத்தின் உறுப்பினரும், பள்ளியின் முன்னாள் தாளாளரும், இஸ்லாமி பைத்துல் மாலின் செயலரும், குத்பா கமிட்டியின் உதவி செயலாளருமான ஜனாப். M.K.M.அப்துல் மலிக் அவர்கள் தலைமையேற்று, தேசியக் கொடியை ஏற்றி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியை ஜனாபா.A ஹமீது நிசா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின்  அங்கத்தினர்கள் மற்றும் சங்க மேலாளர் கலந்து கொண்டனர்.



பள்ளியின் ஆசிரியை A.ஷீபா அவர்கள் சிறப்புரையாற்றினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த விழாவின் போது, பங்கேற்ற மாணவ மணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் நன்றியுரையுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



Thursday 15 August 2013

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி - கிழக்குத் தெரு ஜமாத்தார்கள் பங்கேற்பு !

கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் இன்று (15.08.2013), காலை 9 மணியளவில், இந்திய தேசத்தின்  67 வது சுதந்திர தின விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கிழக்குத் தெரு ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 

இந்த நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப். A. முஹம்மது மீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். B.J.சாதிக் அவர்கள், பள்ளியின் கல்விக் குழு உறுப்பினர். ஜனாப். M.M.S.செய்யது இப்ராஹீம் அவர்கள், கல்விக் குழு உறுப்பினர். M.K.M.சுஐபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 


மேலும் மாணவிகள் ரோசன் சமீஹா, ஸ்மைலா மற்றும் மாணவர். அஜீத் மணிகண்டன் ஆகியோர்கள் இந்திய சுதந்திர தினம் குறித்து சிறப்பாக பேசினர். முன்னதாக மாணவர்களின் சுதந்திர தின விழா அணி வகுப்பு மரியாதயை பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். சாதிக் அவர்கள் ஏற்றுக் கொண்டார். 



   

சமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் சா. சையது அபுதாகிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சுதந்திர தின விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தகவல்  : கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா.மூனா சுல்தான் அவர்கள்

கீழக்கரை மக்தூமியா பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா - பள்ளியின் முன்னாள் மாணவர் 'கீழை ராசா' தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்றினார் !

இந்திய சுதந்திர தின விழா மக்தூமியா பள்ளிகளின் சார்பாக இன்று (15.08.2013) காலை 8.45 மணியளவில் மக்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அப்பள்ளியின் முன்னால் மாணவரும், அமீரகத்தின் கட்டிட கலை வல்லுனருமான 'கீழை ராசா' என்று அழைக்கப்படும் முஹம்மத் ராஜா கான் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி  சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள். 




இவ்விழாவில் பழைய குத்பா பள்ளியின் தலைவர் ஹாஜா முகைதீன் , துணை தலைவர் கிதுரு முஹம்மது, ஹமீது இபுராஹிம் (சார்), ஹசனுதீன் , லெப்பை தம்பி மாஸ்டர், உள்ளிட்ட கல்வி குழு உறுபினர்கள், முன்னால் தாளாளர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் அபு சாலிஹ் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்களும், மாணவ மணிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மக்தூமியா சமூக நல அமைப்பு, (மாசா), வீ சீ டி, சங்கு குழி ஆள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் கலந்து கொண்டனர். 



விழா ஏற்பாடுகளை மக்தூமியா தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி பிரேமா, மக்தூமியா உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ண வேணி ஆகியோர்களின் தலைமையில் இரு பள்ளி ஆசிரிய பெருமக்களும் சிறப்பாக செய்து இருந்தனர். மாணவ செல்வங்களின் திறமைகள் வெளி காட்டபட்டன. தலை சிறந்த திறமையாளிகளுக்கு  பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவின் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. 






 நன்றி : சங்கர் ஸ்டூடியோ (படங்கள்)