தேடல் தொடங்கியதே..

Saturday 24 December 2011

வருடம் தோறும் டிசம்பர் மாத உள்ளூர் விலையேற்றம் - பொது மக்கள் குமுறல்



ஒவ்வொரு ஆண்டும் நம் கீழக்கரை நகரில் மற்ற மாதங்களை விட டிசம்பரில், அனைத்து பொருள்களின் விலைகளும், கூலிகளும், வாடகைகளும் பெருமளவு உயர்ந்து விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பால் விலையும், பேருந்து கட்டணமும் நம் தலையில் இடியாய் இறங்கி இருக்கும் போது, உள்ளூர் விலையேற்றமும் நம் கீழை மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

நம் கீழக்கரை மக்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் போன்றவை இந்த டிசம்பர் மாதத்தில் தான் பெரும்பாலும் அதிகமாக நடை பெறுகின்றது. இதற்காக வருடம் தோறும் டிசம்பர் மாதத்தில் வெளி நாடுகளில் வசிக்கும் கீழக்கரை வாசிகள் ஊருக்கு வந்து குடும்பத்து  நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதனால் நம் கீழக்கரை உள்ளூர்  வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் நம் கீழக்கரை வாழ் கீழ் தட்டு மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

புது கிழக்கு தெருவை சேர்ந்த குடும்ப தலைவி பரிதா பேகம் அவர்கள் கூறுகையில் "வெளி நாடு வாழ் கீழக்கரை வாசிகள் பெரும்பாலும் இந்த ஒரு மாதம் மட்டும் தான் ஊருக்கு வருகிறார்கள். அதனால் நம் ஊரின் நடப்புகள் அவர்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. வெளி நாட்டில் இருந்து லீவில் வரும் நம்  சொந்த, பந்தங்கள் உள்ளூர் வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் கேட்கும் காசை கொடுத்து விடுகிறார்கள்.. இதனால் எங்களுக்கும் அதே விலையில் தான் பொருள்களை விற்கிறார்கள். இது தடுக்க பட வேண்டும்.  இல்லை என்றால் எங்களை மாதிரி ஏழைகள் ரொம்ப பாதிக்க படுவோம்." என்று மிகுந்த வருத்ததுடன் தெரிவித்தார்.





இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தமீமுதீன் அவர்கள் கூறும் போது , "வெளி நாடுகளில் இருந்து திரும்பும் நம் சொந்தங்கள், முதலில் தாங்கள் வாங்கும் பொருள்களின் உள்ளூர் விலை, குறிப்பாக, மீன், கறி போன்றவற்றின் விலை எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  கார், ஆட்டோ, சுமோ போன்றவைகளை வாடகைக்கு எடுக்கும் முன், ஊருக்குள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல ஏற்கனவே எவ்வளவு வாடகை இருந்தது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்", என்று தெரிவித்தார்.


"தேவைகள் அதிகரிக்கும் போது விலைகளும் அதிகரிக்கும்." என்பது பொருளாதார விதி. அதற்காக, கீழ்தட்டு மக்களை பாதிக்கும் அளவிற்கு விலைகளை, எந்தவித முன்னறிவிப்புமின்றி சகட்டுக்கு விலைகளை உயர்த்தி விடுவது, "டிசம்பர் வந்தாலே  ஏழை மக்கள் அச்சப்படும் மாதமாக மாறும்" என்பதில் மாற்று கருத்தில்லை. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நம் கீழக்கரை கீழ் தட்டு மக்களின் அச்சத்தை போக்க முன் வர வேண்டும்.